அரசியல்

அனிதா, பிரதிபா . . . . . . நின்று கொல்லும் நீட் . . . . . . ! – 4

இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத மொத்தம் 13,26,725 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 12,69,922 பேர் தேர்வு எழுதினர். தேர்வு எழுதியவர்களில் 7,14,562 பேர் தகுதி பெற்றுள்ளனர். பீகாரைச் சேர்ந்த மாணவி கல்பனா 691 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

தெலுங்கானா மாணவர் ரோகன் புரோஹித் 690 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தையும், டெல்லி மாணவர் `ஹிமான்ஷூ சர்மா 690 மதிப்பெண் பெற்று மூன்றாவது இடத்தையும், டெல்லி மாணவர் ஆரோஷ் தமிஜா 686 மதிப் பெண் பெற்று 4வது இடத்தையும், ராஜஸ்தான் மாணவர் பிரின்ஸ் சவுத்திரி 686 மதிப்பெண் பெற்று 5வது இடத்தையும் பிடித்துள்ளார்.

மகாராஷ்டிரா, ஆந்திரா, பஞ்சாப், டெல்லி என மற்ற மாநில மாணவ, மாணவியர் அடுத்தடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த மாணவி கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பெற்று 12 இடம் பிடித்துள்ளார்.
தமிழகத்தில் 12 லட்சம் மாணவ, மாணவியருக்கும் அதிகமானோர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். அவர்களில், 1, 14,602 மாணவ, மாணவியர் நீட் தேர்வை எழுதினர். தேர்வு எழுதியவர்களில் 45,336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் நீட் தேர்வு தேர்ச்சி விகிதம் 39.55 சதவீதமாக உள்ளது.

இந்திய அளவில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 50 பேரில் தமிழகத்தை சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி மட்டுமே இடம்பிடித்துள்ளார்.

இதுபோலவே புதுச்சேரியில் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு 4573 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 4462 பேர் தேர்வு எழுதினர். மொத்தம் 1768 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழகத்திலிருந்து ஆண்டுதோறும் நிறைய மருத்துவர்கள் உருவாவதைத் தடுக்க வேண்டும் என்கிற எண்ணம் செயலாகியிருக்கிறது.

தமிழில் தேர்வு எழுதிய 24,720 பேரில் 1.86 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்து உள்ளனர். அதே சமயம், பத்தாவ பரீட்சையில் சொந்த இந்தி மொழியில் கூடப் பாஸ் செய்ய முடியாத லட்சக்கணக்கான மாணவர்களைக் கொண்ட உத்தரபிரதேசத்தில் நீட் தேர்வில் அதிகம் பேர் தேர்வு அடைந்து உள்ளனர். 76,778 பேர் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.
எல்லோருக்கும் கல்வியை இலவசமான வழங்க முடியாத, சுகாதாரத்தை இலவசமாக வழங்க முடியாத அரசுகள், குறைந்த இடங்களை வைத்துக் கொண்டு, மாணவர்களோடும், பெற்றோர்களோடும், சமூகத்தோடும் கண்ணாமூச்சி ஆடுகின்றனர். இந்திய சுதந்திரம் என்பது பணம் படைத்த, சமூகத் தகுதி படைத்த மேட்டுக்குடியினருக்கே என்பதை நீட் தேர்வின் மூலம் மத்திய மாநில அரசுகள் உரக்கச் சொல்கின்றன.

அதே நேரம் தன் முயற்சியால் வளர்ந்துள்ள தமிழகத்தின் மக்களுக்கான மருத்துவக் கட்டமைப்பு சூறையாடப்படுதலும், மருத்துவக் கல்வி அபகரிக்கப்படுதலும் ஒரு சேர மத்திய அதிகாரத்தால் நிகழ்த்தப்படுகிறது. இனி பொது சுகாதாரத்தின் இடத்தில் தனியார் மருத்துவத்தை முழுமையாக நிறுவுவதற்கான மிகப்பெரிய சதியின் ஒரு பகுதியே நீட் தேர்வு என்பது. மிகப் பெரிய தனியார் கார்ப்பரேட் கொள்ளையர்களின் சார்பான அரசின் மிகப்பெரிய வஞ்சக வலைத்திட்டமே நீட் தேர்வின் மூலம் தமிழகத்தின் மருத்துவ இடங்களை அபகரிக்கும் சதி என்பது. நீட் தேர்வுக்கு எதிரான போராட்டமென்பது, மாநில அதிகாரத்திற்கும், மத்திய அதிகாரத்திற்கும் இடையிலான மாபெரும் அரசியல் போராட்டமாகும்.

கல்வி மாநிலப்பட்டியலில் வரும் வரை நடத்தப்பட வேண்டிய போராட்டமாகும். மேலும், அகில இந்திய மருத்துவக் கவுன்சில் என்கிற அமைப்பைக் கலைத்து, மாநில மருத்துவக் கவுன்சில்களை உருவாக்குகிற போராட்டமும் இத்தோடு இணைந்ததே. இந்திய அரசியல் சட்டத்தின் படி இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் தான். மாநிலங்களின் உரிமைகளை ஆளும் நிலமற்ற மத்திய அரசு, வெற்று சட்டங்களின் துணையோடும், வல்லாதிக்கச் சதியின் துணையோடும் அபகரிப்பதை இனியும் சகித்தால், இந்தியா என்கிற நாடு பழைய 56 தேசங்களாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தமிழகம் வாளாவிருந்தால், அல்லது போலி அரசியல் தன்மையோடு, ஏமாற்று நாடகம் ஆடிக் கொண்டிருந்தால், அத்தகைய அதிகாரத்தின் கோர வாய்களுக்கு நம் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் காவு கொடுப்பதோடு, அனிதா, பிரதீபா என நம் பிள்ளைகளையும் காவு கொடுக்கிற கொடுமை தொடர்ந்து நிகழ்த்தப்பட்டுக் கொண்டே இருக்கும்.
அப்படியானால் “நீட்டை ஒழிக்க முடியாதா ??’’

முடியும் முடியும்.

எப்படி அரசியல் சட்டத்தை திருத்தச் செய்தார் தந்தை பெரியார்? 50 சதவீதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்றது உச்ச நீதிமன்றம். ஆனால் தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டை 69 சதவீதம் ஆக்கியது வரலாறு. 69 சதவீத சட்டத்தை அரசியல் சாசனத்தில் ஒன்பதாவது அட்டவணையில் வைத்தது தமிழ்நாடு. பீட்டா ஆட்டத்தை அடக்கி ஜல்லிக்கட்டு நடத்துகிறது தமிழ்நாடு.

அனிதாவையும் பிரதிபாவையும் இழந்து விட்டோம்.. இனி ஒரு உயிரை இழப்பதில்லை என்ற முடிவுடன் போராடுவோம்.. தமிழக அரசைச் செயல் பட வைப்போம்.
வருத்தம் மேலிடலாம். விரக்தி கூடாது.

நீட் தேர்வைத் தடைசெய்யும் வலுவான ஒரு வாய்ப்பை உருவாக்க வேண்டுமென்றால், ஒன்று ஒட்டுமொத்தத் தமிழக மக்களும், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப்போலத் தெருவில் இறங்க வேண்டும். அல்லது 2019 பாராளுமன்றத்தில் பாஜக-வும், அதற்கு அடிவருடியாய் உள்ள தமிழக ஆட்சியும் மீண்டு எழவே முடியாதபடி மரண அடி கொடுக்க வேண்டும்.

முற்றும்.

– ஸ்ரீரசா.

 

Related Posts