அரசியல் தொடர்கள்

மத்திய கிழக்கின் வரலாறு -9 (இசுலாமிய இயக்கங்கள்)

வகாபியிசமும் இசுலாமிய சகோதரத்துவ இயக்கமும்…

வகாபியிசத்துக்கு பணமும் செல்வமும் கிடைத்துவிட்டது, உலக அரங்கில் ‘தனக்கென கொள்கையிருக்கிறது’ என்று காட்டிக்கொள்ளவும் ஆரம்பித்துவிட்டது. உலகின் எண்ணை விற்பனையில் சவுதி அரேபியா நேரடியாக 25% அளவிற்கும், ஒட்டுமொத்த வளைகுடாவைக் கணக்கெடுக்கையில் 55% அளவிற்கும் பங்குவகித்தது. அரபுலகின் எண்ணை விற்பனையனைத்தும் டாலரிலேயே செய்யப்படுகிறது. இதனாலேயே “டாலர் ஆயில்” என்கிற பெயரும் அதற்கு உண்டு. 1972இல் மிகமோசமான நிலையில் இருந்த அமெரிக்கப் பொருளாதாரம், வெகுசீக்கிரத்தில் மீண்டதற்கான ஒரே காரணம் “டாலர் ஆயில்” தான். அமெரிக்காவின் டாலர் ஒரு சர்வதேச வர்த்தக நாணயமாக மாறியதற்கு அரபுலகின் எண்ணைவளத்திற்கு முக்கியப்பங்குண்டு.

பெட்ரோல் விற்பனை மட்டும் டாலரில் நடைபெறாமல் தங்கத்திலோ அல்லது வேறு ஏதோவொரு நாணயத்திலோ நடந்தால், அன்று மாலையே அமெரிக்கா திவாலாகிவிடும். இதுதான் அமெரிக்கா தன்னுடைய அரசியல், பொருளாதார தந்திரங்கள் அனைத்தையும் மத்தியகிழக்கை நோக்கி நகர்த்தியதற்கான மிகமுக்கியமான காரணம்.

எகிப்தில் நாசரின் மறைவுக்குப் பின்னர் ஆட்சியதிகாரத்திற்கு வந்த அன்வர் சதாத், சிறையில் இருந்த பெரும்பாலான இசுலாமிய சகோதரத்துவ இயக்கத்தினரை விடுதலை செய்தார். அக்கம்பக்கத்து நாடுகளுக்கு புலம்பெயர்ந்திருந்தவர்களும் சதாத்தின் காலகட்டத்தில் எகிப்திற்கு திரும்பினர். நாசர் இருந்த காலகட்டத்தில் எகிப்தில் சுயசார்பு பொருளாதாரப் பாதையில் முன்னேறிக்கொண்டிருந்தது. அவரது மறைவுக்குப்பின்னர் வந்த சதாத்தோ, தாராளமய சந்தைப் பொருளாதாரத்திற்கு எகிப்தை கொண்டுசென்றார். இதனால் சமத்துவம் மறைந்து, ஒரு சில பணக்காரர்களிடமும் பெருமுதலாளிடமுமே எகிப்தின் எதிர்காலம் அடகுவைக்கப்பட்டுவிட்டது. இவற்றை முற்போக்கு மற்றும் இடதுசாரிகள் கடுமையாக எதிர்த்தனர். அவர்களை சமாளிக்க இசுலாமிய சகோதரத்துவ இயக்கம்தான் தனக்கு உதவியாக இருக்கும் என்று சதாத் நம்பியதே, அவர்களை விடுதலை செய்ததற்கான் காரணம்.

சின்ன ஜிகாத், பெரிய ஜிகாத் மற்றும் ஜிகாத்திய இயக்கங்கள்:

