அரசியல்

அனிதா, பிரதிபா . . . . . . நின்று கொல்லும் நீட் . . . . . . ! – 2

உலக நாடுகள் எங்கேயும் இல்லாத வகையில் 150 பேருக்கு ஒரு மருத்துவரை உற்பத்தி செய்துள்ள அந்த நாடு கியூபா.

“அனைவருக்கும் சுகாதாரச் சேவை என்ற இலக்கை நோக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டதில் கியூபாவைப் போன்று வேறு எந்த நாடும் நிலையாகவும் தொடர்ச்சியாகவும் செயல்படவில்லை,” என்று உலகச் சுகாதார அமைப்பின் முன்னாள் இயக்குநர் டாக்டர் ஹாஃப்டன் மாலர் கூறியிருப்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தக் கூற்றை நிரூபிப்பது போல் கியூபாவின் குழந்தை இறப்பு விகிதம் பெருமளவு குறைந்தது. மக்களின் ஆயுட்காலம் அதிகரித்தது. இதர உலக நாடுகளைவிட அதிக மருத்துவர்களைக் கியூபா உருவாக்கியுள்ளது. காஸ்ட்ரோவின் ஆட்சிக்கு முன்பு 1958-ல் கியூபாவின் 1,050 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலையே இருந்தது. அதே 2009-ம் ஆண்டில் ஒவ்வொரு 150 பேருக்கும் ஒரு மருத்துவர் என்ற விகிதத்தில் இருந்தனர். 2009-ல் மொத்தம் 74,880 மருத்துவர்கள் உருவாகி இருந்தனர்.

1984-ம் ஆண்டில் ஃபிடெல் காஸ்ட்ரோ ஆற்றிய ஓர் உரையில் 2000-ம் ஆண்டில் கியூபா 75,000 மருத்துவர்களை உருவாக்கும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் 2009-ல் மேற்கு ஐரோப்பாவில் மக்கள்: மருத்துவர் விகிதம் 330:1 ஆகவும், அமெரிக்காவில் இந்த விகிதம் 417:1 ஆகவும் இருந்ததை நாம் கவனிக்க வேண்டும்.

காஸ்ட்ரோவுடன் இணைந்து கியூபாவின் மருத்துவத் துறை வளர்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டபோது, சேகுவேராவின் வயது 30 தான். மருத்துவத்தின் மனிதாபிமான இலக்கையும் ஒரு நியாயமான மனித சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தையும் இணைக்க வேண்டும் என்று இருவரும் முடிவு செய்தனர். மருத்துவப் படிப்புச் செலவை ஏற்க வசதியுள்ள மாணவர்களுக்குப் பதிலாக ஏழ்மையான, கிராமப்புற / பழங்குடி மாணவர்கள் மருத்துவக் கல்வி பெற்றால், தங்களுடைய ஏழைச் சகோதரச் சகோதரிகளுக்குத் தயக்கமற்ற உற்சாகத்துடன் அவர்கள் உதவுவார்கள் என்று அவர்கள் இருவரும் நம்பினர். அது மட்டுமல்லாமல் தங்களுடைய சகோதரர்களிடம் தொடக்கத்திலிருந்தே ஒருமைப்பாட்டை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற உள்ளார்ந்த உணர்வை இரண்டு புரட்சியாளர்களும் பெற்றிருந்தார்கள்.

தங்கள் நாட்டின் மருத்துவத் துறையை மிகவும் சிறப்பாக வளர்த்தெடுப்பதற்கும், தம்மைப் போன்ற இதர நாடுகளுடன் கூட்டு சேர்ந்து மக்கள் சார்ந்த உடல்நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும், புதிய மருத்துவ அமைப்பைக் கட்டமைப்பதற்கும் கியூபாவுக்கு இருந்த திறன் என்பது 1959 புரட்சிக்குப் பிந்தைய ஒரு சில பத்தாண்டுகளுக்குள்தான் உருவாக்கப்பட்டது. சிறிய, ஏழ்மையான நாடான கியூபா, இந்த ஈடுபாட்டை எப்படிப் பெற முடிந்தது? அதற்கு முக்கியக் காரணம், ஃபிடெல் காஸ்ட்ரோவும் சே குவேராவும்தான். புரட்சி வென்ற பின்பு கியூபா தன்னுடைய மருத்துவர்களில் பாதி பேரை இழந்தது. ஏனென்றால், அங்கிருந்த 6,000 மருத்துவர்களில் 3,000 பேர் கியூபாவை விட்டு வேறு நாடுகளுக்குச் சென்றுவிட்டனர். ஆனாலும் காஸ்ட்ரோவும், சேகுவேராவும் தளரவில்லை. இருக்கின்ற 3000 மருத்துவர்களிலிருந்து தங்கள் தேசத்தின் சுகாதராக் கணக்கை ஆரம்பித்தனர்.

