அரசியல் பிற

“புதிய கல்வி கொள்கை” என்ற “சனாதன கல்வி கொள்கை”

ஏகலைவன்களின் கட்டைவிரல்கள் வரலாறு நெடுகிலும் வெட்டப்பட்டுள்ளன. வெட்டப்பட்ட விரல்களின் ரத்த கவிச்சி வாடை தோய்வதற்குள் அடுத்த தாக்குதலாக “புதிய கல்விக் கொள்கை” என்ற சனாதான கல்விக்கொள்கை முழுவதுமாய் மாணவர் விரோத சாராம்சங்களோடு எதிர்கால சந்ததியினரை சந்தை கூலிகளாக மாற்றும் தொலைநோக்குத் திட்டத்தோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .

உலகம் முழுவதும் கொரோனாவால் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் வேளையில் மோடி தலைமையிலான பிஜேபி அரசு இந்திய பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்ப்பது , EIA போன்ற சட்டங்கள் மூலம் இயற்கை வளங்களை சூறையாடுவதுமாக தற்போது தேசிய கல்வி கொள்கை என்ற பெயரில் மனுதர்ம கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட காவி கொள்கையை இந்திய கல்வித் துறையில் செலுத்தியுள்ளது. குறிப்பாக சமூக நீதியை குழி தோண்டி புதைக்க வழிவகை செய்துள்ளது.

1968ஆம் ஆண்டு இந்திராகாந்தி ஆட்சியில் முதல் கல்விக் கொள்கையும் , 1986 இல் ராஜீவ் காந்தி ஆட்சியில் இரண்டாவது முறையும் வெளியிடப்பட்டன . பின் 1992 நரசிம்மராவ் ஆட்சியிலும் , பின்னால் மன்மோகன்சிங் ஆட்சியிலும் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 34 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நூற்றாண்டின் முதல் கல்விக் கொள்கையாக NEP2020 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வியில் 10, 12 முறையை நீக்கிவிட்டு 5+ 3+3+8 என்ற முறையை புகுத்தி இருக்கிறது. இதன் மூலம் ஒரு குழந்தை 3 வயது இருக்கும் போதே பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற அறிவியல் பூர்வமற்ற செயலை அரசு முன்னெடுத்துள்ளது. பொம்மைகளை பிடிங்கிவிட்டு, புத்தக சுமையை பிஞ்சுகளின் முதுகில் சுமத்தும் படுபாதக செயலை NEP2020 செய்துள்ளது. 9-12 வரை செமஸ்டர் தேர்வு முறையை அறிமுகப்படுத்தி முற்றிலுமாக குழந்தை பருவத்தை தேர்விலே கடந்தால் அவர்களுக்கான வாழ்க்கையை எங்கே?எப்போது கற்பார்கள்? என்ற கேள்வி எழுகிறது . குறிப்பாக முதல் தலைமுறை கல்வி பயிலும் குழந்தைகள் இந்த தேர்வுகளை கண்டு இடைநிற்கும் அபாயமும் பெரியளவில் உள்ளது.

ஐந்தாவது வரை தாய்மொழி என்ற சொல்லிவிட்டு இடைச்செருகலாக மும்மொழிக் கொள்கையை திணித்து இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியை கட்டாயமாக்க முயல்கிறது. உலகில் முன்னேறிய நாடுகள் அனைத்தும் இருமொழிக் கொள்கையை பின்பற்றும் போது புதிய கல்வி கொள்கை மும்மொழித் திட்டத்தை ஆதரிப்பது ஒரு தேசிய இனத்தின் மொழியை அழித்து விட்டால் அதன் வரலாற்றை சுலபமாக அழித்துவிட்டு தங்கள் காவி அஜண்டாவை எளிதில் புகுத்தி விடலாம் என்ற எண்ணத்தில் தான்.

அதுமட்டுமின்றி இந்தியாவிலுள்ள 40,000 கல்லூரிகளை 20,000 மாக குறுக்கிவிட்டு வெளிநாட்டில் விரட்டப்பட்ட தகுதியற்ற தனியார் கல்வி நிறுவனங்களை சிவப்பு கம்பளம் போட்டு அனைத்து வித சலுகைகளுடன் இந்தியாவிற்குள் துவங்குவதே இவர்கள் திட்டம். இந்திய உயர்கல்வியில் Growth Enrollment Ratioவை 50 சதவீதமாக 2030க்குள் உயர்த்துவோம் என்று அறிக்கையில் கூறி விட்டு கல்வி நிறுவனங்களுக்கு மூடுவிழா நடத்துவது இவர்களின் அப்பட்டமான பொய்யை தோலுரித்துக் காட்டுகிறது.

