அரசியல் அறிவியல்

தறிகெட்டு நடக்கும் தாது மணல் கொள்ளை!

தூத்துக்குடி மாவட்ட கடலோரங்களில் தாதுக்கள் அடங்கிய மணல் அள்ளுவதில் முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் நடைபெற்றிருக்கிறதா? என விசாரணை நடந்துள்ளது. தமிழக வருவாய்த்துறை ஆணையர் திரு.ககன்தீப் சிங் பேடி தலைமையில் அதிகாரிகள் குழு இந்த ஆய்வை நடத்தியது. ஆய்வு அறிக்கைகள் இன்னும் வெளியிடப்படவில்லை.

ஆயினும் அறிக்கைகள் வருவதற்கு முன்பாகவே இந்த அறிக்கை முறைகேடுகளையும் விதிமீறல்களையும் தடுப்பதற்கான வழிகளை முன்மொழியும் என்று ஒரு பிரிவினரும் வழக்கம் போலவே இதனால் எவ்வித பலனும் இருக்கப்போவதில்லை என மற்றொரு பிரிவினரும் விவாதிக்க ஆரம்பித்துள்ளனர். அறிக்கையின் தன்மை எத்தகையதாக இருப்பினும் இதுவரை நடைபெற்றுள்ள விதிமீறல்களும் முறைகேடுகளும் மிகக் கடுமையானவை.

தமிழகம், கேரளம் மற்றும் ஒடிசா மாநிலங்களின் கடலோரங்களில் கார்னட், இல்மனைட், ரூட்டைல், சில்மனைட் மற்றும் மோனோசைட் ஆகிய தாதுக்கள் அடங்கிய மணல் அதிகமாக கிடைக்கிறது. இந்த தாதுக்கள் இந்தப் பகுதிகளில் உள்ள கடலோரங்களில் செறிவுடன் காணப்படுகிறது. இதில் மோனோசைட் கதிரியத்தக்க கனிமங்கள் அடங்கியது. ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படுவதில்லை. இதர கனிமங்கள் கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து பிரதானமாக ஜெர்மானிய கம்பெனிகளால் பிரித்தெடுக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

நாடு விடுதலையடைந்த பிறகு இந்திய பொதுத்துறை நிறுவனமாக ‘இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட்’ மற்றும் சில கம்பெனிகள் இந்த தாதுக்களை பிரித்தெடுத்து வியாபாரம் செய்து வருகின்றன. ஆனால், கடந்த கால் நூற்றாண்டு காலமாக ‘இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட்’ அல்லாத தனியார் நிறுவனங்களே மிகப்பெரும் அளவிற்கு இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. உதாரணமாக இந்தியாவில் தற்போது உற்பத்தி செய்யப்படும் கார்னெட்டில் 98 சதவிகிதம் தனியார் நிறுவனங்களாலேயே செய்யப்படுகின்றன. 2010-11 கணக்கின் படி மொத்த உற்பத்தியில் 92 சதவிகிதம் தமிழகத்தில் இருந்தும் 7 சதவிகிதம் ஆந்திராவிலிருந்தும் 1 சதவிகிதம் ஒடிசாவிலிருந்தும் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. 2010-11 ஆம் ஆண்டில் 2,05,800 டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இந்த உற்பத்தியில் 87 சதவிகிதம் வி.வி.மினரல், டிரான்வோல்டு கார்னட் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் பீச் மினரல்ஸ் கம்பெனி பிரைவேட் லிமிடெட் ஆகிய மூன்று பெரிய நிறுவனங்களால் செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் இரண்டு கம்பெனிகளும் திரு.வைகுண்ட ராஜனுக்குச் சொந்தமானது. மூன்றாவது கம்பெனி வைகுண்ட ராஜனின் சகோதரருக்குச் சொந்தமானது. இதேபோன்று மேற்சொன்ன பெரும்பாலான கனிமங்களும் வி.வி.மினரல் நிறுவனத்தினாலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த உற்பத்திகளில் பெரும்பகுதி தமிழ்நாட்டிலும் குறிப்பாக இந்த நிறுவனங்களாலுமே செய்யப்படுகிறது.

