மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? – 17

5,8 வகுப்புகளில் அரசுத் தேர்வு : அடித்தளச் சமூகக் குழந்தைகளை ஓரங்கட்டும் சதி –
காங்கிரஸ் ஆட்சியின்போது நிறைவேற்றப்பட்ட கல்வி உரிமைச் சட்டத்தில் (2009) கல்வியாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட ஓரம்சம் (பிரிவு 16) இனி பள்ளிகளில் எட்டாம் வகுப்புவரை தேர்வுகள் மற்றும் ‘பாஸ்’, ‘ஃபெயில்’ முறை இருக்காது என்பதுதான். இதன்படி எட்டாம் வகுப்புவரை, அதாவது 14 வயதுவரை, ஒரு மாணவரை தேர்வில் தோற்றார் எனச் சொல்லி அதே வகுப்பில் உட்கார வைக்கக் கூடாது.
பா.ஜ.க அரசு ஆட்சியில் அமர்ந்தவுடன் முதலில் மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஒன்று புதிய கல்விக் கொள்கையை அறிவித்ததுதான். அதில் மேற்குறித்த இந்தச் சட்டபூர்வமான உரிமையைப் பறிப்பது ஒன்றாக அமைந்தது. பெரிய விவாதங்கள் இன்றி அதன் ஒவ்வொரு அம்சமும் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளன..
மாணவர்களைத் தரம் பிரிப்பது, அடித்தளப் பிரிவுகளிலிருந்து வரும் மாணவர்களை வெறுமே தொழிற் பயிற்சியாளர்களாக மாற்றி பிற மேற்படிப்புகளுக்குத் தகுதி இல்லாதவர்களாக ஆக்குவது ஆகியன இந்த அறிக்கையின் முக்கிய நோக்கங்களில் ஒன்று. இவற்றோடு இணைத்துப் பார்க்க வேண்டிய ஒன்று இப்படி 5ம் வகுப்பிலிருந்து பிள்ளைகளை ‘ஃபெயில்’ பண்ணி வடிக்கட்டுவது.
எட்டாம் வகுப்புவரை தேர்வுகள் இல்லை என்பது குறைந்த பட்சக் கல்வித் தகுதியுள்ள குடிமக்களை உருவாக்கும் நோக்கிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இன்று ஓட்டுநர் உரிமம் பெறுவது போன்ற அடிமட்ட வேலைகளுக்கும், ஏன் ஹரியானா போன்ற மாநிலங்களில் ஊராட்சித் தேர்தல்களில் நிற்பதற்கும் கூட எட்டாம் வகுப்புவரை கல்வி கட்டாயம். பெண்களாயின் திருமணத்திற்கும் கூடக் குறைந்த பட்சக் கல்வி தேவைப்படுகிற நிலையில் எட்டாம் வகுப்புவரை தேர்வு இல்லாமலிருப்பது அடிப்படைத் தேவை ஆகிறது.
இல்லாவிட்டால் என்ன ஆகும்?
தேர்வில் தோற்று விட்டார்கள் எனச் சொல்லி அதே வகுப்பில் நிறுத்தப்படும் மாணவ மாணவிகளில் பெரும்பாலோர் படிப்பு நிறுத்தப்பட்டு குடும்பத் தொழில்களுக்குள் அல்லது குழந்தை உழைப்பிற்குள் முடக்கப்படுவர். பெண்களாயின் இளம் வயதிலேயே திருமணத்திற்குள்ளும் தள்ளப்படலாம்.
இதில் கவனிக்க வேண்டிய சில உண்மைகள்:
1.அப்படி மேற்படிப்பு வாய்ப்பு மறுக்கப்பட்டுத் தேங்கிப் போகிறவர்கள் சமூகத்தின் எந்தப் பிரிவிலிருந்து வந்தவர்களாக இருப்பர்? தலித்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், பழங்குடியினர், முஸ்லிம்கள், பெண்கள் முதலானோர் தான் இப்படிப் பாதிக்கப்படுவார்கள்.
2.எட்டாம் வகுப்புவரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட பிறகு இப்படிப் பள்ளிப் படிப்பை அரைகுறையாக நிறுத்துவோரின் (dropouts) எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது. 2009 -10 ல் இப்படிப் படிப்பை நிறுத்தியோர் 9 சதம். சட்டம் அமுலுக்கு வந்த பின் 2013 -14 ல் இது 5 சதமாகக் குறைந்துள்ளது.
