அரசியல் மத்திய கிழக்கின் வரலாறு

மத்திய கிழக்கின் வரலாறு – 5 (ஒட்டோமன் பேரரசு)

மத்திய கிழக்கில் பெட்ரோலியக் கண்டுபிடிப்பு:

மத்திய கிழக்கில் எண்ணைவளம் இருப்பதாக ஜெர்மனி யூகித்திருந்தாலும், அதன் ஆய்வில் நேரடியாக இறங்கமுடியவில்லை. 1901இல் பிரிட்டனைப் பூர்வீகமாகக் கொண்ட ஆஸ்திரேலிய தொழிலதிபரான வில்லியம் நோக்ஸ் டார்கி என்பவர் மத்திய கிழக்கில் எண்ணைவளம் இருக்கிறதா என்று ஆய்வுசெய்யும் முயற்சியில் இறங்கினார். 1901இல் பெர்சியாவின் (தற்போதையfirstoil ஈரான்) மன்னரான மொசாபர் அல்தின் ஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தன்னுடைய ஆய்வுப்பணிகளைத் துவங்கினார். எண்ணைவளம் கிடைத்தால், அதில்கிடைக்கும் இலாபத்தில் 16%த்தை பெர்சியாவின் மன்னருக்கு அளித்துவிடவேண்டும் என்று 60 ஆண்டுகால ஒப்பந்தமும் போடப்பட்டது. வடக்கு ஈரானைத்தவிர 12 இலட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு எண்ணைவள தேடுதல் முயற்சியினை நடத்திக்கொள்ளலாம் என்கிற உரிமையினை வில்லியமிற்கு வழங்கப்பட்டது.

ஆண்டுகள் கடந்தபோதும் எண்ணை ஆதாரம் ஏதும் தென்படவில்லை என்பதால், ‘இதோ கண்டுபிடித்துவிட்டோம், அதோ நெருங்கிவிட்டோம்’ என்றெல்லாம் பொய்யான தகவல்களைப் பரப்பி வில்லியம் நிதி திரட்டினார். எண்ணைக்கு ஆசைப்பட்டு பிரிட்டன் அரசாங்கமும், ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பும்ரா எண்ணை நிறுவனமும் கைகொடுத்து உதவினார்கள்.

ஏறத்தாழ எண்ணை தேடும் முயற்சி கைவிடப்படும் தருணத்தில், 1908இல் மே 26 ஆம் தேதி ஈரானின் தெற்கில் மைதான்-இ-நப்துன் என்கிற இடத்தில் 1180 அடியாழம் தோண்டியபோது எண்ணை கிடைத்தது. மத்திய கிழக்கின் அடுத்த நூற்றாண்டுக்கான வரலாற்றை தீர்மானிக்கப்போகும் கண்டுபிடிப்பு அதுதான் என்பதை அன்று யாரும் அறிந்திருக்கவில்லை.

angloiranianoilcompanyஅதன்பிறகு மத்தியகிழக்கின் வரலாறே அந்த கண்டுபிடிப்பால் மாற்றியமைக்கப்பட்டது. “ஆங்கில பெர்சியன் எண்ணை நிறுவனம்” என்கிற பெயரில் புதிய எண்ணை நிறுவனம் உருவாக்கப்பட்டது. பின்னாளில் இந்நிறுவனம்தான் “பிரிட்டிஷ் பெட்ரோலியமாக” பெயர் மாற்றம் பெற்றது.

உணவு, தொழிற்நுட்பம், ஆயுதங்கள் போன்ற எல்லாவிதமான பொருட்களையும் எந்தவொரு நாடு, மற்றனைத்து நாடுகளையும்விட அதிகமாக உற்பத்தி செய்கிறதோ, அந்தநாடு மற்ற நாடுகளைவிடவும் அதிவேகத்தில் வளரும். அப்படியாக அதிகளவில் எதையும் உற்பத்திசெய்வதற்கு எரிபொருள் மிகமுக்கியமான பொருள். எண்ணை கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற போர்களின் தன்மையே மாற்றியது. அதுவரையில் நிலக்கரியின் உதவியோடு இயக்கப்பட்டுவந்த பிரிட்டனின் கப்பல்கள் எல்லாம் பெட்ரோலியப் பொருட்களின் உதவியோடு டீசல் எஞ்சின்களாலான கப்பல்களாக மாற்றப்பட்டன. முன்னெப்போதையும்விட கப்பல்கள் வேகமாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களைக் கொண்டுசேர்த்தன. பெட்ரோலியப் பொருட்களைப் பயன்படுத்தும் கார்கள், விமானங்கள், பீரங்கிகள் என பலவும் உருவாக்கப்பட்டன.

பிரிட்டன் தான் உலகை அதிகாரம் செய்துவந்தது. அதற்கு மிகமுக்கியமான காரணம், பிரிட்டனின் சக்திவாய்ந்த கடற்படைதான்.

