மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? – 14

“FRDI மசோதா : நாடு மிகப் பெரிய பொருளாதாரப் பின்னடைவை நோக்கித் தள்ளப்படுகிறது” – பேரா. பிரபாத் பட்நாயக்
நம்பிக்கைகளை நாசமாக்குகிறது பா.ஜ.க அரசு..இனி நோட்டுகளாக மட்டுமல்ல, வைப்புகளாகச் சேமித்தாலும் ஆபத்துதான்..
இனி தங்கம் அல்லது நிலத்தில் பணத்தை முடக்குவது என்பதுதான் சேமிப்பிற்கு ஒரே தீர்வா? இனி இரும்புப் பெட்டி அல்லது சுருக்குப் பைதான் ஒரே வழியா?
FRDI மசோதா என்பது இந்தியப் பொருளாதாரம் தொடர்பான இன்னொரு நிறுவனத்தின் மீது மறுபடி சரி செய்ய இயலாத இன்னொரு தாக்குதலாக அமையும்.
ஏற்கனவே பொருளாதார நிறுவனங்கள் மீது ஏற்படுத்தப்பட்ட தாக்குதல்களோடு பா.ஜ.க அரசு திருப்தி அடையவில்லை என்பது இபோது இவர்கள் முன்வைத்துள்ள “நிதிசார் தீர்வு மற்றும் வைப்பு நிதிக் காப்பீட்டு மசோதா” {Financial Resolution and Deposit Insurance (FRDI) Bill} என்பதன் மூலம் உறுதியாகிறது.

இந்த மசோதா சொல்வதென்ன?