3.எட்டாம் வகுப்புவரை அரசுத் தேர்வு இல்லை என்பதன் பொருள் அவர்களை எந்த மதிப்பீட்டிற்கும் உட்படுத்தக் கூடாது என்பதல்ல.. கல்வி உரிமைச் சட்டத்தின் 29(2)(h) பிரிவின்படி எல்லாவற்றையும் உள்ளடக்கிய தொடர் மதிப்பீடுகளுக்குக் குழந்தைகள் ஆட்படுத்தப்பட வேண்டும். ஆக, தேர்வுகளில் தோல்வி எனச் சொல்லி ஃபெயில் ஆக்குவதுதான் நிறுத்தப்படுகிறதே ஒழிய பிள்ளைகளைத் தொடர்ந்து மதிப்பீடு செய்து அவர்களின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பது இதனுடன் கூடவே கட்டாயமாக்கப்படுகிறது. அம்மதிப்பீடு படிப்பில் மட்டுமின்றி அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் (Comprehensive Continuous Assessment) இருக்க வேண்டும்.
4.இப்படிக் குழந்தைகள் பின்தங்குகிற நிலைக்கு அவர்களை மட்டுமே பொறுப்பாக்க முடியாது. பள்ளியிலும் கற்பிக்கும் முறையிலும் உள்ள குறைபாடுகள், போதிய ஆசிரியர்கள் பணி அமர்த்தப்படாமை, ஆசிரியர்களுக்குப் போதிய தொடர் பயிற்சிகளை அளிக்காமை, ஆசிரியர்களை இதர பணிகளில் ஈடுபடுத்துதல், பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாமை எனப் பல காரணங்கள் உண்டு. இவையும் சரி செய்யப்படுதல் வேண்டும்.
5.இவை எதையும் செய்யாமல் கல்வியில் பின் தங்கியுள்ளதற்கான பொறுப்பு அனைத்தையும் மாணவர் மீது சுமத்தி அவர்களை ‘ஃபெயில்’ ஆக்குவது அந்தப் பிள்ளைகள் மீது குற்ற உணர்ச்சியைச் சுமத்தி கல்வியில் ஆர்வமின்மையை (demotivate) ஏற்படுத்தி இறுதியில் படிப்பை அரைகுறையாக நிறுத்துவதற்கே இட்டுச் செல்லும்.
6.தவிரவும் எந்தக் குழந்தையையும் ‘கல்வியில் பின்தங்கிய குழந்தை’ என முத்திரை குத்துவது அபத்தம். ஒரு குழந்தை கணக்கில் பலவீனமாக இருந்தால் மொழி அல்லது அறிவியல் பாடத்தில் ஆர்வமுடையதாக இருக்கலாம். அப்பாடத்தில் சிறப்புப் பயிற்சி அளிக்க வேண்டுமே ஒழிய அக்குழந்தையை ஃபெயிலாக்கி முடக்கக் கூடாது. இப்படி’பெயில்’ பண்ணி அதே வகுப்பில் உட்கார வைக்கப்படும் பிள்ளைகள் முன்னேற்றம் அடைந்துவிடும் என்பதற்கும் ஆதாரங்கள் கிடையாது.
கட்டாய பாஸ் / ஃபெயில் முறைக்கு ஆதரவாக என்ன காரணம் சொல்கிறார்கள்?
எட்டாம் வகுப்பு வரை தேர்வில்லாததால் ஒன்து-பத்தாம் வகுப்புகளில் தோற்பவர்களின் எண்ணிக்கை 2010 க்குப்பின் அதிகமாகியுள்ளது. ஆனால் மாவட்ட அளவிலான கல்வித் தரவுகளின் (District Information System for Education) அடிப்படையில் நமக்குக் கிடைக்கும் தகவல்கள் இந்தக் குற்றச்சாட்டுகளைப் பொய்யாக்குகின்றன. எட்டாம் வகுப்புவரை பாஸ்/ஃபெயில்முறை ரத்து செய்யப்பட்டபின், 2011 முதல் 2015 வரை உள்ள தரவுகளின்படி 20 மாநிலங்களில் ஹிமாசல் பிரதேஷ், சட்டிஸ்கார் தவிர பிறவற்றில் ஒன்பதாம் வகுப்பில் தோல்வியுற்றவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. அதோடு ஹிமாசல், அசாம், சட்டிஸ்கார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் தவிர பிறவற்றில் பத்தாம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றோரின் எண்ணிக்கை கூடியுள்ளது.
எல்லாவற்றையும் தொகுத்துப் பார்க்கும்போது எட்டாம் வகுப்புவரை பாஸ் ஃபெயில் முறை ஒழிக்கப்பட்டதால் கல்வித்தரம் குறைந்துள்ளது எனும் குற்றச்சாட்டில் பொருளில்லை என்பது தெளிவாகிறது. தமிழகத்திலும் இம்முறைய மோடி அரசு திணிக்க முயன்று இப்போது எதிர்ப்பின் விளைவாகக் கைவிடப்பட்டுள்ளது.
மோடி அரசின் இம்முயற்சி வன்மையாகக் கண்டிக்கத் தக்கது
(தொடரும்)
– அ.மார்க்ஸ்

About ஆசிரியர்குழு‍ மாற்று