அரசியல் மத்திய கிழக்கின் வரலாறு

மத்திய கிழக்கின் வரலாறு – 4 (ஒட்டோமன் பேரரசு)

ஜெர்மனியின் நாடுபிடிக்கும் ஆசையில் பெர்லின் மாநாடு – 1885:

berlinconferenceகாலனிகளுக்காக அலைந்துகொண்டிருந்த ஜெர்மனி, ஒட்டோமனை கடனாளியாக்கிவிட்டதால் மத்திய கிழக்கிலிருந்தோ ஆப்பிரிக்காவிலிருந்தோ நாடுகள் பிடிக்கத் துடித்தது. குறிப்பாக துனிசியாவை எடுத்துக்கொள்ள ஜெர்மனி விரும்பியது. ஆனால் அதே காலகட்டத்தில் பிரான்சோ, அல்ஜீரியா மற்றும் மொரோக்கோவை ஆக்கிரமித்துவிட்டு முன்னேறிக்கொண்டிருந்தது. எகிப்தை பிரிட்டன் பிடித்துக்கொண்டது. அதனால் துனிசியாவைப் பிடிக்கும் ஜெர்மனியின் திட்டத்தினை பிரிட்டனும் பிரான்சும் எதிர்த்தன. இதற்கு சரியான தீர்வு காண, ஜெர்மனியின் தலைவரான பிஸ்மார்க் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளை அழைத்து பெர்லினில் 1885இல் “பெர்லின் மாநாடு” நடத்தினர்.

பெர்லின் மாநாட்டின் இறுதியில், ஜெர்மனிக்கு ருவாண்டாவும் புருண்டியும் டோகோவும் தான்சானியாவும் கிடைத்தன. காங்கோவை போர்ச்சுகலுக்கு வழங்கலாம் என்று பிரிட்டன் பரிந்துரைத்தது. ஆனால், பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். போர்ச்சுகலின் பங்கு என்று சொல்லி வாங்கிக்கொண்டு, பின்னர் போர்ச்சுகலிடமிருந்து பிரிட்டன் பறித்துக்கொள்ளும் என்றும் மற்ற ஏகாதிபத்திய நாடுகள் அஞ்சின. அதனால் நடுநிலையான ஒருவருக்கு காங்கோவை வழங்கலாம் என்று முடிவு செய்து பெல்ஜியத்திற்கு வழங்கப்பட்டது. ஐரோப்பாவின் நெருக்கடி, அதனைத் தொடர்ந்து ஒட்டோமனின் கடன்கள், அதற்காக நாடுபிடிக்கும் ஏகாதிபத்திய நாடுகளின் வெறி என ஒரு எங்கிருந்தோ துவங்கி, ஒட்டுமொத்த ஆப்பிரிக்க நிலமும் ஐரோப்பாவிற்கு அடிமையாக்கப்பட்டுவிட்டது. திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்பட்டதாலேயே, ஆப்பிரிக்காவின் வரைபடத்தில் நாடுகளின் எல்லைகள் நேர்கோடாக காட்சியளிக்கின்றன.

மத்திய கிழக்கிற்கு ஏற்றுமதியான “தேசியம்:

லெனின் சொன்னதைப்போல “தேசியம்” என்பது மேற்கு ஐரோப்பாவைப் பொருத்தவரையில் முடிந்துபோன கதையாகிவிட்டது.  தேசியத்தைக் கடந்து எல்லைதாண்டிய ஏகாதிபத்தியத்திற்கு மேற்கு ஐரோப்பிய நாடுகள் வந்துவிட்டன. அதன்பின்னர் தேசியம் என்கிற கருத்தியல், மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவிற்கு கொண்டுசெல்லப்பட்டுவிட்டது. மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஏகாதிபத்திய நாடுகளாக மாறியபின்னர், ஏகபோக முதலாளித்துவத்திற்குள் நுழைந்துவிட்டன. எண்ணிக்கையிலடங்காத அளவிற்கு உற்பத்தி செய்யவும், அதற்குத் தேவையான மூலப்பொருட்கள் கிடைக்கும் நாடுகளைப் பிடிக்கவும், உற்பத்திசெய்த பொருட்களை விற்பதற்குத் தகுந்த சந்தைப் பிரதேசங்களைப் பிடிப்பதுமாக ஏகாதிபத்திய தேசங்களாக மாறிவிட்டன மேற்கு ஐரோப்பிய நாடுகள். இவற்றிற்கு மிகச்சரியான பகுதிகளாக மத்திய ஐரோப்பாவே உடனடி இரையாக அவர்களுக்குத் தோன்றின. மத்திய மற்றும் கிழக்கை குறிவைத்து புதிய திட்டத்தை மேற்கு ஐரோப்பிய நாடுகள் உருவாக்கின. அதுதான் “மனிதநேயத் தலையீடு”.

