அரசியல்

விடியலை நோக்கிய பயணத்தில் நேப்பாளம்…

இந்தியாவின் அண்டை நாடான நேப்பாளத்தில் தற்போது தேர்தல் நடந்து, அதில் கம்யூனிஸ்டுகள் பெருவாரியான பாராளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்று, தனித்து ஆட்சியமைக்கும் நிலையை எட்டியிருக்கின்றனர். இதற்கு முன்னரும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிரதமரும் அதிபரும் இருந்தார்கள் தானே! அப்போதைய நிலையை விடவும் இப்போது என்ன பெரிதாக மாற்றம் நிகழ்ந்துவிட்டது? அதிலும் ஏராளமான கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கும் நேப்பாளத்தில் எதுதான் நல்ல கட்சி? என்பன போன்ற கேள்விகளுக்கான விடைகளை வரலாற்றுப்பூர்வமான உண்மைகளோடு நாம் தெரிந்துகொள்வது அவசியம் என்று தோன்றியதால் எழுதப்பட்ட கட்டுரை இது.

மன்னராட்சியில் நேப்பாளம்:

நேப்பாளம் ஒருகாலத்தில் இந்து நாடாகவும் மன்னராட்சியின் கீழும் இருந்துவந்தது. ஆனால் இன்று நீண்ட நெடும் போராட்டத்திற்குப் பின்னர், இன்று குடியரசு நாடாக மாறியிருக்கிறது.

200 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவந்த மன்னராட்சியை ஒழிக்கவேண்டி, 1990இல் நேப்பாள காங்கிரசுடன் இணைந்து ‘ஐக்கிய இடது முன்னணி’யினை [ULF] நேப்பாளத்தின் பல கம்யூனிஸ்ட் கட்சிகள் உருவாக்கினர். ஆனால் மன்னர்க்குடும்பத்துடன் மறைமுகமாக உறவு வைத்துக்கொண்டிருக்கும் நேப்பாள காங்கிரசுடன் இணைந்ததை எதிர்த்து, பலரும் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்துசென்று ‘ஐக்கிய தேசிய மக்கள் இயக்கம்’ [UNPM] என்கிற இயக்கத்தை துவங்கினர். மன்னராட்சியை ஒழிப்பதற்கும் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கும், ‘அரசியல் அமைப்புச் சபை’யொன்றினை அமைக்கவேண்டும் என்பதுதான் ஐக்கிய தேசிய மக்கள் இயக்கத்தின் மையக் கோரிக்கையாக இருந்தது.

1990இல் ஐக்கிய தேசிய மக்கள் இயக்கத்தின் சார்பாக, நேப்பாள கம்யூனிஸ்ட் கட்சி (ஐக்கிய மையம்) [CPN(UC)] உருவாக்கப்பட்டது. ‘புதிய ஜனநாயகப் புரட்சிக்கான பாதையில் ஆயுதமேந்திப் போராடுவது’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அக்கட்சியின் வெகுஜன இயக்கமான நேப்பாள ஐக்கிய மக்கள் முன்னணியின் [UPFN] சார்பாக தேர்தலில் போட்டியிட்டு தேசத்தின் மூன்றாவது பெரிய சக்தியாக உருவெடுத்திருந்தது. இருந்தபோதும், தேர்தல் பாதையா? அல்லது ஆயுதமேந்திப் போராடும் பாதையா? என்கிற குழப்பம் கட்சியின் அனைத்து மட்டத்திலும் தொடர்ந்து இருந்து வந்தது. மன்னரின் ஆட்சியின் கீழ் நடக்கும் தேர்தலில் போட்டியிட்டு பெரும்பான்மையே பெற்றாலும் கூட, எவ்வித அதிகாரமும் கிடைத்துவிடாது என்பதைப் புரிந்துகொண்டதனால், தேர்தலைப் புறக்கணித்து ஆயுதப்போராட்டத்தைத் துவங்குவது என்று முடிவெடுத்து நேப்பாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிசம்) என்கிற பெயரில் ஒரு புதிய கட்சி உருவாக்கப்பட்டது.