ஏற்கனவே NEET, JEE போன்ற தேர்வுகளின் மூலம் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் ஏழை எளிய மற்றும் சமூக பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களை ஒதுக்கி வைக்கும் நவீன தீண்டாமையை கடைபிடிக்கும் மத்திய அரசு தற்போது NTA என்ற தேசிய தேர்வு முகமை மூலம் அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளுக்கு நுழைவுத் தேர்வு என்று அறிவித்துள்ளது. ஆகவே மாணவர்களை உயர்கல்வியின் கதவுகளுக்கு வெளியவே நிறுத்தி துரத்துவதே உள்நோக்கமன்றி வேறல்ல. அதையும் தாண்டி உள்ளே சென்றுவிட்டால் இளங்கலை பட்டப்படிப்புகளை நான்கான்டுகளாக உயர்த்தியும், வருடத்திற்கு ஒரு சான்றிதழ் கொடுத்து முழு உயர்கல்வி காற்றை சுவாசிக்க விடாமல் ஏதொ ஒரு வேலைக்கு துரத்தி மாணவர்களை சுலபாக இடைநிற்றல் செய்யவைக்கும் அனைத்து வேலைகளையும் செய்துள்ளது. ஏற்கனவே உயர்கல்வியில் இந்தியாவில் 50.3% இடைநிற்றல் இருக்கும் நிலையில் இத்திட்டம் மேலும் இந்த நிலையை மோசமாக்கும்.

தொழிற்கல்வி என்ற பெயரில் இந்தியகல்வி துறையை இருநூறு ஆண்டுகளுக்கு பின்னால் இழுத்து செல்கிறது இக்கல்வி கொள்கை. மூன்றாம் வகுப்பிலிருந்தே ஒரு குழந்தை ஒரு தொழில் சார்ந்த கல்வியைப் பயில வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது NEP2020. எட்டாம் வகுப்பை நிறைவு செய்யும்போது தொழிற்கல்வி மற்றும் கல்வியியல் கல்வி ஆகியவற்றை சேர்த்து முன்னேறவேண்டும். எட்டாம் வகுப்பில் விருப்பப்பாடமாக ஒரு தொழிற்கல்வி தேர்வு செய்து படித்து வேலைக்குப் போகலாம் என்றும் வழி காட்டுகிறது.

இது தொழிற்கல்வி என்ற போர்வையில் குலக்கல்விக்கு வர்ணம் பூசி புகுத்தும் வேலையே அன்றி வேறன்று. இந்திய சமூகத்தில் பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் மிகச் சிறிய வயதிலேயே சமூக பொருளாதார பின்னணி காரணமாக வேலைக்கு சென்று விடுகின்றனர். அதையும் தாண்டி கல்வி கற்க வருவோரின் எண்ணிக்கை அரிதாக உள்ளது. குறிப்பாக மத்திய அரசின் தரவுகளின்படி 2014ஆம் ஆண்டு பிரைமரி தொடக்கக் கல்வியில் 22.3 சதவீதமும் ஆரம்ப கல்வியில் 40.8 சதவீதமும் இடைநிற்றல் ஏற்பட்டுள்ளது.

வேலைக்கு சென்று விடுவதாலும் மற்ற சில சமூக பொருளாதாரப் பின்னணியும் இதற்கு காரணமாகும். இந்த நிலையில் இந்த அறிவிப்பானது மேலும் இடைநிற்றலுக்கு வழிவகுக்கும். ஒரு பெற்றோரின் நிலையிலிருந்து நோக்கினாள் “தான் பெறாத கல்வியை தன் பிள்ளை பெற்று தன் கஷ்டம் அடையக்கூடாது” என்பதாகவே இருக்கும் போது எட்டாம் வகுப்பிலேயே தொழில் கல்வியை புகுத்தினால் கண்டிப்பாக ஏழை எளிய மாணவர்களின் மனம் தொழில்களை நாடுமே அன்றி படிப்பை அல்ல..

ஏழை எளிய மாணவர்கள் மட்டும் இந்த தொழிலுக்கு போகட்டும் குறிப்பாக தன் தந்தை செய்யும் அல்லது குடும்ப தொழிலுக்கோ போகட்டும், வசதி படைத்தவர்கள் உயர்கல்வியை பெறட்டும் என்ற அடிப்படையிலேயே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறைந்தபட்ச முடிவெடுக்கும் வயது 18 ஆகவும் ,அதற்கும் கீழாக 16 ஆகவும் இருக்கும்போது எட்டாம் வகுப்பு பயிலும் 13 வயது மாணவனை வாழ்க்கை கல்வியை தேர்வு செய்ய சொல்வது கட்டாய வன்முறையாகும்.

இது முழுக்க முழுக்க மாநில கல்வி வாரியங்களின் அதிகாரத்தை மாநில சுயாட்சி உரிமையை பறிக்கும் செயலாகும். பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு உரிமையை பிடுங்கி தனியார் கல்வி நிறுவனங்களை தன்னாட்சியாக உயர்த்துவது கட்டற்ற கட்டண கொள்ளையையும், ஆணவப்போக்கையும் அதிகரிக்கும்.

