இலக்கியம்

நிகழ்தகவு………..

ஒரு மின்னல் வெட்டுவதுபோல தோன்றி மறைந்தது. அந்த மரண வலிக்குப் பயந்தே முழுக்கண்ணைத் திறக்கும் முயற்சியைக் கை விட்டு விட்டேன். ஆனாலும் பார்க்க முடிகிறது. மங்கலாகவேனும் காட்சிப் படிமங்கள் தென்படுகின்றன.

எந்த பாகமும் இயங்கவில்லை. பிணம் போலக் கிடக்கிறது உடல். 

உடலை அசைக்கச்சொல்லி மூளை இடுகிற கட்டளையை உடல் பாகங்கள் மறுக்கின்றனவா..? 

அல்லது கட்டளையிடக்கூடிய திறனை மூளை இழந்து விட்டதா..? 

உயிரோடுதான் இருக்கிறேனா..? 

இந்த ஐ.சி.யூ அறையின் ஏ.சி குளிரை என்னால் உணர முடிகிறது. அப்படியென்றால் உயிர் இருக்கிறது. ஒரு வித மதமதப்பான வலி, உடல் முழுதும் பரவியிருந்தது. ஹேங் ஓவராகிவிட்ட போதைக்காரனைப்போன்று நினைவுகள் விட்டு விட்டு வருகிறது. ஆனாலும் வலியின் அவஸ்தைகள் பெரிதாகத் தெரியவில்லை. ஏதேனும் வலிக்கொல்லி மருந்தின் வேலையாக இருக்கலாம். எனக்கு நினைவு திரும்பி விட்டதை யாரிடமாவது சொல்லவேண்டும் போல இருக்கிறது. ஆனால் எப்படி..? ஏதோ ஒரு மாயக் கயிறு உடலைச் சுற்றி இருக்கமாகக் கட்டியது போல இருக்கிறது. 

நீல நிற சுடிதாரின் மீது வெள்ளைச் சட்டையனிந்த பெண்ணொருத்தி நெருங்கி வந்தாள். செவிலிப்பெண். என் தலைக்குப் பின்னால் இருந்த கணினித் திரைகளைப் பார்த்து கவனமாகக் குறித்துக்கொண்டாள். என் வலது கையில் ட்ரிப்ஸ் இறங்கிக் கொண்டிருந்த சலைன் குழாயைக் கழற்றிவிட்டு சிரஞ்சின் முனையை நுழைத்து மருந்தை உட்செழுத்தினாள். அவள் தொடுவதை உணர முடிகிறது. ஆனால் விறுத்துப்போன கையைத் தொடும்போது ஏற்படுகிற உணர்வுதான் இருந்தது. மீண்டும் ட்ரிப்ஸ் குழாயைச் சொறுகிவிட்டுச் சென்றாள்.

எவ்வளவு நாட்களாய் இப்படி இருக்கிறேனென்றே தெரியவில்லை.

கயல்விழியைப் பார்க்கவேண்டும் போலிருக்கிறது. பாவம் கயல் என்னைக் கட்டிக்கொண்டதைத் தவிற வேறொரு பாவமும் செய்திருக்க மாட்டாள். அந்தத் திருவிழா இரவில் அவளை நான் பார்க்காமலே இருந்திருக்கலாம். ஒரு ஆறு மாதம் இருக்குமா..? இருக்கும். கோனியம்மன் கோவில் திருவிழாவில்தான் அவளை முதன் முதன்முதலில் பார்த்தேன். முதல் சந்திப்பின்போதே நான் கிங் லூயிசின் முழு கட்டுப்பாட்டில் இருந்ததை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது.

பூச்சட்டி எடுக்கும் பெண்கள் வரிசையில் அவளும் இருந்தாள். காம்பஸ் வைத்து வரையப்பட்டதுபோன்ற வட்டமான முகம். கையில் ஏந்தியிருந்த பூவோட்டின் வெளிச்சத்தில் அவள் முகம் உருக்கிய தங்கம் போல ஜொலித்தது. இளஞ்சிவப்பு நிறச்சேலை அணிந்திருந்தாள். வழிநெடுகிலும் பக்தர்களால் ஊற்றப்பட்ட தண்ணீரால் அது அடர் சிவப்பாகத் தெரிந்தது. தொப்பலாய் நனைந்திருந்த உடை, அவள் உடலோடு ஒட்டிக்கிடந்தது. அந்தப் பேரழகின் பிம்பங்கள் என் ஹார்மோன்களுக்குள் நுழைந்து அனல் மூட்டியது. தலையிலிருந்து நெற்றியில் வழிந்து கூர் நாசியின் முனையில் திரண்டு நின்ற நீர்த்துளியொன்று வைரம் போல பளிச்சிட்டது. கீழுதடைச் சுழித்து அதை ஊதித்தள்ளும் போது அவ்வளவு அழகாக இருந்தாள். 