மாவோயிஸ்ட்கள் நடத்திய ‘மக்கள் போர்’:

இந்திய மாவோயிஸ்டுகளைப் போலல்லாமல், மிகத்தெளிவான பாதையிலேயே பயணித்தது நேப்பாள மாவோயிஸ்ட் கட்சி. நேப்பாள அரசுடன் பேச்சுவார்த்தையில் இறங்கும்போது, மன்னராட்சியை ஒழிப்பதையும், இந்தியாவுடன் போடப்பட்டிருக்கும் ஒருதலைப்பட்சமான மகாகாளி ஒப்பந்தங்கள் உள்ளிட்டவற்றை இரத்து செய்யவும், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கான தேர்தலை நடத்தவும் நிற்பந்திக்கப்பட்டது. அதேவேளையில், மக்கள் குடியரசு எவ்வாறு இருக்கவேண்டும் என்கிற பிரச்சாரத்தை கட்சி உறுப்பினர்களிடமும் கட்சி நடத்தியது. எளிய மக்களிடமோ, மன்னராட்சியை ஒழிப்பதும் மக்கள் குடியரசை உருவாக்குவதுமே கட்சியின் பிரதான இலட்சியமென்று தங்களது கோரிக்கைகளை எளிமைப்படுத்தியும் பரப்புரை செய்யப்பட்டது. நேப்பாள மாவோயிஸ்ட் கட்சியின் தலைவரான பிரசன்டா, நேப்பாள சூழலைக் கருத்தில்கொண்டு, மார்க்சிய-லெனினிய-மாவோயிச தத்துவங்களின் நீட்சியாக, ‘பிரசன்டா பாதை’ என்கிற தத்துவத்தையே உருவாக்கினார். நேப்பாள மாவோயிஸ்டுகள் பொதுமக்களிடம் அவ்வாறு உருவாக்கிய பொதுக்கருத்தின் பலனாக பல்வேறு ஜனநாயக அமைப்புகளும் குழுக்களும் அவர்களது வேண்டுகோளுக்கு வலுசேர்க்கும் வகையில் மன்னராட்சிக்கு எதிரான போராட்டங்களை நடத்தத் துவங்கியிருந்தனர்.

பத்தாண்டுகளாக நேப்பாள மாவோயிஸ்டுகள் நடத்திய மக்கள் போரினால் நேப்பாளத்தின் மன்னருக்கும் பாராளுமன்றத்திற்கும் அதிகாரம் இருந்தும் செயல்படமுடியாத நிலைதான் ஏற்பட்டது. போர் கொடுத்த நெருக்கடியின் காரணமாக வேறுவழியின்றி பேச்சுவார்த்தைகளை நடத்தவேண்டிய கட்டாயத்திற்கு இருதரப்பினரும் தள்ளப்பட்டனர். மக்கள் நலனுக்காக ஆயுதத்தை எடுக்கும் எந்தவொரு அமைப்பும், அதேமக்கள் நலனுக்காக அவ்வாயுதத்தை எப்போது கீழேபோட வேண்டும் என்பதையும் சரியாகக் கணிக்கவேண்டும். இல்லையேல் போர்துவங்கப்படுகிற காலத்திற்கு முந்தைய சூழலைவிடவும் அதிகமான இழப்புகளை சந்திக்க நேரிடும். அதற்கு வரலாற்றில் ஏராளமான உதாரணங்கள் உண்டு.

போருக்குப்பின் அமைதி ஒப்பந்தம்:

இதற்கிடையில், நேப்பாளத்தின் மன்னராக 1972 முதல் 2001 வரை இருந்த பிரேந்திராவும் அவரது ஒட்டுமொத்த குடும்பமும் 2001இல் நடந்த குடும்ப சண்டையில் ஒருவருக்கொருவர் சுட்டுக்கொண்டு இறந்துபோயினர். இதன்மூலம் பிரேந்திராவின் தம்பியான ஞானேந்திரா புதிய மன்னராக பொறுப்பேற்றார். ஒட்டுமொத்த மன்னர் குடும்பமும் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஞானேந்திராவின் குடும்பத்தினர் ஒருவருக்கும் எதுவும் ஆகாமல் போனதெப்படி என்று அப்போதே பலராலும் பல கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்படுகொலையின் பின்னணியில் இந்திய உளவு அமைப்பான ‘ரா’வுக்கும் அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏவுக்கும் தொடர்பு இருக்கிறது என்று நேப்பாள் மாவோயிஸ்ட் கட்சியின் தலைவரான பிரசன்டாவும் வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டினார். இறுதியாக 2006இல் நேப்பாள அரசுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையிலான ஒரு அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன்படி,

 • மன்னரின் அதிகாரங்கள் அனைத்தும் பறிக்கப்படும்,
 • மன்னர் குடும்பத்தின் சொத்துக்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்படும்,
 • புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கான அரசமைப்புக்குழு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும்,
 • மாவோயிஸ்ட் இராணுவத்தை மெல்ல மெல்ல நேப்பாள் இராணுவத்தோடு இணைக்கப்படும்

போன்ற பல்வேறு அம்சங்களைக் கொண்ட ஒப்பந்தம் போடப்பட்டது.

