மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? -15

சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பதைப்  பொருளாதார அடிப்படையில் என ஆக்கி மேற் சாதியினருக்குச் சேவை செய்யும் பாஜக
1. தற்போது சாதி அடிப்படியிலான ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கும் நோக்கில் நடைமுறையில் இருக்கும் இட ஒதுக்கீட்டிற்குத் தகுதியில்லாத பார்ப்பனர் உள்ளிட்ட உயர் சாதியைச் சேர்ந்தவர்களுக்கு (பொதுப் பிரிவில் உள்ளவர்கள்) இது அளிக்கப்படுகிறது.
2. ஏற்கனவே தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் இதர பிற்படுத்த சாதியினருக்கு அளிக்கப்பட்டுள்ள 50 சத ஒதுக்கீட்டிற்கு மேலாக இது அளிக்கப்படுகிறது.
3. முஸ்லிம்கள், சீக்கியர், கிறிஸ்தவர், பவுத்தர் முதலான சிறுபான்மை மதத்தவர்களும் பொருளாதார அடிப்படையில் இந்தப் பயனைப் பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்திரா சாஹ்னி வழக்கில் அதிகபடச ஒதுக்கீடு 50 சதத்திற்கு மேல் இருக்கக் கூடாது என உச்சநீதிமன்றத் தீர்ப்பு அளிக்கப்பட்டதுள்ளது குறிப்பிடத் தக்கது.
4. இட ஒதுக்கீடு என்பது பொருளாதார ஏற்றத்தாழ்வு அல்லது ஏழ்மையை ஒழிப்பதற்கான நடைமுறை அல்ல. அதற்கு வேறு வழிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் (எ.கா உணவு, கல்வி உரிமைச் சட்டங்கள் என்பன போல). இட ஒதுக்கீடு என்பது சமூக அடிப்படையில் காலங்காலமாகப் பிந்தங்கியுள்ள ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அளிக்கப்படும் ஒன்று.
5. வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகளில் தற்போது நடைமுறையில் உள்ள சம வாய்ப்பு ஆணையம் என்பவை கூட இனம், மதம், பழங்குடிப் பிரிவுகள் என்கிற அடிப்படையிலேயே செயல்படுகின்றன. பொருளாதார அடிப்படையில் அல்ல.
6. இந்த வகைகளில் பா.ஜ.க அரசின் இந்த முயற்சி இந்திய அரசியல் சட்டத்தின் தொனிக்கும், அடிப்படை அணுகல் முறைக்கும் எதிரானது.
7. வாஜ்பேயீ தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி (1999-2004) இருந்தபோதும் இப்படியான முயற்சி முன்னெடுக்கப்பட்டு கடும் எதிர்ப்பின் விளைவாகக் கைவிடப்பட்டது. சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் அப்போது சர்வகட்சித் தலைவர்களையும் அழைத்து நாங்கள் தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டிடத்தில் ஒரு மிகப் பெரியக் கண்டனக் கூட்டம் நடத்தினோம். (அந்த நிகழ்ச்சிக்கு வர மறுத்த ஒரே தலைவர் புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி. தனக்கு இட ஒதுக்கீட்டில் நம்பிக்கை இல்லை என அவர் அப்போது என்னிடம் கூறினார்).
8. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமிரோடு ஆர்.எஸ்.எஸ்சின் மோகன் பகவத் தற்போதுள்ள இட ஒதுக்கீட்டிற்கு எதிராகப் பேசியதையும், அப்போது நடந்த பீஹார் தேர்தலில் பாஜக படுதோல்வியைச் சந்திக்க நேர்ந்தபோது அவர்களுக்குள்ளேயே மோகன் பகவத்தின் பேச்சின் விளைவுதான் அந்தப் படுதோல்விக்குக் காரணம் என அது குறித்து அதிருப்தி ஏற்பட்டதும் குறிப்பிடத் தக்கது. அத்தோடு இது தொடர்பாக வாயை மூடிக் கொண்டார் பகவத்.
9. அவர்கள் வாயை மூடிக் கொண்டால் அத்தோடு அதை விட்டுவிட்டார்கள் என்பதல்ல, அதையே நசுக்கி நசுக்கியும், அதிக ஆர்பாட்டம் இல்லாமலும் உறுதியாகவும் நிறைவேற்றுவார்கள் என்பதற்கு இது இன்னொரு எடுத்துக்காட்டு.
10. சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பதில் ஒரு பாரம்பரியப் போராட்டப் பின்புலம் உள்ள தென் மாநிலத் தேர்தல்களில் தாங்கள் ஒன்றும் பெரிதாகக் கிழித்துவிட முடியாது என உணர்ந்த சங்கிகள் வட நாட்டில் உள்ள சாதி அமைப்பின் அடிப்படையில் இந்த உயர்சாதி இட ஒதுக்கீடு முயற்சியால் வரும் தேர்தலில் தமக்குப் பயன் கிடைக்கும் என நம்புகிறார்கள். வடநாட்டு சாதி அமைப்பிற்கும் தென்னகத்தில் உள்ள சாதி அமைப்பிற்கும் உள்ள வேறுபாடு குறித்த என் சமீபத்திய கட்டுரைகள் பேசி வருவதை நண்பர்கள் கவனித்திருக்கலாம். (அ). தென்னகத்தில் சத்திரியர், வைசியர் முதலான உயர் சாதிகள் கிடையாது. அல்லது வடநாட்டில் உள்ள அளவிற்குக் கிடையாது. (ஆ). வடக்கே பார்ப்பனர் 10 சத அளவு வரை உ:ள்ளனர். தமிழ்நாட்டில் அவர்கள் 2 சதம் மட்டுமே. (இ) இங்கே பழங்குடி மக்கள் வெறும் 1 சதம். அங்கே பலமடங்கு அதிகம். இந்தப் பின்னணியில்தான் அங்கே இந்துத்துவ அமைப்புகள் இங்குள்ளதைக் காட்டிலும் பலமாக உள்ளன. அவர்கள் பழங்குடி மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினர் மத்தியிலும் வலுவாக ஊடுருவி உள்ளனர். இந்தப் பின்புலத்தை எல்லாம் கவனத்தில் கொண்டுதான் இன்று இவர்களின் இந்தத் தேர்தல் கால முயற்சியை நாம் ஆராய வேண்டும்.
(தொடரும்)
–  அ.மார்க்ஸ்

About ஆசிரியர்குழு‍ மாற்று