அரசியல்

அப்பா எங்கே? தொடரும் NEET படுகொலைகள் . . . . . . . . !

நீட் தேர்வினால் தொடர்ந்து தமிழக மாணவர்கள் வஞ்சிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அரசு மருத்துவ கல்லூரிகள் அதிகமாக உள்ளது. ஆயினும் தமிழக மாணவர்கள் தங்கள் மண்ணில் தேர்வை எழுத முடியாமல் வெளியூரில் சென்று எழுத காட்டாயப்படுத்தட்டுள்ளனர். இது முற்றிலும் பழிவாங்கும் செயல் தொடர்ந்து தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதி.

இந்தியா முழுவதும் 13 லட்சத்து 27 ஆயிரம் மாணவர்கள் இத்தேர்வை எழுதியுள்ளனர். இதில் 1 லட்சத்து 7 ஆயிரம் பேர் தமிழக மாணவர்கள். 10 லட்சத்திற்கு மேல் டிஎன்பிசி அரசு தகுதி தேர்வை நடத்தி முடித்த தமிழகத்தில் தேர்வு மையங்கள் அமைக்க இடமில்லை என்று தான் சிபிஎஸ்சி 5500 தமிழக மாணவர்களை பிற மாநில மையங்களுக்கு ஒதுக்கி இருக்கிறது.  பொதுவாக மாணவர்களை உள்ளூரிலேயே கொஞ்சம் தொலைவான இடம் என்றால் வழிச்செலவுக்கே திண்டாடும் நிலையில், வெளி மாநிலங்களுக்குச் செல்வது எப்படி எனவே தமிழக மாணவர்கள் தமிழகத்திலேயே நீட் தேர்வு மையங்களைத் அமைக்க கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. எனவே இதனை அடுத்து உயர் நீதி மன்றம் தமிழகத்திலேயே தமிழக மாணவர்கள் அணைவரும் தேர்வு மையங்களை அமைத்திட உத்தரவுட்டது.

ஏனினும் சற்று ஆறுதல் அடைவதற்குள் இதனை மேல் முறையீடு செய்த மோடி அரசு, தேர்வு மையங்கள் ஒதுக்கீடு கணினி மூலமாக மேற்கொள்ளப்பட்டதால், மாற்றம் செய்ய இயலாது எனவும் தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்களை அமைக்க போதிய அவகாசம் இல்லை என்ற சொத்தை காரணங்களை சிபிஎஸ்இ நிர்வாகம் கூறியதை அடுத்து உச்ச நீதிமன்றம் சிபிஎஸ்சிக்கு சாதகமாக தீர்ப்பை அளித்தது. இதனை அடுத்து அவசர அவசரமாக மாணவர்களும் பெற்றோர்களும் வெளி  மாநிலகளுக்கு சென்று தேர்வை எழுத நேர்ந்தது. ஆனால் தேர்வு எழுதச் சென்ற மாணவர்களுக்கு தமிழக அரசு ஒரு சிறப்பு இரயில் கூட ஏற்பாடு செய்ய முடியவில்லை.

கோடை விடுமுறையினால் இரயில்களில் சாதாரண பயணச் சீட்டு கூட கிடைக்காமல் மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் அவதிக்குள்ளாகினர். கிடைத்த பேரூந்து மற்றும் இரயிலில் பயணிக்க நேரிடுகிறது. இதனால் பெரும் மாணவர்களுக்கு மன உலைச்சல் மற்றும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களான கேரளா, ராஜஸ்தான் மற்றும் சிக்கிம் போன்ற மாநிலத்தின் மையங்களுக்கு ஒதுக்கப்பட்டது. இவர்கள் செல்ல சிறப்பு இரயில்களை கூட தமிழக அரசு ஏற்பாடு செய்யவில்லை. வெறும் 1000 ரூபாயினை பயணப்படி செலவாக அறிவித்துள்ளது. தெரியாத மொழி, அறியாத மனிதர்கள், பழக்கமில்ல இடம், என வெகு தூரம் பயணித்து, உணவு, தங்க இடம் தேடி அலைந்து தேர்வு மையத்தை அடைவதற்குள் அவர்களின் முழுச் சக்தியும் அடங்கி போய்விட்டது. இத்தனை சிரமத்திற்கு பிறகே தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எழுதியுள்ளனர்.

