தொடர்கள்

மத்திய கிழக்கின் வரலாறு -7 (இசுலாமிய இயக்கங்கள்)

மத்திய கிழக்கு நாடுகள் என்றாலே தீவிரவாதம் என்கிற சொல்தான் நமக்கு நியாபகம் வருகிற அளவிற்கு தொடர்பிரச்சாரங்களும், தொடர்போர்களும் கருத்துருவாக்கத்தை நம்முடைய மனதில் ஏற்படுத்தியிருக்கின்றன. அத்தீவிரவாதத்திற்கான காரணம் எதுவென்று மூன்று முக்கியமான வாதங்கள் நம்முன்னே வைக்கப்படுகின்றன.

  1. முதல் வாதம்: மத்திய கிழக்கின் எல்லா தீவிரவாத இயக்கங்களும் அமெரிக்கா மற்றும் இன்னபிற மேற்குலக நாடுகளால்தான் உருவாக்கப்பட்டு, அவர்களின் நலனுக்காக மட்டுமே இயங்குகின்றன
  2. இரண்டாவது வாதம்: மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் தீவிரவாத அமைப்புகளுக்கென்று தனியான நோக்கம் இருக்கிறது. அதற்காகத்தான் அவர்கள் தீவிரவாதத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்களது தீவிரவாதத்திற்கு மதம் அடிப்படை
  3. மூன்றாவது வாதம்: மத்திய கிழக்கில் இயங்கும் தீவிரவாத இயக்கங்களுக்கும் ஒரு நோக்கம் இருந்துகொண்டே, மேற்குலக அரசுகளுக்கும் ஒரு நோக்கம் இருந்து, அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தங்களது தேவைக்காக பயன்படுத்திக்கொள்கிறார்கள் (அல்லது மோதிக்கொள்கிறார்கள்).

இவற்றைப் புரிந்துகொள்வதற்கு, இசுலாமிய இயக்கங்களின் தோற்றம் மற்றும் வரலாற்றை எகிப்திலிருந்து தொடங்கி அலசிப்பார்ப்போமே…

எகிப்திலிருந்து துவங்குவோம்…

  1. 1930 காலகட்டத்தில் பிரிட்டனின் அரை காலனி போலத்தான் எகிப்து இருந்தது
  2. எகிப்தின் எல்லையில் இருந்த சூயஸ் கால்வாயை சுற்றிமட்டுமே 1,10,000 பிரிட்டன் இராணுவ வீரர்கள் பாதுகாப்பிற்கு இருந்தனர். சூயஸ் கால்வாய்தான் பிரிட்டனின் எல்லாமுமாக இருந்தது
  3. பிரிட்டனுக்காக அதிகளவிலான பருத்தி உற்பத்தி செய்யும் நாடாக எகிப்து இருந்தது. 1930களில் அமெரிக்காவில் நடந்த உள்நாட்டுப்போர் நடந்துகொண்டிருந்த வேளையில், அதனைப் பயன்படுத்திக்கொண்டு உலகம் முழுக்க பருத்தியாடை விற்பனையில் பிரிட்டன் கொடிகட்டிப் பறந்தது. அதற்கு உதவியாக இருந்தது எகிப்தின் பருத்தி உற்பத்திதான்

1928 முதல் 1952 வரையிலான காலகட்டத்தில், எகிப்தின் 80% நிலத்தின் உடைமையாளர்களாக 2000 குடும்பங்களே இருந்து வந்தன.  மீதமுள்ள 20% நிலத்தின் பெரும்பான்மையான பகுதியை குலாக் இனத்தைச் சேர்ந்த 20000 குடும்பங்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. குலாக் என்பவர்கள் எகிப்தைச் சேர்ந்த குட்டிமுதலாளிகள். ஏறத்தாழ 25000 குடும்பங்களிடம்தான் ஒட்டுமொத்த எகிப்தும் இருந்தது. மீதமிருந்த கோடிக்கணக்கான மக்கள் எவ்வித அடிப்படை உரிமைகளும் இல்லாமல் வெறும் அடிமைகளாகத்தான் இருந்தனர்.

இச்சூழலில்தான் எகிப்தில் மூன்று அரசியல் கட்சிகள் உருவாகின. ஒன்று ஹசன் அல் பன்னா என்பவர் உருவாக்கிய “இசுலாமிய சகோதரத்துவ இயக்கம். அக்கட்சியில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள், எகிப்தைச் சேர்ந்த ஆசிரியர்களும், குலாக் இனத்தைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகளும் தான்.