pre_war_balkansபல்கேரியா, கிரேக்கம், மசிடோனியா, கொசோவா உள்ளிட்ட பல கிழக்கு மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஐரோப்பிய பகுதிகள் ஒட்டோமனிடம்தான் இருந்தன. அப்பகுதிகளில் எல்லாம் ஒட்டோமனுக்கு எதிரான மனநிலையினை தன்னுடைய ஏகாதிபத்திய நலனுக்கு பயன்படுத்திக்கொண்டன ஐரோப்பிய நாடுகள். குறிப்பாக அந்நாடுகளில் ஒட்டோமனின் ஆட்சியினை இசுலாமிய ஆட்சியாகக் கருதி எதிர்ப்பு நிலையில் இருந்த கிருத்துவ மக்களை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டனர். பணக்கார மற்றும் அதிகாரவர்க்க கிருத்துவர்கள் ஒட்டோமனுக்கு நெருக்கமாகவும், ஆட்சியதிகாரத்தில் கோலோச்சிவந்தனர் என்பது தனிக்கதை. அப்படியாக பல்கேரியா, கிரேக்கம், மெசடொனியா, அர்மேனியா போன்ற பல பகுதிகளிலும் தேசிய விடுதலைப் போராட்ட இயக்கங்கள் உருவெடுத்தன. அந்நாடுகளின் தேசிய விடுதலைப் போராட்டங்களுக்கான காரணங்கள் நியாயமானதாக இருந்தபோதும், அதன் வெற்றியச் சுவைக்கப்போவது ஏகாதிபத்திய நாடுகள்தான் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

சிறுபான்மையினர் மற்றும் தேசியவிடுதலை இயக்கப் போராட்டங்களை ஒவ்வொரு ஏகாதிபத்திய நாடும் தனித்தனியாக கவனம் செலுத்தி ஆதரித்தன. வைதீக கிருத்துவர்கள் அதிகம் நிறைந்திருக்கும் ஒட்டோமனின் பகுதிகள் ரஷியாவுக்கு அருகில் அமைந்திருந்தன. அங்கிருக்கும் வைதீக கிருத்துவர்களின் போராட்டங்களை ஆதரித்து ஊக்குவிப்பதை ஜார்-ரஷியா தன்னுடைய வேலையாக எடுத்துக்கொண்டது. ஒட்டோமனின் பகுதிகளில் இருந்த வைதீக கிருத்துவர்களை பாதுகாக்கும் பணியினை ரஷ்யாவே மேற்கொள்ளும் என்று ஒட்டோமனுக்கே தகவல் அனுப்பியது ஜார்-ரஷியா. பிரான்சோ, தன்னை ஒரு கத்தோலிக்க பாதுகாவலனாக கருதிக்கொண்டு ஒட்டோமனுக்கு நெருக்கடி கொடுத்தது. இன்னும் சொல்லப்போனால், அக்காலகட்டத்தில் ஒட்டோமனின் பகுதிகளில் கத்தோலிக்கர்கள் மிகமிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே வாழ்ந்தனர் என்றுகூட சொல்லலாம். மிச்சமிருந்த ஏகாதிபத்திய நாடான பிரிட்டனோ, சுற்றிலும் வேறு ஏதாவது மதமிருக்கிறதா என்று பார்த்தது. புரோட்டஸ்டன்ட் கிருத்துவம் ஒட்டோமோனில் எங்குமே இல்லை. ஆகையால், பிரிட்டன் யூதர்களைப் பாதுகாக்கிறோம் என்று குரல்கொடுக்கத் துவங்கியது. இப்படியாக ஆங்காங்கே தேசியவிடுதலைப் போராட்டங்களை ஆதரிக்கிறோம் என்கிற போர்வையில், ஒட்டோமனை பலமிழக்கச் செய்ய ஏகாதிபத்திய நாடுகளான ஜார்-ரஷியா, பிரிட்டன் மற்றும் பிரான்சு ஆகிய நாடுகள் முடிவெடுத்தன.

ஒட்டோமனுக்கு கீழே இருந்த நாடுகளின் தேசிய விடுதலைப் போராட்டங்களை குறைத்து மதிப்பிடக்கூடாது என்றாலும், அவர்களை ஏகாதிபத்திய நாடுகள் நன்கு பயன்படுத்திக்கொண்டன. உண்மையில் ஒட்டோமனின் ஆட்சியில், அதிகாரமிக்கவர்களாகவும் பணக்காரர்களாகவும் இருந்தவர்கள் அர்மேனியர்களும் கிரேக்கர்களும்தான் என்றால் இப்போது நம்மால் நம்புவதற்குக்கூட கடினமாகத்தான் இருக்கும். ஓட்டோமான் ஆட்சிக்காலத்தில், உலகெங்கிலுமிருந்த ஒட்டோமனின் தூதர்களில் பெரும்பாலானவர்கள் அர்மேனியர்களும் கிரேக்கர்களும்தான். ஒட்டோமனின் காலகட்டத்திலேயே அதிநவீன பள்ளிகளும் கல்விக்கூடங்களும் கிருத்துவர்களிடம்தான் இருந்தன. அவற்றை இன்றும் இஸ்தான்புல்லில் பார்க்கலாம். மதங்களைத் தாண்டி பெரும்பணக்காரர்களுக்கு ஓட்டோமன் ஆட்சிக்குக் கீழிருந்த பகுதிகளே வியாபாரத்திற்கு சிறந்த இடமாக இருந்தன. ஆனால் கிரேக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வளர்ந்திருந்த முற்போக்குக் கருத்தியலும், மேற்கு ஐரோப்பாவிலிருந்து இடம்பெயர்ந்து கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவிற்கு வந்திருந்த தேசியவாதக் கருத்தியலும், ஒட்டோமனிடமிருந்து விடுதலையைப் பெறவிரும்பின.

