அரசியல் இதழ்கள்

நெல்சன் மண்டேலா: கற்றுத் தொடர வேண்டிய வாழ்க்கை !

இந்த நூல் மண்டேலாவின் ‘சுதந்திரத்தை நோக்கிய நெடும்பயணம்’ நூலைத் தழுவி எழுதப்பட்டு இருக்கிறது. புரிந்துகொள்ள எளிமையான நடையில் எழுதியிருக்கிறார் தா.பாண்டியன்.

தோன்றின் புகழொடு தோன்றுக என்ற வாக்குப்படி தோன்றி அதற்காக தன் வாழ்க்கையையே தத்தம் செய்த மண்டேலா 1918 இல் தென்னாப்பிரிக்காவில் சோசா இனக்குழுவில் பிறந்தார். தந்தை இறந்ததால் தெம்பு அரசர் ரீஜண்டின் வளர்ப்பு மகனாக, சோசா இனக்குழுவின் வீரக்கதைகளைக் கேட்டு வளர்ந்தார் மண்டேலா. முக்கேஸ்வேனி, கிளாக்பெரி, ஷீல்டவுன் எனப் படித்து இறுதியாக ஸ்காட்லாந்து யாத்ரி நடத்திய ஷாரெ கல்லூரியில் படித்தார்.

பின்நாளிலும் பல சந்தர்ப்பங்களில் படித்தார். வீட்டை விட்டு வெளியேறும் மண்டேலா ஆப்ரிக்க மக்களுக்கு இழைக்கப்படும் அவமானங்களைக் கண்டு கொதிக்கிறார். சொந்த நாட்டில் நடமாடவே அனுமதிச் சீட்டு, ஆப்பிரிக்கர்களுக்கு தனி பேருந்து, தனி உணவகம், தங்கச் சுரங்கத்தில் கொத்தடிமை நிலை, அவலமான குடியிருப்புகள் என அடக்குமுறையை அனுபவிக்கிறார்.

அவருக்கு, ஆப்பிரிக்க காங்கிரஸ் தேசிய காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்கள் போன்ற பல்வேறு அரசியல் கட்சிகளின் அறிமுகம் கிடைக்கிறது. ஆப்பிரிக்க தேசிய காங்கிரசில் இணைகிறார். அவர் கைது செய்து விசாரிக்கப்படும் மேடைகளையெல்லாம் சொற்பொழிவு மேடைகளாக்கி உலகிற்கு தங்கள் போராட்ட நோக்கத்தை உணர்த்துகிறார்.

சுரங்கத் தொழிலாளர் வேலைநிறுத்தம், அனுமதிச் சீட்டு எரிப்பு, சட்ட மறுப்பு இயக்கம், உள்ளிருப்பு வேலை நிறுத்தம்போன்றவைகளின் மூலம் தெளிந்து, இன்று கம்யூனிஸ்டுகள் – நாளை தொழிற்சங்கவாதிகள் – மறு நாள் இந்தியர்கள் – அடுத்து ஆப்பிரிக்க தேசியக் காங்கிரஸ் என அடக்குமுறை விரிவடையும் என்பதையும், இதற்கு சரியான மாற்று ஒற்றுமைதான் என்பதை வலியுறுத்துகிறார்.

மத, இன, நிற, பால் வேறுபாடுகளைக் களைவது, வாக்குரிமை பெறுவது, தேர்ந்தெடுக்கப்படுவது, சுரங்கம் – தனியார் நிறுவனங்கள் அரசுடைமை, தற்போது இருக்கும் நிலப் பங்கீட்டை மாற்றி, உழுபவர்களுக்கு நிலம் தருவது போன்றவற்றை தேசிய காங்கிரசில் பிரகடனம் செய்யும் மண்டேலா, நீதிமன்றத்தில் ‘கருப்பர்களை சமமாக நடத்தி, மதித்து, உணவுண்டு மனிதர்களாகக் கருதியது கம்யூனிஸ்டுகள்தான். அவர்களோடு இணைந்து நிற்காமல் இருக்க முடியாது’ என பிரகடனப் படுத்துகிறார்.

தற்காலிகச் சிறைவாசங்கள், தலைமறைவு வாழ்க்கை, இராணுவப் படைத் தயாரிப்பு நடவடிக்கைகள் என் அமேற்கொண்டு இறுதியாக 27 ஆண்டுகள் சிறைவாசம் என கடுமையான வாழ்க்கையை மேற்கொள்கிறார்.

வாழ்வின் சுமை தாங்காத முதல் மனைவி பிரிந்துவிட – இரண்டாவது துணையாக வின்னி என்ற போராளியை மணக்கிறார். இவரையும் விவாகரத்து செய்யும் நிலை ஏற்படுவது நமக்கு துயரமளிக்கக் கூடியது. ஆனாலும், வின்னியின் மீதான மதிப்பு காரணமாக அவர் மகளிர் பிரிவின் தலைவராக தேர்வு செய்யப்படுவது பெருமிதமளிக்கிறது.

தனிமைச் சிறையில், சுண்ணாம்புக்கல் உடைப்பில், தீவுச் சிறையில் மனிதத் தன்மையற்ற அணுகுமுறையில் அவருடைய துயரம் நம் கண்ணில் நீர் வரவழைக்கிறது. தாயையும் மகனையும் பறிகொடுத்தும், இரண்டாண்டிற்கு ஒருமுறை அரை மணி நேரம் மனைவி மக்களை சந்திப்பதும் கல் நெஞ்சையும் கரையவைக்கும். இறுதியில் 1990இன் கடைசியில் விடுதலையாகி, அதிபரானாலும் மற்றவர்களையும் உடன் இணைத்து பொறுப்புகளை பகிர்ந்தளித்தது ஆட்சி நடத்துகிறார் மண்டேலா.

முன்னூறு ஆண்டுகளாக சொந்த மண்ணில் உரிமை மறுக்கப்பட்டு, வேட்டையாடப்பட்ட சாதாரண, சாமானிய மக்களின் சுதந்திரத்தைப் பெற்று, மனித குலத்தின் வெற்றியாக பிரகடனப்படுத்தும்போது, நாமும் அவரது போராட்டத்தோடு நம்மை இணைக்கிறோம். 2013 டிசம்பர் 5 ஆம் தேதி ஏற்பட்ட அவருடைய மரணம், இனவெறி எதிர்ப்பு போராட்டத்தின் நீண்டதொரு வரலாற்றை, செய்தியாக நமக்கு தந்திருக்கிறது. அவரின் வாழ்க்கையைக் கற்று, மனித குல விடுதலைக்கான போராட்டத்தில் நம்மையும் இணைத்துக் கொள்வோம்.

நெல்சன் மண்டேலா
எழுதியவர்: தா.பாண்டியன்
விலை 85,
வெளியீடு: நிவேதிதா பதிப்பகம்,
சென்னை.

Related Posts