அவ்வளவு போதையில் என்ன காரணத்திற்காக பெண்கள் பகுதிக்குச் சென்றேன் என்றே நினைவில்லை. ஏதோ ஒன்று என்னை இழுத்துச் சென்றது. அவளும் என்னைப் பார்த்தாள். நான் பார்ப்பதை அவள் ரசிக்கிறாள் என்ற உணர்வே எனக்குள் ஏதோ கிளர்ச்சியைக் கொடுத்திருந்தது. வெகுநேரம் அங்குதான் இருந்தேன் என்பது மட்டும் நினைவிருக்கிறது. காந்திபுரம் பிள்ளையார் கோவிலிருந்து வருகிற பூவோடு ஊர்வலம் அது. கோனியம்மன் கோவிலில் முடியும். எங்கு எப்போது இனைந்து கொண்டேன் என்று தெரியவில்லை. ஆனால் கடைசி வரை, அவள் வீட்டுக்குச் செல்லும் வரை அங்குதான் இருந்தேன். அவளிடம் பேசவேண்டும் போலிருந்தது. எப்படித்தான் அவளை வழிமறித்து பேச்சுக் கொடுத்தேனோ தெரியவில்லை.. போதை எனக்கு இரண்டு ஆள் தைரியத்தைக் கொடுத்திருந்தது. 

‘ஒங்கள எங்கியோ பாத்தாப்ல இருக்கே..?’

நான் பொய்யாகத்தான் கேட்கிறேன் என்பது அவளுக்கும் தெரியும். உள்ளுக்குள் சிரித்தபடியே சொன்னாள். 

வீடு ராயபுரத்துல. இங்க டெய்லரிங் கிளாஸ்க்கு தெணோ சாய்ங்காலம் வருவேங். அப்பக்கீது பாத்திருப்பீங்க.’ 

எவ்வளவு மென்மையாகப் பேசுகிறாள். ஒருவேளை இதயத்தை உதடுகளிலும் வைத்திருக்கிறாளா..? ஆச்சர்யமாக இருந்தது.

உண்மையில் அதுவரை அவளைக் கவனித்ததே இல்லை. ஆனால் அவள் என்னைக் கவனித்திருக்கிறாள். அதிலிருந்து அவள் வரும்போதும் போகும் போதும் கவனிப்பதே என் வேலையாக மாறிப்போனது.

எப்போது பார்த்தாலும் அடிதடி பிரச்சனை பஞ்சாயத்துதான் எனது வாழ்க்கை. ஒன்றியச் செயலாளர் என்றால் இதெல்லாம் இல்லாமலா..?. என்னைப் போன்ற ஒரு நபரை எந்தப் பெண்ணுக்காவது பிடிக்குமா..? அதுவும் முப்பத்தைந்து வயதைக் கடந்து விட்டவன். ஆனாலும் அவளுக்கு என்னைப் பிடித்திருந்தது. 

செவ்வாயோ புதனோ ஏதோ ஒரு தோசத்தால் வரன்கள் அமையாமலிருந்த அவளும் முப்பதைத் தொட்டவள் தான். எப்படியோ எங்களுக்குள் ஒத்துப் போய்விட்டது. 

அரசல் புரசலாக ஊருக்குள் செய்தி பரவி, அவள் வீட்டில் அடித்து உதைத்தும் மசியவில்லை. உறுதியாக இருந்தாள். எனக்கும் மிரட்டல்கள் வந்தன. அதுவும் சொந்தக் கட்சியிலிருந்தே. எல்லாம் பாழாய்ப்போன சாதிதான் காரணம். அதையெல்லாம் மீறித்தான் எங்கள் திருமணம் நடந்தது. 

சொல்லப்போனால் அவள் வந்த பிறகுதான் எனக்கு வாழ்க்கையே புரிபட ஆரம்பித்தது. குடிப்பதை அடியோடு விட்டுவிட்டேன். எந்த வம்பு வழக்குகளுக்கும் போவதில்லை. சங்கத் தொடர்புகளையெல்லாம் துண்டித்து விட்டேன். 

