அரசியல் மத்திய கிழக்கின் வரலாறு

மத்திய கிழக்கின் வரலாறு – 6 (ஒட்டோமன் பேரரசு)

மத்திய கிழக்கின் வரைபடத்தை தீர்மானித்த ஏகாதிபத்தியம்:

முதலாம் உலகப்போரில் புதிய ஏகாதிபத்திய நாடு தலையெடுக்க ஆரம்பித்தது. அதுதான் அமெரிக்கா. உள்நாட்டுப்போருக்கு பின்னர், பெரியளவில் முரண்பாடுகளோ உள்நாட்டுப்பிரச்சனைகளோ இல்லாமல் போனது அமெரிக்காவிற்கு சாதகமாக இருந்தது. மிகப்பெரிய நிலப்பரப்பைக்கொண்ட இயற்கை வளம் கொட்டிக்கிடந்த நாடாக அமெரிக்கா இருந்ததும், அதன் வளர்ச்சிக்கு உதவியது. முதலாம் உலகப்போரில் கலந்துகொண்ட பல நாடுகளுக்கு கடன்வழங்கியது அமெரிக்கா. ‘யார்வேண்டுமானாலும் சண்டைபோட்டுக்கொள்ளுங்கள், அதற்கு பணம் இல்லையென்றால் என்னிடம் கடன்வாங்கிக்கொள்ளுங்கள்’ என்றது அமெரிக்கா.

போர்முடிந்து ஒட்டோமன் பேரரசு துண்டாடப்பட்டது. சிரியா சிரியாவும், லெபனானும் பிரான்சின் வசம் சென்றன. ஈராக், ஜோர்டான், எகிப்து, பாலஸ்தீனம் ஆகிய பகுதிகள் பிரிட்டனின் கீழ்வந்தன. ஓட்டோமன் பேரரசாக இருந்த காலகட்டத்தில் கிருத்துவ பெரும்பான்மையினர் வாழ்ந்த கிரேக்கம், பல்கேரிய, ரோமேனியா உள்ளிட்ட பகுதிகளில் வாழ்ந்த இசுலாமியர்கள், ஒட்டோமனின் வீழ்ச்சிக்குப்பின்னர் அடித்துவிரட்டப்பட்டனர். அவர்கள் அனைவரும் வந்துசேர்ந்த இடம்தான் துருக்கி. ஒட்டோமன் பேரரசு என்கிற தத்துவமே தோற்றுப்போய்விட்டது என்றும், புதிய தேசியவாதம் பேசியாகவேண்டும் என்றும் அவர்கள் உணர்ந்தனர். இப்படியாக 1923இல் உருவானதுதான் துருக்கி. அரபு மொழி எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்த ஓட்டோமானிய மொழி ஒழிக்கப்பட்டுவிட்டது. அதற்குபதிலாக, லத்தீன் எழுத்துக்களாலான துருக்கி மொழி உருவாக்கப்பட்டது.

லெபனான், சிரியாவில் பிரான்சின் தந்திரம்:

லெபனான் மற்றும் சிரியாவை பிரெஞ்சு அரசு எடுத்துக்கொண்டது. ஒட்டோமன் ஆட்சியில் இசுலாமியர்களுக்கு இணையாக ஆயுதங்கள் வைத்துக்கொள்வது உள்ளிட்ட சில சலுகைகள் இல்லாமல் போனதால், லெபனான் மற்றும் சிரியாவில் இருந்த கிருத்துவர்கள் பிரெஞ்சு அரசை வரவேற்றனர். கிருத்துவர்களைக் காக்கவே பிரான்சு வந்திருப்பதாக நினைத்தனர். ஒருங்கிணைந்த சிரியாவோ, லெபனானோ உருவானால், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்துவிடுமோ என்கிற அச்சத்தில், அவ்விரண்டு தேசங்களையும் ஆறு புதிய பகுதிகளாகப் பிரித்தது பிரான்சு. டமாஸ்கஸ், அலெப்போ,  ஜபல் துருஸ், அலவைத், அலெக்சாந்திரெத்தா மற்றும் அகண்ட லெபனான் ஆகிய புதிய பகுதிகளை (புதிய தேசங்களாக்கும் நோக்கில்) உருவாக்கியது பிரான்சு. ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் மற்றும் ஒரே மாதிரியான வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தாலும், பிரித்தாள்வதற்காகவே அம்மக்களை பல்வேறு தேசிய இனங்களாக முத்திரையிட்டு அடையாளப்படுத்தியது பிரெஞ்சு அரசு. ஆனால் அதற்கு மக்களிடையே பெரிய வரவேற்பில்லை. அம்மக்களின் போராட்டங்களும், சர்வதேச அளவில் ஏற்பட்ட மாற்றங்களினாலும், சிரியா மற்றும் லெபனான் ஆகிய நாடுகள் விடுதலை அடைந்தன.

