அரசியல் தொடர்கள் மத்திய கிழக்கின் வரலாறு

மத்திய கிழக்கின் வரலாறு – 3 (ஒட்டோமன் பேரரசு)

ஜெர்மனியின் தோற்றமும் மத்திய கிழக்கை ஆக்கிரமிக்கும் திட்டமும்:

ஐரோப்பாவில் அதிகாரமிக்க பெரிய நாடாக இருந்த ப்ருசியா, மற்ற சிறுநாடுகளை அழைத்து தமக்குள்ள ஒரு பொதுவான வரிவிதிப்புமுறையினை ஏற்படுத்தவேண்டும் என்று சொன்னது. ப்ருசியா மிகப்பலம் வாய்ந்த நாடாக இருந்தமையால், பல சிறுநாடுகளை எளிதாக மிரட்டமுடிந்தது. அதன் ஒரு பகுதியாக 1870இல் ஒருங்கிணைந்த ஜெர்மனி உருவாக்கப்பட்டது. ஜெர்மனியை ஒருங்கிணைக்கிற சாக்கில், பிரான்சின் இரு மாகாணங்களையும் (அல்சாஸ் மற்றும் லோரியா) ப்ருசியா ஆக்கிரமித்துக்கொண்டது. அல்சாசிலிருந்து 1,00,000 மக்கள் வெளியேறி அல்ஜீரியாவில் குடியேறினர். அல்ஜீரியாவின் இரண்டாவது அதிக மக்கள் தொகையினைக் கொண்டவர்களாக அவர்கள் மாறினர். அவர்களே பிற்காலத்தில் அல்ஜீரியப் புரட்சியினை எதிர்த்தார்கள் என்பது தனி வரலாறு.

german18711870இல் ஜெர்மனி என்கிற தேசம் உருவாக்கப்பட்டிருந்தாலும், 1851லேயே தொழிற்நுட்பத்தில் பிரிட்டனுக்குப் போட்டியாக வளர்ந்திருந்தது ஜெர்மனி. நவீன எந்திரங்களை எல்லாம் தயாரித்து ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளர்ந்திருந்தது. ஒருங்கிணைந்த ஜெர்மனி அரசியல் பல பெற்றதாகவும், தொழிற்நுட்ப வளர்ச்சியடைந்ததாகவும் இருந்ததால், தனக்கும் காலனி நாடுகள் வேண்டுமென்று ஆசைப்பட்டது. ஜெர்மனி என்கிற இளந்தேசத்திற்கும் காலனி ஆசை வந்தது. தன்னுடைய தூதர்களின் எண்ணிக்கையை அதிகமாக்கி உலக நடப்புகளை விரிவாக ஆய்வு செய்தது ஜெர்மனி. மத்தியகிழக்கில் ஒட்டோமனுடன் பிரான்சு வைத்திருந்த உறவை, பறித்துக்கொள்ள ஜெர்மனி முயன்றது. ஒட்டோமனுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளால், அதன் நட்புவட்டத்திற்குள் நுழைந்தது ஜெர்மனி.

1871ல் உலகின் முதல் தொழிலாளர் புரட்சி நடந்தது. “பிரெஞ்சு கம்யூன்” உருவானது. பூர்சுவா ஆட்சியாளர்கள் மீண்டும் அதிர்ச்சியடைந்தனர். பிரெஞ்சுப் புரட்சிக்குப்பின்னர், அதனை வீழ்த்துவதற்கு வாட்டர்லூவில் திரண்டதுபோல, ஐரோப்பாவின் ஏகாதிபத்திய நாடுகள் ஒன்றிணைந்து பிரெஞ்சு கம்யூனை வீழ்த்தினர். 70 நாட்களுக்குப்பிறகு தொழிலாளர் புரட்சிகர அரசு கவிழ்க்கப்பட்டது. அதன்பிறகு முதலாளித்துவம் தன்னுடைய முதலாவது நிதிநெருக்கடியினை சந்தித்தது. தொழிற்நுட்ப வளர்ச்சியினால் தேவைகளை கணக்கிலெடுக்காமல் அளவுக்கு மிஞ்சிய உற்பத்தி செய்யப்பட்டதன் விளைவாக நெருக்கடி உருவானது. பலூன் ஊதப்படும்போது பார்க்க அழகாகத்தான் இருக்கும். ஆனால், அதன் சக்தியையும் மீறி ஊதிக்கொண்டே இருந்தால், ஒரு கட்டத்தில் பலூன் வெடித்துச்சிதறிவிடும் என்பது எளிமையான அறிவியல். அப்படிப்பட்ட அடிப்படை அறிவியிலுக்குக்கூட கட்டுப்பட்டு செயல்படமுடியாத ஒரு பொருளாதார உற்பத்திமுறைதான் முதலாளித்துவம் ஆகும். 1873இல் வங்கித்துறை நெருக்கடியில் சிக்கி திவாலாகியது. வியன்னா பங்குசந்தை வீழ்ந்தது.