இரண்டாவது எகிப்தின் தேசியாவதக் கட்சியான “வப்ஃது கட்சி.  முதலாம் உலகப்போர் மற்றும் அதற்குப் பிந்தைய காலகட்டத்தில் பிரிட்டன் ஆட்சியின் கீழ் இருந்த இந்திய மற்றும் எகிப்தில் ஒரேமாதிரியான உள்ளூர் உற்பத்தி பெருமுதலாளிகள் வளர்ச்சியடைந்தனர். இந்தியாவின் டாட்டா, பிர்லா உள்ளிட்டவர்கள் பல துறைகளில் பெரிய பெரிய தொழிற்சாலைகளை நிறுவியது இக்காலகட்டத்தில்தான். அதேபோன்று எகிப்திலும் தொழிற்சாலைகளை உருவாக்கிய பெருமுதலாளிகளின் நலனுக்காக உருவான கட்சிதான் வப்ஃது கட்சி. அக்கட்சியை இந்தியாவின் காங்கிரஸ் கட்சியோடு ஒப்பிடலாம்.

மூன்றாவதாக மற்றொரு கட்சி உருவானது. அக்கட்சியில் இருந்தவர்கள் பெரும்பான்மையானோர் அகதிகளாக எகிப்திற்கு வந்தவர்கள்தான். அக்காலகட்டத்தில் ஐரோப்பாவில் பரவியிருந்த நாசிசம் மற்றும் பாசிசத்தால் துரத்தப்பட்ட கிழக்கு ஐரோப்பியர்கள், கிரேக்கர்கள், மிகப்பெரிய இனப்படுகொலை காரணமாக ஒட்டோமனின் அர்மேனியப் பகுதியிலிருந்து தப்பித்து வந்த அர்மேனியர்கள் என பலரும் அக்கட்சியில் இருந்தனர். அதுதான் எகிப்து கம்யூனிசக் கட்சி“. அக்கட்சி அலக்சாண்ட்ரியா நகரில் இயங்கிவந்தது.

இசுலாமிய சகோதரத்துவ இயக்கத்தின் தோற்றம்:

ஓட்டோமான் காலகட்டத்தில் எகிப்தின் ஏழை விவசாயக் குடும்பங்களை பல்லாஹின் என்றழைப்பர். அப்படிப்பட்ட பல்லாஹின் மக்களின் ஒரு ஊர்த்தலைவர் குடும்பத்தில் பிறந்தமையால், அஹமது உராபி என்பவர் படிக்கும் வாய்ப்பினைப் பெற்றார். எகிப்தின் இராணுவத்தில் உயர் அதிகாரியாக உயர்ந்த முதல் பல்லாஹின் அவர்தான். இருப்பினும் சுதந்திர எகிப்தை உருவாக்கவேண்டும் என்கிற எண்ணத்தில் எகிப்தின் பொம்மை ஆட்சியாளரான தாவ்பிக்கை எதிர்த்து கலகக் குரலெழுப்பினார். அவரது குரல் எகிப்தின் பல பகுதிகளுக்கு பரவியது. தேசியவாதக் கருத்துக்களைக் கொண்டிருந்த உராபி எகிப்தைக் கைப்பற்றினால், சூயஸ் கால்வாயை இழக்கநேரிடுமோ என்று பிரிட்டன் அஞ்சியது. அதனால் பிரெஞ்சுப் படையுடன் இணைந்து பிரிட்டன் தனது பலத்தைப் பயன்படுத்தி உராபியை கைதுசெய்தது. அவர் நாடுகடத்தப்பட்டு 19 ஆண்டுகள் இலங்கையின் கண்டி பகுதியில் வாழ்ந்துவந்தார். அதன்பின்னர் எகிப்திற்கு திரும்பச் சென்று தனது கடைசிக்காலத்தை எகிப்தில் கழித்தார்.

இசுலாமிய சகோரத்துவ இயக்கமும் உராபியை முன்னோடியாகக் கொண்டிருந்தது. ஏகாதிபத்திய எதிர்ப்பும், காலனியாதிக்கத்தின் எதிர்ப்புமே அவ்வியக்கத்தின் முக்கியமான அம்சமாக இருந்தது. ஒரேமாதிரியான மத பழக்கவழக்கங்களையும், வாழ்க்கைமுறைகளையும் கொண்டிருக்கிற கோடிக்கணக்கான மத்திய கிழக்கு பகுதி மக்களை பல தேசங்களாக பிரித்து அவர்களுக்குள்ளே பிரிவினைகளை உண்டாக்கியதும் ஏகாதிபத்தியம்தான் என்பதை இசுலாமிய சகோரதத்துவ இயக்கம் வலியுறுத்தியது. இசுலாமிய வழக்கப்படி நாடுகளின் எல்லைக்கோடுகள் தாண்டிய இசுலாமிய மக்களின் ஒற்றுமையான ‘உம்மா’வே தற்போதைய தேவை என்றது இசுலாமிய சகோதரத்துவ இயக்கம். எளிமையாகச் சொல்வதானால், “காமன்வெல்த் கூட்டமைப்பு” போன்றதொரு அமைப்பதான் உம்மா.

