அரசியல்

அனிதா, பிரதிபா . . . . . . நின்று கொல்லும் நீட் . . . . . . ! – 1.

இந்திய நாடு அந்நிய ஏகாதிபத்தியத்திடமிருந்து 1947 ஆகஸ்டு 15 ஆம் நாள் அரசியல் விடுதலை பெற்று, 70ஆண்டுகள் முடிந்து 71-ஆவது ஆண்டு கடந்து கொண்டிருக்கிறது. பல்லாயிரம் ஏற்றத் தாழ்வுகள் மிக்க, பல்வேறு நாடுகளின் குடிமக்களாயிருந்தவர்கள், பிரிட்டிஷ் இந்தியாவில் ஒரு தேச மக்களானார்கள். அவர்களுக்கென ஓர் அரசியல் சட்டம் வந்தது. அது ஜனநாயக உரிமைகள் சிலவற்றைக் கொண்டு வந்தது. மன்னர்கள் இந்திய நிலப்பரப்பை ஆட்சி செய்வதிலிருந்து ஒழிந்தார்கள். ஆனால் மன்னராட்சிக்கால விழுமியங்கள் இன்றும் தொடர்கின்றன.

பல நூறு ஆண்டுகால வழக்கத்தின் விளைபொருளாக லட்சக்கணக்கான சாதிப் பிரிவு உளவியல்களுக்குள் மக்கள் திரள் இன்றும் பிளவுபட்டுள்ளது. சாதிய மேல் கீழ் அடுக்குமுறையின் கொடூரங்கள் இன்றும் பல்வேறு வழிகளில் தொடர்கின்றன. அதை எதிர்த்த சமூக நீதிக்கான போராட்டங்களும் இன்று வரை தொடர்கின்றன.

இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்றுதான் அரசியல் சட்டம் வரையறுக்கிறது. ஆனால் தனக்கென எந்த வித நிலப்பரப்புமே இல்லாத இந்திய மத்திய அரசதிகாரம் சமூகத்தின் அந்நியமான, எல்லாவற்றுக்கும் மேலான உயர் அதிகாரமாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளப் பார்க்கிறது.

தனியார் மய, தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் வெகு விரைவாக அமலாக்கம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும், பன்னாட்டுக் கார்ப்பரேட் கொள்ளை யுகத்தில் இந்தியா நுழைந்துள்ளது. ஒரு கிழக்கிந்தியக் கம்பெனியை எதிர்த்த சுதந்திரப் போரை, இருநூறாண்டுகள் நடத்தி, அதன் தொடர்ச்சியாக, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நேரடி ஆளுகையின் கீழ் சில நூற்றாண்டுகள் போராடி விரட்டியடித்தபின் பெற்ற முதலாளித்துவ சுதந்திரத்தின் ஜனநாயக இடுக்குகளின் வழியாக மீண்டும் அந்நிய மூலதனப் படையெடுப்பு பலநூறு கம்பெனிகள் மூலம் தொடர்கின்றது. அதனை விடுதலைக்குப் போராடிய பாரம்பரியமுள்ள காங்கிரஸ் காலம் ஆரம்பித்து வைத்தது. அதனை வெகு மூர்க்கமாக பாசிச பாஜக-வின் அரசு தொடர்கிறது.

விளைவாக, மாநில அதிகாரங்கள் ஒவ்வொன்றாகப் பிடுங்கப்பட்டு மத்திய அதிகாரக்குவிப்பு நிகழ்கின்றது.

தெற்கே இருந்து திராவிட இயக்கம் எழுப்பிய வலுவான மாநில சுயாட்சிக் குரல், வரலாற்றின் பாதையில் மங்கிப் போக, மாநில அதிகார வரம்புக்குள் இருந்த கல்வித்துறை மெல்ல மெல்ல மத்திய அதிகாரத்தால் கபளீகரம் செய்யப்படுகின்ற ஒன்றாக மாறி வருகின்றது.

அத்தகைய நிகழ்வுப் போக்கின் விளைவாக இன்றைய காலத்தில் உருவான ஒரு கொடும் சூழலே நீட் தேர்வு என்பது.

விடுதலை பெற்ற இந்தியா அனைவருக்கும் இலவசக் கல்வி, அனைவருக்கும் இலவச மருத்துவம் என்கிற உயரிய விடுதலைப் போராட்டக் காலத்தின் லட்சியங்களை முன்னெடுக்காமல், மத்திய ஆட்சியதிகாரத்திலுள்ள பழமைவாதச் சக்திகள், அதனை இரண்டுவிதச் சிக்கல்களுக்குள் தள்ளி விடுகின்றன. ஒன்று, கல்வியை உயர் வகுப்பாருக்கானதாக மாற்றுவது, இன்னொன்று கல்வியைக் காசு படைத்தோருக்கானதாக மாற்றுவது.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுக்காலம், இந்த தேசத்தின் மக்கள் சாதியக் கண்ணோட்டங்களின் விளைவாக, அது நிலப்பிரபுத்துவச் சுரண்டலுக்குத் தோதாக இருந்ததால், அவர்கள் பொதுக்கல்வி இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். குலக்கல்வி முறையிலேயே அதாவது, அவரவர் குடும்பத்துக்கு விதிக்கப்பட்ட சாதியக் கடமையின் படியான குலக்கல்வியே கற்று வந்தனர். பிரிட்டிஷ் முதலாளித்துவ அரசே முதன் முதலின் அனைவருக்குமான பொதுக்கல்வித் திட்டத்தை இந்திய சமூகத்தில் நிலை நிறுத்தியது. மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியில் பிறந்து தமிழகத்தின் முதலமைச்சரான காமராசரின் சிறப்பான செயல்பாடுகளால், தமிழகமெங்கும் அரசுக் கல்வி என்பது, தொடக்ககால இந்திய அரசின், அரசியல் சட்டத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் சோசலிசம் என்கிற வார்த்தையின் தன்மையைச் செயல்படுத்துகிற வகையில் சிறப்பான கட்டமைப்பாக உருவாக்கப்பட்டது.

