அரசியல்

அனிதா, பிரதிபா . . . . . . நின்று கொல்லும் நீட் . . . . . . ! – 3

அதே நேரத்தில் இந்தியாவில் என்ன நடந்தது?

1952-ல் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது மாநில அரசுக்கான அதிகாரங்கள் பட்டியல் 11-ல் மருத்துவம் உள்ளிட்ட உயர்படிப்புகள், பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்திருந்தன. 1976-ல் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைச் சரிசெய்வதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டுவந்தார் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி. 1976 டிசம்பர் 18 -ல் கொண்டு வரப்பட்ட அந்த 42-வது சட்டத் திருத்தத்தின் மூலம் மாநில அரசுக்கான அதிகாரங்கள் சிலவற்றை மத்திய அரசு எடுத்துக்கொண்டது. அப்போதுதான் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வியும் பல்கலைக்கழகங்களும் மாநில அரசுகளின் கைகளை விட்டுப் போயின.

1977-ல் பொறுப்புக்கு வந்த ஜனதா அரசு, இந்திரா காந்தியின் சட்டத்திருத்தங்களில் பெரும்பகுதியை ரத்து செய்தது. ஆனால் உயர்கல்வி, பல்கலைக்கழகங்கள் விஷயத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் உள்ளிட்டவற்றை மட்டும் அப்படியே விட்டுவிட்டது. அதனுடைய பின்விளைவுகளைத்தான் இப்போது நாம் அனுபவிக்கக் காத்திருக்கிறோம்.

1993-ல், உன்னிகிருஷ்ணன் என்பவர் ஆந்திர மாநில அரசுக்கு எதிராகத் தொடர்ந்த ஒரு வழக்கில், தன்னாட்சி மற்றும் சுயநிதிக் கல்லூரிகளை தனியாரும் தொடங்கலாம் என உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இதைத் தொடர்ந்து இந்தியா முழுவதுமே தனியார் கல்லூரிகள் புற்றீசல் போல் முளைத்தன. இந்தப் பந்தயத்தில் மருத்துவக் கல்லூரிகளும் தப்பவில்லை. கட்டுப்பாடுகள் ஏதுமின்றிக் கல்லூரிகள் முளைத்ததால் கல்வித் தரம் கேள்விக்குறி ஆனது.

இதற்குக் கடிவாளம் போடுவதற்காக, ‘நீட்’ தேர்வை அமல்படுத்தப்போவதாக 2013-ல் தீர்மானம் போட்டது இந்திய மருத்துவக் கவுன்சில். வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியானது இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றது. சிறுபான்மையினர் கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசு தலையிடமுடியாது என்பது அவர்களின் வாதம்.

நீதிபதிகள் அனில் தவே, அல்டாமஸ் கபீர், விக்கிரம்ஜித் சென் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. முடிவில், ‘நீட்’ தேர்விலிருந்து கிறிஸ்தவக் கல்லூரிக்கு விதிவிலக்கு தர முடியாது என அனில் தவேவும் விலக்களிக்க வேண்டும் என மற்ற இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்புகளை எழுதினார்கள். கடைசியில், இருவர் தீர்ப்பே இறுதி செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த அல்டாமஸ் கபீரும் விக்ரம்ஜித் சென்னும் ஓய்வுபெற்ற நிலையில் அனில் தவே உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதியாகப் பணியைத் தொடர்ந்தார். அப்போது, ‘நீட்’ விவகாரத்தில் ஏற்கெனவே அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது மருத்துவக் கவுன்சில். அனில் தவே தலைமையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு மனுவை விசாரித்தது. முடிவில், அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் ‘நீட்’ தேர்வு கட்டாயம், இதை அடுத்த கல்வியாண்டே அமல்படுத்த வேண்டும் என ஏப்ரல் 11, 2016-ல் உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

இப்படியொரு நெருக்கடியான நிலையில், 2016 ஆண்டுக்கு மட்டும் ‘நீட்’ தேர்விலிருந்து தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனத் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் கோரிக்கை வைத்தன. இதை ஏற்று, 2016-17 கல்வி ஆண்டுக்கு மட்டும் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு ‘நீட்’தேர்விலிருந்து விதிவிலக்கு அளிக்கப் பட்டது. ஓர் ஆண்டுக்கு மட்டும் விலக்கு கேட்ட மாநிலங்கள், அடுத்த ஆண்டுக்கு என்ன செய்யப் போகிறோம் என்று அப்போதே யோசிக்கவில்லை.

இந்த நிலையில், ‘நீட்’ தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கக் கோரும் தீர்மானம் ஒன்றை வழக்கம்போல சட்டப்பேரவையில் நிறைவேற்றி அதைக் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவிட்டுக் காத்திருக்கிறது தமிழகம். “இந்தத் தீர்மானத்தைக் குடியரசு தலைவர் நிச்சயம் அங்கீகரிக்கமாட்டார். அப்படியே அவர் அனுமதித்தாலும் உச்ச நீதிமன்றம் ஏற்காது” என்கிறார் பிரபல வழக்கறிஞர் என்.ஜோதி.

“இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அட்டவணை 251-ல், மாநில அரசின் உத்தரவுகளும் சட்டங்களும் மத்திய அரசின் உத்தரவுகளுக்கும் சட்டங்களுக்கும் கட்டுப்பட்டதே” எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எனவே, ‘நீட்’ விவகாரத்தில் தமிழகம் இப்போது எடுத்திருக்கும் முயற்சிகள் பலனளிக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை.