ஒட்டோமனின் ஆட்சிப்பகுதிகளில் நடைபெற்ற தேசிய விடுதலைப் போராட்டங்கள் பல ஆண்டுகள் தொடர்ந்தன. இறுதியில் பல்கேரியா, கிரேக்கம், கிரேத்தா, செர்பியா, மெசிடோனியா உள்ளிட்ட பல பகுதிகள் தனித்தனி தேசங்களாக விடுதலை பெற்று பிரிந்துசென்றன. கிரேத்தா பின்னாளில் கிரேக்கத்துடன் இணைக்கப்பட்டது தனிக்கதை. பல்கேரியா விடுதலை பெற்றகாலத்தில், அங்கே வாழ்ந்திருந்த ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட இசுலாமியர்கள் வெளியேற்றப்பட்டனர். தற்போதைய கிரேக்கத்துடன் இருக்கும் கிரேத்தா தீவில் பெரும்பான்மையினர் இசுலாமியர்களாகத்தான் இருந்தனர். அவர்கள் அனைவரும் அடித்துவிரட்டப்பட்டனர். கிரேக்கத்தில் மீதமுள்ள பகுதிகளில் வாழ்ந்த மேலும் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட இசுலாமியர்கள் துருக்கிக்கும் சிரியாவுக்கும் துரத்தப்பட்டனர். இசுலாமியர்களே இல்லாத கிரேக்கமாக மாற்றப்பட்டுவிட்டது.

“தேசியம்” என்கிற கருத்தியல் விடுதலைக்காகப் போராடும் வரை முற்போக்கானது போன்றதாகவும், விடுதலை பெறும்போது பிற்போக்காக இன-மத-மொழி-சாதி என வெறித்தத்துவமாகவும் மாறிவிடுவதை வரலாற்றில் பல்வேறு உதாரணங்களில் பார்க்கமுடிகிறது.

ஒவ்வொரு நாடாக விடுதலை பெறத்துவங்கியதும், ஒட்டோமனின் பகுதிகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டே போயின. முதலாம் உலகப்போருக்கு முன்னால், ஜெர்மனி மீண்டும் தன்னுடைய பழைய கோரிக்கையை புதுப்பித்தது. பெர்லின் மாநாட்டின்போது ஆப்பிரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் தங்களுக்கு குறைவான பகுதிகளே காலனிகளாக ஒதுக்கப்பட்டதாகவும், தற்போதாவது அதிகமாக தரவேண்டுமென்றும் ஜெர்மனி கோரிக்கை வைக்கத்துவங்கியது. தன்னுடைய ஏகாதிபத்தியப் பசிக்கு, அதிகமான காலனிநாடுகள் தேவை என்றது ஜெர்மனி. பிரான்சும் பிரிட்டனும் அதிர்ந்து மறுப்பு தெரிவித்தன. முதலாம் உலகப்போருக்கான அடித்தளமாக இது அமைந்தது என்றே சொல்லலாம். ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போர் துவங்கிய காலமும் அதுதான். அதனாலேயே ஒட்டோமனைக் காப்பாற்றும் பணியினை ஜெர்மனி செய்தது. ஓட்டோமன் ஆட்சியை மிகவும் விரும்பி அதனை ஜெர்மனி செய்யவில்லை. அதற்கு வேறு சில காரணங்கள் இருந்தன. ஒருபுறம் கிழக்கு ஐரோப்பாவின் சிறிய நாடுகளை பொருளாதார ரீதியாக கைக்குள் வைத்துக்கொள்வதும், மறுபுறம் ஒட்டோமனின் அனைத்துப் பகுதிகளுக்கும் ஊடுருவி தன்னுடைய ஏகாதிபத்திய எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்வதுமே ஜெர்மனியின் விருப்பமாக இருந்தது. பெர்லின் முதல் பாக்தாத் வரை இரயில் பாதையை உருவாக்கும் திட்டத்தை ஜெர்மனி உருவாக்கியது. ரோமேனியாவில் பெட்ரோல் உற்பத்தியை தன்னுடைய கட்டுப்பாட்டில் ஜெர்மனி வைத்திருந்தது. ஜெர்மனியின் அதிநவீன தொழிற்நுட்ப வளர்ச்சியும் அதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது.

அரபுலகில் எண்ணைவளம் நிறைந்திருப்பதற்கான வாய்ப்பு அதிகமிருப்பதாக ஜெர்மனி அப்போதே யூகித்திருந்தது.

தொடரும்…

-முகமது ஹசன்

(முன்னாள் எத்தியோப்பிய தூதர்)

-இ.பா.சிந்தன்

Related Posts