மத்திய அரசு அதிகாரிகளால் நிரப்பட்ட ஒரு ‘தீர்வு ஆயம்” (Resolution Corporation) உருவாக்கப்படும். இந்த ஆயம் ‘வாராக் கடன்களால் கடும் நெருக்கடிக்கு (critical) உள்ளான வங்கிகளை, அந்த வங்கியில் பணம் செலுத்துபவர்கள் மற்றும் வைப்பு நிதி செலுத்தி உள்ளவர்களின் நிதியைக் கொண்டு மீட்டு, அந்த நெருக்கடியைச் சமாளிக்கும்.
இதுவரை இப்படியான சந்தர்ப்பங்களில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் ‘உரிமையாளரான’ மத்திய அரசு தனது ‘பட்ஜெட்’ ஒதுக்கீட்டிலிருந்துதான் இப்படி வங்கிகளை நெருக்கடிகளிலிருந்து காப்பாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது வழக்கம். மாறாக இப்போதோ மத்திய அரசு நிதி இதற்குப் பயன்படுத்தப்படாதாம். மாறாக அந்த வங்கிகளை நம்பிப் பணம் செலுத்தியவர்கள்தான் தண்டம் கட்ட வேண்டுமாம்.
இப்போது வங்கிகளில் வைப்பாகச் செலுத்தப்பட்டுள்ள நிதியில் சுமார் ஒரு இலட்சம் ரூபாய்வரை அவ்வங்கிகளால் காப்பீட்டுறுதி (insurance) செய்யப்பட்டுள்ளது. வங்கிகள் வாராக் கடன்களாலோ வேறெதாலோ வீழ்ச்சியடைய நேர்ந்தால் பணம் செலுத்தியிருந்தவர்களுக்குஒரு லட்சம் ரூபாய் வரை உறுதி உண்டு. இதற்கென அமைக்கப்பட்டிருந்த ரிசர்வ் வங்கியின் கிளை அமைப்பான The Deposit Insurance and Credit Guarantee Corporation என்பது இந்த மசோதாவின் மூலம் இப்போது கலைக்கப்படும். பதிலாக வேறு எந்த நிறுவனமும் முன் வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
அது மட்டுமல்ல. தமது வைப்பு நிதிகளுக்கு இப்படியான காப்பீட்டு உத்தரவாதம் இருப்பதனால் மட்டுமே மக்கள் இதுவரை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் தம் சேமிப்புகளை நம்பி வைப்புச் செய்தார்கள் என்பதில்லை. இந்த வங்கிகள் அரசுக்குச் சொந்தமானவை. நமது அரசு நம்மை வஞ்சிக்காது. தனியார் வங்கிகள் ஏமாற்றலாம். அரசு வங்கிகள் எப்படித் தோல்வியுறும் என்கிற நம்பிக்கைகளில்தான் மக்கள் இவ் வங்கிகளைத் தேர்வு செய்து தாம் பாடுபட்டுச் சேர்த்தவற்றை அவற்றில் வைப்புச் செய்தனர்.
இப்படி வைப்புச் செய்தவர்களில் பெரும்பாலோர் மூத்த குடிமக்கள். தாம் வாழ்நாள் பூராவும் பாடுபட்டுச் சேர்த்த பணத்தை அவர்கள் இவ்வாறு தம் இறுதிக் காலத் தேவைகளுக்காக இப்படி அரசை நம்பி அரசு வங்கிகளில் வைப்பாகச் செலுத்தியிருந்தனர். இவற்றில் வட்டி வீதம் குறைவு; பங்குச் சந்தையிலோ, பரஸ்பர நிதி உதவித் திட்டங்களிலோ சேமித்தால் வட்டி வீதம் அதிகமாக இருந்தபோதும், அவற்றில் ‘ரிஸ்க்’ என்பதால்தான் அரசு வங்கிகளை அவர்கள் தேர்வு செய்தனர். மக்களின் அந்த நம்பிகைதான் இப்போது நாசமாக்கப்படுகிறது.
முந்திய காலங்களில் மக்கள் தாம் சேமித்த பணத்தை இரும்புப் பெட்டிகளில் பூட்டி வைத்தனர். முகந் தெரியாத தனியார் வங்கி முதலாளிகளால் ‘திவால்’ ஆகி விட்டதாகச் சொல்லி ஏமாற்றப்படுவதைக் காட்டிலும் இப்படிப் பூட்டி வைப்பது மேல் என நம்பி அவர்கள் செயல்பட்டது வங்கிகள் தேச உடமையாக்கப்பட்டபோது ஒழிந்தது.
வங்கிகள் இப்போது அரசுடமையாக்கப்பட்டு விட்டன. இனி நாம் ஏமாற்றப்பட மாட்டோம். நம்மை அரசு கைவிடாது என நம்பிப் பெரிய அளவில் சேமிப்புகள் வங்கிகளில் குவியத் தொடங்கின. பெரிய அளவில் மக்கள் பணம் அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் வங்கிகளில் குவிந்து பயன்படும் நிலையும் ஏற்பட்டது.
மக்களின் நம்பிக்கைகள் இப்போது ஒவ்வொன்றாக அழிகின்றன. இப்படி மக்களின் நம்பிக்கைகளின் மீது வீழ்ந்த முதல் அடி பண மதிப்பீட்டு நீக்கம் – demonetization. இப்படியான பணமதிப்பீட்டு நடவடிக்கை இனி அடிக்கடி தொடரும் என மோடி வெளிப்படையாக அறிவித்ததென்பது currency நோட்டுக்கள் மீதான மக்களின் நம்பிக்கையையே அழித்தது. பணமதிப்பீட்டு நீக்கம் நேரடியான இழப்புகளை ஏற்படுத்தாவிட்டாலும் வங்கிகளின் வாசல்களில் காத்திருப்பதும், எராளமான தடைகளைத் தாண்டி வர வேண்டிய நிர்ப்பந்தங்கள் ஏற்படுவதும் மக்களுக்கு ஏராளமான சிரமங்களைத் தந்ததோடன்றி, தற்காலிகமாக அவர்களது ‘வாங்கும் திறனை’ (purchasing power) அழித்தது.
ஆக இப்போது பணம், அது நோட்டுக்களாகக் கைகளிலோ, இல்லை வைப்பு நிதிகளாக வங்கிகளிலோ எந்த வடிவில் இருந்தாலும் இனி பாதுகாப்பு இல்லை என்கிற நிலை இன்று இந்த FRDI மசோதா மூலம் ஏற்பட்டுவிட்டது. ஏனெனில் இந்த மசோதா இப்போது வங்கிகளை மட்டுமல்ல அது அரசுக்குச் சொந்தமான காப்பீடு மற்றும் இதர நிதி நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பொறுப்பாக உள்ள (liabilities) வங்கி வைப்புகள் ஆகியவற்றையும் உள்ளடக்குகிறது.
பணம் மற்றும் இப்படியான நிதி உடைமைகள் மீதான நம்பிக்கைகள் அழிக்கப்பட்ட ஒரு பொருளாதாரம் என்பது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். இனி சொத்து சேகரிப்பு என்பது தங்கம் அல்லது நிலம் ஆகியவற்றில் முடங்கும் நிலைக்கு அது கொண்டுவிடும். பணச் சேமிப்பு என்பதிலிருந்து இப்படியான பொருளடிப்படையிலான சேமிப்பு என்பது பொருளாதார அடிப்படையில் மிகப் பெரிய பின்னடைவாகக் (retrogression) கருதப்படும். அதை நோக்கித்தான் இன்று பா.ஜ.க அரசு நாட்டைச் செலுத்திக் கொண்டுள்ளது.
(தொடரும்)
– அ.மார்க்ஸ்

About ஆசிரியர்குழு‍ மாற்று