கடந்த இருபதாண்டுகளாக தனி ஆவர்த்தனம் செய்துவந்த பகுதிதான் இது. என்னை மீறி இங்கு எதுவுமே நடந்திட முடியாது.  இப்போதெல்லாம் நான் வருவதும் தெரியாது போவதும் தெரியாது. சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டிக் கொண்டிருக்கிறேன். என்னை முற்றிலும் புதிய மனிதனாய் மாற்றி, புத்தம் புதிய வாழ்க்கைக்குள் கரம்பற்றி அழைத்துச் சென்றவள் கயல் தான்.

 நானென்றால் அவளுக்கு உயிர். எனக்கும் தான். எங்கள் காதலுக்குச் சாட்சியாக அவள் வயிற்றில் இப்போது மூன்றுமாதச் சிசு வளர்ந்து கொண்டிருக்கிறது. 

யாரோ வருவது போலிருக்கிறது. மருத்துவர். கட்டிலோடு கட்டப்பட்டு தொங்கிக் கொண்டிருந்த பரீட்சை அட்டையின் கிளிப்புகளில் சொறுகப் பட்டிருந்த காகிதங்களைக் கூர்ந்து பார்த்தார். தலையை நிமிர்த்தாமலே அருகிலிருந்த செவிலிப்பெண்ணிடம்,

 ’இவரு அட்டண்டர வரச்சொல்லுங்க..’ என்றார்.

நனைந்து சாயம் போன ஓவியம் போல வந்தாள் கயல். அழுக்கடைந்த சேலை கலைந்த தலைமுடி பார்ப்பதற்கு என்னவோ போலிருந்தாள். முகம் லேசாக வீங்கியிருந்தது. அழுதிருப்பாள் போலும். 

”தலைல பலமா அடிபட்டதுல மூளைக்கு போற வெய்ன்ல ப்ளட் க்ளாட் ஆயிருக்கு. சர்ஜரி பன்னித்தான் ஆகனும். பன்னிடலாமா..?”

 சடங்குத்தனமாய் வந்து விழுந்தன வார்த்தைகள்.

“எவ்ளோ செலவாகும் டாக்டர்..?” 

“எப்படியும் ரெண்டு மூனு லட்ச ரூபா ஆயிடும், உங்களால சமாளிக்க முடியுமா..?”

“ஆப்பரேசன் பன்னிட்டா குணமாயிடும்ல டாக்டர்..?” 

“இத பாருங்க, நாலஞ்சு எடத்துல வெட்டுக்காயம் இருக்கு. அதெல்லாம் கூட பிரச்சனையில்ல. முதுகுல ஏதோ ஷார்ப்பான பொருள வச்சு குத்தியிருக்காங்க. முதுகுத்தண்டுல இம்பேக்ட் ஆகியிருக்கு. இது வரைக்கும் நினைவு திரும்பல, கிட்டத்தட்ட கோமால இருக்கார். இந்த ஆப்பரேசன் பன்னிட்டா உயிர் பிழச்சுக்குவாரு. ஆனா எப்போ நினைவு வரும்னு சொல்ல முடியாது. அதுபோக எழுந்து நடக்க எவ்ளோ சான்ஸ் இருக்கு.. எவ்ளோ நாள் ஆகும்னெல்லாம் தெரியல. அத நியூரோ டாக்டர்கிட்டதான் நீங்க கன்சல்ட் பன்னனும்.” 

உடைந்தே போனாள் கயல். சேலைத்தலைப்பை பந்துபோலச் சுருட்டி வாயைப் பொத்திக்கொண்டு கதறியழுதாள். கண்களில் சாரை சாரையாக வழிந்தது கண்ணீர். 

”இங்கல்லாம் இப்டி அழக்கூடாது, பேசண்ட்டுக்கு இன்பெக்சன் ஆயிடும்..

 மேற்கொண்டு என்ன பன்னலாம்னு உங்க ரிலேசன்ஸ்கிட்ட டிஸ்கஸ் பன்னிட்டு சொல்லுங்க..” கிளம்பிவிட்டார். 