இசுலாமிய சகோதரத்துவ இயக்கத்தினர் சிறையிலிருந்து வெளியேவந்திருந்தபோதும், அவர்கள் மீதான தடை நீக்கப்படவில்லை. இருப்பினும் அவர்கள் தொடர்ந்து செயல்பட்டனர். அல்தவா என்கிற மாத இதழையும் நடத்திவந்தனர். அதில் எகிப்தின் மதச்சார்பற்றத்தன்மையை கடுமையாக எதிர்த்தே கட்டுரைகள் வெளியிடப்பட்டுவந்தன. அப்போது எகிப்தில் இரண்டு இயக்கங்கள் இயங்கின. ஒன்று இசுலாமிய சதோதரத்துவ இயக்கம் தொடர்ந்தது, மற்றொன்று அல்-ஜிகாத் என்கிற புதிய இயக்கம் உருவானது. ஜிகாத் என்பது இன்றைக்கு உலகெங்கிலும் புரிந்துகொள்ளப்படும் பொருளில் அல்ல அது துவங்கப்பட்டது. இசுலாமைப் பொருத்தவரையில் இரண்டு வகையான ஜிகாத் இருக்கின்றன. ஒன்று பெரிய ஜிகாத், அது கடவுளுக்கும் தனிமனிதனுக்கும் இடையிலான ஜிகாத். இசுலாத்தில் சொல்லப்பட்டிருக்கும் நல்லொழுக்கங்களை கடவுளுக்கு பயந்து பின்பற்றுவது பெரிய ஜிகாத்தில் வரும். ஆனால் இவையெல்லாம் ஏழை எளிய மக்களுக்கு மட்டுமே பொருந்துகிறது. பணக்கார முதலாளிகளுக்கெல்லாம் எங்கிருக்கிறது நேர்மையும் நல்லொழுக்கங்களும்? பொய் சொல்லாமல் சர்வதேச வியாபாரங்களை நடத்துவதென்பது அவர்களுக்கு கடினமான காரியமாச்சே. இரண்டாவதாக சிறிய ஜிகாத், ஒரு பிரச்சனை வரும்போது அதிலிருந்து தன்னை தற்காத்துக்கொள்வதுதான் அது. அமெரிக்க சட்டப்படிகூட, ஒவ்வொரு அமெரிக்கக் குடிமகனுக்கும் தன்னை தற்காத்துக்கொள்ள உரிமை இருக்கிறது என்றும், அவர்கள் அதற்காக துப்பாக்கிகூட வைத்திருக்கலாம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படிப்பார்த்தால், அமெரிக்காகூட ஜிகாத்தை ஆதரிக்கும் தேசம்தான் என்ற உண்மையை சொன்னால், நம்மை அடிக்கவருவார்கள்.

மதச்சார்பற்ற அமைப்புகளுக்கும் இசுலாமிய இயக்கங்களுக்கும் இடையில் சண்டைகள் நடந்துகொண்டிருந்ததால் சதாத் நிம்மதியாக இருந்தனர். ஒரு கட்டத்தில், எகிப்தில் ஷரியா சட்டத்தைக் கொண்டுவரவேண்டும் என்றும், இளைஞர்களுக்கு இசுலாமியக் கல்வியை கொடுக்கவேண்டும் என்றும் இசுலாமிய இயக்கங்கள் வலியுறுத்தத் துவங்கின. ஆனால் சதாத் அவர்களைக் கண்டுகொள்ளவேயில்லை. அதோடு 1977இல் இஸ்ரேலோடு அமைதி ஒப்பந்தத்தையும் சதாத் செய்துகொண்டார். அதற்கு இசுலாமிய இயக்கங்கள் கடுமையான கண்டனங்களை எழுப்பின. அப்போது மீண்டும் ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி நடந்து தோல்வியுற்றது. இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று காத்துக்கொண்டிருந்த சதாத், சரிந்துகொண்டிருந்த தன்னுடைய செல்வாக்கை சரிசெய்ய, தனக்கு எதிரான எல்லா இயக்கங்களின் முக்கியமானவர்களையும் சதாத் கைதுசெய்து சிறையிலடைத்தார். இறுதியில் 1981இல் அல்ஜிகாத் அமைப்பினர், சத்தாத்தை சுட்டுகொன்றனர். சர்வதேசத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்ட நிகழ்வாக அது இருந்தமையால், சதாத்தோடு சேர்ந்து கியூபாவின் தூதர், அயர்லாந்தின் பாதுகாப்புத்துறை அமைச்சர், ஓமனியின் ஜெனரல் உள்ளிட்ட எட்டு பேரும் கொல்லப்பட்டனர். அப்போது துணையதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக் உள்ளிட்ட மேலும் 28 பேர் கடுமையான காயங்களோடு உயிர்பிழைத்தனர். இப்படுகொலையில் நேரடியாக ஈடுபட்ட காலித் இஸ்லாம்பவுலி கைதுசெய்யப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

அல்கொய்தா – முட்டாள் பயங்கரவாத இயக்கமா ???