முதல் அரசியலமைப்புச் சபை:

அமைதி ஒப்பந்தம் போடப்பட்ட பின்னர், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கு ஒரு குழுவினை அமைக்கவேண்டியிருந்தது. அதற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க ஒரு தேர்தலும் 2008இல் நடத்தப்பட்டது. அனைவரும் எதிர்பார்த்ததைப் போலவே மாவோயிஸ்ட்கள் அதிகமான இடங்களைக் கைப்பற்றி நேப்பாளத்தின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தனர். மொத்தமுள்ள 601 இடங்களில் 229 இடங்களை அவர்கள் கைப்பற்றினர். இருந்தபோதும் பெரும்பான்மை கிடைக்காமல் போனதால், மிகப்பெரிய குழப்பம் நிலவியது. அரசியலமைப்பை உருவாக்குவதற்கான குழுவில் காலங்காலமாக நேப்பாள அரசுடனும் இந்திய அரசுடனும் இணக்கமாக இருந்துவந்த நேப்பாள காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படவேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. இதனால் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணியிலும் சுணக்கம் ஏற்பட்டது.

இரண்டாண்டுகளுக்குள் எழுதிமுடிக்கப்பட்டிருக்கவேண்டிய அரசியலமைப்புச் சட்டம், பல்வேறு நீட்டிப்புக்கு பின்னர் நான்கு ஆண்டுகளாகியும் முடிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மத்தியில் குழப்பங்களும், ஆங்காங்கே போராட்டங்களும் வெடித்தன. அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கமுடியாமல் போனதற்குக் காரணம் மாவோயிஸ்ட்கள் தான் என்று பிரச்சாரம் செய்து, மக்களின் கோபத்தை மாவோயிஸ்ட்கள் பக்கம் முழுவதுமாக நேப்பாள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் திசைதிருப்பிவிட்டன. குழப்பமான அச்சூழலை பயன்படுத்தி மீண்டும் மன்னராட்சியைக் கொண்டுவர தான் தயாராக இருப்பதாக ஞானேந்திரா தெரிவித்தார். ஆனால் அவரை யாரும் கண்டுகொள்ளவுமில்லை, கடந்த காலத்தைப் போல அந்நிய நாடுகளின் ஆதரவும் அவருக்குக் கிடைக்கவுமில்லை.

2012 மே மாதத்தில் (2008இல் தேர்ந்தெடுக்கப்பட்ட) அரசியலமைப்புச் சபை கலைக்கப்பபட்டதாக அறிவிக்கப்பட்டது. மீண்டுமொரு தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசியலமைப்பு சபை உருவாக்கப்படும் என்றும் சொல்லப்பட்டது. இதனிடையில் மாவோயிஸ்ட் கட்சியின் தலைவரான பிரசன்டாவின் அரசியல் குருவாகவும் மாவோயிஸ்ட் கட்சியின் தத்துவார்த்த வளர்த்தெடுப்புக்கு பல ஆண்டுகளாக துணையிருந்தவருமான தோழர் மோகன் வைத்யா (கிரண்) கடுமையான விமர்சனங்களை பிரசன்டா மீதும் கட்சித்தலைமை மீது வைத்தார். 70 அம்சங்களைக் கொண்ட கோரிக்கை மனுவை, மாவோயிஸ்ட் கட்சியின் தலைவர்களின் ஒருவரும் அப்போதைய நேப்பாள பிரதமருமான பாபுராம் பட்டாராயிடன் வழங்கினார். இதில் வேடிக்கை என்னவென்றால், 1996இல் மக்கள் போர் துவங்குவதற்கு முன்னர் அப்போது பிரதமராக இருந்த ஷெர் பகதூரிடம் பாபுராம் பட்டாரும் இதேபோன்ற கோரிக்கை மனுவை சமர்ப்பித்திருந்தார். அதனை நிறைவேற்றமுடியாத அரசை எதிர்த்தே போரினைத் துவக்கியதாக அப்போது மாவோயிஸ்ட்கள் தெரிவித்திருந்தனர். அக்கோரிக்கை மனுவிலிருந்த 40 அம்சங்களை அப்படியே எடுத்து பாபுராம் பட்டாரிடம் கொடுத்த மனுவிலும் சேர்த்திருந்தார். அதன்மூலம், மாவோயிஸ்ட்கள் எந்தளவுக்கு தங்களது கொள்கையிலிருந்தும் இலட்சியத்திலிருந்தும் விலகிச்சென்றிருக்கின்றனர் என்பதை சுட்டிக்காட்டினார் மோகன் வைத்யா (கிரண்). அதனைத் தொடர்ந்து, நேப்பாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) [CPN-M] என்கிற புதிய கட்சியினை 2012 ஜூன் மாதத்தில் கிரண் துவங்கினார். மக்களைத் திரட்டப்போவதாகவும், தேவைப்பட்டால் ஆயுதமேந்தி மீண்டும் மக்கள் போரினைத் துவக்கப்போவதாகவும் கிரண் அறிவித்தார். ஆனால் மீண்டும் ஆயுதத்தைக் கையிலெடுப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதை கிரணும் உணர்ந்திருந்தார். அடுத்து நடக்கவிருக்கும் அரசியலமைப்புச் சபைத் தேர்தலையும் புறக்கணிப்பதாக புதிதாக உருவாகியிருந்த அக்கட்சி அறிவித்திருந்தது.