இந்த நிறுவனங்கள் தங்களுடைய சொந்த நிலங்களிலும் அரசு புறம்போக்கு நிலங்களிலும் தாது மணல்களை அள்ளுவதற்கான உரிமங்களைப் பெற்றுள்ளார்கள். இந்த மணல்கள் அள்ளப்படுவதை கண்காணிப்பதற்கான எந்த முறையான ஏற்பாடுகளும் தற்போது நடைமுறையில் இல்லை. தாது மணல் அள்ள உரிமம் பெற்றுள்ள நிறுவனங்கள் முன்கூட்டியே உத்தேசமாக ராயல்ட்டி தொகையைக் கட்டி அதற்கான சீட்டுக்களை பெற்றுவிடுவார்கள். சட்டப்படி ஒவ்வொரு மாத இறுதியிலும் எடுக்கப்பட்ட மணலை கணக்குக் காட்டி நேர் செய்ய வேண்டும். இடையிலேயே கூடுதலான நடைச்சீட்டுக்கள் தேவைப்பட்டால் அதையும் ராயல்ட்டி கட்டி பெற்றுக் கொள்ள வேண்டும். இதுதான் இப்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறை. ஒருவர் தான் வாங்கியுள்ள நடைச்சீட்டை பயன்படுத்துகிறாரா அதைத் தாண்டியும் மணல் அள்ளுகிறாரா, எந்த இடத்தில் மணல் அள்ளுகிறார் என்பது குறித்தெல்லாம் கண்காணிப்பதற்கான எந்த நடைமுறையும் தற்போது இல்லை. கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளும் கடைபிடிக்கப்படுவதில்லை.

2008-09 முதல் 2010-11 வரை உற்பத்தி செய்யப்பட்ட மொத்த கனிமங்களின் அளவு

கனிமங்கள்

ஒரு டன்னின் விலை ரூபாயில்

இந்தியா (டன்களில்)

பணமதிப்பு கோடிகளில்

தமிழ்நாடு (டன்களில்)

பணமதிப்பு கோடிகளில்

கார்னெட்

5000

4790124

2395.062

4397359

2198.6795

இல்மனைட்

5000

1964949

982.4745

1050500

525.25

ரூட்டைல்

45000

64264

289.188

21434

96.453

ஜிர்கான்

40000

90416

361.664

57553

230.212

மொத்தம்

185000

6909753

4028.3885

5526846

3050.594

ஆதாரம் – சுரங்க அமைச்சகம்

இத்தகைய பணம் சேர்ந்த பிறகு இந்த நிறுவனங்கள் அந்த மாவட்ட நிர்வாகத்தை விடவும் அதிகாரம் படைத்தவர்களாக மாறிவிட்டனர். மாவட்ட ஆட்சித் தலைவர் முதல் சாதாரண அலுவலக உதவியாளர் வரை இவர்களது குவாரிகள் செயல்படும் மாவட்டங்களில் யார் இருக்க வேண்டும் என்று இவர்களே தீர்மானிக்கிறார்கள். வருவாய்த்துறை, காவல் துறை சுரங்கம் உள்ளிட்டு அனைத்து துறைகளிலும் குவாரிகள் இருக்கும் மாவட்டங்களில் அனைத்து பொறுப்புக்களும் இவர்களின் கொள்ளைக்கு எந்த இடையூறும் செய்யாதவர்களாலேயே நிரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. தங்களை எதிர்ப்பவர்களை பணித்தாசை காட்டுவது, மிரட்டுவது என்று தொடங்கி வெளி மாவட்டங்களுக் மாற்றுவது வரை நடந்து கொண்டிருக்கிறது. சில மத அமைப்புகளின் தலைவர்களை நிர்ணயிப்பதில் கூட இவர்கள்தான் தீர்மானகரமான பங்கு வகிப்பதாக பொதுவாக பேசப்படுவதுண்டு. அதை உண்மை என்று நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் இரண்டு மத நிறுவனங்களின் தலைவர்கள் வெளிப்படையாக இந்த நிறுவனங்களின் கொள்ளைகளுக்கு இடையூறு வரக்கூடாது என்று பத்திரிக்கைச் செய்திகள் வெளியிட்டிருந்தனர்.

ஒரு கட்சியின் தென்மாவட்ட முதலாளி என்றே திரு.வைகுண்ட ராஜன் அழைக்கப்படுகிறார். ஒரு அரசியல் கட்சியின் தொலைக்காட்சியின் மிகப்பெரிய பங்குதாரர் இவர் என்பது ஊரறிந்த ரகசியம். தென்மாவட்டங்களில் அமைச்சர்களை நிர்ணயிப்பதிலும் வெளியேற்றுவதிலும் இவர் முக்கியப் பங்காற்றுவதாக தென்மாவட்ட அரசியல்வாதிகள் மத்தியில் உளவும் செய்தி. இதற்கு நேர் எதிராய் உள்ள கட்சி கூட கடந்த காலத்தில் இவர் மீது மணல் கொள்ளைக்காக வழக்குப் போடாமல் பெண் சீண்டல் வழக்கைப் பதிவு செய்து பிறகு பேரம் பேசி, பேரம் படிந்ததும் வழக்கு காணாமல் போனதையும் தமிழகம் அறியும். அந்த அளவிற்கு நிர்வாகத்திலும் சரி அரசியலிலும் சரி ஆட்டுவிக்கும் அளவிற்கு இந்த தாது மணல் கொள்ளை அவர்களை பலப்படுத்தியிருக்கிறது.

