இலக்கியம்

அதிகாலைப் பேரியக்கம் …

வட இந்தியாவை நோக்கி நெடுஞ்சாலைகளின் வழியாக ஒரு பயணம் மேற்கொண்டிருந்தேன். செல்லும் வழியில் ஒரு நாள் ஹைதராபாத்தில் தங்கியிருந்தேன். நான் தங்கியிருந்தது ஒரு சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்டின் கடைசி மாடி. அன்று அதிகாலையிலேயே தூக்கம் கலைந்து போனது. எழுந்து மொட்டை மாடிக்குச் சென்றேன். தடுப்புச் சுவரில் சாய்ந்து நெடுநேரம் அப்படியே நின்றிருந்தேன்.

கண்முன்னே அந்தப் பெரு நகரம், புள்ளிபுள்ளியாக விளக்கொளியைச் சிதறடித்துக்கொண்டிருந்தது. தூரத்தில் ஏதோ ஒரு மசூதியிலிருந்து பாங்கு ஓதும் சத்தம் என் காதுகளை வந்தடைந்தது. காலைப் பனியின் மிச்சத்துளிகள் கைப்பிடிச்சுவர்களில் தேங்கியிருந்தது. அந்தத் தெருமுனையில் இரண்டு நாய்கள் சத்தம் போட்டபடி எங்கோ ஓடியலைந்து கொண்டிருந்தன.

திடீரென்று மின்சாரம் தடைபடுகிறது. இருள் படர்ந்த அந்த நகரத்தை நிலவொளியில் பார்த்தபடியே நின்றிருந்தேன். பகலின் பேரிரைச்சல் இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பிக்க இருக்கிறது. பனி படர்ந்த அந்த இரவின் பிரம்மாண்டம் கொஞ்சங்கொஞ்சமாக வடிந்து கொண்டிருந்தது.

அதிகாலைக்கென்றே ஒரு விசித்திரமான அழகிருக்கிறது. இன்றுபோல் ஒவ்வொரு நாளும் அந்தப் பேரழகை, இரு விழிகளால் பருகிக்கொண்டே இருக்கிறேன். என் விழித்தாகம் இதுநாள் வரை அடங்கவேயில்லை. இனி அடங்கப்போவதுமில்லை. அதிகாலையின் கரங்கள் மிகவும் வலிமை வாய்ந்தவை. அதன் வலிய கரங்கள் என்னை கைநீட்டி அழைத்துக்கொண்டேயிருக்கிறது. ஒரு மனிதன் அவன் கண்களுக்கு மட்டும்தான் அவன் சாகும் வரை தீனி போடவே முடிவதில்லை. ஒவ்வொருநாளும் புதிது புதிதாக ஒன்றைக் காண அது இறைஞ்சிக்கொண்டே இருக்கிறது.

ஆயிரமாயிரம் காட்சிகளைத் திரையில் பார்த்தாலும் நேரடியாகப் பார்ப்பதுபோல் அது நம்மை வசீகரிப்பதில்லை. இமைமூடித் திறக்கும் ஒவ்வொரு நொடியும் ஒரு புதிய காட்சி நம் முன்னே விரிகிறது. முடிவற்ற பிரபஞ்சத்தின் பெரும்பரப்பை கண்களின் வழியாக தரிசிக்கச் சொல்கிறது. ஓரிடத்தையோ ஒரு பொருளையோ, அதன் ஒவ்வொரு எல்லையிலிருந்து பார்க்கும்போதும், ஒரு புதிய பரிமாணம் கண்களில் படர்கிறது.

“குடி குடியைக் கெடுக்கும்” என்று எழுதப்படாத மதுப் புட்டிகளை குடியர்கள் விரும்புவதில்லை.
அப்படி எழுதப் படாத புட்டிகள் போதிய போதையைத் தருவதில்லை என்று குடியர்கள் எண்ணுகிறார்கள்.
“குடி குடியைக் கெடுக்கும்” என்ற சொல்லே ஒருவித போதையை அவர்களுக்குள் திணிக்கிறது என்று ஜெமோ ஓரிடத்தில் சொல்லியிருப்பார். ஆம்! நான் குடிகாரன்தான். தினமும் இந்த அதிகாலையை அள்ளிப் பருகும் பெருங்குடிகாரன். என் சுய அடையாளங்களை களைந்து அதற்கு அடிமையாகியிருக்கிறேன்.
“அதிகாலை” என்ற ஒரு சொல்லை எங்கு வாசித்தாலும் எனக்குள் ஒருவித போதை குடிகொள்கிறது.