இரண்டாவது அரசியலமைப்புச் சபையும் புதிய அரசியலமைப்புச் சட்டமும்:

முதல் அரசியலமைப்புச் சபை கலைக்கப்பட்ட பின்னர், 2013 நவம்பர் மாதத்தில் இரண்டாவது அரசியலமைப்புச் சபைக்கான தேர்தல் நடத்தப்பட்டது. முதல் அரசியலமைப்புச் சபையின் தோல்விக்கான பழியை சுமக்க வேண்டியிருந்ததாலும், தத்துவார்த்த தலைவராக பல ஆண்டுகள் இருந்துவந்த தோழர் கிரண் வெளியேறியதாலும், நேப்பாள மாவோயிஸ்ட் கட்சி [UCPN(Maoist)] மிகப்பெரிய தோல்வியை சந்திக்கவேண்டியிருந்தது. 2008இல் நடந்த முதல் அரசியலமைப்புச் சபைத் தேர்தலில் 229 இடங்களைப்பிடித்திருந்த அக்கட்சி, 2013இல் நடந்த தேர்தலில் வெறும் 80 இடங்களைத்தான் பிடிக்கமுடிந்தது. 200க்கும் மேற்பட்ட இடங்களைப் பிடித்து மிகப்பெரிய கட்சியாக மீண்டும் நேப்பாள காங்கிரஸ் கட்சி உருவெடுத்தது. மார்க்சிய லெனினிய பாரம்பரியத்தைக் கொண்ட நேப்பாள கம்யூனிஸ்ட் கட்சி (ஐக்கிய மார்க்சிய லெனினியம்) [CPN(UML)] 181 இடங்களில் வெற்றிபெற்ற இரண்டாவது பெரிய கட்சியாக மாறியது. புதிய அரசிலமைப்புச் சட்டத்தினை உருவாக்கும் பணியினை புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் துவங்கினர். ஆனால் இம்முறை மாவோயிஸ்ட் கட்சிக்கான அதிகாரம் குறைவாகத்தான் இருந்தது.

இரண்டாண்டுகளுக்குப்பின்னர் 2015இல் கூட்டாட்சிக் குடியரசு நாடாக நேப்பாளம் அறிவிக்கப்பட்டது. அந்நாட்டின் முதல் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு சபையில் ஒப்புதலும் பெறப்பட்டது. இந்து நாடாக நேப்பாளத்தை அறிவிக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யவேண்டுமென இந்தியா அழுத்தம் கொடுத்ததாக செய்திகள் வெளியாகின.  அரசியலமைப்புச் சட்டம் உருவாவதற்கு முன்னர், நேப்பாளத்தின் நலனுக்கு எதிரான ஏராளமான ஒப்பந்தங்கள் இந்தியாவுக்கும் நேப்பாளத்திற்கும் இடையே போடப்பட்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் இந்த புதிய அரசியலமைப்புச் சட்டம் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. சர்வதேச சமூகத்துடனும் இன்னபிற நாடுகளுடனும் சுதந்திரமாக வர்த்தக மற்றும் அரசியல் உறவை ஏற்படுத்திக்கொள்ள பழைய இந்தியா-நேப்பாள ஒப்பந்தங்கள் எல்லாம் தடையாக இருந்திருக்கின்றன. புதிய அரசியலமைப்புச் சட்டத்தால், அவையும் தற்போது மாறும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. பழைய ஒப்பந்தங்களை மாற்றி புதுப்பிக்க நேப்பாளம் கொடுக்கும் கோரிக்கைகளை இந்தியா நிராகரித்தும் வந்திருக்கிறது.