மதகுருமார்கள் மீது மக்களின் நம்பிக்கை அபரிமிதமானது. நித்தியானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் வந்தபோது கூட அதற்கு ஆதரவாக அவரது பக்தகோடிகள் பேசியதையும் எழுதியதையும் தமிழகம் அறியும். ஆனால், ஒரு பாதிரியாரை கட்டி வைத்து அடித்து கடுமையாக தாக்கியபோது கூட வாய்திறக்க முடியாத அளவிற்கு இவர்களது அதிகாரம் வானளாவியது.

இதேபோன்று தாது மணல் குவாரிகள் உள்ள இடங்களில் முதலாவதாக ஊரிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், ஊர் முக்கியஸ்தர்கள் ஆகியோர்களை இவர்கள் கவனித்துவிடுவார்கள். அவர்கள் படியவில்லை என்றாலோ அல்லது அவர்களின் பேச்சை மக்கள் கேட்கவில்லையென்றாலோ ஊரில் பொது கட்டிடங்கள் மற்றும் கோவில்களுக்கு வேண்டியதைச் செய்வார்கள். அதனாலும் இயலவில்லை என்றால் ஊரிலுள்ள போக்கிரிகள் சில பேரை வைத்துக் கொண்டு மக்களை மிரட்டுவார்கள். இதற்கு காவல்துறையும் உடந்தையாக இருக்கும். இதுவெல்லாம் தோற்றுப் போனால் ஊரிலுள்ள மக்களை பிளவுபடுத்தி மோத வைப்பார்கள். தவிர ஊரிலுள்ள பல பேருக்கு வேலை தருகிறோம் என்று சொல்லி அவர்கள் வேலையே செய்யாமல் அவர்களுக்கு தினசரி சில நூறு ரூபாய்கள் கொடுக்கப்படும்.

இப்படி நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகள், மத நிறுவனங்கள், போக்கிரிகள், ஊர் மக்கள் அனைவரையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு தங்கள் கொள்ளையை தொடர்வார்கள். இவர்களின் இந்த தகிடுதத்தங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் டாடா நிறுவனம் பின்வாங்கியது தமிழகம் அறிந்த கதை.

இவர்கள் லீசுக்கு எடுத்த அரசு நிலங்களைப் பொறுத்தமட்டில் எந்த சர்வே எண்ணில் லீசுக்கு எடுத்திருக்கிறார்கள் மக்களுக்குத் தெரியாது. எனவே, லீசுக்கு எடுத்த இடங்களை விட்டுவிட்டு வேறு இடங்களில் முதலில் மணல் எடுக்க ஆரம்பிப்பார்கள். இதேபோன்று சர்வே நம்பர் இல்லாத புறம்போக்கு நிலங்களும் இவர்களுக்கு லீசுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அத்தகைய இடங்களில் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட இடங்களுக்குள் தான் மணல் அள்ளுகிறார்களா என்று யாரும் கண்டுபிடிக்க முடியாது. கடல் அலை தொடும் இடங்களிலும் கூட இவர்கள் மணல் அள்ளுகிறார்கள். மணல் அள்ளப்பட்ட சில மணி நேரங்களிலேயே இயற்கையே இவர்களது தவறுகளை மூடி மறைத்துவிடும். எனவே, இவர்களது முறைகேடுகளின் அளவை எவராலும் எளிதில் கண்டுபிடிக்க முடியாது.

இப்படி இயற்கை வளத்தை கொள்ளையடிப்பது, சமூக நியதிகளை சீரழிப்பது, கிராமங்களில் மிஞ்சியிருக்கும் நேர்மையானவர்களை பணத்திற்கு அடிபணியச் செய்வது, கிராமங்களில் மோதல்களை உருவாக்குவது என்பதோடு இயற்கை வளத்தையும் வாழ்வாதாரங்களையும் அரசு கட்டமைப்புகளையும் சீரழித்து வருகிறார்கள்.

பல லட்சக்கணக்கான டன்கள் மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது. இதனால் நிலத்தடிநீர் உப்புநீராக மாறிவிடுகிறது. வாகன கழிவுகளாலும் போக்குவரத்தாலும் கடலோரத்தில் உள்ள செடிகொடிகளும் பூச்சி பொட்டுக்களும் அழிகின்றன. வாகன கழிவுகளால் கடற்கரையை ஒட்டி வாழும் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. தாது நீக்கப்பட்ட மணல்களை கடல்களில் கொட்டிவிடுவதால் கரையோரங்களில் மீன்பிடிக்கும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. வாகனங்களில் முறையான பாதுகாப்பின்றி கொண்டு செல்வதால் தாதுக்கள் அடங்கிய மணல் விவசாய நிலங்களில் படிவதும் நடைபெறுகிறது. தாது மணலிலிருந்து தாதுக்களை பிரித்தெடுத்த பின்னர் கழிவுகள் கடல்களிலும் கால்வாய்களிலும் சுத்திகரிக்காமல் விடப்படுகிறது. இவையெல்லாம் இயற்கையையும் சுற்றுசூழலையும் பாதிப்பவை.