காலங்காலமாக சுதந்திரமாக எல்லைகளற்று வாழ்ந்துகொண்டிருந்த மத்திய கிழக்கு மக்களை, தேசங்களாகப் பிரித்து எல்லைக்கோடுகளும் அதற்கருகே இராணுவத்தையும் நிறுத்தி அம்மக்களை திறந்தவெளிச் சிறையிலடைத்தது காலனிய நாடுகள் தான். சைக்ஸ்-பிகோ ஒப்பந்தத்தால் அவர்களுக்குப் பிடித்தமாதிரி எப்படி தேசங்களைப் பிரித்தார்கள் என்பதையும் பார்த்தோமே. இதனால் ஒவ்வொரு நாட்டின் வியாபாரம் உள்பட அனைத்தும் பிரிட்டன், பிரான்சு உள்ளிட்டோரின் கண்காணிப்பில் ஒரு சிறிய எல்லைக்குள்ளேயே அடைபட்டுப்போனது. சுதந்திரமாக நடைபெற்றுவந்த வர்த்தக உறவுகள் அனைத்தும், லண்டனோ பாரிசோ தீர்மானிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. ஆக இயற்கையாகவே மத்திய கிழக்கில் இருந்துவந்த காமல்வெல்த் கூட்டமைப்பைப் போன்ற “உம்மா”வை, செயற்கையாக உடைத்துப் பிரித்துவிட்டன காலனிய நாடுகள் என்பது இசுலாமிய சகோதரத்துவ இயக்கத்தின் வாதம்.

கலீபாத் என்கிற அரசாளும் முறைக்கு மத்திய கிழக்கு நாடுகள் திரும்பவேண்டும் என்றது இசுலாமிய சகோதரத்துவ இயக்கம். இன்றைக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். சின் மூலமாக கலீபாத் குறித்து நாம் அதிகமாகக் கேள்விப்படுகிறோம். ஆனால் அதனைக் கண்டுபிடித்தவர்கள் அவர்களல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இருக்கும் அரசாளும் முறைதான் கலீபாத். முகமது நபியின் காலத்திற்குப்பின்னர், அவருக்கு நெருக்கமான அபுபக்கர், உமர், உத்மன் மற்றும் அலி ஆகியோர் கலீபாக்களாக கருதப்பட்டனர். அதன் வழியில் கடைசியாக மத்திய கிழக்கின் கலீபாத்தாக ஒட்டோமன் பேரரசு கருதப்பட்டது. அதுவும் முதலாம் உலகப்போருக்குப் பின்னால் எவ்வாறு இல்லாமல் செய்யப்பட்டது என்பதை முந்தைய பகுதிகளில் விரிவாகப் பார்த்தோம். ஒட்டோமனின் வீழ்ச்சிக்குப்பின்னர் ஏராளமான தனித்தனி தேசங்கள் உருவாகின.

இசுலாமிய சகோதரத்துவ கட்சியை தோற்றுவித்தவர் ஹசன் அல்பன்னா. முதலில் விடுதலை பெறவேண்டும், பின்னர் பரந்துபட்ட கலீபாத் உருவாக்கவேண்டும், உம்மாவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று சொன்னார் ஹசன் அல்பன்னா. அக்கட்சியில் பெரும்பாலும் ஆசிரியர்களே இருந்தனர். மெல்ல மெல்ல வளர்ந்துகொண்டிருந்த இசுலாமிய சகோரத்துவக் கட்சியின் தலைவரை 1928 இல் கொலை செய்தது பிரிட்டன். அக்காலகட்டத்தில் அரபு இலக்கியத்தில் சிறந்துவிளங்கிய அறிவுஜீவியான குத்தோப் அக்கட்சிக்கு வருகைதந்தார். தத்துவார்த்த ரீதியாக அக்கட்சியை வழிநடத்தினார். 1930களின் இறுதியில் அவர் ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இசுலாமிய சகோதரத்துவ இயக்கம் வகுத்துக்கொண்ட கொள்கை:

