சினிமா தமிழ் சினிமா

நடிகையர் திலகம் – சாவித்திரி எனும் ஆளுமையின் கதை . . . . . . . !

நடிகையர் திலகம் திரைப்படம் பல் வேறு திறமைகள் கொண்ட ஒரு பெண் கலைஞர் உச்சத்திற்குப் போனதும், பின்பு அந்த வாழ்வு கெட்டு வீழ்ந்ததுமான கதை.

இந்தப் படம் பெண் தயாரிப்பாளர்கள் தயாரித்த படம். என் தலைமுறைக்கே அவர் வீழ்ந்ததும், அவர் மரணத்தின்போது உழைக்கும் பெண்கள் விழுந்து கதறி அழுததும் குழந்தைப் பருவ நினைவாக நினைவில் இருக்கும்.., பத்திரிகைகள் அவர் குடியால் மட்டும் இறந்தார் என மாய்ந்து மாய்ந்து எழுதியது அந்த வயதிலேயே எனக்குப் பிரச்சினையாகத் தோன்றியது. சாவித்திரி தன் 45 வயதிற்குள் வாழ்வின் அத்தனை அனுபவங்களையும் அதன் ஆழம் வரை பார்த்திருக்கிறார்.

இந்தப் படம் பெண்ணை மையமாகக் கொண்ட படம். எங்குமே ஒரு கண்ணியப் பிசகு இல்லை. என்ன அசல் தெலுங்கு என்பதால் படம்நெடுக நிறைய தெலுங்கு படப் பிடிப்புகள். லேசாக பாச மலரோடு நிறுத்திக் கொண்டார்கள். மற்ற தமிழ் படங்களைக் குறிப்பிடாதது ஒரு குறைதான்.

கீர்த்தி சுரேஷிடம் மிகை நடிப்பு இல்லை. ஆனால் படத்தில் ஒரு சின்னப்பெண்ணான கீர்த்தி சுரேஷை பார்க்க முடியவில்லை.முழுக்க முழுக்க நடிகையர் திலகத்தைத்தான் பார்க்க முடிந்தது. விஜயா வாஹினி ஸ்டூடியோவில் நுழையும் 14 வயது சின்னப் பெண், உச்ச நடிகையான போது ஒரு உடல் மொழி, அந்த நடுத்தரவயது குண்டுக் கன்னத்தோடு இயல்பாக நடித்தல், குடி நோய்க்கு அடிமையாய் அனைத்தையும் இழந்து, மெலிந்து, காலைச் சாப்பாடு இல்லாமல் ரிக்சாவில் படப் பிடிப்புக்குப் போகும் சோகம் என அப்படி ஆட் கொள்கிறார் கீர்த்திஅத்தனை வருட வித்தியாசத்தை அனாயசமாகக் கையாண்டிருக்கிறார்.. இந்தப் படத்தில் நடித்தபோது அவருக்கு mild depression கூட வந்திருக்கலாம் எனத் தோன்றியது. There is so much of internalization from her side.

இந்தப் படத்தில் இன்னுமொரு நுட்பமான விஷயம் 15 வயது சாவித்திரிக்கும் 32 வயது ஜெமினிக்கும் உள்ள அந்தக் காதல். சிறு வயதில் தந்தையை இழந்து அவருடைய ஒரு புகைப் படமாவது கிடைக்காதா எனத் தேடித் திரியும் சாவித்திரி எந்தத் தகப்பனைக் குழந்தையோடு பார்த்தாலும் ஏங்கும் சாவித்திரி (கீர்த்தி) ஜெமினியிடம் என் அப்பா இருந்திருந்தால் என்னை உப்பு மூட்டை தூக்கி விளையாடிருப்பாரா எனக் கேட்கிறார்.அதற்கு ஜெமினி (துல்கர்) அம்மாடி எழுந்து நில் எனச் சொல்லி உப்புமூட்டை தூக்குகிறார். எனக்கு இந்த தந்தை உருவத்தைத் தேடி மூத்த, மணமான ஆண்களிடம் விழுந்த பலர் நினைவு வந்தது. In a way it is a complicated relationship.திருமணமானவர் எனத் தெரிந்ததும் விலக நினைத்து, முயற்சித்து, முடியாமல் அவதிப்படும் சாவித்திரியின் நிலை பார்வையாளர்களுக்கு விளங்குகிறது. ஜெமினியும் (துல்கரும்) அந்த விலகலை ஆக்ரோஷமாக எதிர்த்து சாவித்திரியை அடைகிறார்.