கடலோரங்களில் மணல் அள்ளப்படுவதால் கடல்நீர் உள்ளே புகுந்து மீனவர் குடியிருப்புகள் பாதிப்புக்குள்ளாவதும் நடைபெறுகிறது. இது தவிர இத்தகைய தாது மணல்கள் சாதாரண லாரிகளில் அல்ல மிகப்பெரிய கண்டெய்னர்களில் ஏற்றிச் செல்லப்படுகின்றன. இதன் காரணமாக கிராமச் சாலைகள், இணைப்புச் சாலைகள், பிரதான சாலைகளிலுள்ள சிறு சிறு பாலங்கள் ஆகியவைகளும் கூட கடுமையான சேதத்துக்கு உள்ளாகியுள்ளன.

இவை குறித்தெல்லாம் மீனவர் அமைப்புகள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் கடந்த காலத்தில் குரல் எழுப்பி வந்துள்ளனர். ஆனால், அரசின் எந்த அமைப்பும் இவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுத்தது கிடையாது. மாறாக இத்தகைய குரல் எழுப்புபவர்கள் மீது ஏதாவது ஒரு வகையில் தாக்குதல் நடந்திருக்கிறது.

இப்போதும் கூட தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் அங்குள்ள 6 குவாரிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதை வைத்துக் கொண்டு ஒரு வேளை நேர்மையாக நடவடிக்கை எடுப்பது என்றால் கூட பெரிய அளவிற்கான நடவடிக்கைகள் எடுத்துவிட முடியாது. காரணம் ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே இவர்கள் மணல் அள்ளுவது கிடையாது. வேறு இடங்களில் மணல் அள்ளுவதும் தாதுக்களைப் பிரித்தெடுத்த பின் அதே மணலை கொட்டிவிடுவதும் கடந்த காலங்களில் நடந்திருக்கிறது. மேலும், இந்த மணல் கொள்ளை தூத்துக்குடி மாவட்டத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குவாரிகளின் எண்ணிக்கை 6 மட்டுமே. ஆனால், தமிழகத்தில் மொத்தம் 79 குவாரிகள் உள்ளன. இவற்றில் 38 குவாரிகள் வி.வி.மினரல் நிறுவனத்திற்கு மட்டுமே சொந்தமானது. எனவே, முறைகேடு செய்பவர் ஒரு மாவட்டத்தில் மட்டுமே அப்படி செய்திருப்பார் என்ற ஊகமே மிகத் தவறானது.

மாவட்டங்கள்

மொத்த குவாரிகள்

வி.வி.மினரல் குவாரிகள்
திருநெல்வேலி

53

27

கன்னியாகுமரி

9

6

தூத்துக்குடி

6

3

மதுரை

2

2

திருச்சி

9

0

மொத்தம்

79

38

எனவே, தமிழக அரசு மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று உண்மையிலேயே விரும்பினால் தமிழ்நாட்டிலுள்ள மேற்கண்ட 79 குவாரிகளிலும் ஆய்வுகளை நடத்த வேண்டும்.

பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சம்பந்தப்பட்டுள்ள பிரச்சனையாக இருப்பதால் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

கண்ணால் காணக்கூடிய சாட்சியங்களுக்கு அப்பால் இந்த நிறுவனங்கள் இதுவரை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்துள்ள மற்றும் உள்நாட்டில் விற்றுள்ள கனிமங்களை கணக்கெடுத்து அதனடிப்படையில் மட்டுமே முறைகேடு நடந்துள்ளதா என்று கண்டறிய வேண்டும்.

மத்திய அரசாங்கம் அடிமாட்டு விலைக்கு இயற்கை வளத்தை தனியாருக்கு அள்ளி கொடுக்கும் முட்டாள்தனமான இப்போதைய  கொள்கைகளை கைவிட வேண்டும். இவற்றையெல்லாம் செய்வதற்கு இந்தப் பிரச்சனையில் உண்மையான அக்கறையுடைய அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும். அதைத் தவிர வேறு மாற்று வழி இருக்க முடியாது.

(பூவுலகு‍ சுற்றுச்சூழல் மாத இதழில் வெளியான எனது‍ கட்டுரை…..)

Related Posts