தொடர்கள்

மத்திய கிழக்கின் வரலாறு -8 (இசுலாமிய இயக்கங்கள்)

இஸ்ரேலே நடுங்கிய எகிப்து நாசரின் எழுச்சியும் வளர்ச்சியும்:

1950இல் எகிப்தின் கைரோவில் பிரிட்டனுக்கு எதிராக கடுமையான போராட்டம் நடந்தது. பல இராணுவ அதிகாரிகளும் குழுவாக இருந்து அப்போராட்டத்தை வழிநடத்தினர். நாசர் என்பவர் அதில் முக்கியப் பங்காற்றினார். அக்குழுவில் இராணுவத்தைச் சேராதவராக இருந்த ஒருவர் குத்தோப் மட்டும்தான். ஏராளமான நூல்களையும் இலக்கியங்களையும் வரலாற்றையும் படித்திருந்த அறிவுஜீவியான குத்தோப் அக்குழுவிற்கு தேவைப்பட்டார். துவக்கத்தில் நாசர் உள்ளிட்ட பல இராணுவ அதிகாரிகளும் குத்தோப்பின் எழுத்திற்கு இரசிகர்களாக இருந்தனர் என்பதும் அதற்கு முக்கியகாரணமாகும். இப்போராட்டத்திற்கு லிபரல் குழுக்கள், கம்யூனிசக் கட்சி உள்ளிட்ட பல ஜனநாயக அமைப்புகளும் ஆதரவளித்தன. 1952க்குப்பின்னர் நாசர் உள்ளிட்ட இராணுவ அதிகாரிகளின் குழு ஆட்சியைக் கைப்பற்றியது.

நாசரின் முக்கிய பங்களிப்போடு ஆட்சி அமைந்ததும், நிலச்சீர்திருத்தம் குறித்த விவாதம் துவங்கியது. 2000 குடும்பங்கள் மட்டுமே எகிப்தின் 80% நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருந்தன. அளவுக்கு அதிகமாக ஒரு சிலரிடமே தங்கியிருக்கும் நிலங்களை பறித்து நிலமில்லாத விவசாயிகளுக்கு வழங்கும் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால், இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு சார்பாக, குத்தோப் அதனைக் கடுமையாக எதிர்த்தார்.

“சொத்து என்பது இறைவன் ஏற்கனவே தீர்மானித்தது; அதனால் அதனை பறிக்கக்கூடாது. அப்படிச் செய்தால் அது கடவுளுக்கே எதிரானது. அதோடு மட்டுமில்லாமல் இதுவொரு கம்யூனிச நடைமுறை. அதனால் ஏற்கமுடியாது”

என்றார் இசுலாமிய சகோதரத்துவ இயக்கத்தின் தத்துவத் தந்தையான குத்தோப்.

அதுமட்டுமில்லாமல், “அரபு தேசியத்தையும்”, “அரபுலக ஒற்றுமையயும்” ஏற்கமுடியாது என்றார் குத்தோப். மத்திய கிழக்கு முழுவதும் உம்மாதான். தேசியம் என்பது ஐரோப்பிய நாடுகள் நம்மீது திணித்தவொன்று என்றார் குத்தோப். நாளாக நாளாக, நாசருக்கும் இசுலாமிய சகோதரத்துவக் கட்சிக்கும் இடைவெளியும் முரண்பாடுகளும் அதிகமாகின.

இதற்கிடையில், இஸ்ரேலின் முதல் பிரதமரன பென் கொரியனால் எகிப்தின் நாசர் குறித்து சரியாகப்புரிந்துகொள்ள முடியவில்லை. நாசரின் இஸ்ரேல் குறித்த பார்வை என்னவாக இருக்கும் என்பதை பென் கொரியனால் யூகிக்கவும் இயலாமற்போனது. யுகோசுலோவியா, ரொமேனியா மற்றும் கிரேக்க நாடுகளின் பிரதமர்களை சந்தித்து இஸ்ரேல் குறித்து நாசர் என்ன நினைக்கிறார் என்பதை விசாரிக்கச் சொல்கிறார். அந்நாடுகளின் பிரதமர்களும் எகிப்தில் இருக்கும் தத்தமது தூதர்களைவிட்டு நாசரின் கருத்தினை அறியச்சொல்கின்றனர். அவர்களும் தொடர்ந்து நாசரை சந்தித்து பல்வேறு விதங்களில் விசாரித்துப்பார்க்கின்றனர்.