எகிப்து சதாத்தின் கொலைக்கான சதியில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டனர். அவர்களில் அய்மன்-அல்-சவாஹிரி என்பவரும் ஒருவர். ஒசாமா பின்லேடனுக்குபின்னர் பதவியேற்று, தற்போதைய அல்கொய்தாவின் அகில உலகத்தலைவராக அய்மன்-அல்-சவாஹிரி தான் இருக்கிறார். 1984இல் சிறையிலிருந்து வெளியேவந்த அல்சவாஹிரி, ஆப்கானிஸ்தான் சென்றார். அல்கொய்தாவும் அங்குதான் உருவாக்கப்பட்டது. அல்கொய்தாவின் அமைப்புக்குழுவில் ஒசாமா பின்லேடன், அல்-சவாஹிரி உள்ளிட்ட ஏழுபேர் இருந்தனர். ஊடகங்களும் உலக நாடுகளும் சொல்வதைப்போல, அவர்கள் வெறுமனே வெறிபிடித்த முட்டாள் தீவிரவாதிகளல்ல. அவர்கள் அனைவரும் அறிவுஜீவிகளாகவும், பூர்சுவா குடும்பங்களிலிருந்து வந்தவர்களும் ஆவர். 800 ஆண்டுகளுக்கும் மேலாக எகிப்தை ஆண்ட இசுலாமிய அரசுகளின் ஆலோசகர்களாக இருந்த குடும்பத்திலிருந்து வந்தவர்தான் அல்-சவாஹிரி. அவருடைய 4 சகோதரிகளும், 3 சகோதரர்களும் மருத்துவர்கள். இசுலாமிய நாகரீகத்தின் வரலாற்றில் மிகமுக்கியமான குடும்பத்தைச்சேர்ந்தவர். அவருடைய ஒரு மாமா, அரபுலீக்கின் முதல் பொதுச்செயலாளராக இருந்தவர். மற்றொரு மாமா, எகிப்தின் கைரோ பல்கலைக்கழகத்தை துவங்கியவர். அவர்களது நோக்கமே மிகப்பெரிய இசுலாமிய ஆட்சியினை அமைப்பதுதான்.

காலங்காலமாக தாங்கள் ஆண்டுவந்த பகுதிகளையும் சொத்துக்களையும் நாசர் காலத்தில் ஏழை எளிய மக்களுக்குப் பிரித்துக்கொடுப்பதை அவர்களால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை. ஏனெனில் இசுலாமைப்பொருத்தவரையில் சொத்து என்பது கடவுள் கொடுத்தவரம் என்று பிரச்சாரம் செய்பவர்களாயிற்றே இவர்கள்.

ஆப்கானிஸ்தானின் இசுலாமிய இயக்கங்களைப் பொருத்தவரையில் அருகாமை எதிரியாக சோவியத் யூனியனும், தூர எதிரியாக அமெரிக்காவுமே இருந்தனர். அருகாமை எதிரியை அடித்துவிரட்ட, தூர எதிரியான அமெரிக்காவின் உதவியை நாடினர். அமெரிக்காவிற்கும் தனக்கு வியட்னாமில் ஏற்பட்ட தோல்வியைப்போல சோவியத் யூனியனுக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்படவேண்டும் என்பதுதான் முதல் குறிக்கோளாக இருந்தது. அதனால் ஆப்கானிஸ்தானில் முஜாகிதீன் குழுக்களுக்கு எல்லா உதவிகளையும் அமெரிக்கா செய்தது. இதில் அமெரிக்கா, அவர்களைப் பயன்படுத்திக்கொண்டதா, அல்லது அவர்கள் அமெரிக்காவைப் பயன்படுத்திக்கொண்டனரா என்பதை காலமும் வரலாறும்தான் பதில் சொல்லும் நமக்கு. அதன் பின்னர், ஆப்கானிஸ்தானில் அல்கொய்தாவை அழிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு அமெரிக்கா நுழைந்ததும், சில ஆண்டுகள் நடந்த சண்டையில், யார் வெற்றி பெற்றார்கள் என்றே இருதரப்புக்கும் இன்றுவரையிலும் குழப்பம்தான். ஆனால், ஆப்கானிஸ்தானில் இசுலாமிய இயக்கங்கள் மிகமோசமான நிலைக்குத் தள்ளப்பட்டன. புதிய பகுதியில், அடுத்த போர் ஏதேனும் வாராதா என்று ஏங்கிக்கொண்டிருக்கையில், ஈராக் போரும் வந்தது. ஈராக் போரின் முடிவில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈராக்கிய மக்களைக் கொன்று குவித்தது அமெரிக்கா. இன்று ஈராக்கில் மட்டும் 7 இலட்சம் விதவைகள் இருக்கின்றனர். வளைகுடாப்போரின் முடிவில் ஈராக்கில் மின்சாரம் முழுவதுமாக தடைபட்டிருந்தது. அதனை மூன்றே மாதங்களில் சரிசெய்தார் சதாம் உசேன். ஆனால், அமெரிக்கா நடத்திய ஈராக் போர் முடிந்து இத்தனை ஆண்டுகளாகியும் அங்கே மின்சாரப் பிரச்சனை எள்ளளவும் சீர்செய்யப்படவில்லை. அமெரிக்காவும் மிகப்பெரிய இழப்பினைச் சந்தித்தது. தன்னுடைய 75 ஆண்டுகால மக்கள் வைப்புநிதியை ஈராக் போரில் இழந்துவிட்டுத்தான் அமெரிக்கா வெளியேறியது. அப்போரிலும் அமெரிக்காவிற்கு வெற்றியா என்றால் இல்லை என்று அமெரிக்காவே ஒப்புக்கொள்ளும்.