பாலஸ்தீனத்தில் பிரிட்டனின் தந்திரம்:

ஒட்டோமனின் வீழ்ச்சிக்குப்பின்னர் சிரியாவையும் லெபனானையும் எடுத்துக்கொண்டாலும், அவற்றை பிரான்சால் தக்கவைத்துக்கொள்ளமுடியவில்லை. அம்மக்களைப் பிரித்தாளும் முயற்சியும் தோற்றுப்போனது என்றாலும், அன்றைக்கு பிரான்சு உருவாக்கிய முரண்களும் சண்டைகளும் இன்றுவரையிலும் எழுத்தளவில் இருக்கின்றன என்றுதான் சொல்லவேண்டும். இன்றைக்கும் சிரியாவை பிரித்துவிட ஏகாதிபத்திய நாடுகள் முயற்சிப்பது, அன்றைக்கு பிரான்சு உருவாக்கிய அதே முரண்களின் அடிப்படையில்தான். மற்றொருபக்கம் ஒட்டோமனிடமிருந்து பாலஸ்தீனத்தை எடுத்துக்கொண்ட பிரிட்டன், பிரான்சு செய்யாத வேறொரு முயற்சியனை மேற்கொண்டது.

  1. பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கான தேசத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டது பிரிட்டன். இந்தியாவைத் தக்கவைத்துக்கொள்ள பிரிட்டனிலிருந்து இந்தியா வரையிலான பாதையில் பாலஸ்தீனம் மிகமுக்கியமான பகுதி. அதனால் பாலஸ்தீனப் பகுதியில் ஒரு மோதல் முரண்பாட்டினை உருவாக்கினால், அது தனக்கு சாதகமாகவே இருக்கும் என்று பிரிட்டன் நம்பியது. அதோடு மட்டுமின்றி, அரபு மக்களைவிட யூதர்கள் தங்களுக்கு நெருக்கமாக இருப்பார்கள் என்பதும் பிரிட்டனின் நம்பிக்கையாக இருந்தது
  2. “யூத சியோனிசம்” என்பது பாலஸ்தீன நிலத்தில் யூதர்களுக்கான தேசம் அமைக்கிற கொள்கை என்பது தெரிந்ததே. அக்கொள்கையினை வகுத்தவர் தியோடர் ஹஸல் என்பவர். ஆனால், “கிருத்துவ சியோனிசம்” என்கிற மற்றொரு கொள்கையும் இருக்கிறது. உலகெங்கிலுமுள்ள யூதர்களை தற்போதைய இஸ்ரேல் இருக்குமிடத்திற்கு கொண்டுவந்து சேர்த்துவிடவேண்டும் என்றும், தீர்ப்புநாளன்று அவர்கள் அனைவரும் கிருத்துவர்களாக மாறியாகவேண்டும், இல்லையென்றால் கொன்றுவிடவேண்டும், என்பதே கிருத்துவ சியோனிசத்தின் அடிப்படை. பிரிட்டனும் கிருத்துவ சியோனிசவாதிகளும் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டனர். இன்றைக்கு உலகின் பல நாடுகளுக்கு சுற்றுலா ஏற்பாடுகள் செய்துகொடுக்கிற “தாமஸ் குக்” நிறுவனம் கிருத்துவ சியோனிசத்தின் முக்கியமான உதாரணம். பிரிட்டனின் அதிகாரவர்கத்தினரை அவ்வப்போது அழைத்துக்கொண்டு பாலஸ்தீனத்தில் சுற்றிக்காட்டும் பொறுப்பினை “தாமஸ் குக்” ஏற்றிருந்தது. கிழக்கு ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்களையும், பாலஸ்தீன நிலத்திற்கு சுற்றுலா அழைத்துச்சென்று, யூதர்கள் வாழ்வதற்கு பாலஸ்தீனம் சிறந்த இடம் என்பதை அவர்களின் மனதில் ஆழமாகப் பதியவைக்கவும் செய்தது. யூத சியோனிஸ்டுகளையும் பிரிட்டன் ஆட்சியாளர்களையும் சந்திக்கவைத்தன அப்பயணங்கள்
  3. ஐரோப்பாவில் சிலநூற்றாண்டுகளாக யூதர்கள் கொடுமைக்குள்ளாகி வந்திருக்கின்றனர் என்றாலும், “தேசியவாதம்” தலையெடுக்கத் துவங்கியதும், யூதர்கள் மீதான வன்முறை உச்சத்திற்கு சென்றது. இப்பிரச்சனையை ஐரோப்பாவில் தீர்க்காமல், யூதர்களை அங்கிருந்து வெளியேற்றினாலே போதும் என்பதாகத்தான் ஐரோப்பிய ஆட்சியாளர்கள் நினைத்தனர். யூதர்களுக்கும் பாலஸ்தீன நிலத்திற்கும் இருந்த நம்பிக்கை அடிப்படையிலான மதநம்பிக்கைகளை சியோனிசவாதிகளும் பிரிட்டனும் பயன்படுத்திக்கொண்டன