மக்களை ஒருவித குழப்பத்தின் மனநிலையில் வைத்தே தனது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்ட இனவெறியாளன் ஹிட்லரின் பானியை தான் மோடி நமது இந்திய மக்களின் மீது அப்ளே செய்து வருகிறார். பண மதிப்பு நீக்கத்தின் மூலம் கருப்பு பணத்தை நீக்குவோம், உழலை ஒழிப்போம் என கொக்கரித்தார்கள். ஆனால் இதுவரையில் எவ்வளவு கருப்பு பணத்தை பிடித்தார்கள், உழலை ஒழித்ததற்கான எந்த தகவலும் இல்லை. இந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பல ஏழை எளிய மக்கள் தங்கள் உயிர் இழந்ததுதான் மிச்சம்.

இந்த வேதனை மறைவதற்குள் பிஜேபி அளித்த அடுத்த அஸ்திரம் ஜிஸ்டி. தொழிற் வளர்ச்சி, நாட்டு மேம்பாடுபாடு என்ற ஆசை வார்த்தைகளால் பல லட்ச சிறு மற்றும் குறு வணிகர்களின் வயிற்றில் அடித்து அவர்களின் வாழ்வாதரத்தையே கேள்விக் குறியது. இதனால் பாமர மக்கள் இன்னமும் பல்வேறு சிரமத்தை அனுபவித்துக் கொண்டுதான் வருகின்றனர்.

காவேரி பிரச்சனை தொடர்ந்து தற்போது நீட் தேர்வு வரை தமிழக மக்கள் மற்றும் மாணவர்களின் உணர்வுகளை அலைக்கழித்து வருகிறது. ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசில் மனிதனை கடிக்கும் வெறி நாய் கூட்டமாக இந்த காவி அரசு ஒன்று மறியா இளம் தலைமுறையின் கனவுகளோடு விளையாடிக் கொண்டு இருக்கிறது.

ஏழை, எளிய மக்கள், தங்களின் குருதியை காசாகி அதில் தனது பிள்ளைகளின் கனவுகளை நிறைவேற்ற துடித்துக் கொண்டு இருக்கும் பெற்றேர்களின் வேதனையும், வலியையும் இந்த காவிகள் அறிந்ததுண்டா?

புத்தக மூட்டைகளின் கனத்தை விட தான் கொண்ட லட்சிய கனவு பெரிது என இரவு பகல் பாராது படித்து நல்ல மதிப்பெண்களை பெற்றும் தான் கொண்ட கனவு நிறைவேறுமா? நிறைவேறாத? என்ற தவிப்பை ஒருப்போதும் அறிந்திருக்காது இந்த உணர்வற்ற காவி கூட்டங்கள்.

சென்ற ஆண்டு மாணவி அனிதா மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்து நல்ல மதிப்பெண்களை பெற்று இருந்தும் நீட்டில் வெற்றி பெற முடியவில்லையே என்ற மன உளைச்சளால் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டாள். தற்கொலை செய்துக் கொண்டது அனிதா என்றாலும் அதற்கு காரணம் இந்த பிஜேபி அரசும், கடைசி வரை பொய்யான வாக்குஉறுதிகளை அளித்த ஆட்சி ஆளார்களும் தான். தகுதியும், திறமையும் இருந்தும் ஒரு ஏழை மாணவியால் அவளின் கனவை அடைய முடியவில்லை என்பது நாம் அனைவரும் வெக்கி தளைக் குனிய வேண்டிய விஷயம்.

அனிதாவை காவு வாங்கிய நீட் இந்த ஆண்டும் இரு உயிர்களை பலி வாங்கி இருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. நீட் தேர்வினால் மாணவர்கள் மட்டுமல்ல மாணவர்களின் பெற்றோர்களும் பலியாகியுள்ளனர். ஆம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியை அடுத்த விளக்குடியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி, தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை நீட் தேர்வு எழுதுவதற்காக கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு அழைத்து சென்றார். மகனை தேர்வுக்கு அனுப்பிவிட்டு விடுதியில் காத்திருந்தார். முதற் நாள் இரவு முழுக்க ரயிலில் இடம் கிடைக்காமல் நின்று கொண்டே பயணித்து மகனுடன் காலையில் தூங்காமல் தேர்வு அறையை கண்டுபிடித்த  அலைச்சலில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு நினைவிடத்திலேயே மரணித்தார் கிருஷ்ணசாமி.