ஒவ்வொருமுறையும் நாசர் சொன்னது இதுதான்,

“நான் இஸ்ரேல் குறித்து எதுவும் சிந்திப்பதே இல்லை. என்னுடைய முழுக்கவனமும் தற்போது எகிப்து குறித்துமட்டும்தான்”

என்றார்.

அந்த தூதர்கள் இஸ்ரேல் சென்று பென் கொரியனை சந்தித்து மகிழ்ச்சியான செய்தியை சொல்கின்றனர்.

பென் கொரியன்: “முதலில் கெட்ட செய்தியை சொல்லுங்கள். பிறகு நல்ல செய்தியை சொல்லுங்கள்”

தூதர்கள்: “பென் கொரியன் அவர்களே! கெட்ட செய்தி எதுவுமில்லை. எல்லாம் நல்ல செய்தி மட்டும்தான். எகிப்தின் நாசர் இஸ்ரேல் குறித்து யோசிக்கவே இல்லையாம். அவர் எகிப்தை வளர்ப்பது பற்றி மட்டும்தான் யோசிக்கிறாராம்”

பென் கொரியன்: “இதுதான் இருப்பதிலேயே மிகமோசமான செய்தி. எகிப்து வளர்ச்சியடைவது இஸ்ரேலுக்கு மிகவும் ஆபத்தானது.”

Nasser_and_RCC_members_welcomed_by_Alexandria,_1954

இஸ்ரேல் பயப்படுமளவிற்கு எகிப்தின் வளர்ச்சி வியக்கத்தக்கதாக இருந்தது. 1954இல் பிரிட்டன் இராணுவம் எகிப்திலிருந்து முழுவதுமாக விலகிக்கொள்வதாக அறிவித்ததும், அதனைக் கொண்டாடும்விதமாக அலெக்சான்றியாவில் மக்கள் திரளில் ஒரு பொதுக்கூட்டத்தில் நாசர் பேசினார். அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே, இசுலாமிய சகோதரத்து இயக்கத்தைச் சேர்ந்த முகமது அப்தெல் லத்திப் என்பரால் நாசரைக் கொல்லும்நோக்கில் 25 அடி தூரத்திலிருந்து எட்டுமுறை சுடப்படுகிறார். ஆனால் அதிலிருந்து நாசர் தப்பித்தார். தொடர்ந்து அக்கூட்டத்தில் விடாமல் பேசினார். அதன்பின்னர் எகிப்தின் அதிபரானார் நாசர். அன்றிலிருந்து 1970 வரை தொடர்ந்து எகிப்தின் அதிபராக இருந்தார். அக்காலகட்டத்தில்தான் அரபுலகில் நடைபெற்ற முற்போக்கான புரட்சிகள் பலவற்றுக்கும் எகிப்து மிகப்பெரிய உறுதுணையாக இருந்தது. கானாவின் புரட்சிக்கும், காங்கோவின் புரட்சிக்கும், தெற்கு ஏமனின் புரட்சிக்கும் எகிப்தும் நாசரும் பெரிதும் உதவினர். பனிப்போர் காலகட்டத்தில், அணிசேரா நாடுகள் என்கிற அமைப்பை உருவாக்கியவர்களில் நாசரும் ஒருவர். இந்தியாவின் நேரு, இந்தோனேசியாவின் சுகர்னோ, கானாவின் க்ருமா, யுகோசுலோவியாவின் யோசிப் ஆகியோர் மற்ற நால்வராவர். ஒருபக்கம் ஆப்பிரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் ஏகாதிபத்திய எதிர்ப்பியக்கங்களை ஆதரிப்பதும், மறுபக்கம் மூன்றாமுலக நாடுகளின் கூட்டமைப்பை உருவாக்குவதிலும் நாசரின் எகிப்து முக்கிய பங்காற்றியது.

