மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? – 16

13 புள்ளி ரோஸ்டர் முறை என்பதன் மூலம் மத்திய பல்கலைக் கழகங்களில் இட ஒதுக்கீட்டை முற்றிலும் கவிழ்க்க முயலும் மோடி அரசு 

எல்லா மட்டங்களிலும் இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ் சின் கொள்கை இந்தக் கருத்தை இப்போது அவர்கள் மாற்றிக் கொண்டார்கள்ளிப்போது அவர்கள் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கத் தொடங்கிவிட்டார்கள் எனச் சொல்வதெல்லாம் அப்பட்டமான பொய்.
சென்ற பிஹார் மாநிலத் தேர்தலின் போது ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இட ஒதுக்கீட்டிற்கு எதிராகப் பேசியதை அனைவரும் அறிவோம். அதே காரணத்தால் அவர்கள் அந்தத் தேர்தலில் மிகப் பெரிய தோல்வியை சந்திக்க நேரிட்டது. அதன் பிறகு அவர்கள் இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என வெளிப்படையாகப் பேசுவதில்லை.
மத்திய அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய பல்கலைக் கழகங்களை அவர்கள் குறிவைத்துப் பல்வேறு வடிவங்களில் தாக்கிக் கொண்டுள்ளார்கள் என்பதைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். ஆய்வுப் படிப்புக்கு சேர்த்துக் கொள்ளப்படுபவர்களின் எண்ணிக்கை இப்போது பெரிய அளவில் குறைக்கப்பட்டுவிட்டது. ஆய்வு மாணவர்களுக்கான உதவித் தொகைகளுக்கு இப்போது ‘நெட்’ தேர்வு கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இதுதவிர இப்போது முன்னேறிய சாதிகளுக்கும் பொருளாதார அடிப்படையில் 10 சத ஒதுக்கீடு கொண்டுவந்துள்ளார்கள்.
இந்தப் பின்னணியில்தான் மத்திய பல்கலைக் கழகப் பேராசிரியர் பதவிகளில் முன்பிருந்த 200 புள்ளி ரோஸ்டர் முறையை ஒழித்து 13 புள்ளி ரோஸ்டர் முறையைக் கொண்டு வந்துள்ளனர். இதற்கு எதிராக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் அரசுக்கு அதாவது முன்னேறிய சாதியினருக்கு ஆதரவாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தில் அடித்தள மக்கள் மேல்முறையீடு செய்தபோது சென்ற ஜன 22ல் உச்ச நீதிமன்றமும் உயர் சாதியினருக்கே ஆதரவாகத் தீர்ப்பளித்தது. இந்தப் பின்னணியில்தான் பா.ஜ.க அரசின் இந்தப் புதிய ரோஸ்டர் முறையை அடித்தளச் சாதி ஆசிரியர்கள் எதிர்த்துக் களத்தில் இறங்கியுள்ளனர். பழைய 200 புள்ளி ரோஸ்டர் முறையே இருக்க வேண்டும் என SC,ST,OBC பேராசிரியர்கள் கோருகின்றனர்.
இது எவ்வாறு தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் எல்லோரையும் பாதிக்கும் என்பதைப் பார்க்கலாம்.
பல்கலைக் கழகங்களில் பல்வேறு பாடத் துறைகள் உள்ளதை அறிவோம். முந்தைய 200 புள்ளி ரோஸ்டர் முறையில் மொத்தப் பல்களைக் கழகத்தையும் ஒரே அலகாக (unit) எடுத்துக் கொண்டு இட ஒதுக்கீடு அளிக்கப்படும். இம்முறையில் இட ஒதுக்கீட்டை முறையாகக் கடைபிடிக்க முடியும். ஆனால் மோடி அரசு கொண்டுவந்துள்ள இந்தப் புதிய திட்டத்தில் இம்முறை ஒழிக்கப்பட்டு ஒவ்வொரு துறையும் ஒரு தனி அலகாகக் கருதி இட ஒதுக்கீடு பிரித்தளிக்கப்படுகிறது,
இது முழுக்க முழுக்க அடித்தள மக்களின் வாய்ப்பை எவ்வாறு பறிக்கிறது எனப் பார்க்கலாம்.