ஐஎஸ்ஐஎஸ்:

(சிரியா குறித்து பின்னர் வரும் பகுதிகளில் ஐஎஸ்ஐஎஸ் பற்றி விரிவாக எழுதப்படும்)

ஈராக் போரின் முடிவில், அமெரிக்காவைப் போல அல்கொய்தாவும் பெரும் இழப்புகளை சந்திக்க நேரிட்டது. மிச்சமிருந்த பெருந்தலைவர்கள் எல்லாம் ஒன்றுகூடி என்ன செய்வதென்று விவாதித்தனர். இப்படியே போனால், தாங்களும் கொல்லப்படுவோம் என்பதால் சரணடைவது என்று முடிவெடுத்தனர். சரணடைந்தால் மறைமுகமான இடத்திற்கு கொண்டு சென்று சிறையிலடைப்பார்கள் என்றும், உணவு மற்றும் தங்குமிடமும் இலவசமாகக் கிடைக்கும் என்றும், சிறையிலிருந்தே அடுத்தகட்ட திட்டம் குறித்து நாம் தினந்தோறும் விவாதிக்கலாம் என்றும் முடிவெடுத்தனர். ஈராக் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டுவிட்டதால், எப்போது வேண்டுமானாலும் தாங்கள் நினைத்ததை நடத்திக்கொள்ளலாம் என்கிற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. சில காலம் கழித்து சிறையிலிருந்த பலரும் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் மற்றவர்களையும் விடுதலை செய்யச்சொல்லி அபுகிரேவில் தீவிரவாத நடவடிக்கையில் இறங்கினர். அங்கிருந்துதான் புதிய இயக்கத்தின் புதிய தீவிரவாத அத்தியாயம் துவங்கியது. அவ்வியக்கம்தான் ஐஎஸ்ஐஎஸ். சிறையிலிருந்து வெளியேவந்தவர்களில் ஒருவர்தான் அல்பாக்தாதி, ஐஎஸ்ஐஎஸை உருவாக்கியவர்.

இப்போது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு என பல நாடுகளும் ஈராக்கிற்கு சென்று குண்டுவீசுகிறார்கள், மேலும் பல குண்டுகளை வீசத் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், குண்டுகளால் தீர்க்கக்கூடிய பிரச்சனை மட்டுமே இல்லை இது.

குண்டுவீசினாலும், வீசாவிட்டாலும், அது ஈராக்கினுடைய நிலையை எந்த வகையிலும் மாற்றிவிடவோ முன்னேற்றிவிடவோ முடியாது. வீடுகளில்லை, பள்ளிகளில்லை, 7 இலட்சம் விதவைகள் இருக்கிறார்கள், 10 இலட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள், ஒட்டுமொத்த உள்கட்டமைப்பும் அழிக்கப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் வெறும் குண்டுகளால் சரிசெய்யப்பட்டுவிட முடியாதவை. ஈராக்கிலிருந்த மதச்சார்பற்ற அரசை வீழ்த்தி, ஒட்டுமொத்த தேசத்தையும் அழித்தவர்கள்தான் இன்று ஈராக்கை மீட்கப்புறப்பட்டிருக்கிறார்கள்.

தொடரும்…

-முகமது ஹசன்

(முன்னாள் எத்தியோப்பிய தூதர்)

-இ.பா.சிந்தன்

Related Posts