ஜனநாயகத்தைப் பொருத்தவரையில் நேப்பாளம் இளந்தேசம் தான்; ஆனால், அதனைப் பெறுவதற்கான பாதையில் நேப்பாளத்திற்கு நீண்ட நெடும் வரலாறும் அனுபவமும் இருக்கிறது. அவர்களின் புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் மாதேசி இனமக்களுக்கு சமவாய்ப்பு அளிக்கவில்லை என்று குறைகூறியது இந்தியா. மாதேசி இனமக்களுக்கு மட்டுமல்ல, தாழத்தப்பட்ட மக்கள், பழங்குடியின மக்கள், இசுலாமிய மக்கள், அனைத்துத் தரப்பு பெண்கள் என பலருக்கும் இப்புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் சமமான அங்கீகாரம் வழங்கப்படவில்லைதான். அதற்கான போராட்டங்களும் விவாதங்களும் அங்கே பெரியளவில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அதற்குள்ளே இந்தியா தலையிடத்துவங்கியது. ஒரு குறிப்பிட்ட இனமக்களுக்கு மட்டும் ஆதரவளிப்பதுபோல இந்தியாவின் அரசு குரல்கொடுப்பது, நேப்பாள மக்களை பிரித்தாளும் சூழ்ச்சிதான் என்பதை நேப்பாள மக்களும் அறிந்திருந்தனர்.

அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட காலத்தில், நேப்பாளத்திற்கான வர்த்தகப்பாதையினை இந்தியா அடைத்துவிட்டது. இதனால் பெட்ரோலியப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் பலவும் நேப்பாளத்திற்குள் நுழையமுடியாமல் போனது. அந்நாட்டின் மக்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டனர்.

நேப்பாளக் குடியரசின் முதல் தேர்தல்:

புதிய அரசியலமப்புச் சட்டத்தின்படி, நேப்பாளக் குடியரசின் முதல் பாராளுமன்றத் தேர்தல் 2017 நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நடைபெற்றது. 165 வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நேரடியாக மக்கள் வாக்களித்தனர். மேலும் ஒரு 110 உறுப்பினர்கள், கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகிதத்தை வைத்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆகமொத்தமுள்ள 275 இடங்களில், 138 இடங்களைக் கைப்பற்றும் கட்சியே நேப்பாளக் குடியரசின் முதல் ஆட்சியைப் பிடிக்கும்.

நேபாளத்தில் ஒரு வினோதமான நிலைமை எப்போதும் இருந்துவந்திருக்கிறது. அங்கிருக்கும் முக்கால்வாசி கட்சிகள் கம்யூனிஸ்ட் கட்சிகள் தான். கம்யூனிஸ்ட் அல்லது மாவோயிஸ்ட் போன்ற வார்த்தைகளைக் கொண்ட கட்சிகள். அதேபோன்று, ஒவ்வொரு தேர்தலிலும் அதிகமான ஓட்டுகளை வாங்குவதும் கம்யூனிஸ்ட்களாகத்தான் இருக்கும். ஆனால் ஆட்சியதிகாரத்தில் முழுமையாக அவர்களால் இருக்கமுடியாத அளவிற்கு பலகட்சிகளாகப் பிளவுபட்டிருக்கின்றனர். அதனாலேயே மன்னராட்சிக்கு ஜிங்சக் போட்டும், இந்தியாவின் ஆதிக்கத்திற்கு வளைந்துகொடுத்தும் செயல்படும் நேப்பாள காங்கிரஸ் கட்சியே எப்போதும் பெரிய கட்சியாக இருந்துவருகிறது. இவ்வுண்மையினை உணர்ந்துகொண்ட இருபெரும் கம்யூனிஸ்ட் கட்சிகளாக நேப்பாள மாவோயிஸ்ட் கட்சியும் [CPN(Maoist)] மற்றும் நேப்பாளக் கம்யூனிஸ்ட் கட்சியும் (ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) இணைந்து தேர்தலை சந்திப்பது என்றும், தேர்தலுக்குப் பின்னர் ஒரே கட்சியாக மாறுவதும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. இது வரலாற்றுச் சிறப்புவாய்ந்த முடிவாக அப்போதே மக்களால் பார்க்கப்பட்டது.