இவரை போலவே மதுரை பசுமலையில் நீட் தேர்வு எழுதிய மாணவி ஐஸ்வர்யாவை அழைத்துக் கொண்டு அவரது தந்தை கண்ணன் தனது வீட்டிற்கு செல்லும் போது நெஞ்சுவலியால் மரணமடைந்தார். இவ்விருவரும் மரணிக்க காரணம் கடுமையான மன உலைச்சல், தூக்கமின்மை, உடல் சோர்வு மட்டுமல்ல மத்திய பிஜேபி அரசும்,  சிபிஎஸ்இ நிர்வாகமும் தான் முழுமுதற் காரணம். இத்தேர்வுகளை தமிழகத்திலேயே வைத்திருந்தால் நிச்சயம் நாம் கிருஷ்ணசாமியையும், கண்ணனையும் இழந்திருக்க மாட்டோம். இறந்த பிறகு இழப்பிடுகள் எதற்கு? தகுதி தேர்விற்கு என்ற பெயரில் மனித உயிர்களை பலிக்கொடுப்பதை இனிமேலும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

வேதனையை தரும் சோதனைகள்:

சென்ற ஆண்டை போல இந்த ஆண்டும் சோதனை என்ற பெயரில் பெரும் கெடுபிடிகளை சிபிஎஸ்சி நிர்வாகம் கடைப்பிடித்தது. தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகளை மெட்டல்ட் டிடெக்டர் மூலம் தீவிர பரிச்சோதனை செய்தனர். துப்பாட்டா அணிய கூடாது, லெகின்ஸ் போட்டுக்கொண்டு வர கூடாது, எம்பிராய்டரி போடப்பட்ட உடைகளை மாற்றி வந்த பிறகே தேர்வு மையத்திற்கு அனுமதி மற்றும் சாதரண காலணி அணிய வேண்டும் என மாணவர்களை கிருமினல்கள் போல சோதனைகள் நடத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

குழப்பத்தினால் தினறும் மாணவர்கள்:

சென்ற வருடம் நீட் தேர்வு இருக்குமா? இல்லையா? என்ற குழப்பத்தின் மனநிலையில் இருந்த மாணவர்கள். இந்தாண்டு தமிழகத்தில் தேர்வு எழுதுவோமா? எழுதமாட்டோமா? என்ற குழப்பத்திலேயே காத்துக் கிடந்த்தனர். நீட் தேர்வு பொருத்தவரை தொடர் குழப்ப மன நிலையிலே மாணவர்கள் இருக்கின்றனர். இதனிடையே நாமகல் மாவட்டத்தை சேர்ந்த ஜீவிதா என்ற மாணவிக்கு சேலம் மற்றும் கேரளா ஆகிய இரண்டு மையங்களில் தேர்வு எழுத ஹால்டிக்கெட் வழங்கிருகின்றனர்.

ஜீவிதா சேலத்தில் இருக்கும் மையத்திற்கு சென்ற போது போலியான நுழைவுச் சீட்டு என்று கூறி அவளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு அவள் தேர்வை எழுத முடியாமல் போனது. இது மட்டுமல்ல தமிழ் மொழியில் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களுக்கு இந்தியில் வினாதாள்கள் வழங்கி பிறகு அவசர அவசரமாக திரும்பப் பெற்று பிறகு மிக காலதாமதமாக தேர்வை தொடங்கினர். தேர்வு முடிந்தபின் எந்தவிதமான மனஉளைச்சலுக்கும் ஆளாகவில்லை என எழுதி வாங்கி இருப்பது கொடுமையின் உச்சம். தேர்வு எழுதவரும் மாணவர்களிடமே முழுக்க முழுக்க கவணம் செலுத்தும் சிபிஎஸ்சி நிர்வாகம் சற்று தங்களின் பொறுப்புகளை உணர்ந்து மாணவர்களின் எதிர்காலத்தையும் அவர்களது நலனைகளையும் கருத்தில் கொண்டு வரும்காலங்களிலாவது திறம்பட செயல்பட வேண்டும்.

குரங்கு கையில் பூ மாலை போல இன்று நமது இந்திய அரசும், இந்திய மக்களும் காவிக் குரங்குகளின் கையில் மாட்டிக் கொண்டு தவிக்கிறன. ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! கல்வி காவியமயமானால் நமக்கு அதைவிட பேராபத்து ஒன்றுமில்லை. நமது பாடத்திட்டத்தில் பிளாஸ்டிக் சர்ஜெரியின் தந்தை சுஸ்ருதாவிற்கு பதில் வினாயகர் என மாற்றப்படலாம். உலகின் தொன்மையான மொழி தமிழ் என்பதை மாற்றி சமஸ்கிருதம் என மாற்றலாம்.

மோடியின் மெக்கின் இந்தியா, ஸ்வேஞ் பாரத் போன்ற வார்த்தை ஜாலங்கள் எல்லாம் மேல் தட்டு மக்களுக்கு வேண்டுமென்றால் விருந்து படைக்கலாமே ஓழிய ஒரு போதும் நடுத்தர ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைக்கு ஒலி ஏற்றாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

– வசந்தி பாரதி.

Related Posts