பாரம்பரிய வட்டார வரலாறு உலக அறிவை அறிவியல்பூர்வமான கல்வியை பெறும் வகையில் கல்வி திட்டம் அமைய வேண்டும் ஆனால் மத்தியத்துவபடுத்தப்பட்ட தேர்வுகள் மற்றும் கல்விமுறையை நாடு முழுவதும் அமல் படுத்துவதன் மூலம் தேசிய இனங்களின் பாரம்பரிய வரலாற்றை அழித்தொழிக்கும் உறுதிபூண்டுள்ளது மத்திய பிஜேபி அரசு மேலும் மாநிலங்களில் உள்ள கொஞ்சம் உரிமைகளையும் பிடுங்கும் வகையில் UGC, NAAC, AICTU ஆகிய உயர்கல்வித்துறைகளை அழித்துவிட்டு இந்திய உயர்கல்வி ஆணையம் என்னும் ஒற்றை தலைமையை அமைத்து அதிகாரக் குவியலை ஏற்படுத்தி கல்வியில் சர்வாதிகார போக்கை ஏற்படுத்த முனைகிறது மத்திய அரசு.

தமிழகம் சமூக நீதிக்கான மண்ணாக தொடர்ந்து இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் சமூகரீதியில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு வெவ்வேறு அளவுகளில் அனைத்து மாநிலங்களிலும் நடைமுறையில் உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் 69% (50+18+1) என்ற விகிதத்தில் உள்ளது. இதை சிதைப்பதற்காகவே சமூகநீதியை பற்றி மறந்தும் கூட பேசாத கல்விக் கொள்கையாக இக்கொள்கை வார்த்தெடுக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களும் சமூக ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டு விட்டு அரசுக்கு இருக்கும் பொறுப்புகளை லாவகமாக தவிர்த்து உள்ளது. இட ஒதுக்கீட்டு கொள்கைகளை முறையாக அமல்படுத்துவது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை .

அதை முற்றிலுமாக ஒழிப்பதற்கான வேலையை கடந்த ஆண்டுகளிலேயே ஆரம்பித்து விட்டது மத்திய அரசு . RUSA திட்டத்தின் அடிப்படையில் பொதுப்பட்டியல் மாணவர்களுக்கான ஊக்கத்தொகை 2018-19 இல் 2300 கோடியாகவும் அது அப்படியே 2020-21 ஆம் ஆண்டில் 300 கோடி ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. பட்டியலின மாணவர்களுக்குக் கொடுக்கப்படும் ஊக்கத்தொகை 2019-20 இல் 402 கோடியாகவும் , அதே 2020-21இல் 50 கோடி ஆகவும் , எஸ்டி மாணவர்களுக்கு 2019-20 222 கோடியாகவும் 2020-21 இல் 25 கோடியாகவும் குறைக்கப்பட்டுள்ளது. பெண் கல்வி பற்றி வானளவு பேசும் அறிக்கை நடைமுறையில் என்ன செய்யும் என்பதை கடந்தகால வரலாற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். “பேட்டி பச்சாவ் பேட்டி பதாவ்”என்ற திட்டத்தின் மூலம் 2019ல் ஒதுக்கப்பட்ட 250 கோடி சுருக்கப்பட்டு 2020-21இல் 200 கோடியாக மாறியது. National scheme of incentive to girls for secondary education போன்ற திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை.

தமிழகத்தில் கலைஞர் ஆட்சியில் 8வது வகுப்பை தாண்டும் பெண்களுக்கு 5000ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.ஐசிடிஎஸ் திட்டத்தின் 700,800 கோடிகளையும் முற்றிலுமாக வெட்டி விட்டார்கள். இப்படி கடந்த காலங்களில் எல்லாம் மானியங்கள் மற்றும் திட்டங்களையும் ஒழித்துவிட்டு கல்விக் கொள்கையில் நாங்கள் இதையெல்லாம் செய்து விடுவோம் என்று வாய்முழம் நீட்டுவது உபயோகபடாது.

“உலகத்தின் ஆகசிறந்த ஆயுதம் கல்வி”அதனால்தான் தன் தண்டாயுதத்தை விட்டுவிட்டு , ஆர்எஸ்எஸ்-பிஜேபி கூட்டணி கல்வியாயுதத்தை கையில் எடுத்துள்ளது. எனவே இன மொழி கடந்து இந்திய ஒன்றியத்தின் அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து இந்த சனாதன காவி கல்வி கொள்கையை எதிர்க்க வேண்டும். மாநில சுயாட்சி உரிமையை புடுங்குகிற, மாணவர்களை சந்தை கூலிகளாக மாற்ற முயலுகிற வணிகமயமான மனுநீதி கொள்கையாம் புதிய கல்வி கொள்கையை நாம் ஓரணியில் திரண்டு ஒருமித்த குரலில் எதிர்க்க வேண்டும்.

சுபாஷ்.

Related Posts