பிற

நீயா? நானா? வின் கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டதா . . . . . ?

விஜய் டிவி யின் நீயா நானா நிகழ்ச்சி மற்றும் அதன் தயாரிப்பாளர் ஆண்டனி மீது என்னைப் போல் பலரும் மதிப்பு வைத்துள்ளனர். ஆனால் நேற்றைய காலத்தின் குரல் நிகழ்ச்சியில் விவாதம் கவனித்த என்னைப் போன்ற பலரும் ஆண்டனியின் அணுகுமுறை கண்டு அதிர்ச்சியடைந்தோம்.

கேரளப் பெண்கள் அழகா ? தமிழகப் பெண்கள் அழகா ? என தலைப்பிட்ட விவாதத்தின் முன்னோட்டமே ஆட்சேபனைக்குரியதாக இருக்க அது வாக்கெடுப்பிற்கும் விடப்பட்டது என்பது மறைக்கப்பட்ட சேதியே! ஆண்டனி மற்றும் நீயா? நானா? இயக்குநர் திலீபன் ஆகிய இருவரின் கருத்துகள் , அதை தெரிவித்த முறை இரண்டுமே மிகவும் ரௌத்திரம் தந்தது.

முன்னதாக இந்த ஒளிபரப்பு தடையை விமர்சித்து ஆண்டனி விட்டிருந்த அறிக்கை இடதுசாரி பெண் அடிப்படைவாதிகள் என புதிய பொருத்தமில்லா சொற்பிரயோகத்துடன் காட்டமாக இருந்தது. அதில் அதிகாரத்தை பயன்படுத்தி நேரடியாக மிரட்டி கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுவதற்கும் , கருத்து சுதந்திரம் எனும் பெயரில் சமூகத்தின் சரிபாதியை வெறும் உடலாக பார்க்கும் பொதுபுத்தி கட்டமைப்பு நிகழ்வை அதிகாரமற்றவர்கள் எதிர்க்க அதிகார மையத்தின் உதவியை நாடுவதற்கும் உள்ள வேறுபாடு சற்றும் உணரப்படவில்லை.

இடதுசாரிகள் இல்லையெனில் இம்மண்ணில் இன்றுள்ள அளவிலாவது சமத்துவ சிந்தனைகளுக்கு வாய்ப்பிருக்குமா என்பதை நேர்மையுடன் அவர்களால் சிந்திக்க இயலாது என்பதையே அவர்களின் ஆணாதிக்கம் நிறைந்த விவாதப்போக்கு உணர்த்தியது.

நிகழ்ச்சி தடை செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை விளக்கும் பெண்களின் வாதங்களை அவர்களால் சீரணிக்க இயலவில்லை. எனவேதான் விவாதத்தில் ஈடுபட்ட பெண்கள் அழகை கொச்சைப்படுத்துகிறார்கள் என்று அர்த்தமற்று கூற முடிந்தது. ஆங்கில பத்திரிகை நிருபர் தன்யா ராஜேந்திரன் மீது தனிப்பட்ட தாக்குதலை தொடுக்க முடிந்தது. விவாதித்த பெண்களை குடும்ப பெண்களா ? எனக் கேட்டு இழிவுபடுத்த முடிந்தது.

அந்த நிகழ்ச்சியை பார்த்தபோது அழகும் அறிவும் சேர்ந்து ஒருத்தி அதிசயமாய் பிறந்து விட்டால் குறுகு மனம் கொண்டவர்கள் குலைக்காமல் விடுவதில்லை எனும் பட்டுக்கோட்டையின் வரிகள்தாம் நினைவிற்கு வந்தன.

நிகழ்ச்சி தடை செய்யப்பட்டிருப்பது சரிதானா என சிந்தித்த எனைப் போன்ற பலருக்கும் கூட அவர்களின் இந்த அணுகுமுறையை பார்த்த பின் இப்படிப்பட்ட மனோபாவம் கொண்டவர்களின் தயாரிப்பில் இருக்கும் நிகழ்ச்சியின் போக்கு எப்படியிருந்திருக்குமோ ? எனும் ஐயத்தை உருவாக்கியது.

கடந்த முறை நீயாநானா நிகழ்வில் ஒரு இளைஞன் பேசும்போது ‘ சுயநலமாய் இருந்தால்தான் சமூகத்தின் போக்கிற்கு ஈடுகட்ட முடியும். அதனுடன் இணைந்து ஓடத் தவறினால் கீழே விழுந்து விடுவாய். இதைத்தான் எனக்கு பெற்றோரும் சமூகமும் கூறியது. நானும் இதைதான் என் மகனுக்கு கூறுவேன் ‘ என்றார்.