எகிப்தின் உணவுத்தேவையில் 85% அளவிற்கு உள்நாட்டிலேயே உற்பத்திசெய்யப்பட்டது; நிலச்சீர்திருத்தம் மூலமாக நிலமில்லாத ஏழைகளுக்கு நிலம் வழங்கப்பட்டது; வெள்ள அபாயத்தைத் தடுக்கவும், மின்சாரம் உற்பத்தி செய்யவும் அஸ்வன் அணை கட்டப்பட்டது; எகிப்தின் பொருளாதார வளர்ச்சிக்கே அஸ்வன் அணை மிகப்பெரிய உதவியாக இருந்தது; பெண்ணும்-ஆணும் சரிசமமென சட்டங்கள் இயற்றப்பட்டன; எல்லோருக்கும் சமமாகக் கிடைக்கும்படியான கல்வி நிலையங்கள் அமைக்கப்பட்டன. ஒட்டுமொத்த எகிப்தும் ஒருங்கிணைந்து ஒன்றாக வளரும் வாய்ப்பினை பெற்றது; 1960 களின் இறுதியில் எகிப்தின் தொழிற்துறை ஐரோப்பாவின் பல வளர்ச்சியடைந்த நாடுகளைவிடவும் முன்னேறியிருந்தது; ஸ்பெயினைவிடவும் அதிகம் உற்பத்திசெய்யும் தொழிற்சாலைகளும், இத்தாலியைவிடவும் மிகப்பெரிய மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும் எகிப்தில் இருந்தன; சுயசார்பு பொருளாதாரத்தைக் கொண்டிருந்தது எகிப்து; உலகவங்கிக் கடனெல்லாம் இல்லை;

நாசரின் மரணமும், பிற்போக்கு சக்திகளின் வளர்ச்சியும்:

1970இல் நாசர் மரணமடைந்தார். அதன்பிறகு எகிப்தில் ஆட்சிமுறை ஒட்டுமொத்தமாக மாறியது. நாசர் பயணித்த பாதையிலிருந்து விலகி, புதிய அரசு வேறுவிதமாக மாற்றியது. அடுத்த 40 ஆண்டுகாலம் எதிர்ப்புரட்சியாளர்கள் ஆட்சிபுரிந்தனர். 1492 மிகப்பெரிய உற்பத்தித் தொழிற்சாலைகள் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டு, ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டன. இன்றைய உணவுத்தேவைக்கு இறக்குமதி செய்தேயாக வேண்டிய நிலைக்கு எகிப்து தள்ளப்பட்டிருக்கிறது.

ஒருபுறம் நாசர் மறைவுக்குப்பின்னர், மதச்சார்பற்ற முற்போக்குத் தன்மையினை எகிப்து இழக்கநேரிட்டது. மற்றொருபுறம் ஜோர்டானிலிருந்து இயங்கிவந்த பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தோல்வியினால் மதச்சார்பற்ற முற்போக்கு பாலஸ்தீனம் பின்னடைவை சந்திக்கநேரிட்டது. இவ்விரண்டும் சேர்ந்து மத்திய கிழக்கின் மதச்சார்பற்ற இயக்கங்களின் ஈடுசெய்யமுடியாத இழப்பாகிப்போனது. ஜோர்டானிலிருந்து வெளியேறிய பாலஸ்தீன விடுதலை இயக்கம் லெபனானுக்குள் தஞ்சம் புகுந்தது. ஆனால் அங்கு நிலைமை இன்னும் மோசமாகத்தான் இருந்தது. லெபானானை பிரெஞ்சு ஏகாதிபத்தியம் ஆட்சி செய்தகாலத்தில், அம்மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டது. லெபனான் மக்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்ட அடையாள அட்டையில் அவர்களது பிரிவினை குறிப்பிட்டு அவர்களுக்குள் மனதளவில் வேறுபாடுகளை திட்டமிட்டே பிரான்சு உருவாக்கியது. ஒரே மொழிபேசினாலும், ஒரே கலாச்சாரத்தைக் கொண்டிருந்தாலும், அம்மக்களை ஷியா, சுன்னி, கிருத்துவர் என்றெல்லாம் பிரித்துவைத்தது. லெபனானின் அதிபர் எப்போதும் கிருத்துவராகவும், பிரதமரோ சுன்னி பிரிவைச் சேர்ந்தவராகவோதான் இருக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதியாக்கப்பட்டது.