“அக்கா எப்டியும் இங்க நாலஞ்சு லட்சம் புடுங்கிடுவாங்கக்கா.. அவ்ளோ செலவு செய்ய முடியுமான்னு யோசிச்சுக்கோங்க. பெட்டர் நீங்க கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கே போயிடுங்க..நாஞ்சொன்னேன்னு யார்ட்டையும் சொல்லீடாதீங்க…” யாருக்கும் கேட்டுவிடக்கூடாது என்ற எச்சரிக்கையோடு மெதுவாகச் சொன்னாள் நர்ஸ். அவளது வார்த்தையில் உண்மையான அக்கரை இருந்தது. கயலை தாங்கிப் பிடித்தபடி வெளியே அழைத்துச் சென்றாள்.

’எனக்கு நினைவு திரும்பிவிட்டது. என்னால் பார்க்க முடிகிறது, கேட்க முடிகிறது..’ கத்த வேண்டும்போல இருந்தது. ஆனால் முடியாதே.. அந்த அறையின் தனிமை அவனை பெரும்பாரமாக அழுத்தியது.

”நாலஞ்சு லட்ச ரூபாய்க்கு கயல் எங்க போவா..? என்ன செய்வா..? எனக்கு எப்படி இது நடந்துச்சு. என்னக் கொல்றதுல யாருக்கு லாபம்..? இப்பதான் நான் எந்த வம்புதும்புக்கும் போறதில்லையே..? பின்ன எந்த எதிரி..? “ அவன் மனதுக்குள் ஆயிரம் கேள்விகள் ஓடிக்கொண்டிருந்தன.

அதற்கான பதில்களையும் அவன் ஆழ்மனமே சொல்லியது.

“ஒன்னா ரெண்டா..? எவ்ளோ அட்டூழியம் பன்ன..? எத்தன பேரோட பாவத்த இழுத்து தலைல கொட்டியிருப்ப. எவ்ளோ பேர் விரோதத்த சம்பாதிச்சிருப்ப. அதுல எவனோ ஒருத்தந்தா உன்ன பழிவாங்கியிருப்பான்..

அதுவும் முருகேசனுக்கு நீ பன்னுன துரோகம் உன்ன சும்மா உடுமா..? நீ இன்னும் அனுபவிப்ப..?” மனிதன் தனது இயலாமையின் உச்ச நிலையில்தான் தனக்குத்தானே சாபம் விட்டுக்கொள்கிறான். 

உண்மைதான்.

அப்போது எனக்கு ஒரு பதினைந்து வயதிருக்கும். பத்தாம் வகுப்பில் பெயிலானதால் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டார் அப்பா. நாஸ் தியேட்டர் அருகிலிருந்த வேலவன் ஆட்டோ கேரேஜில் வேலைக்கு சேர்ந்தேன். அது டெம்போ லாரிகளுக்கு டிங்கர் பெயிண்டிங் செய்கிற இடம். அங்கு பெயிண்டராக இருந்த சலீமுக்கும் எனக்கும் ஆரம்பம் முதலே ஒத்துப்போகவில்லை. எப்போது பார்த்தாலும் எதாவது சொல்லி என்னைத் திட்டிக்கொண்டே இருப்பான். ஒருநாள் கை தவறி பெயிண்ட் டப்பாவைக் கீழே போட்டுவிட்டேன். அதற்கு நன்றாக அடித்து விட்டான். அதோடு விட்டிருந்தாலும் பரவாயில்லை. முதலாளியிடம் இல்லாத பொல்லாத தெல்லாம் சொல்லி என்னை வேலையை விட்டு அனுப்ப வைத்தான். 

அவனை எதாவது செய்யவேண்டும் என்றிருந்தது.

என்ன செய்யமுடியும்..?

அவனுக்கு முப்பது வயதுக்கு மேலிருக்கும். நானோ சிறுவன். ஆனாலும் விடக்கூடாது. எதாவது செய்து அவனைப் பழிவாங்கியே தீரவேண்டும். மனதுக்குள் முடிவு செய்தேன். 

அப்போதுதான் என் நண்பனின் யோசனைப்படி முருகேசனைச் சந்தித்தேன். முருகேசன் சங்கத்து ஆள். அந்தப்பகுதி காரியகமிட்டி துனைச்செயலாளர். இருபத்தைந்து வயதிலேயே அந்த முக்கிய பொறுப்புக்குத் தகுதியானவனாக அவனை மாற்றியது அவனது தைரியம்தான். ஏதோ ஒரு சில்லரைப் பிரச்சனையில் ஒரு தள்ளுவண்டி போண்டா கடையைக் கவிழ்த்தியதுதான் அவனுடைய முதல் ஸ்டண்ட். அதிர்ஷ்டவசமாக அது பாய் கடையாக இருந்ததால் சங்கம் அவனை அரவனைத்துக் கொண்டது.