longdepressionமுதலாளித்துவம் எப்போதெல்லாம் நெருக்கடியினை சந்திக்கிறதோ, அப்போதெல்லாம் அதன் சுமையினை வேறு யார் மீதாவது ஏற்றிவிட்டு தற்காலிகமாக தப்பித்துக்கொள்ளும். அடுத்த நெருக்கடி வரும்வரை சீராக இருப்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கும். ஆனால் குறுகிய காலத்திற்குள் மீண்டும் வேறொரு பகுதி நெருக்கடிக்குள் சிக்கிவிடும். இப்படித்தான் ஒவ்வொரு சிறிய இடைவெளிக்கும் ஒரு நெருக்கடியை முதலாளித்துவம் ஏற்படுத்திக்கொண்டே வருகிறது. ஐரோப்பியாவில் 1873இல் ஏற்பட்ட நெருக்கடியை தற்காலிகமாக சமாளிக்க மூன்றுவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஒன்று, எப்போதும்போல உற்பத்திச் செலவினை குறைப்பதற்காக தொழிலாளர்களின் ஊதியம் குறைக்கப்பட்டது. இரண்டாவது, ஆப்பிரிக்காவில் புதிய காலனிகளைத் தேடிப்பிடித்து அங்கிருந்து மிகக்குறைந்த அல்லது இலவசமாக உற்பத்திக்கான மூலப்பொருட்களை எடுத்துவரப்பட்டன. மூன்றாவது, அளவுக்கதிகமான உபரி உற்பத்திப்பொருட்கள், ஓட்டோமன் பேரரசின் தலையில் கட்டப்பட்டன. தொழிற்நுட்ப வளர்ச்சியில் ஒட்டோமனைவிட ஐரோப்பிய நாடுகள் முன்னேறிய இருந்தமையால், ஐரோப்பாவைச் சார்ந்திருக்கவேண்டிய நிலைக்கு ஒட்டோமனும் தள்ளப்பட்டது. இதனால் ஐரோப்பாவின் கடன்களும் நெருக்கடிகளும் ஒட்டோமன் மீது ஏற்றிவைக்கப்பட்டன.

திருப்பிச் செலுத்தமுடியாத அளவிற்கு மூன்றாமுல ஏழை நாடுகளுக்கு கடன்கொடுத்துவிட்டு, பின்னர் அந்நாடுகளையும் அங்குவாழும் மக்களின் உழைப்பினையும் நிரந்தரமாக சூறையாடும் உரிமையினை எடுத்துக்கொள்கின்றன இன்றைய ஐ.எம்.எப். உம் உலகவங்கியும். இன்றைக்கு உலகெங்கிலுமுள்ள மூன்றாமுலக நாடுகளை ஐ.எம்.எப். உம் உலகவங்கியும் எவ்வாறெல்லாம் திவாலாக்குகின்றன என்று நாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். அந்தத் தந்திரங்கள் யாவும் ஓட்டோமான் பேரரசின் மீது அன்றைக்கு முயற்சித்துப் பார்க்கப்பட்டவை தான். உலகவங்கி இன்றைக்குப் பின்பற்றும் நடைமுறைகள் எல்லாம் ஒட்டோமனிடம் ஐரோப்பிய நிறுவனங்களும், வங்கிகளும், அரசுகளும் எவ்வாறு நடந்துகொண்டன என்பதிலிருந்துதான் உருவாக்கப்பட்டன என்றுகூட சொல்லலாம்.

ஒரு வழியாக தன்னுடைய பிரச்சனைகளை ஒட்டோமனின் மீது திணித்தும், இன்னபிற தற்காலிக நடவடிக்கைகளின் மூலமாகவும், ஐரோப்பா தற்காலிகமாக நெருக்கடியிலிருந்து வெளியேறியது. சில ஆண்டுகளுக்குள்ளாகவே மீண்டும் நெருக்கடியைச் சந்தித்தது. குட்டிமுதலாளித்துவ புரட்சியைத்தாண்டி ஏகாதிபத்தியத்திற்கு ஐரோப்பா மாறிவிட்டது என்று லெனின் இதுகுறித்து தன்னுடைய “ஏகாதிபத்தியம்” என்கிற நூலில் குறிப்பிட்டிருக்கிறார். தேசியம் மறைந்து ஏகாதிபத்தியம் துளிர்க்கத் துவங்கிவிட்டது.

தொடரும்…

– முகமது ஹசன்

(முன்னாள் எத்தியோப்பிய தூதர்)

– இ.பா.சிந்தன்

Related Posts