தென் மாநிலங்களைப் பொறுத்தவரை மாணவர்களுக்குக் கல்வி அறிவு அதிகம் இருந்தாலும், மதிப்பெண் போட்டியில் வடமாநில மாணவர்களோடு போட்டிபோடமுடியாது. வடமாநில மாணவர்களோடு போட்டிபோடும் வகையில் நம் மாணவர்களைத் தயார்படுத்தாமல் ‘நீட்’ தேர்வுக்குள் நுழைந்தால், நம் மாணவர்கள் பின்னுக்குத் தள்ளப்படுவார்கள். குறிப்பாகக் கிராமப்புறத்து மாணவர்களுக்கு இனி மருத்துவக் கல்வி எட்டாக்கனி ஆகிவிடும் ஆபத்து இருக்கிறது.

மருத்துவக் கல்வியைப் பொறுத்தவரை ஒவ்வொரு மாணவருக்கும் 7 முதல் 10 லட்சம்வரை மக்களின் வரிப்பணத்தை மாநில அரசு செலவு செய்கிறது. ‘நீட்’ தேர்வு மூலம் வட மாநில மாணவர்களெல்லாம் நமது வரிப்பணத்தில் மருத்துவம் படித்துவிட்டுச் செல்லும் நிலை வரப்போகிறது. மாநிலத்துக்கான அதிகாரங்களை உரிய காலத்தில் மீட்டெடுக்கத் தவறியதற்காக, அரசியல் கட்சிகளே இந்த அவலத்துக்குப் பொறுப்பு ஏற்க வேண்டும்.” என்கிறார் ஜோதி.

மேலும், முன்னர் மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்து, நாமக்கல் பிராய்லர் கொள்ளைப் பள்ளிகள் உருவான மாதிரி இப்போது, நீட் தேர்வுக்கான கல்வி நிலையங்கள் புற்றீசலாய் முளைக்கின்றன. தமிழகத்தில் நீட் எழுதியோர் 1.14 லட்சம். தனியார் மையங்களில் கட்டணம் ஒரு லட்சம் வரை! ரூ.2 லட்சம் செலவிட்ட பெற்றோர்களும் உண்டு. சராசரியாக ஒருவருக்கு ஒரு லட்சம் கட்டணம் எனில், லட்சம் பேர் செலவிடும் தொகை உத்தேசமாக ஆயிரம் கோடி. சில நூறு கோடி குறைவாகவும் இருக்கலாம். ஆனால் இத்தனை லட்சங்கள் செலவு செய்த போதும் நீட் தேர்வில் வெற்றி பெற்ற போதிலும், அனைவருக்கும் மருத்துவக் கல்விக்கான இடம் கிடைப்பது சாத்தியமில்லை என்பது தெளிவாகத் தெரிந்ததே.

மேலும், தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் தமிழக அரசால் உருவாக்கப்பட்ட அரசுக் கல்லூரி எம்பிபிஎஸ் இடங்களில் இந்த ஆண்டு எத்தனை தமிழகப் பிள்ளைகளுக்கு இடம் கிடைக்கப் போகிறது?

இதுநாள் வரை, அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கியது போக, மீதமுள்ள 2466 இடங்கள் யாரோ ஒரு தமிழக மாணவருக்கு, இட ஒதுக்கீட்டின் படி மருத்துவம் படிக்க இடம் கிடைத்ததுபோய் இன்று பெரும்பாலும் அடுத்த மாநில மாணவர்கள் ஆக்கிரமிக்கிற படையெடுப்பைச் சட்டபூர்வமாக மாற்றியதுதான் நீட் தேர்வு என்கிற மகாமோசத்தின் சாராம்சம்.

தகுதி, திறமை என்று சொல்லுவதெல்லாம் மகாமோசடியிளை மூடி மறைக்கிற வார்த்தை ஜாலம்.

ஆண்ட பரம்பரை, பேண்ட பரம்பரை, பேண்டதை அள்ளுகிற பரம்பரை, பேண்டதைக் கழுவாத பரம்பரை என்ற ஒரு பரம்பரைக்கும் அது இல்லை என்பதுதான் நீட் தேர்வின் மகா சூட்சுமம்.

பல்லாண்டுக்காலம் போராடித் தமிழக மண்ணில் நிலை நிறுத்தப்பட்ட சமூக நீதியின் இடத்தில் பார்ப்பனக் கொடூர சமூக அநீதியைத் திணித்ததுதான் நீட் தேர்வின் சாராம்சம்.

நீட் என்பது மகா மோசடி. வியாபாரக் கொள்ளை. வட இந்திய வியாபாரம். குஜராத் ,உபி எங்கும் 10 வது தேறியதும் பல லட்சம் கொடுத்து நீட் கோச்சிங்கில் சேர்ந்து விட்டால் போதும் 2 வருட பயிற்சி , +2 வும் அவர்கள் பொறுப்பு. ஆக, மோசடி, உள்ளடி ஏமாற்று இவையே நீட். ஏழைகளை ஒதுக்கிவிட்டு வசதி படைத்த மேட்டுக் குடியினரை மட்டும் மருத்துவராக்கும் மிகப்பெரிய வஞ்சகம் . இதைப் புரியாமல் தரம், தகுதி எனப் பிதற்றுவது ஏமாளித்தனம் . கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றுவதே தீர்வு .

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து முதன்மை அமைச்சருக்கு கடிதம் எழுதினார். இது குறித்து உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டது. ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தில், நவம்பர் 23-ம் நாள், இத்திட்டம் தமிழத்தில் செயல்படுத்தப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது. மத்திய பாஜக அரசு, மாநில அஇஅதிமுக அரசுகளின் வஞ்சக நாடகம் இதில் ஒளிந்துள்ளது.

தொடரும் . . . . .

– ஸ்ரீரசா.

Related Posts