இப்போது திலீபன் பேசும்போது ” இந்த நிகழ்ச்சி கல்லூரி மாணவிகள் மனப்போக்கு அவர்களின் உளவியல் பற்றிய உரையாடல் ” என்றார். அவர் கூறுவதுபோல் இந்த உரையாடலில் பல ஆக்கபூர்வமான அம்சங்கள் இருப்பின் அவைகளில் எதையும் தலைப்பாக மாற்றாமல் வாக்கெடுப்பிற்கு விடாமல் அழகை மையப்படுத்தி சாதிக்க நினைப்பது எதை ? அந்தப் பெண்களும் நாளை ‘ எனக்கு என் அழகை மையப்படுத்தி சிந்திக்கதான் இந்த உலகம் சமூகம் வீடு ஆகிய அனைத்தும் கற்றுத் தந்தன. அறிவை ஆளுமையை மையமாக வைத்து சிந்திக்க கற்றுத் தரவில்லை ‘ எனும் பதிலை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதையா ?

இதைத்தான் ஆண்டனியும் திலீபனும் இளங்கோவும் விரும்புகிறார்களா ?

விஜய் டிவி யின் நீயா? நானா? விவாத நிகழ்ச்சி உலகெங்கும் பரவலாக வரவேற்பை பெற்ற வெற்றிகரமான நிகழ்ச்சி. இது சுவாரஸ்யம் தரும் பலவகை பேசுபொருள் மற்றும் அதன் மாறுபட்ட தன்மை கொண்ட விவாதங்களுக்காக அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பப்படுகின்றன.

இவை எந்த அளவில் வரவேற்கப்பட்டனவோ அந்த அளவு விவாதத்தில் பங்கெடுத்த ஒரு சிலரின் பார்வைகள் சிலாகிக்கப்படுவதும், ஒரு சிலரின் பார்வைகள் கருத்துகள் விமர்சிக்கப்படுவதும் நடைமுறையில் உள்ளது. கல்விக்கட்டண உயர்வு முதல்  நம் வாழ்வில் யாரை நாம் முன்னுதாரணமாக கொள்வது என்பது வரையிலான அரசியல் சார்ந்த விசயங்கள், காதல் முதல் உடை நகை அலங்காரம் வரையிலான இன்றைய இளைஞர்களின் வாழ்வியல் நடைமுறை மாற்றங்கள், வரதட்சணை மாமியார் மருமகள் உறவு மாற்றம், குழந்தைகளிடம் காட்டப்படும் பெற்றோரின் அணுகுமுறை, மூடநம்பிக்கை, ஜோஸியம் என சமூகத்தின் பல்வேறு கூறுகளும் கலந்துரையாடலுக்கான பேசுபொருளாகின்றன.

ஆனால் இந்த முறை இந்நிகழ்ச்சியே தடையாகியுள்ளது என்றால் அது அழகை ஆராதிக்கத் தெரியாமல் அல்ல ! அழகை விற்பனைப் பொருளாக மாற்றுவதை விரும்பாமல் ! அழகை கொண்டு பெண்களை மதிப்பிடுவதை விரும்பாமல் !

எனவே அடுத்த தலைமுறையை ஆளுமை மிக்கதாய் மாற்ற விரும்பும் அனைவரும் நிகழ்ச்சி தடையை கருத்து சுதந்திர பறிப்பாக எண்ணாமல் பெண்கள் உயிரும் உணர்வுமற்ற ஜடமல்ல ! சிந்திக்க தெரிந்த மனுசிதான் என்பதை அங்கீகரியுங்கள்.

ஊடகப்பணி வழியே பல்வேறு களங்களை , மனிதர்களை, அனுபவங்களை சந்திக்கும் ஊடகவியலாளர்களும் அழகைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் இளைஞர்களை இளம் பெண்களை அனுபவங்களின் வழியே நெறிப்படுத்துங்கள்.

இறுதியாக ஆண்மைய சிந்தனையின் வேர்கள் ஆண்களுக்குள் மட்டுமல்ல பெண்களுக்குள்ளும் ஆழப்பதிய வைக்கப்பட்டுள்ள நிலவுடமைச் சிந்தனைக் கட்டமைப்பிது. எந்திரமயமாக்கப்பட்ட முதலாளித்துவ சமூக கட்டமைப்பில் அடியோடு உடைத்தெறியப்பட வேண்டிய கட்டமைப்பு. இதை பாதுகாத்து அதில் லாபம் காண நினைக்கும் கார்ப்பொரேட் கணக்குகளுக்குள் சிக்காமல் சமூகத்தின் சரிபாதி பெண்களை மதிக்கும் சமூகத்தை உருவாக்குங்கள்.

பெண்களின் அழகைக் கொண்டு அளவிடாமல் அறிவை திறனை ஆளுமை பண்பைக் கொண்டு அளவிடப் பழகுவோம் ! பெரியார் பிறந்த மண்ணில் “பெண் ஏன் அடிமையானாள்” என சிந்தித்து இம்மண்ணின் மகத்துவம் மிக்க மாண்பைக் காப்போம்!

 – ரா.செம்மலர்.

Related Posts