சினிமா தமிழ் சினிமா

நய்யாண்டி – கொஞ்சம் யோசிக்க வேண்டிய நேரம் இது!

Naiyaandiposter‘இடுப்பில்’ காமிரா வைப்பதுதான் முதலில் ‘நய்யாண்டி’ குறித்த விவாதத்தை உருவாக்கியது. அது ஒரு விளம்பர உத்தியாக இருக்கலாம் என்று சந்தேகங்களும் எழுந்தன. படம் முழுவதும் நடிகை நஸ்ரியா இடுப்பு தெரியும்படி ஒரே காட்சியில் மட்டுமே நடித்திருக்கிறார். அதுவும் சற்று தூரத்திலிருந்து காட்சிப்படுத்தியுள்ளனர். எனவே, நடிகை நஸ்ரியா தன்னை இப்படித்தான் காட்சிப்படுத்த வேண்டும்  என்ற ஒப்பந்தத்துடனே நடிக்க ஒத்துக் கொண்டிருப்பது தெரிகிறது.

ஆனாலும், இந்த விதத்தில் நஸ்ரியாவைச் சீண்டினால், அது படத்துக்கு விளம்பரமாக அமையும் என வணிகக் குழு சிந்தித்திருக்க வாய்ப்பிருக்கிறது. இத்தனை மோசமான வணிகமயம், திரைக் கலையை நல்ல திசையில் இழுத்துச் செல்லப் போவதில்லை. மிக மோசமான, வணிகமயத்தின் தாக்கத்திற்கு ‘நய்யாண்டியும்’ ஒரு உதாரணம்.

வரிசையாக, நகைச்சுவைப் படங்கள் வெற்றியடைய – எல்லா இயக்குனர்களும் மற்ற கதைகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, எல்லோரும் சிரிக்கவும், சிரிக்க வைக்கவும் கிளம்புகிறார்கள். (இனி திரையரங்கின் இருக்கைகளின் இரண்டு பக்கமும் கைவிட்டு, கிச்சு கிச்சு மூட்டாததுதானே பாக்கி!) இறுதியில் தனது தனித்தன்மைகளை இழந்து, ஒரு காப்பியடித்த பள்ளி மாணவனின் தேர்வுக் காகிதம் போல ஆகிவிடுகிறது கதை.

நய்யாண்டி திரைப்படத்தில் திருமணமாகாத இளைஞர்களின் சோகத்தைக் காட்ட நினைத்திருப்பது நல்ல முயற்சி. சமூகத்தில் குறிப்பிட்ட சாதிக்குள், குறிப்பிட்ட ‘சமூக அந்தஸ்துள்ள’ மணமகளையே எல்லோரும் தேடுவதாலும், கடந்த காலங்களில் கூடுதலாக நடந்த ‘பெண் குழந்தை’ கருக்கலைப்பு சம்பவங்களாலும் இப்போது ‘முதிர் கண்ணர்கள்’ சற்று அதிகரித்துள்ளனர். சமூக அக்கறையுடன் பேசவேண்டிய இந்தப் பிரச்சனையை – நய்யாண்டி திரைப்படம் நகைச்சுவையின் பெயரால், முகம் சுழிக்க வைக்கிறது.

நஸ்ரியா ஏன் பல் டாக்டராக வர வேண்டும்? தனுசை ஏன் காதலிக்க வேண்டும்? ஒரு பெண் – அவளின் தகப்பனை பிரிவது இத்தனை எளிதா? வில்லனின் வேலை என்ன? திரைக்கதையின் ஓட்டைகளை கேள்விகளால் அடுக்கலாம். 5 லட்சம் விலை சொன்ன ஆலய மணியை 7 லட்சம் விலைபேசுவதும், உடனே செக் கொடுத்துவிட்டு அகலுவார் ஒரு வெளிநாட்டுப் பெண். படத்துக்கு ஏன் வந்தோம் என திரையரங்கம் முழுக்க சிரிப்பொலி. ஒவ்வொருத்தரும் தன்னையே நய்யாண்டி செய்துகொள்கிறார்கள்.

‘சமூகத்தின் நிரை குறைகளை உள்ளது உள்ளபடி எடுத்துக் காட்டும் கண்ணாடியாகவும், சரியான பாதையை எடுத்துக் காட்டும் திசைகாட்டியாகவும்’ ஒரு படைப்பாளன் உணர வேண்டும். ஆனால், திரை வணிகத்தின் பிரம்மாண்டம், ஒரு புதைகுழியை உண்டாக்கி, நல்ல கலைஞர்களையெல்லாம் வீழ்த்தி வருகிறது. சினிமாவை நேசிக்கும் கலைஞர்கள், யோசிக்க வேண்டிய நேரமிது.

Related Posts