நேப்பாள கம்யூனிஸ்ட் கட்சிகள்

கட்சி துவங்கப்பட்ட

ஆண்டு

கட்சி கலைக்கப்பட்ட ஆண்டு கட்சியின் பெயர் சுருக்கம் கட்சியின் முழுப்பெயர்
1949 CPN Communist Party of Nepal
1962 2001 CPN(B) Communist Party of Nepal (Rayamajhi)
1968 1987 CPN(PushpaLal) Communist Party of Nepal (Pushpa Lal)
1974 1990 CPN(FC) Communist Party of Nepal (Fourth Convention)
1979 1987 CPN(Manmohan) Communist Party of Manmohan (Manmohan)
1981 2009 CPN(MLM) Communist Party of Nepal (Marxist-Leninist-Maoist)
1983 2002 CPN(Masal) Communist Party of Nepal (Masal) [CPN(Masal)]
1999 2002 CPN(Masal1999) Communist Party of Nepal (Masal) – 1999 [CPN(Masal)]
1978 1991 CPN(ML) Communist Party of Nepal (Marxist-Leninist) [CPN(ML)]
1990 2001 CPN(UC) Communist Party of Nepal (Unity Centre)
1986 1991 CPN(Marxist) Communist Party of Nepal (Marxist) [CPN(Marxist)]
1991 2005 CPN(Marxist) Communist Party of Nepal (Marxist) [CPN(Marxist)]
1991 2005 CPN(United) Communist Party of Nepal (United)
1991 CPN(UML) Communist Party of Nepal (Unified Marxist-Leninist) [CPN(UML)]
1994 CPN(Maoist) Communist Party of Nepal Maoist Centre [CPN(Maoist)]
Leader: Pushpa karma Dahal
2002 2009 CPN(UCM) Communist Party of Nepal (Unity Centre – Masal) [CPN(UCM)]
2005 2013 CPN(United Marxist) Communist Party of Nepal (United Marxist)
2006 CPN(Masal) Communist Party of Nepal (Masal)
2007 2013 CPN(Unified) Communist Party of Nepal (Unified)
2010 2013 CPN(MLS) Communist Party of Marxist-Leninist (Samajbadi) [CPN(MLS)]
2012 CPN-M Communist Party of Nepal – Maoist [CPN-M]
Leader: Mohan Baidya (alias) Kiran
2013 CPN Communist Party of Nepal
2014 CPN(M) Communist Party of Nepal (Maoist) [CPN(M)]
Leader: Netra Bikram Chand

முதல் பாராளுமன்றத் தேர்தலின் முடிவுகள் வரத்துவங்கியிருக்கின்றன. இதுவரை 165 தொகுதிகளில் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நேப்பாள மாவோயிஸ்ட் கட்சி மற்றும் நேப்பாள கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்) இணைந்த கூட்டணி வெற்றியும் முன்னணியும் பெற்றிருக்கின்றன. நேப்பாள வரலாற்றில், மன்னர்க்குடும்பம் மற்றும் இந்திய ஆட்சியாளர்களின் குரலாக மட்டுமே இருந்துவந்த நேப்பாள காங்கிரஸ் கட்சியை முற்றிலுமாக ஆட்சியதிகாரத்திலிருந்து துரத்தும் தேர்தல் முடிவாகவும் இது அமைந்திருக்கிறது. முழுமையான சுதந்திரத்துடனான ஒரு இடதசாரி அரசாகவும் இது இருக்கப்போகிறது.

புதிய அரசு எதிர்கொள்ளப்போகும் சவால்கள்:

 • உட்கட்சி சவால்: நேப்பாள மாவோயிஸ்ட் கட்சியும் நேப்பாள கம்யூனிஸ்ட் கட்சியும் (யுஎம்எல்) இணைந்து புதிய கட்சி உதயமாகப் போவதாக அவர்களே அறிவித்திருக்கின்றனர். இருபெரும் கட்சிகளை இணைப்பதென்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஏற்கனவே இதேபோன்று பல்வேறு கட்சிகளை இணைத்து மாவோயிஸ்ட் மையம் அமைத்தபோதுகூட, பல பிரிவுகளும் கட்சி உடைப்புகளும் நடந்தேறின. இதுபோன்ற பிரிவினைகள், சண்டைகள் எல்லாம் கடந்த 50-60 ஆண்டுகால நேப்பாள அரசியல் வரலாற்றில் தொடர்ந்து பலமுறை நடந்தே வந்திருக்கின்றன. அதனால் புதிய கட்சி உதயமாகும் போது, ஒருமித்த கருத்தையும் கொள்கைகளையும் கட்சித்திட்டத்தையும் உருவாக்குவது தான் மிகப்பெரிய சவாலாக இருக்கப்போகிறது

 

 • எதிர்க்கட்சி சவால்: இத்தனை ஆண்டுகாலமும் ஏதாவதொரு வகையில் ஆட்சியதிகாரத்தில் நேப்பாள காங்கிரஸ் கட்சி இருந்துவந்திருக்கிறது. இந்திய அரசுடனும், அமெரிக்க அரசுடனும் இணங்கிப்போகிற தன்மையைக் கொண்ட அக்கட்சி, எதிர்க்கட்சியாக தனது எல்லா பலத்தையும் பயன்படுத்தி, புதிய அரசுக்கு கடும் நெருக்கடிகளைக் கொடுக்கும். அதனை புதிய இடதுசாரி அரசு எவ்வாறு கையாளப்போகிறது என்று இனிதான் தெரியும்.