  1. உலகின் நிதித் தலைநகரமாக லண்டன்தான் இருந்தது.
  2. உலகின் கடற்போக்குவரத்தை தீர்மானித்தது பிரிட்டன்தான்.
  3. கடற்போக்குவரத்தைப் பயன்படுத்தும் எந்தநாடும், பிரிட்டனின் லாய்ட்ஸ் நிறுவனத்திடம் காப்பீடு வாங்கியே ஆகவேண்டும்.
  4. பிரிட்டனின் ஸ்டெர்லிங் பவுண்டுதான் உலகின் வியாபார பரிவர்த்தனைக்கான பணமாக இருந்தது

இந்நான்கு காரணங்களால் பிரிட்டன் உலகை ஆட்சி செய்துவந்தது. இதனை எப்படியாவது பறித்துக்கொள்ள ஜெர்மனி துடித்தது. அதனால் ஒட்டோமனுடன் நெருங்கிய உறவினைப்பேணவேண்டும் என்று ஜெர்மனி நினைத்தது.

  1. பெர்லின் முதல் பாக்தாத் வரையிலான இரயில் பாதை அமைக்கவேண்டும்
  2. ஒட்டோமனின் அனடோலியா பகுதி விவசாய உற்பத்தி மிகுந்த பகுதியாகும். ஜெர்மனியின் உணவுத்தேவையை பெருமளவில் பூர்த்திசெய்ய அப்பகுதிகள்தான் ஜெர்மனிக்கு பெரிதும் உதவின.

ஆகையால், ஒட்டோமனுடன் தொடர்ந்து நட்புபாராட்டி வந்தது ஜெர்மனி.

முதலாம் உலகப்போரைத் தீர்மானித்த “பெட்ரோல்”:

பிற்போக்குவாத ஜார்-ரஷியாவும், பிரிட்டன் மற்றும் பிரான்சுடன் இணைந்து, ஜெர்மனியை விரிவடையவிடாமல் தடுக்கமுயற்சித்தது. அம்மூன்று நாடுகளும் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தின. ஒட்டோமன் பேரரசு வீழ்ந்துவிடும் சமயத்தில், ஒட்டுமொத்த மத்தியகிழக்குப் பகுதிகளையும் அவர்கள் மூவருக்குள்ளாக பிரித்துக்கொள்வதில் உறுதியாக இருந்தனர். லெபனான் மற்றும் சிரியா பகுதிகளை பிரான்சு எடுத்துக்கொள்ள விரும்பியது. பாலஸ்தீனமும் தனக்கு வேண்டுமென்று பிரான்சு விருப்பம் தெரிவித்தது. ஆனால், பிரிட்டனோ அதனை மறுத்துவிட்டது. பஹ்ரைன், தெற்கு ஏமன், குவைத் போன்ற பகுதிகளை எடுத்துக்கொள்ள பிரிட்டனுக்கு ஆசை.

சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் தங்கமுட்டையிடும் வாத்தாக இருந்த இந்தியாவை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்காக, பிரிட்டனிலிருந்து இந்தியாவரை செல்லும் பாதையின் வழியே இருக்கும் கல்ஃப், சூயஸ் கால்வாய், செங்கடல், இந்தியப் பெருங்கடல் அருகே இருக்கும் பகுதிகளை பிரிட்டன் வைத்துக்கொள்ள விரும்பியது. அதனால் பாலஸ்தீனத்தை தானே வைத்துக்கொள்ளப் போவதாக பிரிட்டன் தெரிவித்துவிட்டது. ஏற்கனவே எகிப்தும் பிரிட்டனின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. ஈராக்கின் பெரும்பகுதிகளையும் பிரிட்டனே எடுத்துக்கொள்வதாக சொல்லிவிட்டது.

அர்மேனியாவையும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளையும் ஜார் ரஷியா எடுத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தது. பிரிட்டனும், பிரான்சும், ஜார் ரஷியாவும் கூட்டணி அமைத்து, மத்தியகிழக்கை துண்டுதுண்டாகப் பிரித்து எடுத்துக்கொள்ள முடிவுசெய்து திட்டம்தீட்டின. ஆனால் ஜெர்மனியோ மறுபுறம், ஒட்டோமனுடன் இணைந்திருப்பதுபோல இருந்து, மத்தியகிழக்கின் பகுதிகளை பறித்துக்கொள்ள துடித்தது. ஜெர்மனிக்கும் மற்ற மூன்று நாடுகளின் கூட்டணிக்கும் ஏற்பட்ட கருத்து மோதல்களே முதலாம் உலகப்போருக்கான அடித்தளமாக மாறியது. ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையிலான உலகின் முதல் போர் துவங்கியது. ஒட்டோமனும் ஜெர்மனியும் ஓரணியில் இணைந்தன. பிரிட்டனும், பிரான்சும், ஜார் ரஷியாவும் எதிரணியில் இருந்தன. தொழிற்நுட்பத்தியிலும் இன்னபிற வளர்ச்சியிலும் சிறந்துவிளங்கியிருந்தாலும், ஜெர்மனியால் போரில் வெற்றிபெறமுடியவில்லை.

முதலாம் உலகப்போரில் ஜெர்மனி தோற்கடிக்கப்பட்டது. அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், முழுமுதற்காரணம் பெட்ரோலிய எண்ணை எரிபொருள்தான். பிரிட்டனுக்கு கிடைத்த எண்ணை ஜெர்மனிக்குக் கிடைக்காமல்போனதால்தான் போரில் தோற்றது.

தொடரும்…

-முகமது ஹசன்

(முன்னாள் எத்தியோப்பிய தூதர்)

-இ.பா.சிந்தன்

Related Posts