அலெக்சி கரேல் என்கிற பிரெஞ்சு அறிவியலாளர் 1912இல் இரத்த அணுக்கள், திசுக்கள் குறித்த அவரது ஆய்வுக்காக நோபல் பரிசினை பெற்றார். பின்னாளில் அவரே அறிவியலுக்கு எதிரானவராக மாறினார். அவர் எழுதிய “மேன், அன்நோன்” என்கிற நூல் மிகப்பிரபலமான நூலானது. மதக்குழப்பங்களை கொண்டுபோய் அறிவியலில் விடை தெரியாத கேள்விகளுக்கான பதிலாக அந்நூலை எழுதினார். இன்னும் சொல்லப்போனால், பணக்காரன் பணக்காakkரனாகத்தான் இருக்கவேண்டும். ஏழை ஏழையாகத்தான் இருக்கவேண்டும் என்றும், சமூகத்தில் கீழ்நிலையில் இருப்பவர்களை விஷவாயு கொடுத்து கொன்றாலும் தவறில்லை என்றார். ஹிட்லர் இவற்றை செயல்வடிவத்திற்கு கொண்டுவருவதற்கு முன்னரே, நூலாக எழுதிவைத்திருந்தார் அலெக்சி கரேல். அந்நூல் மேற்கு ஐரோப்பாவின் பல நாடுகளின் பள்ளிப் பாடத்திட்டத்தில் அந்நூல் கட்டாயமாக்கப்பட்டது. வெள்ளையர்கள் மேலானவர்கள் என்றும், கறுப்பினத்தவர்கள் கீழான பிறவிகள் என்றும் சொல்லப்பட்டிருந்த நூலை ஐரோப்பா ஆண்டுவந்த ஆப்பிரிக்க நாடுகளிலும் கட்டாய பாடமாக குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கப்பட்டது. அந்நூலை இசுலாமிய சகோரத்துவ ஆதரவாளரான குத்தோப் படித்து இசுலாமியர்களுக்கும் இது பயன்படும் என்று கருதினார். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு எகிப்து திரும்பியதும் 675 பக்கங்களைக் கொண்ட “இசுலாமின் அரசியல் மற்றும் பொருளாதாரப் பார்வை” என்கிற தன்னுடைய முதலாவது நூலை எழுதி வெளியிட்டார்.

“மனிதகுலத்தின் முக்கியமான எதிரி கம்யூனிசம்தான். அது உலகிலிருந்து அழிக்கப்படவேண்டியது. ஏனெனில் அது மதங்களுக்கு மனிதர்களுக்கும் எதிரானது. தனியுடைமைச் சொத்து என்பது சிலருக்கு மட்டும் கடவுள் கொடுத்த வரம். அதனை கம்யூனிஸ்டுகள் எதிர்க்கிறார்கள். எல்லோருக்கும் எல்லாமும் பொதுவானது என்று கடவுளுக்கு எதிராகப் பேசுகிறார்கள் கம்யூனிஸ்டுகள். நம்முடைய இசுலாமிய அரசு அமையும்போது, ஏராளமான சொத்துக்கள் உடையவர்களிடமிருந்து எதையும் பறிக்கக்கூடாது. வேண்டுமென்றால் கொஞ்சம் வரி வாங்கிக்கொள்ளலாம்.”

“நமக்கு ஷரியா சட்டம் தான் தேவை. அதுவும் புதிய இசுலாமியப் பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்டதாக இருக்கவேண்டும்.”

அதாவது பணக்காரர்களுக்கும் பெருமுதலாளிகளுக்கும் உதவிடும் வகையில் வங்கிகள் உருவாக்கப்பட்டு அவர்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்றார். இசுலாமிய உம்மாவை பிரிப்பதற்காகத்தான் ஏகாதிபத்திய நாடுகள், ‘தேசியம்’ என்கிற வார்த்தையைக் கண்டுபிடித்து மத்திய கிழக்கை துண்டுதுண்டான நாடுகளாக உருவாக்கியிருக்கின்றன என்றார். அதனால் தேசியவாதக் கருத்துக்களை எதிர்த்தார். ஒட்டுமொத்த மத்திய கிழக்கும் ஒரே இசுமாலிய உம்மா என்றார். அப்பாதையில் இசுலாமிய சகோதரத்துவ இயக்கம் வளர்ந்து தனக்கென கொள்கையை வகுத்துக்கொண்டது.

தொடரும்…

-முகமது ஹசன்

(முன்னாள் எத்தியோப்பிய தூதர்)

-இ.பா.சிந்தன்

Related Posts