அரசியல்

மீண்டுமொரு பாலியல் வல்லுறவு; அர்த்தமற்ற உங்கள் பிரசங்கங்களை தொடங்குங்கள் !

delhi_rape_121“கலாச்சாரத்தை விழுந்து விழுந்து காப்பாற்றிக் கொண்டிருக்கும் காவல் தெய்வங்களே!  நீங்களெல்லாம் அறிவுரை கூறவும், பிரசங்கத்தை பொழியவும் மீண்டும் மனிதத்திற்கு எதிரான குரூரங்கள் நிகழ்த்தப்பட்டுவிட்டன.”

மும்பையில் 23 மூன்று வயதான பெண் பத்திரிக்கையாளர், ஐந்து மனிதவடிவு மிருகங்களால் வல்லுறவு செய்யப்பட்டுள்ளார். இந்த முறை பாதிக்கப்பட்ட பெண் எந்த ஆண் நண்பனுடனும் சினிமா பார்க்க செல்லவில்லை, 9 மணி இரவிற்கு மேல் வெளியில் சுற்றிக் கொண்டிருக்கவில்லை, சமூகத்தின் பழிபோடும் கயமைத்தனத்துக்கு இரையிடும் வகையில் கவர்ந்திழுக்கும் உடையணியவும் இல்லை. தனது பணியை சிரத்தையுடன் செய்ய  சக பணியாளருடன்  சென்றவள்தான்.

இனி இந்த இழிசெயலில் ஈடுபட்ட மிருகங்களுக்கு பரிந்து  பேச  காரணங்களை கண்டுபிடியுங்கள். மேலும் அப்பெண்ணுக்காக  ப்ரார்த்தனையில் இறங்குங்கள், மெழுகுவர்த்தி ஏந்தி மெளனம் கடைப்பிடித்து உருப்படாத வேலையை செய்துகொண்டிருங்கள்.

ஏழு மாதங்களுக்கு முன்பு, தில்லியில்  நண்பகலில் கணவருடன்  உத்தர்காண்டை நோக்கி பயணம் செய்த ஒரு பெண்ணை, 20 வயதிற்கும் குறைந்த இரு காமம் தோய்ந்த மிருகங்கள் வல்லுறவுக்கு     உள்ளாக்கியிருக்கின்றன. அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத அப்பெண்ணை, மீண்டும் தேடிச் சென்று, கணவரில்லா வேளையில் வீட்டினுள் நுழைந்து மீண்டும் வன்புணர்வுக்கு உள்ளாக்கியுள்ளனர். இந்த கேடு கெட்ட வெறியை விளக்க வார்த்தைகள் இல்லை.

இதிலிருந்தெல்லாம் மீண்டுவர, என்ன விதமான தற்காப்பு கலைகளை கற்றுத்தரப்போகிறது  இந்த  சமூகம்? பெண் இத்தகைய கொடுமைகளில் ஆட்படாமல் இருக்க, உடையில், நேரம் தவறாமையில், அடக்கத்தில் மற்றும்  ஒழுக்க நடத்தைகளில்  இன்னும் எத்தனை  ஆயிராம் அறிவுரை விளக்கங்களைக் கொடுக்கப் போகிறீர்கள்?

உண்மையில், அந்த அறிவுரை விளக்கங்கள் பெண்களை நோக்கி இருப்பதிலிருந்துதான் தொடங்குகின்றன, இந்தக் கொடுமைகளுக்கான நியாயங்கள்.

