மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? -18

மல்லையா வச்ச வெடி- வாராக் கடன்களால் சிதைக்கப்பட்ட பொருளாதாரம் : ஒரு சூப்பர் க்ரைம் ஸ்டோரி. யாராவது சினிமா தயாரிக்கலாம்!
மிகப் பெரிய அளவில் வாராக் கடன்கள் முதலியவற்றால் இந்தியப் பொருளாதாரம் சீரழியக் காரணமாக இருந்தது. மோடியின் ஆட்சி. 9,000 கோடி ரூபாய் கடனுக்கு நாமம் போட்டுத் தப்பித்துச் சென்ற விஜய் மல்லையா 2010ல் பா.ஜ.க ஆதரவுடன் கர்நாடகத்திலிருந்து மாநிலங்களுக்கு அவைக்குத் தேர்வு செய்யப்பட்ட MP என்பதை மனதில் கொண்டு இதை வாசியுங்கள்.
மார்ச் 03, 2016 – விஜய் மல்லையா இந்திய அரசு, சி.பி.ஐ, கடன் கொடுத்த வங்கிகள் எல்லாருக்கும் பெப்பே காட்டிவிட்டுப் போன நாள்.
அவர் மும்பை ஏர்போர்ட்டில் அளவுக்கதிகமான ‘பேக்கேஜ்’ களுடன் தப்பித்துச் சென்ற அதே நாளில் சில மணி நேர வித்தியாசத்தில் சி.பி.ஐ இயக்குனர் அனில் சின்கா அதே விமான நிலையத்தில் இறங்குகிறார்.
மல்லையா தப்பித்துச் சென்ற சில மணி நேரத்தில் செய்தி கேட்டுக் கடன் கொடுத்தவர்கள் கொதித்தெழுந்த போது அவரும் மகாராஷ்டிர மாகாண பாஜக முதல்வர் ஃபட்னாவிசும் பேங்கர்களுடன் கூட்டம் நடத்திக் கொண்டு ‘சமாளிஃபிகேஷனில்’ ஈடுபட்டிருந்தனர்.
ஜூலை 2015 முதல் மல்லையா மீது FIR பதிவு செய்யப்பட்டிருந்தும், அவர் தப்பிச் செல்லக் கூடாது என்பதற்காக ‘லுக் அவுட்’ நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தும் எவ்வாறு அவர் தப்பித்துச் சென்றார் என்க் கடன் கொடுத்தவர்கள் வயிறெரிந்து கேட்டபோது விசாரணைக்கெல்லாம் மல்லையா ஒழுங்கா வந்துகொண்டு இருந்ததாகவும், அதனால் அவர் தப்பிச் சென்றுவிடுவார் என தாம் எண்ணவில்லை என்பதும்தான் CBI தரப்பில் சொல்லப்பட்ட ஒரே பதில். ஆனால் அது பொய் என ஆதாரங்களுடன் வெளீப்படுத்தியது NDTV செய்தி மடல் (செப் 14, 2018.).
2009 முதல் இப்படியான பொருளாதாரக் குற்றங்களில் குற்றவாளி விமானத்தில் தப்பிச் செல்லாமல் தடுப்பதற்கு விமான நிலையங்களுக்கு ‘லுக் அவுட் நோட்டீஸ்’ கொடுக்கும் வழக்கத்தை மேற்கொண்டு வந்தது. யாருடைய பாஸ்போர்டையும் உரிய விதிகளைக் கடைபிடிக்காமல் முடக்கக் கூடாது என நீதிமன்றம் எச்சரித்து இருந்ததால் இப்படி லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கும் நடைமுறையை CBI கடைபிடித்து வந்தது. குற்றம் இழைத்தவரது வீடு சோதனை செய்யப்படும்போதே அவரது பாஸ்போர்ட் எண்ணைப் பெற்று இந்த எச்சரிக்கைக் கடிதம் விமான நிலையங்களுக்கு அனுப்பப்படும். குற்றவாளி விமானம் மூலம் தப்பிச் செல்ல முயன்றால் ‘இம்மிக்ரேஷன்’ அதிகாரி அவரை அங்கேயே நிறுத்திக் காவல்துறைக்கு அறிவிக்க வேண்டும்.
ஆனால் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தும் விமான நிலைய அதிகாரிகள் எப்படி மல்லையாவைத் தப்பித்துச் செல்ல அனுமதித்தனர்? அவர் தப்பிச் சென்றுவிட்டார் என்று விமானம் புறப்பட்ட பிறகு எவ்வாறு CBI அறிந்து கொண்டது?
லுக் அவுட் எச்சரிக்கையில் இரு வகை உண்டு. ஒன்று அவர் விமான நிலையத்தைற்கு வந்தவுடன் அவரைத் தடுத்து நிறுத்தி விசாரணை முகமைக்குச் செய்தி சொல்வது. மற்றது அவ்வாறு நோட்டீஸ் வழங்கப்பட்டவர் வெளிநாட்டிலிருந்து இங்கே வரும்போது அவரைத் தடுத்து நிறுத்தாமல் தகவலை மஉம் விசாரணை முகமைக்குத் தெரிவித்தால் போதுமானது.