பழைய முறையில் பல்கலைக் கழகம் முழுவதிலும் உள்ள 200 இடங்களில் 99 இடங்கள் SC, ST, OBC மாணவர்களுக்கும் மீதமுள்ள 100இடங்கள் திறந்த போட்டிக்கும் பிரித்தளிக்கப்படும். பல்கலைக்கழகங்களில் பல துறைகள் உள்ளன என்பதை கவனத்தில் கொள்வோம். ஒவ்வொரு துறையிலும் எப்போதும் எல்லாப் பிரிவினருக்கும் ஒதுக்கீட்டின்படி இடம் அளிக்கும் அளவிற்கு காலிப் பணி இடங்கள் ஏற்படாது. அப்படியான சந்தர்ப்பங்களில் அப்படி SC / ST/ OBC பிரிவுகளுக்கு நிரப்ப இயலாத தருணங்களில் வேறு துறைகளில் ஒதுக்கீட்டை அதிகரித்து மொத்தத்தில் அடித்தளப் பிரிவினர்களுக்கான இட ஒதுக்கீடு பூர்த்தி செய்யப்படும்.
பா.ஜ.க அரசு புகுத்தியுள்ள இந்தப் 13 புள்ளி முறையில் ஒவ்வொரு துறையிலும் உள்ள 1,2.3,5,6 ஆவது இடங்கள் முன்னேறிய சாதியினரும் பங்கு கொள்ளும் திறந்த போட்டிக்கு ஒதுக்கப்படும். 4வது இடம் OBC க்கும், 7வது இடம் SC க்கும், 14 வது இடம் ST க்கும், 8 மற்றும் 12 வது இடங்கள் OBC க்கும் 9,10,11 வது இடங்கள் பொதுப் போட்டிக்கும் ஒதுக்கப்படும்.
பல்கலைக் கழகங்களில் ஒவ்வொரு துறையிலும் ஆசிரியர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதால் எல்லாத் துறைகளிலும் 14 பணி இடங்கள் இருக்காது. 14 பணி இடங்கள் இருக்கும் துறைகளில் மட்டுமே இம்முறையில் எல்லோருக்கும் முறையாக வேலை வாய்ப்புகளைப் பகிர்ந்தளிக்க முடியும். ஒரு நேரத்தில், ஒரு துறையில் 4 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன என்போம். அந்த நிலையில் இந்தப் புதிய முறையில் SC, ST பிரிவினரில் ஒருவருக்குக் கூட வேலை கொடுக்க இயலாது. 3 காலி இடங்கள் மட்டுமே இருந்தால் SC, ST OBC யாருக்குமே ஒதுக்கீடு இருக்காது. ஒரு துறையில் 14 பேராசிரியப் பணி காலியாக இருக்கும் போது மட்டுமே அந்தத் துறையில் ஒரு ST இடம்பெற முடியும்.
சென்ற ஆண்டு பனாரஸ் இந்து பல்கலைக் கழகம் மனித வளத்துறைக்கு அளித்த அறிக்கையில் இந்தப் 13 புள்ளி அறிக்கையின் படி தங்கள் பல்கலைக் கழகத்தில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்தினால் SC பிரிவினருக்கான ஒதுக்கீடு பாதியாகக் குறயும் எனவும், ST பிரிவினருக்கான ஒதுக்கீடு 80 சதம் குறையும் எனவும், OBC பிரிவுக்கு 30 சதம் குறையும் எனவும் கூறப்பட்டது இங்கே குறிப்பிடத் தக்கது.
இந்த நிலையில் பா.ஜ.க நிறைவேற்றியுள்ள முன்னேறிய சாதியியினருக்கும் 10 சத ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டால் என்ன ஆகும்?
அப்படி  நிறைவேற்றப்படும் நிலையில் முற்றிலும் எந்த மத்தியப் பல்கலைக் கழகத்திலும் SC/ST/OBC பிரிவினர் இட ஒதுக்கீட்டின் மூலம் பயன் பெறுவது சாத்தியமில்லாமலே போகும்..
இங்கொன்றைக் குறிப்பிடுவது அவசியம். முன்பு நடைமுறைப்படுத்தப்பட்ட 200 புள்ளி முறை போதுமானது என SC/ST/OBC பிரிவினர் கூறுகிறார்களா? அப்படி அல்ல. மோடி அரசு இப்போது புகுத்த முயலும் 13 புள்ளி முறையைக் காட்டிலும் பழைய அந்த முறை எத்தனையோ பரவாயில்லை என்பதுதான். ஆனால் அதுவும் முறையாகக் கடைபிடிக்கப்படுவதில்லை.
எனவே மத்திய அரசு எல்லாத் துறைகளிலும் 50 சத ஒதுக்கீட்டை முறையாகக் கடைபிடிப்பதே சரியாக இருக்கும்.
(தொடரும்)
– அ.மார்க்ஸ்

About ஆசிரியர்குழு‍ மாற்று