சிரியாவை எடுத்துக்கொண்டோமானால், 1960களின் துவக்கத்தில் வாரந்தோறும் ஆட்சிக்கவிழ்ப்புகளும் நிலையற்ற அரசாங்கங்களின் பதவியேற்புகளுமே நிகழ்ந்துகொண்டிருந்தன. அதன்பின்னர் சில இராணுவ அதிகாரிகளின் ஆட்சியமைப்பு, அதனைத்தொடர்ந்து ஆசாத்தின் ஆட்சி, அவரது மகனின் ஆட்சி என 40 ஆண்டுகள் வரை கழிந்துவிட்டன. நாம் விரும்புகிறோமோ இல்லையோ, இந்த 40 ஆண்டுகளில் சிரியாவின் வளர்ச்சி அபரிமிதமானது.

ஒட்டோமனின் வீழ்ச்சிக்குப்பின்னர், 1923இல் அததுர்க்கின் தலைமையில் மதச்சார்பற்ற துருக்கி உருவாக்கப்பட்டது.

ataturk

முதல் பாராளுமன்றத் தேர்தலிலேயே பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது. அக்காலகட்டத்தில் பிரான்சு, இத்தாலி, பெல்ஜியம் உள்ளிட்ட பல மேற்குலக நாடுகளில் அவ்வுரிமை வழங்கப்பட்டிருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் பெண்களுக்கு குடியுரிமைகூட இல்லை. அந்நாடுகளில் எல்லா இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர்தான், பெண்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் உரிமையே கிடைத்தது. துருக்கியில் அரசும் அரசியலமைப்புச் சட்டமும் மிகவும் முற்போக்கானதாகவே இருந்தது. 1952-53இல் துருக்கி நேட்டோ படையில் இணைந்தது. அதன்பின்னர் அமெரிக்கா மற்றும் இன்னபிற மேற்குலக நாடுகளுடன் நெருங்கிய தொடர்பினை துருக்கி ஏற்படுத்திக்கொண்டது. 1960களில் முழுவதுமாக முதலாளித்துவ பொருளாதாராத்திற்கு துருக்கி மாறியிருந்தது. ஜெர்மனியில் வளர்ச்சியடையாத பகுதிகளில் குறைந்தகூலிக்கு பணிபுரிய தொழிலாளர்கள் தேவைப்பட்டமையால், துருக்கியிலிருந்து பலரும் புலம்பெயர்ந்தனர். 1970களில் சர்வதேச அளவில் முதலாளித்துவம் பெரும் நெருக்கடிக்குள்ளானபோது, முதலாளித்துவ பொருளாதாரத்தை ஏற்கனவே துருக்கியும் ஏற்றுக்கொண்டமையால், அந்நாடும் பெரியளவில் பாதிக்கப்பட்டது. 1960களிலிருந்தே துருக்கியில் தொழிற்சங்கங்கள், சோசலிசக் கட்சிகள், அனார்க்கிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் என பல்வேறு முற்போக்கு ஜனநாயக இயக்கங்களும் கட்சிகளும் உருவாகி வளர்ச்சியடையத் துவங்கியிருந்தன. அதனால் 1970களில் உருவான பொருளாதார நெருக்கடியின்போது அரசுக்கே நெருக்கடி கொடுக்குமளவுக்கு அவ்வியக்கங்கள் வளர்ந்திருந்தன. இதனை சமாளிக்கவே, மதவாத பிற்போக்கு இயக்கங்களை துருக்கி அரசும் இராணுவமும் வளர்த்துவிட்டன. முற்போக்கு ஜனநாயக இயக்கங்களை வளராமல் தடுப்பதற்காக வளர்க்கப்பட்ட மதவாத இயக்கங்கள், தற்போது பதவியிலேயே இருக்கின்றன. இராணுவத்திற்குள்ளும் ஊடுருவிவிட்டன. வெகுசீக்கிரத்தில் இராணுவமே ஆட்சியைப் பறித்துக்கொள்ளும் அபாயமே இருக்கின்றது. (இதனை எழுதும்போது, துருக்கியில் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி நடக்கவில்லை.)