முருகேசனைச் சந்தித்தேன். எதிரியின் பெயர் சலீம். அது ஒன்றே அவனுக்குப் போதுமானதாக இருந்தது. இரண்டாவது நாளே சலீமை அடித்து உதைத்து மண்டையை உடைத்து.. எல்லாம் முடிந்து விட்டது. தலையில் இரத்தம் வடிய வடிய சலீம் ஓடிய காட்சியைப் பார்க்க எனக்கு ஆனந்தமாக இருந்தது. எதையோ சாதித்து விட்ட பெருமிதத்தில் நான் காற்றில் மிதந்து கொண்டிருந்தேன்.

அந்த வெற்றி, அந்த சந்தோசம், முருகேசனை ஒரு கதாநாயகனாக உணர வைத்தது. முருகேசனோடு நெருங்கிப் பழகினேன். “ஷாகா”க்களுக்கு செல்ல ஆரம்பித்தேன். சில கைதுகள் வழக்குகள் வந்தன. அதையெல்லாம் சங்கம் பார்த்துக்கொண்டது. மற்றவர்களால் கவனிக்கப்படும் நபராக நான் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டிருந்தேன். அந்த திமிர், அந்த போதை எனக்குள் விஷம் போல இறங்கிக்கொண்டிருந்தது. 

சின்னச்சின்ன அடிதடிகளில் இருந்து பெரிய இடப்பஞ்சாயத்து வரையிலும் என்னிடம் வருவதுண்டு. சில பஞ்சாயத்துகளைக் கையாளும்படி மேலிடத்திலிருந்தும் தகவல் வரும். சப் காண்ட்ட்ராக்ட்காரனிடம் வேலையைப் பிரித்துக் கொடுப்பதுபோல. பிரச்சனைக்குத் தகுந்த கமிசன். அதாவது யார் கமிசன் அதிகம் கொடுக்கிறார்களோ அவர்களுக்குச் சாதகமாகப் பஞ்சாயத்தை முடிப்பதுதான் என் வேலை. 

கடைசியாக ஒரு ரியல் எஸ்டேட் பிரச்சனையை முடித்துக் கொடுத்ததுதான் என்னை தலைமைக்கு நெருக்கமான ஆளாக மாற்றியிருந்தது.

ஒரு உள்ளூர் வியாபாரிக்கும் வடநாட்டுச் சேட்டுவுக்குமான பிரச்சனை அது. உள்ளூர் வியாபாரியும் தெரிந்த கை தான். சொல்லப்போனால் முருகேசனுக்கும் தூரத்துச் சொந்தம் தான். ஆனால் என்ன செய்வது சேட்டு பசையுள்ள பார்ட்டியாச்சே. தலைமையின் வழிகாட்டுதல்படி அந்தப் பிரச்சனையில் முருகேசன் எதிர்ப்பையும் மீறி சேட்டுவுக்கு சாதகமாக முடித்தேன்.

 அதிலிருந்துதான் எனக்கும் முருகேசனுக்கும் புகைச்சல் ஆரம்பித்தது. 

எனக்கென்று ஆவர்த்தனம் செலுத்த ஒரு தனி ஏரியா, எப்போதுமே ஆட்கள் புடைசூழ வலம் வருவது, எல்லாம் இருக்கிறது. என்னதான் பசங்க ஆதரவு இருந்தாலும் கூட்டங்களில், சங்க நிகழ்வுகளில் ஒன்றியச் செயலாளர் பொருப்பில் இருக்கும் முருகேசனுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப் படுவது எனக்குள் உறுத்தலாகவே இருந்தது. 

என்னவாவது செய்து அந்தப் பொருப்பைப் பெற்றுவிடவேண்டும் என்ற வெறி எனக்குள் பழுக்கக்காய்ச்சிய இரும்புபோல கனன்றுகொண்டே இருந்தது. 

அதற்கான வாய்ப்பும் வந்தது. அந்த காலகட்டத்தில் சங்கத்துக்கு ஒரு புதிய பிரச்சனை உருவாகியிருந்தது. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு ஜிகாதி அமைப்பு வேகமாக வளர்ந்து வந்தது. அதுவரை எங்களைக்கண்டு அஞ்சியவர்கள் திருப்பி அடிக்க ஆரம்பித்திருந்தனர். அவர்களில் களத்தில் செயல்படும் முக்கிய நபர்களைப் போட்டுத்தள்ளுவதன் மூலம் ஜிகாதி அமைப்பை முடக்கி வைக்க வேண்டுமென்று முடிவானது.