யூதர்களை பாலஸ்தீனத்தில் கொண்டுசேர்த்தது, இனவெறியின் உச்சம் என்றுதான் சொல்லவேண்டும். யூத இனத்தை கொடுமைப்படுத்தியும் கொலைசெய்தும் வஞ்சித்த ஐரோப்பா, இறுதியில் அங்கிருந்து அவர்களை விரட்டியடிப்பதற்காக, அவர்களின் கையில் ஆயுதங்களைக் கொடுத்து மற்றொரு இடத்தில் வேறொரு இனமக்களோடு சண்டையிடவைத்தது, இனவெறியின் உச்சமன்றி வேறென்ன?

இஸ்ரேல் உருவானதற்குப்பின்னர் சியோனிசவாதிகள் மற்றொரு நாஜிக்களாக மாறியது தனிக்கதை.

இப்படியாக ஒட்டோமனின் ஆட்சி முடிவுக்கு வந்ததும், அதன் பகுதிகளை ஏகாதிபத்திய நாடுகள் தங்களது நலுனுக்காக பிரித்தும், உடைத்தும், சேர்த்தும் மத்திய கிழக்கின் தன்மைக்கு சாதகமில்லாத பல குழப்பதேசங்கள் உருவாக்கப்பட்டுவிட்டன.

middleeast6மத்திய கிழக்கில் இன்றிருக்கும் எல்லா பிரச்சனைகளுக்கும், இறிலிருந்து 100 ஆண்டுகளுக்கு முன்னர் மத்தியகிழக்கின் எந்தப்பகுதி மக்களையும் கலந்து ஆலோசிக்காமல் போடப்பப்பட்ட “சைக்ஸ் – பிகோ ஒப்பந்தம்” மிக முக்கியமான காரணம். சைக்ஸ்-பிகோ ஒப்பந்தத்தோடு எல்லாம் முடியவில்லை. தற்போது சிரியாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போர் குறித்தும், சிரியாவின் எதிர்காலம் குறித்தும், கடந்த 2015 ஆண்டும் அக்டோபர் மாதத்தில் ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவில் “அமைதிப்பேச்சுவார்த்தை” நடைபெற்றது. அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா, ஜெர்மனி, பிரான்சு, துருக்கி, கத்தார், சவுதிஅரேபியா உள்ளிட்ட 15 நாடுகள் இணைந்து நடத்திய அமைத்திப் பேச்சுவாத்தையில், சிரியாவிலிருந்து ஒருவரைக்கூட அழைக்கவில்லை. சிரியாவின் பிரதிநிதிகளே யாருமில்லாமல், சிரியாவின் எதிர்காலம் குறித்துப் பேசுவதற்கு மாநாடு நடத்தப்படுகிறது. ஏகாதிபத்தியமும் காலனியாதிக்கமும் இரண்டாம் உலகப்போரோடு முடிந்துவிடவில்லை.

100 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய கிழக்கை ஆக்கிரமிக்கவும், அடக்கியாளவும், கூறுபோட்டு சுரண்டவும் அம்மக்களைக் கேட்காமலேயே “சைக்ஸ் – பிகோ ஒப்பந்தம்” போடப்பட்டது. அதேபோன்ற ஒப்பந்தங்கள் இன்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் ஏகாதிபத்திய நாடுகளால் போடப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. நூறாண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட அநீதியை எதிர்த்துக் குரல்கொடுக்க லெனினும் இருந்தார், சோவியத்தின் மக்கள் அரசும் இருந்தது. ஆனால் இன்று?

தொடரும்…

-முகமது ஹசன்

(முன்னாள் எத்தியோப்பிய தூதர்)

-இ.பா.சிந்தன்

Related Posts