மேற்குலகோடு கைகோர்த்த சவூதி அரேபியா:

நாசரை இசுலாமிய சகோதரத்துவ இயக்கம் கொல்ல முயற்சி செய்ததற்குப் பின்னர், அவ்வியக்கத்தினரை கைது செய்யும் படலம் எகிப்தில் நடந்தது. அப்போது அவர்களில் பலரும் சவுதி அரேபியாவுக்குத் தப்பிச் சென்றனர். 1966க்குப் பின்னர் இந்தோனேசியாவில் நடந்த ஆட்சிக்கவிப்பு முயற்சி அதனைத்தொடர்ந்த இனப்படுகொலைக்குப் பின்னர் இசுலாமிய இயக்கங்கள் வலுப்பெற்றன. அதனால் எகிப்திலிருந்து தப்பிச்சென்று இந்தோனேசியாவுக்கும் இசுலாமிய சகோதரத்துவ இயக்கத்தினர் பல தஞ்சமடைந்தனர். 1970களின் துவக்கத்தில் மேற்குலக நாடுகளின் பொருளாதார நெருக்கடியினால், எண்ணைவளமிக்க மத்திய கிழக்கு நாடுகள் பணக்கார நாடுகளாயின. ஒன்றுமில்லாமில் இருந்த பெட்ரோலின் விலை 30 டாலர் வரை 1973இல் உயர்ந்தது. அதனால், வரலாற்றில் முதன்முறையாக ஏகாதிபத்திய நாடுகளின் பெருஞ்செல்வம் சவுதி அரேபியா உள்ளிட்ட எண்ணைவளமிக்க நாடுகளுக்குப் போனது. இப்பணம் ஏகாதிபத்திய நாடுகளில் மீண்டும் முதலீடாகச் சென்றன. 3 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான பணம் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளில் முதலீடு செய்யப்பட்டது. அதனாலேயே இசுலாமிய உலகின் வாட்டிகன் போன்ற மரியாதையை சவுதி அரேபியாவுக்கு அமெரிக்கா வழங்கியது. சவுதி அரேபியாவின் மன்னர்தான் மெக்காவுக்கும் ஹஜ்ஜுக்கும் பாதுகாவலராக அங்கீகரிக்கப்பட்டார். வகாபியிசம்தான் இசுலாமின் நவீனமயப்படுத்தப்பட்ட வடிவம் என்கிற கருத்தும் 1973க்குப் பின்னர்தான் உருவாக்கப்பட்டது.

சவுதி அரேபியாவும், மலேசியாவும், இந்தோனேசியாவும் இணைந்து ராபத்-அல்-இசுலாமியா என்கிற அமைப்பினை உருவாக்கின. இது “கிருத்துவ ஜனநாயக சர்வதேச அமைப்பு” போல செயல்பட்டது. கிருத்துவ மதவாத அமைப்புகள், சவுதி அரேபியா-மலேசியா-இந்தோனேசியா ஆகிய நாடுகளால உருவாக்கப்பட்ட இசுலாமிய ராபத்-அல்-இசுலாமியா, மற்றும் அகில உலக பாசிஸ்டு இயக்கங்கள் அனைத்தையும் இணைத்து “உலக கம்யூனிச எதிர்ப்பு லீக்”கினை அமெரிக்கா உருவாக்கியது. புரட்சிகர அரசுகளும் ஏகாதிபத்திய அரசுகளும் இருக்கிற நாடுகளில் எதிர்ப்புரட்சி செய்யும் இயக்கங்களுக்கு நிதியுதவியளிப்பது, மக்கள் கருத்தினை மாற்றியமைப்பது, ஏகாதிபத்திய நாடுகளில் மத அடிப்படைவாத கட்சிகளுக்கு தேர்தலின்போது நிதியளிப்பது போன்ற பணிகளை “உலக கம்யூனிச எதிர்ப்பு லீக்” செய்யத்துவங்கியது.

தொடரும்…

-முகமது ஹசன்

(முன்னாள் எத்தியோப்பிய தூதர்)

-இ.பா.சிந்தன்

Related Posts