அன்றைய இரவு மாநிலத் தலைவர் கோவலன் ஜீ தலைமையில் நடந்த காரியக்கமிட்டி கூட்டத்தில் நாங்கள் என்னவெல்லாம் செய்யவேண்டும், எப்படி கலவரத்தைத் தூண்டுவது, அந்தக் கலவரத்தைப் பயன்படுத்தி யாரையெல்லாம் பழிதீர்க்க வேண்டும். எந்தக் கடைகளையெல்லாம் சூறையாடி சேதப்படுத்த வேண்டும் என்கிற வழிகாட்டுதல்கள் வந்தன. கிட்டத்தட்ட ஒரு ப்ளூ ப்ரிண்ட் போல எங்களுக்கான திட்டங்கள் வகுத்துக் கொடுக்கப்பட்டது. 

திட்டமிட்டபடி அன்றைய இரவே ஒரு பன்றியின் தலையை கீரைக்காரத் தோட்டம் பகுதியிலிருந்த பள்ளிவாசலுக்குள் வீசிவிட்டு வந்தேன். அதே நேரத்தில் சாய்பாபா காலனியில் உள்ள ஒரு கோவிலுக்குள் மாட்டுத் தலையை வீசவேண்டும் என்பதும் திட்டத்தில் இருந்தது. தலை கிடைக்காததால் மாட்டிறைச்சியை வீசியிருந்தது முருகேசன் அணி.

எதிர்பார்த்தபடியே நிலைமை தீவிரமடைந்தது. இரண்டு தரப்பிலும் கொந்தளிப்பாக இருந்தது. ஆனாலும் உள்ளூர்ப் பெரிசுகளின் முயற்சியால் அது அப்படியே அடங்கிப்போனது. 

அங்கங்கே சிறு சிறு மோதல்கள் நிகழ்ந்தாலும் ஒரு முழுமையான கலவரத்துக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. எதாவது செய்து கலவரத்தைத் தூண்டவேண்டிய கட்டாயம் இருந்தது. 

இறங்கி அடிப்பதென்று முடிவு செய்தோம். 

ஆத்துப்பாலம் என்.எச் ரோடு பகுதிகள் முருகேசன் தலைமையிலும், சாய்பாபா காலனி …. … பகுதிகள் என் தலைமையிலும் இரண்டு அணிகளாகச் சென்று தாக்குதல் நடத்துவது, கடைசியாக உக்கடத்தில் ஒன்றுகூடி கீரைக்காரத் தெருவுக்குள் நுழைவது என்பதுதான் திட்டம். எல்லோரையும் ஒருங்கினைப்பதற்கே பத்து பத்தரை மணி ஆகிவிட்டது. எல்லோருக்கும் விளக்கிச்சொல்லி கிளம்புவதற்கு சுமார் பதிணொன்றைத் தாண்டிவிட்டது. இரவு தாமதமாகிவிட்டதால் ஜன நடமாட்டம் குறைவாக இருக்கும். எப்படியும் 

உக்கடத்தில் நடைபாதை வியாபாரிகள் இருப்பார்கள். பெரும்பாலும் முஸ்லிம்கள்தான். அதில் ஒருவனை இன்று பலியிடுவதென்று முடிவு செய்தேன். 

ஒரு செருப்பு வியாபாரி, தன் தள்ளுவண்டிக் கடையை தார்ப்பாயால் இழுத்துக் கட்டிக்கொண்டு இருந்தான். சாலை வெறிச்சோடித்தான் கிடந்தது. கடைகளெல்லாம் அடைக்கப்பட்டு விட்டதால், தெருவிளக்கு  வெளிச்சத்தைத் தவிர எந்த வெளிச்சமும் இல்லை. 