சாலையில் எதேச்சையாக பேசிக்கொண்டு கடந்து செல்லும் ஆணும் சரி, ஆன்மிகத்தை கூறுகள் போட்டு காம்போ பேக்கேஜ் ஆக விற்றுக்கொண்டிருக்கும் கார்ப்பரேட் சாமியார்களும் சரி, பெண்ணின் உடை, தற்காப்புக்கான துரித அறிவு, மந்திரங்கள் ஜெபித்தல், பின்தொடர்ந்து வரும் காமவெறி மிருகத்திடம், ’அண்ணா’ என்றழைத்து சகோதரத்துவம் கொண்டாடுதல்  என எந்தவித குற்றவுணர்வுமில்லாமல் மடத்தனமும்,குரூரமும் நிறைந்த கருத்துகளை முன்வைத்துக் கொண்டிருப்பார்கள்.

‘அண்ணா’ என்றழைக்கச் சொன்ன சாமியாரை, அப்பாவென்றழைத்த குழந்தை பாலியல் சீண்டலுக்கு ஆளாகி நிற்கிறது. எப்போதாவது நடந்தால்தான் செய்தி, அந்த வகையில் பாலியல் சீண்டல்களெல்லாம், இப்போது முதல் பக்கத்திலிருந்து, நடுப்பக்க செய்திகளாகி தன் முக்கியத்துவம் இழந்துவிட்டன.

maattru mumbai rape

கம்ப்யூட்டர் உதவியுடன் வெளியிடப்பட்ட புகைப்படங்கள்

இப்போது, ஒரு பத்திரிக்கையாளர் பாதிக்கப்பட்டதால், நாளை இந்தச் செய்திகள் தலைப்பாக இடம்பெறலாம். துரிதகதியில் செயல்பட்ட காவல்துறை, வல்லுறவுக் குற்றவாளிகளின் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறது. ஒரே இரவுக்குள் எல்லோரையும் கைதுசெய்து சிறையில் அடைத்து நிம்மதிப் பெருமூச்சு விடலாம்.

இப்பொழுதெல்லாம் காலம் மாறிப்போச்சு, யார் பிரிவினை பார்க்கிறார்கள்?பெண்கள் விண்வெளி வரை செல்கிறார்கள், பெண்கள் தனக்கு தரப்படும் சுதந்திரத்தை தவறாக உபயோகிக்கிறார்களென, பெண்ணிற்கான இயல்பான மதிப்பை, சுதந்திரத்தை பிச்சை போட்டுக்கொண்டிருக்கும் சமூகமிது.

தாம்ஸன் ராட்டர்ஸின் பெண்கள் உரிமைக்கான சட்டப்பூர்வத் தகவல் மற்றும் சட்ட ஆதரவு அமைப்பின்(Global hub for women’s rights) சார்பில் நடத்தப்பட்ட ஆய்வு இது.

  • இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள்  விபச்சாரத்தில் தள்ளப்படுகிறார்கள். இவர்களில் 40சதவிகிதம் பேர் 18 வயதுக்குக் குறைவானவர்கள்.20ம் நூற்றாண்டில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள்பெண் சிசுக்கொலை, கருச்சிதைவு  போன்ற காரணங்களால் இறந்திருக்கிறார்கள்.
  • கிட்டத்தட்ட இரண்டில் ஒருபெண்ணுக்கு 18 வயதுக்கு முன் திருமணம் நடக்கிறது.
  • 2009ம் ஆண்டு உலகில் நடந்த குழந்தைகள் கடத்தல் சம்பவங்களில் 90 சதவிகிதம் இந்தியாவிற்குள்நடந்தவையாகும். கட்டாயத் திருமணங்களும் பெண்களுக்கு எதிரான முக்கியக் கொடுமைகளில் ஒன்றாகக்கருதப்படுகிறது.
  • தேசியக் குற்றப்பதிவு மையம் (NCRB)  வெளியிட்டுள்ள தகவல்களின்படி இந்தியாவிலிருக்கும்பெருநகரங்களில் டெல்லிதான் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத இடம். 2011ம் ஆண்டில் பெண்களுக்குஎதிரான  குற்றச் செயல்கள் அதிகம் பதிவாகியுள்ளதாக என்.சி.ஆர்.பி. கூறியுள்ளது.
  • கடத்தல்கள் 31.8 சதவிகிதமும் வரதட்சணை இறப்புகள் 14 சதவிகிதமும் நிகழ்ந்துள்ளன. பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள 53 நகரங்களில் பாலியல் வன்கொடுமை 17.6சதவிகிதமும் ,ஒட்டுமொத்த தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது பெண்கள் மீதான வன்முறை கடந்தஆண்டைவிட 15 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
  • இந்தியாவின் தலைநகரில் காவல்துறைக்கு எதிராக 12,000வழக்குகள் பதிவாகியுள்ளன என்பது கூடுதல் தகவல். பாதுகாக்க வேண்டிய காவல்துறையாலேயே பெண்கள்வன்முறைக்கு உள்ளாக்கப்படும் நாட்டை, பெண்கள் வாழத் தகுதியில்லாத நாடு என அழைப்பதில்ஆச்சரியமில்லை.
  • இது ஒருபுறமிருக்க, இந்திய மாநிலங்கள் பலவும் சுகாதாரச் சீர்கேடுகளுக்கு பெயர்போனவை. குழந்தைப்பேறுசமயத்தில் ரத்தசோகையால் இறக்க நேரிடும் பெண்களின் சதவிகிதம் மிக அதிகம். இன்னொருபுறம்  பெண்கள்பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியிருக்கிறார்கள்.
  • பெண்களுக்கான வரதட்சணைக் கொடுமை இன்றும் இருந்துவருவதால் பெண்சிசுக் கொலை தொடர்ந்துநிகழ்ந்து வருகிறது. ஆண் குழந்தையின் மீதான ஆசையில் தந்தையின் கொடுமையால் பலியானபெங்களூருவைச் சேர்ந்த மூன்றுமாதக் குழந்தை நேஹா அஃப்ரீனை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்கமுடியாது.
  • ஆண்களைச் சார்ந்தே பெரும்பாலான பெண்கள் வாழ்கிற சூழ்நிலையில் ஆண்களுக்கு ஏற்படுகிற அனைத்துப்பிரச்சினைகளும், பெண்களையும் மனரீதியாகப் பாதிக்கின்றன. இந்தியாவில் தற்கொலைகள்அதிகரித்துள்ளதாக சமீபத்திய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. தமிழகத்தில் நிகழும்  தற்கொலைகளில் 30சதவிகிதம் பெண்கள் செய்து கொள்பவை. கடந்த முப்பது ஆண்டுகளில் இந்தியாவில் அழிக்கப்பட்ட பெண்சிசுக்களின்  எண்ணிக்கை ஒரு கோடியேஇருபது லட்சம்.
  • நமது நாட்டில் ஆண்டுதோறும் ஒரு கோடியே பத்து லட்சம் கருக்கலைப்புகள் நடைபெறுகின்றன. இதில் என்பது லட்சம் பெண்சிசுக்கள்.

பாலியல் ரீதியாக மட்டுமல்ல, வார்த்தைகளிலும் கூட வன்மம் தெறிக்காமல் தடுக்க வேண்டுமானால் – அதனை ஒரு பெண்ணிடமிருந்து தொடங்க முடியாது. பெண்ணை சக மனுசியாய்ப் பார்க்கும்  இயல்பை வார்த்தெடுக்காமல் மதமோ, ஆண்மைத்திமிரோ, பண்பாடோ கற்றுத்தந்த போதனைகளை பெண்கள் மீது ஏற்றி ஏற்றி தன் அசிங்கங்களை மறைத்துக் கொள்ள முடியாது.

158832607_001ஒரு வழக்கில் உடனடியாக செயல்படுவதல்ல இப்போதைய தேவை. ஒவ்வொரு பெண்ணும், ஒவ்வொரு மனிதனும் சமமாக வாழும் தேசத்தை உருவாக்குவதே இன்றைய தேவை.

Related Posts