 

 • எல்லைப்பிரச்சனை: ஆனாவூனா பாகிஸ்தான் பாய்ந்துவிட்டது என்றும், சீனா சீண்டிவிட்டது என்றும் இந்தியாவில் சிலர் புலம்புவதை நாம் பார்த்துவருகிறோம். ஆனால், நேப்பாளத்தின் எல்லைக்குட்பட்ட 60,000 ஹெக்டேர் நிலத்தினை கலப்பனி உள்ளிட்ட 54 பகுதிகளில் இந்தியா ஆக்கிரமித்து வைத்திருக்கிறது. இந்திய-நேப்பாள எல்லையில் போடப்பட்டிருந்த 3558 எல்லையோர தூண்களில் 2358 தூண்கள் தான் தற்போது இருக்கின்றன. அப்பகுதிகளிலெல்லாம் அடிக்கடி திருட்டு, பாலியல் வன்கொடுமை, நிலங்களை ஆக்கிரமிப்பது உள்ளிட்ட எல்லைதாண்டிய சமூகவிரோதச் செயல்கள் தொடர்ந்து நடக்கின்றன. கடந்த காலத்தில் இப்பிரச்சனைகளை பலமுறை மென்மையாக இந்தியாவிடம் நேப்பாளம் எழுப்பத்தான் செய்திருக்கிறது. ஆனால், இந்திய அவற்றை பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை. எல்லைப் பிரச்சனையில் புதிய அரசு என்னமாதிரியான நிலைப்பாட்டை எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

 

 • கலாச்சார பண்பாட்டுத்தளம்: நேப்பாளத்தின் திரைப்பட சந்தையினை இந்தியாவின் இந்தித் திரையுலகம் தான் ஆக்கிரமித்திருக்கிறது. மாவோயிஸ்ட்களின் போர்க்காலத்தில், இந்தியப்படங்களுக்கு தடையெல்லாம் கூட அமலில் இருந்தது. நேப்பாளத்தின் கலை மற்றும் பண்பாட்டுத்தளத்தில் இந்தியாவின் ஊடுருவலால், அவர்களின் பாரம்பரிய கலைகளும் அழிவை சந்தித்து வருகின்றன. புதிய அரசுக்கு இது சவாலான வேலைதான்

 

 • இந்தியாவை நம்பியே இறக்குமதியும் ஏற்றுமதியும்: நேப்பாளத்தின் ஒட்டுமொத்த இறக்குமதியில் 70% அளவிற்கு, இந்தியாவிலிருந்து தான் செய்யப்படுகின்றன. நான்கில் மூன்று பக்கங்களில் இந்தியாவுடன் தான் எல்லையைக் கொண்டிருக்கிறது நேப்பாளம். அதோடு மட்டுமில்லாமல், நேப்பாளத்திற்கு கடல் எல்லையே கிடையாது. அதனால், எந்தவொரு பொருளையும் இறக்குமதி செய்யவேண்டுமென்றால் தரைவழியாகத்தான் செய்தாகவேண்டும். இந்தியாவின் கொல்கத்தா துறைமுகத்தைத்தான் இறக்குமதிக்கு பெரிதும் நம்பியிருக்கிறது. அதேபோன்று பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருளும் தரைவழியாக (ஏறத்தாழ 400 பெரிய ட்ரக்குகள் தினந்தோறும்) இந்தியாவிலிருந்து கொண்டுவரப்படுகின்றன. நேப்பாளத்தில் ஒருசொட்டு பெட்ரோல் கூட உற்பத்தியும் செய்யப்படுவதில்லை. அதேபோன்று நேப்பாளத்தில் உற்பத்தியாகி ஏற்றுமதியாகிற பொருட்களில் 56% இந்தியாவுக்குதான் செல்கிறது. ஆக, நேப்பாளத்துடனான தன்னுடைய வர்த்தக உறவை முறித்துக்கொண்டால், அடுத்த வினாடியே நேப்பாளம் திவாலாகிவிடும் நிலைதான் இன்று இருக்கிறது. அதனாலேயே இந்தியாவை பகைத்துக்கொள்ள முடியாத சூழலும் நேப்பாளத்திற்கு இருக்கிறது. கம்யூனிஸ்ட்கள் ஆட்சிக்கும் வருவதாலேயே, நேப்பாளத்திற்கு அதிகமான நெருக்கடி கொடுக்கக்கூடிய ஆட்சியாளர்கள்தான் தற்போது இந்தியாவில் ஆட்சியில் இருக்கின்றனர். இத்தகைய சூழலை புதிய இடதுசாரி அரசு கையாளப்போகும் விதத்தை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்

 