அவனிடம் சென்று வம்பிழுத்துவிட்டு ஓடவேண்டும். அவன் விரட்டி வரும்போது இருட்டான குறுக்குச்சந்தின் அருகே தயாராக இருக்கும் நபர்களோடு சேர்ந்து அவனைத் தீர்த்துக்கட்ட வேண்டும். திட்டம் ரெடி. ஆனால் அங்கே ஒரு டீக்கடையில் விளக்குகள் எரிந்துகொண்டிருந்தது. யாராவது இருக்கிறார்களா என்றும் தெரியவில்லை. மற்றவர்களை இருட்டில் மறைந்திருக்கச் சொல்லிவிட்டு நானும் பன்னாரியும் மட்டும் சென்றோம். பண்ணாரி என் தளபதி. தம்பி மாதிரி. அவன் ஒருவன் என்னுடன் இருந்தால் போதும். பத்து ஆள் பலம் எனக்கு வந்து விடும்.  

அவன் டீக்கடைக்குள் நுழைந்தான். நாங்களும் பின்னாலேயே சென்றோம். கடைக்குள் இருவர் மட்டுமே இருந்தார்கள். என் ஆட்கள் பத்துப்பேர் அங்கே இருக்கிறார்கள். தாராளமாக திட்டத்தை நிறைவேற்றலாம் என்று நினைத்தேன். 

திடீரென்று சிவா ஓடிவந்து பதட்டத்தோடு கடைக்குள் நுழைந்தான். 

”ஜீ.. முருகேசன் ஜீய குத்திட்டாங்களாம்..” 

மில்ரோடு மேம்பாலத்தில் குத்துப்பட்டுக்கிடந்த முருகேசனை மருத்துவ மனையில் சேர்த்தோம். ஐ.சி.யூ வில் இருந்தான். உயிர் பிழைக்க ஐம்பது சதமே வாய்ப்பு என்று தெரிந்தது. எங்களுக்குள் அனல் கொதித்துக்கொண்டு இருந்தது. 

இப்போதே முஸ்லிம்கள் ஏரியாவுக்குள் நுழைந்து துவம்சம் செய்துவிட வேண்டுமென்ற வெறி ஒவ்வொருவருக்குள்ளும் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டு இருந்தது. மருத்துவ மனைக்கு வந்த கோவலன் ஜீ பேச்சு எங்களை இன்னும் உசுப்பேற்றியிருந்தது. 

மருத்துவமனைக்கு வெளியே சற்றுத்தொலைவில் கோவலன் ஜீயும் நானும் மட்டும் நின்றிருந்தோம். என் தோளில் கைவைத்தபடிப் பேசினார்.

 ’மத்தவனுக என்ன தொடறதுக்கே தயங்கறானுக.. இவரு எவ்ளோ பெரிய ஆளு.. என் தோள்ல கைபோட்டுப் பேசறாரு..’ 

எனக்கு இறக்கை முளைத்துப் பறப்பது போல இருந்தது. 

அவருக்காக என்னவேண்டுமானாலும் செய்வதற்குத் தயாராக இருந்தேன். 

“முதுகுல குத்தியிருக்கானுக சங்கர்..” 

எப்போதுமே ஆவேசமாகப்பேசும் அவரது குரல் தழுதழுத்தது. எனக்கு இன்னும் சூடேறியது.

“இப்ப நீங்க சரின்னு சொல்லுங்க ஜீ.. அவனுக ஏரியாக்குள்ள பூந்து எல்லாரையும் நான் வெட்டறேன்..” 

எனக்குள் இருந்த ஆவேசத்துக்கு அவர் சொல்லியிருந்தால் நான் அதைச் செய்தும் இருப்பேன் தான். 

அவர் வேறுமாதிரிச் சிந்தித்திருந்தார்.

“இல்ல சங்கர். இனி நம்ம சைடுல ஒரு உயிர் போகக்கூடாது, அடுத்து நாம அடிக்கிற அடி மரண அடியா இருக்கனும். இந்து மக்கள் நம்ம பக்கம் நியாயம் இருக்குனு நம்பனும். அதுக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கு..”

 என் முகவோட்டத்தைக் கவனிக்கும்படி நிறுத்தினார்.

“சொல்லுங்க ஜீ.. என்ன பன்னனும்..?”

“முருகேசன் சாகனும்..” 

இந்த வார்த்தையைக் கேட்டதும் எனக்கு பகீரென்றது. என்னை மேற்கொண்டு சிந்திக்க விடாமல் அவரே தொடர்ந்தார். 

“முருகேசனுக்கு முதுகுத்தண்டுல குத்துப்பட்டிருக்கு, அவன் பொழச்சாலும் எந்திரிச்சு நடக்க முடியாது, கோமாவுல தான் இருப்பான்னு டாக்டர் சொல்லிட்டாரு.. சிங்கம் மாதிரி இருந்தவன படுத்த படுக்கையா பொணம் மாதிரி பாக்க என்னால முடியாது..” 