கண்கள், எண்ணற்ற காட்சிகளைக் கொண்ட அந்த அதிகாலையைக் கண்டு போதையேற்றிக் கொண்டே இருக்கச் சொல்கிறது. நேரில் காணும் மென் பனியும் குளிர் காற்றும் சேர்ந்த அந்த அதிகாலை, மேலும் என்னை போதையேற்றி வசீகரிக்கச் செய்கிறது. அதன் களிப்பூட்டும் வாசனையால் அந்த இடத்தைவிட்டு விலகிச் செல்ல என்னால் முடிவதேயில்லை.

எல்லையற்ற பெருவெளியில் ஏகாந்தமாய் கைகளை விரித்து கொஞ்சம் நிமிர்ந்து பார்க்கிறேன். வானில் எண்ணற்ற நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருக்கின்றன. கிழக்கு அடிவானில் செந்நிறக்கீற்று வரிவரியாக படர்ந்துகொண்டிருக்கிறது. மெல்ல மெல்ல நட்சத்திரங்கள் மறையத் தொடங்குகின்றன. வானில் வெண்பஞ்சு நீலம் படர ஆரம்பிகிறது. இருள் ஒடுங்கி வெளிச்சம் பரவி ஊரை ஆள எத்தனித்துக்கொண்டிருந்தது. ஆகா! அது என்னுள் இன்னும் பரவசத்தை அதிகமாக்குகிறது. எளிய இயல்பான இந்த விடியல், என்னுள் அவ்வளவு பெரிய விந்தையாகத் தோன்றுகிறது.

என் ஒவ்வொரு இரவும் விடிகாலைக்கான ஏக்கமாகவே நகர்ந்துகொண்டிருக்கிறது. அதிகாலையை பார்ப்பதுதான் உலகின் பேரதிசியமாக எனக்குத் தோன்றுகிறது. யாருடைய கைகளாலும் தடுக்கமுடியாத விடிந்துகொண்டிருக்கும் அந்த பேரதிசியத்தை ஆசையடங்காமல் கண்டு கொண்டிருக்கிறேன்.

ஒவ்வொரு விடியலும், நமக்கு ஏதோ ஒன்றை அந்த நாளில் கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்கிறது. ஆண்டாண்டு காலமாய் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும் இந்தச் சிறு விடியல் என்னுள் இத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிடுகிறது.

இந்த நகரத்தில் என்னைபோலவே யாரோ ஒருவர் இந்த அதிகாலையை இவ்வாறு தரிசித்துக் கொண்டிருக்கலாம். இதற்கு முன்னரும் இது நடந்திருக்கும். இந்த அதிகாலை என்னைபோல எத்தனையோ மனிதர்களைக் கண்டிருக்கும்.வேறு வேறு காலங்களில் வாழ்ந்த எண்ணற்ற மனிதர்கள் இந்த அதிகாலையை எவ்வாறு ரசித்திருப்பார்கள்? என்ற கற்பனை என்னுள் விரியத்தொடங்கியது.

விஜய நகரப் பேரரசர்களில் இருந்து முகலாய மன்னர்கள், நவாபுகள், ஆங்கிலேயர் என்று எண்ணற்ற முகங்களை அது என்னுள் கொண்டுவந்து நிறுத்தியது. எத்தனை முகங்களை இந்த அதிகாலை கண்டிருக்கும்?. முடிவில்லா இந்த அதிகாலை, காலஞ்சென்ற அந்த மனிதர்களை மீண்டுமொருமுறை காணப்போவதேயில்லை. இன்னும் எத்தனையெத்தனை மனிதர்களை இது இழந்துகொண்டேயிருக்கும்? நீரில் நனைந்த இலவம்பஞ்சைப்போல ஒட்டிக்கொண்ட அந்த நினைவுகள், உள்ளமெங்கும் படர்ந்து உள்ளூரத் துயரம் கொண்டிருந்தேன். என்னுள் இறுக்கமும் பேரமைதியும் ஆட்கொண்டிருந்தது.

ஆம்! காலம் ஒரு நாள் என்னையும் இந்த அதிகாலைப் பெருஞ்சித்திரத்தை காண விடப்போவதில்லை. அந்த நாள், என்னுடல் மின்மயான புகைப் போக்கியின் வழியாக காற்றில் கரைந்து, அகண்ட இப்பெருவெளியில் காணாமல் போயிருப்பேன். ஆனாலும் இந்த அதிகாலைப் பேரியக்கம் தன் விந்தையைத் திரும்பத் திரும்ப நிகழ்த்திக்கொண்டேயிருக்கும் – யாருக்காகவோ!.

Related Posts