உலகின் எந்தப் பகுதியில் மருத்துவர்கள் இல்லையோ அங்கெல்லாம் மருத்துவச் சேவை செய்ய வேண்டும் என்பது காஸ்ட்ரோவின் கனவாக இருந்தது. கியூபாவின் அனைத்து மருத்துவப் பள்ளிகளிலும் கியூப மாணவர்களுக்கு இணையாக, வெளிநாட்டு மாணவர்களும் படித்தனர். கியூபாவின் இந்தச் சுவரற்ற பல்கலைக் கழகங்கள் மூலம் ‘நடமாடும் மருத்துவர்களை’ உருவாக்கும் திட்டத்திலிருந்து, சமுதாய மருத்துவத்துக்குக் கியூப அரசு கொடுத்த முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம்.

மருத்துவக் கல்வியைப் போலவே, மருந்துகளின் விலையை ஃபிடெல் காஸ்ட்ரோ முதலில் குறைத்தார். பின்பு படிப்படியாக அவற்றை முற்றிலும் இலவசமாக மாற்றினார். மற்றொருபுறம் நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் விழிப்புணர்வு கல்வித் திட்டமும் மருத்துவக் கல்விச் சேவையும் பரவலாக்கப்பட்டது. உலகில் முதன்முதலாக மக்களின் குடிசைகளில் மருத்துவர்கள் கியூபாவில் வாழ்ந்தனர். கிராமச் சமுதாயங்களுடனும் குடும்பங்களுடனும் அவர்கள் ஒன்றாக இணைந்தனர். வீடுகளுக்கே சென்று மக்களின் மருத்துவத் தேவைகளை நிறைவேற்றினர். 1970-ம் ஆண்டில் கியூபாவில் பல்துறை மருத்துவமனைகள் நிறுவப்பட்டன.

அதே ஆண்டில் கல்வித் துறைக்குப் பதிலாக மருத்துவக் கல்வியைக் கையாளும் பணி, மக்கள் நலவாழ்வுத் துறைக்கு மாற்றப்பட்டது. 1978-ல் உலகச் சுகாதார அமைப்பின் அல்மா-அட்டா (ALMA ATA) பிரகடனத்தின் தொலைநோக்கு மருத்துவப் பார்வையைத் தீவிரமாகச் செயல்படுத்தவும் ஃபிடெல் காஸ்ட்ரோ வழிவகை செய்தார்.

இப்படியாக மருத்துவத்தில் கியூபா நிகழ்த்திய புரட்சியை வேறு எந்த நாடும் செய்யவில்லை என்பது உலக மருத்துவத் துறையைக் கவனித்துவரும் அறிஞர்களின் கருத்தாக இருக்கிறது. உலகம் முழுவதும் கட்டாயமாகத் தன்னைத் திணித்துக்கொள்ள நினைக்கும் முட்டாள்தனம், காட்டுமிராண்டித்தனம், வலுவானவர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் சட்டம் என்பனவற்றுக்கு மாறாக, இன்னொரு உலகம் சாத்தியம்தான். உண்மையில் அப்படி உலகமயமாக்கப்பட வேண்டியவை பன்னாட்டு ஒருமைப்பாடு, அமைதி, ஒற்றுமை, மக்கள் உடல்நலம், அனைவருக்கும் கல்வி, பண்பாடு போன்றவைதான் என்பதைக் கியூபா நிரூபித்தது.

தொடரும் . . . . .

– ஸ்ரீரசா.

Related Posts