அவர் சொல்ல வருவதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அமைதியாக நின்றேன். 

“ஒரு ஊர் நல்லா இருக்கனும்னா ஒரு ஆள தியாகம் குடுக்கறது தர்மம்னு வேதங்கள் சொல்லுது சங்கர். உன் இடத்துல அவன் இருந்தாலும் இந்து தர்மத்தை காப்பாத்தறதுக்கு இந்தக்காரியத்தை செய்வான். கண்டிப்பா இந்த சாவை அவன் சந்தோசமா ஏத்துக்குவான்..” 

அவரது பேச்சில் நான் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்துகொன்டு இருந்தேன்.

“இனி அவனோட எடத்துல நீதான்.. அவன் இருந்தா என்ன செய்வானோ அத நீ செய்.. ஒட்டு மொத்த இந்துக்களூம் உன்னோட நிப்பாங்க..  நம்ம சங்கமும் உன்கூட நிக்கும்.” 

ஒருவேளை ’இனி அவன் எடத்துல நீதான்’ என்ற வார்த்தைதான் என்னைச் சலனப்படுத்தியதா என்றும் தெரியவில்லை. சம்மதித்தேன்.

ஒரு சிரஞ்சியும் மஞ்சள் நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த ஒரு சிறிய மருந்துப் புட்டியும் கையில் கொடுத்தார். 

நகர் முழுதும் வலம் வந்த சவ ஊர்வலத்தில் மிகப்பெரிய வன்முறை வெடித்தது. வழக்குகளிலெல்லாம் என்னுடைய பெயர் முன்னணியில் இருந்தது. எல்லா வழக்கையும் சங்கமே நடத்தியது.

சங்கமும் வளர்ந்தது. நானும் வளர்ந்தேன்.

‘அகால மரணமடைந்த வீரமுருகேசுக்கு வீரவணக்கம்’

போஸ்ட்டர்கள் நகர் முழுதும் ஒட்டப்பட்டன. 

கொட்டையெழுத்தில் அச்சிடப்பட்டிருந்தருந்த மாவட்டச்செயலாளர் சங்கர் என்ற பெயரைப்பார்த்து புகைப்படத்திலிருந்த வீரமுருகேஸ் சிரித்துக்கொடிருந்தான்.

மீண்டும் யாரோ வருகிறார்கள். கோவலன் ஜீயும் பண்ணாரியும் வந்திருக்கின்றனர்.

 கயல்விழியும் அருகில் இருந்தாள்.

“சங்கர்ண்ணன் சங்கத்தையெல்லாம் விட்டு வெலகிப்போயிட்டாலும்.. கோவலன் ஜீ அண்ணன மறக்கல பாத்தீங்களா..?”

கயல்விழியிடம் சொல்லிக்கொண்டிருந்த பண்ணாரியை இடைமறித்துக் கடிந்துகொண்டார்.

”சும்மா இருப்பா எப்ப எதைப் பேசனும்னு தெரியாதா..?”

“ தைரியமா இருங்கம்மா..  சங்கர்க்கு ஒண்ணும் ஆகாது.. எப்ப எந்த உதவி வேனும்னாலும் தயங்காம எங்கிட்ட கேளுங்க.. ”

கயல்விழியின் கைகளில் சில ஐநூறு ரூபாய் நோட்டுகளைத் திணித்தார்.

“நீங்க வேன்னா வீட்டுக்கு போய் குளிச்சி ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க.. டேய் பண்ணாரி இவங்க வர்ர வரைக்கும் இங்கேயே இருந்து சங்கர பாத்துக்க..”

 சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

கயல்விழி சென்று அரைமணிநேரம் கூட இருக்காது. பண்ணாரி உள்ளே வந்தான்.

“ஏண்ணே…. ஆட்டக்கடிச்சு மாட்டக்கடிச்சு எங்களையே கடிச்சிட்டியேண்ணே.. உனக்கு எவ்ளோ திமுரு இருந்தா தலைவரு சொந்தக்காரப் பொண்ண கல்யாணங்கட்டுவ..”

’இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட வீரசங்கருக்கு வீரவணக்கம்.’  

ஊர் முழுதும் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியில் சிரித்துக் கொண்டிருந்தான் சங்கர்..

– சம்சுதீன் ஹீரா.

Related Posts