இதெல்லாம் மிகப் பெரிய அளவில் மல்லையா விடயத்தில் மீறப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கைக் கடிதத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமானால் யாரேனும் நோய்வாய்ப்பட்டுக் கிடக்கும் உறவினரைப் பார்க்கச் செல்வது என்பதுபோல உரிய நம்பகமான காரணம் இருக்க வேண்டும்.
விமானநிலையங்களில் மல்லையா தப்பிப் போக முயற்சித்தால் தடுத்து நிறுத்த வேண்டும் என்கிற ‘லுக் அவுட்’ நோட்டீஸ் வாசகத்தை, ” தப்பித்துப் போனால் தகவல் தெரிவித்தால் போதும்’ என்கிற ரீதியில் மாற்றி அமைப்பதற்கு இன்று சொல்லப்படும் காரணங்கள்  அப்படி இல்லை. டிசம்பர் 09, 10, 12 ஆகிய மூன்று நாட்களிலும் மல்லையா ஒழுங்காக விசாரணைக்கு வந்ததைத்தான் CBI மல்லையா தப்பிச் செல்லமாட்டார் எனத் தான் நம்பியதற்குக் காரணமாகச் சொல்கிறது. ஆனால் லுக் ஒவுட் எச்சரிக்கை கொடுக்கப்பட்ட நாள் அக்டோபர் 16, 2015. இது திருத்தப்பட்ட நாள் நவம்பர்    24.. மல்லையா ‘ஒழுங்காக’ விசாரணைக்கு வந்ததோ டிசம்பர் 09,10,12 தேதிகளில். ஆக மல்லையா தப்பித்துச் செல்ல மாட்டார் எனத் தாம் நம்பியதற்குச் சொல்லும் காரணம் அபத்தம் என்பதை NDTV இப்படி அம்பலப்படுத்தியது.
மல்லையா மீதான குற்றம் 9,000 கோடி ரூபாயை அபேஸ் பண்ணிவிட்டார் என்பதுதான். இந்த அளவு தொகை ஏமாற்றக் குற்றத்திற்கு ஆளானவர்களது எச்சரிக்கைக் கடிதத்தை உயர் மட்ட அதிகாரிகள்தான் தர வேண்டும். ஆனால் மல்லையா விடயத்தில் முடிவெடுத்தவர் CBI இணை இயக்குனர் (Joint Director) ஏ.கே.சர்மா.
மார்ச் 03, 2016 அன்று மிக நிதானமாகவும், சவுகரியமாகவும் ஏராளமான ‘லக்கேஜ்’ களுடன் மல்லையா தப்பிச் சென்ற வரலாறு இதுவே.
கதை முடியவில்லை. இந்த இரண்டு ட்வீட்களையும் பாருங்கள்.
1. ஜூன் 12, 2018 அன்று 08.52 மணி அளவில் சுப்பிரமண்ய சாமி ஒரு ‘ட்வீட்’ பண்ணினார் . அதில் சாமி சொன்னது:
“மல்லையா வால் இந்தியாவை விட்டுத் தப்பி ஓடமுடியவில்லை. கடுமையான ‘லுக் அவுட் நோடீஸ்’ எல்லா விமான தளங்களிலும் கொடுக்கப்பட்டிருந்தது.. மல்லையா டெல்லிக்கு வந்து அந்த லுக் அவுட் நோடீசை மாற்றக் கூடிய அளவுக்கு பலமுள்ள ஒருவரைச் சந்தித்து ‘பை’ சொல்லிட்டுப் போனார். யார் அந்த லுக் அவுட் நோட்டீசைத் திருத்தியது?”
யார் லுகவுட் எச்சரிக்கை வாசகத்தை மாற்றியது என சு.சாமி எழுப்பிய இந்தக் கேள்விக்குச் சரியாக மூன்று மாதங்களில் பதில் கிடைத்தது.
செப் 12, 2018 அன்று லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்திறு வெளியே மல்லையா, “நான் இந்தியாவை விட்டு கிளம்புமுன் நிதி அமைச்சரைச் சந்தித்து வந்தேன்” என்று கூறிய செய்தி வெளிவந்தது.
எதற்காகச் சந்திச்சாராம்? _
“என்னுடைய செட்டில்மென்ட் கடிதத்திற்கு வங்கிகள் மறுப்புத் தெரிவித்தன. மேட்டரை செட்டில் பண்ணுவதற்காக நிதி அமைச்சரைச் சந்தித்தேன்” – இது அவரே சொன்ன வார்த்தை.
அருண்ஜேட்லியும் பதவி விலகவில்லை. மோடியும் அவரை டிஸ்மிஸ் செய்யவில்லை..
இங்கே ஒரு கேள்வி எழலாம். சு.சாமி பாஜக ஆள். அவர் ஏன் இதைச் சொல்ல வேண்டும்? சு.சாமி பாஜக ஆதரவாளர் ஆனாலும் மோடிக்கு மவரைப் பிடிக்காது. தனக்கு நிதி அமைச்சர் பதவி கிடைக்கும் என சு.சாமி நம்பினார். அது அவருக்கு மறுக்கப்பட்டு அருண் ஜேட்லிக்கு அளிக்கப்பட்டது.  பிரச்சினை இதுதான்.
(அடுத்த பதிவுடன் முடியும்)
–  அ.மார்க்ஸ்.

About ஆசிரியர்குழு‍ மாற்று