இன்னொரு பக்கம் தான் சிவாஜியாக ஆக முடியாது என்ற மனத் தோல்வியோடு போராடும் ஜெமினி, எம் ஜி ஆர் , சிவாஜி, என்.டி.ஆர், நாகேஸ்வர ராவ் போன்றோர்களுக்கு சரி சமமாக நடிக்கிற, கதையில் திருத்தம் சொல்லக் கூடிய அளவு வளர்ந்து விட்ட, கிரிக்கெட்டும், டென்னிசும் ஆடுகிற, அநாயசமாய் மரம் ஏறுகிற, கேட்கிறவர்களுக்கு பணமும் , நகையும் அள்ளிக்கொடுக்கிற, பிரதம மந்திரி நிதிக்கு போட்டிருக்கும் நகையைக் கழட்டிக் கொடுக்கிற, கார் ரேசில் கோப்பை வாங்குகிற, ஒரு பெண் இயக்குநராய் படங்களை இயக்குகிற ஒரு ஆளுமை உள்ள பெண்ணை எதிர் கொள்வதில் இருக்கும் சிக்கலையும் இந்தப் படம் கோடிட்டுக் காட்டுகிறது. ஏன் சாவித்திரி அவர் கணவரின் மனநிலைக்காக பத்ம ஸ்ரீ பட்டம் வேண்டாம் எனச் சொல்லும் அளவிற்கு! ஏன் இந்த ஆளுமை பிறரையும் பயமுறுத்தி இருக்கும் இல்லையா?

அந்நாளைய ஊடகங்களும் அவரின் ஆளுமையை முழுமையாகப் பேசவில்லை என நினைக்கிறேன். இன்றளவும் நவராத்திரி திரைப்படத்தை சிவாஜியின் ஒன்பது கதாபாத்திரங்களுக்காகக் கொண்டாடுகிறவர்கள் அப்படத்தில் சாவித்திரியும் ஒன்பதுவிதமான நடிப்பை வெளிப்படுத்தியதைக் குறிப்பிட்டதில்லை. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அவருடைய 30 களில் அவருடைய உடல் பருமனைக் கேலி செய்தவர்கள் பெரிய கதாநாயகர்களின் வயதையும், தோற்றத்தையும் பேசியதே இல்லை. சாவித்திரி ஒரு ஆணைப் போல் சம்பாதித்த அனைத்தையும் அந்தத் துறைக்குள் போட்டிருக்கிறார். தொடர்ந்து அந்தத் துறைக்குள் இயங்க வேண்டும் என ஆசைப் பட்டிருக்கிறார். இயக்குனராக,தயாரிப்பாளராக தொடர நினைத்திருக்கிறார். அதற்குக் கொடுத்த விலை பெரியது. It is very much a gender issue I say !

ஏன் கதாநாயகிகள் இரண்டு, மூன்று வருடங்களில் ரிடயர் ஆக வேண்டும் என்ற கேள்வி இன்றும்கூட கேட்கப்பட வேண்டியது. இது தவிர பிறருக்காக ஷியூரிடி கையெழுத்து போடுவது, பிறருக்காகப் பொறுப்பெடுத்துக் கொள்வது எனப் பலப் பிரச்சினைகளைத் தானே தேடிக்கொள்கிறார் சாவித்திரி.

சமந்தாவும் அருமையாக நடித்திருக்கிறார். சாவித்திரியின் கதையைத் தேடும் ஊடகவியலாளராக வரும் அவர் இந்தக் கதையை தேடும் போக்கில் ஒரு தன் விடுதலை அடைகிறார். குடும்பத் தளைகளைத் தாண்டி தன் கிறித்துவ நண்பரை மணக்க முடிவெடுக்கிறார். துல்கரும் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

இந்தப்படத்தில் உடை, மேக்கப், ஆர்ட் டைரக்ஷனில்ல் நிறைய உழைப்பு தெரிகிறது. splendid! 50.60,70 ஆம் வருட புடவைகளை அத்தனை தத்ரூபமாக மறு உருவாக்கம் செய்திருக்கிறார்கள். அந்த சாவித்திரி டிரேட் மார்க் திலகப் பொட்டையும்! எத்தனைஉழைப்பு உழைத்து அந்தக் கால கேமராக்கள், ஃபர்னிச்சர், கார்கள் எனச் சேகரித்தார்களோ! செய்தார்களோ!

சாருலதா மணி பாடும் தந்தாய் தந்தாய் எனும் ஒரு பாடல் அருமை. வாழ்க்கை முழுதும் ஜெமினி சாவித்திரியை அம்மாடி என்றும், சாவித்திரி ஜெமினியை கண்ணா என்றும் அழைத்திருக்கிறார்கள். இந்தப் பாடலில் பல முறை கண்ணா என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கும் மதன் கார்க்கியின் புத்திசாலித்தனம் சொல்லப்பட வேண்டியது.

சாவித்திரியைப் பற்றிய ஒரு அசலான சித்திரம் வெளியே தெரியாமல் போய் விடுமோ என்று அவர் பிள்ளைகள் 1981 லிருந்து ஏங்கி இருப்பார்கள். It is a closure for them. விஜய சாமுண்டீஸ்வரியும், சதீஷும் ஏன் இந்தப் பட மேடையில் பொங்கி அழுதார்கள் என எனக்கு விளங்கிவிட்டது.

”Nadigaiyar thilagam Savithri haunts me”

– கீதா நாராயணன்.

Related Posts