 • சீனாவா இந்தியாவா: இத்தனை ஆண்டுகளாக இந்தியாவுடனேயே நேப்பாளம் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தது. அதற்கு இந்தியாவுடன் தான் நேப்பாளத்திற்கு அதிகளவிலான எல்லை தூரத்தை பகிர்கிறது என்பதுவும் ஒரு காரணம். 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இந்துக்கள் என்பதுவும், இந்துநாடாக நேப்பாளம் 239 ஆண்டுகள் இருந்தது என்பதுவும் இன்னபிற காரணங்கள். ஆனால் கடந்த 20 ஆண்டுகால அரசியல் மாற்றத்தில், மதத்தைவிடவும் கம்யூனிசம் தான் நேப்பாளத்தில் அதிகமாக பேசப்பட்ட, விவாதிக்கப்பட்ட, வரவேற்கப்பட்ட கோட்பாடாக இருந்திருக்கிறது. அதனால், அதிகமாக நிற்பந்தங்கள் விதிக்கிற சூழலில் இந்தியாவுக்கு பதிலாக சீனாவின் பக்கம் நட்புக்கரம் நீட்டுவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன. சீனாவின் இலாசா என்கிற இடத்திலிருந்து நேப்பாளத் தலைநகரான காத்மாண்டு வரையிலான இரயில் பாதையை அமைக்கும் திட்டமும் கடந்த ஆண்டு துவங்கப்பட்டிருக்கிறது. அப்போதே இந்தியாவுக்கு அச்செய்தி அவ்வளவு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கவில்லை. அந்த இரயில் பாதை அமைக்கும்பட்சத்தில், நேப்பாளத்தின் சீனாவுடனான ஏற்றுமதியும் இறக்குமதியும் அதிகரிக்கக்கூடும். அது ஐரோப்பாவுடனான வர்த்தகப் பாதையாகக் கூட மாறவாய்ப்பிருக்கிறது. ஆனால் இதன் மூலம் இந்திய-சீன போட்டிக்கு நடுவே நேப்பாளம் சிக்கிக்கொள்ளாமலும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது.

 

 • வேலைவாய்ப்பு உருவாக்க சவால்: நேப்பாளத்தில் வேலைவாய்ப்புகள் உருவாக்கம் மிகக்குறைவாகவே கடந்தகாலத்தில் நடைபெற்றிருக்கிறது. அதனாலேயே பெருமளவிலான இளைஞர்கள் வேறுநாடுகளுக்கு கூலித்தொழிலாளர்களாக சென்றுவிடுகின்றனர். கத்தாரில் உலகக்கோப்பை கால்பந்து போட்டியினை நடத்துவதற்காக உருவாக்கப்படும் மைதானங்களில் உயிரையும் பணயம் வைத்து வேலைசெய்யும் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் நேப்பாளத்தைச் சேர்ந்தவர்கள் தான். நேப்பாளத்தின் ஜிடிபியில் 30% அளவிற்கு அயல்நாடுகளில் வேலைபார்க்கும் நேப்பாளத் தொழிலாளர்கள் அனுப்பும் பணம்தான். மிகச்சிறிய நாடான நேப்பாளத்திலிருந்து கத்தார், சவுதி உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் 5,00,000 த்திற்கும் மேற்பட்ட தொழிலாளிகள் பணிபுரிகின்றனர். அவர்களில் 500க்கு ஒரு தொழிலாளி என்ற கணக்கில் ஆண்டொன்றுக்கு பணியிடத்திலேயே இறந்துபோகின்றனர். உள்நாட்டில் வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தினாலேயே உயிருக்கு ஆபத்தான் வேலைக்காக அயநாடுகளுக்கு அவர்கள் செல்லவேண்டியிருக்கிறது. ஆக மிகப்பெரிய எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை நேப்பாளத்திலேயே உருவாக்கவேண்டிய கட்டாயத்தில் புதிய அரசு இருக்கிறது.

இப்படியான இமாலய சவால்களையும் பொறுப்புகளையும் மிகச்சரியாக கையாள்வார்கள் என்கிற நம்பிக்கையிலேயே, முதன்முறையாக முற்றுமுழுதானதொரு இடதுசாரி அரசுக்கு நேப்பாள மக்கள் வாக்களித்திருக்கின்றனர். அவர்களின் நம்பிக்கையினை நேப்பாள மாவோயிஸ்ட் கட்சி மற்றும் நேப்பாள கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்) இணைந்து உருவாகப்போகும் கட்சி பூர்த்திசெய்து சிறப்பான ஆட்சியினை வழங்குவார்கள் என்று இந்தியாவிலிருந்து நம்முடைய வாழ்த்தினை வெற்றிபெற்றவர்களுக்கு இங்கிருந்தே மனப்பூர்வமாக வழங்கிடுவோம்.

அனைத்து சவால்களையும் புதிய இடதுசாரி அரசு வெல்லட்டும் என்று வாழ்த்துவோம்…

-இ.பா.சிந்தன்

Related Posts