தென்னிந்தியாவில் பிறந்த பல்வேறு சமூக நீதி இயக்கங்களால், சமூக நீதிப் போராட்டங்களால் கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றில் இட ஒதுக்கீடும் சாத்தியமானது.

குறிப்பாகத் தமிழகத்தின் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் வீறு கொண்ட பல போராட்டங்களின் விளைவாக, அதனை அடியொற்றி வந்த திராவிட இயக்க அரசுகளால், தமிழகத்தின் கல்விக் கட்டமைப்புகள், பள்ளிக் கல்வி, உயர்கல்வி என்ற இருவகைகளிலும் சிறப்புற வளர்ந்தது. ஆனால் அதே அரசுகள் பின்னால் முதலாளித்துவ நோக்கங்களை நோக்கி நகர்கையில், அந்த அரசின் வழியாக ஆளும் சக்திகளிடம் குவிந்த செல்வம், கல்வித்துறையில் தனியார் மயப் போக்குகள் அதிகரிக்க வகை செய்தன. தனியார் கல்வி நிறுவன முதலாளிகள் பலரும் திராவிட இயக்க முதலாளிகளாக உருவெடுத்தது தற்செயலானதல்ல.

மேலும் அவ்வாறு வளர்ந்த தனியார் கல்வி மூலதனம் கூட்டிணைந்து அரசுக் கல்வியைச் சீர்குலைக்கும் வேலையையும் தொடர்ந்து செய்கின்றன.

இத்தகைய சூழல்களினூடாகவும் கடந்தகாலத் தொடர் முயற்சிகளின் விளைவாக, மருத்துவக் கல்வி தமிழகத்தில் சிறப்பாகத் தழைத்தோங்கியுள்ளது. இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாதவகையில், தமிழகத்தில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 2,900 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 434 இடங்கள் (15 சதவீதம்) போக, 2,466 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. ஒரு ஈஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 65 இடங்கள் உள்ளன. ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 85 இடங்கள் உள்ளன. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 800 இடங்கள் உள்ளன. 10 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 1000 இடங்கள் உள்ளன.

நாடு முழுமையும் 13 லட்சத்து 36 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்தார்கள். 12 லட்சத்து 69 ஆயிரம் பேர் பல்வேறு அலைக்கழிப்புகளுக்ககிடையே தேர்வு எழுதினார்கள். இதில் 7 லட்சத்து 14 ஆயிரம் பேர் தேர்வாகி யுள்ளனர்.

நாடு முழுமையும் 412 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 190 அரசு கல்லூரிகள், 222 தனியார் கல்லூரிகள், 412 கல்லூரிகளில் மொத்த இடங்கள் 52715.

26835 தனியார் கல்லூரி இடங்கள். 25880 அரசு கல்லூரி இடங்கள்.

தேர்ச்சி பெற்ற 7 லட்சத்து 14 ஆயிரம் பேரில் இருக்கின்ற மருத்துவ இடங்களான 52,715 போக பாக்கி தேர்வானவர்களுக்கும் மருத்துவக் கல்விக்கான இடம் கிடைக்கப் போவதில்லை.

உண்மையில் இதன் பின்னணியில் மத்திய அரசின் கல்விக் கண்ணோட்டமே மிக முக்கியமானது. அதைவிட மிக முக்கியமானது இந்திய மக்களின் சுகாதாரம் பற்றிய கண்ணோட்டம். சாதியக் கண்ணோட்டங்கள் மிகுந்துள்ள இந்த நாட்டில், பொது மருத்துவம் என்பதே பிரிட்டிஷ் இந்தியாவில் துவங்கி, அப்புறம் விடுதலை பெற்ற இந்தியாவில் மிகப் பரவலாக வளர்ந்து வந்தது. 80 களில் துவங்கி, இந்தியாவில் அமலாக்கப்பட ஆரம்பித்த தனியார்மயக் கொள்கைகளால், சரியாகச் சொன்னால் தனியார் மயக் கொள்ளைத் திட்டங்களால், மருத்துவத் துறையில் தனியார் மயம் வெகு வேகமாக வளர்ந்தது. அதன் உப விளைவாக மருத்துவக் கல்வியிலும் தனியார் மயம் வளர்ந்தது.

அரசுகள், அனைவருக்கும் இலவசக் கல்வி என்கிற கண்ணோட்டமும், அனைவருக்கும் இலவச மருத்துவம் என்கிற கண்ணோட்டமும் இல்லாதவர்களாக, இருந்த கொஞ்ச நஞ்சத்தையும் வழித்துத் துடைக்கிறவர்களாக மாறிக் கொண்டு வருகின்றனர்.

இந்தியாவின் 120 கோடியே 30 லட்சம் மக்களுக்கு,  மேற்கத்திய நாடுகள் போலக்  கணக்கிட்டால் கூட கிட்டத்தட்ட, 10 கோடி மருத்துவர்கள் தேவைப்படுவார்கள். உலக நாடுகள் எங்கேயும் இல்லாத வகையில் 150 பேருக்கு ஒரு மருத்துவரை ஒரு நாடு உற்பத்தி செய்துள்ளது.

தொடரும் . . . . . . .

– ஸ்ரீரசா.

Related Posts