அரசியல்

யார் அந்த “அர்பன் நக்சல்ஸ்” . . . . . . . . . . . . . ?

#METROURBANNAXAL என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகத் தொடங்கியுள்ளது. யார் அந்த “அர்பன் நக்சல்ஸ்”? சமூக செயற்பாட்டாளர்கள் 5 பேரை கைது செய்த மகாராஷ்ட்ரா மாநில காவல்துறை அவர்களுக்கு சூட்டியுள்ள பெயர் தான் அர்பன் நக்சல்ஸ். பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு, யாரையெல்லாம் தேசவிரோதிகளாக குற்றம் சுமத்த வேண்டுமோ  அவர்களை எல்லாம், நக்சலைட்டுகள் என்றே அக்கட்சியின் தலைவர்கள் வர்ணித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமூக செயற்பாட்டாளர்கள் 5 பேருக்கு  பாஜக ஆட்சி செய்யும், மகாராஷ்ட்ரா மாநில காவல்துறை நக்சல்ஸ் என பெயர் சூட்டியிருப்பது புதிதான ஒன்றல்ல. காஷ்மீரில் கைது செய்யப்பட்டால் பயங்கரவாதி. பிற மாநிலங்களில் கைது செய்யப்பட்டால் நக்சலைட். இதுவே அவர்களின் வேதம்..

மகாராஷ்ட்ரா மாநிலம், புனேவில் உள்ள கிராமம் தான் பீமா கோரேகான். இங்கு ஆண்டுக்கு ஒருமுறை தலித் திருவிழா கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவின் போது, ஆதிக்க சாதியினர் நடத்திய தாக்குதல் வன்முறையாக மாறியது. இதுதொடர்பான வழக்கில், நக்சலைட்டுகளுக்கு தொடர்பிருப்பதாக கூறிய மகாராஷ்ட்ரா காவல்துறையினர், அவர்கள் பிரதமர் மோடியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறி அண்மையில் ஒரு கடிதத்தையும் வெளியிட்டனர்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்ட மகாராஷ்ட்ரா காவல்துறையினர், சமூக செயற்பாட்டாளர்கள் 5 பேரை கைது செய்தனர். 77 வயதான இடதுசாரி சிந்தனையாளர் வரவர ராவ், வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், நக்சலைட்டுகளுடன் தொடர்பிருப்பதாக கூறி 2007ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, அதற்கான ஆதாரம் இல்லை என 4 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்ட அருண் பெரைரா, இதேபோல கைதாகி 6 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலையான வெர்னான் கோன்சால்வேஸ், மனித உரிமை போராளியான கவுதம் நுல்கா ஆகியோர் தான் அந்த ஐவர்.

இவர்கள் கைது செய்யப்பட்டது தான் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவசரநிலை குறித்து ஆயிரக்கணக்கான கூட்டங்களில் பேசி வரும் பாஜக, அறிவிக்கப்படாத அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளதாக தலைவர்கள் கண்டனம் முழங்கியுள்ளனர். இந்தியா சர்வாதிகாரத்தை நோக்கி பயணிக்கிறது என ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் ஆர்எஸ்எஸ் தவிர அனைத்து இயக்கங்களையும் தடை செய்து விடுங்கள் என சாடியிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. தேசியக் கட்சிகளின் தலைவர்கள் தொடங்கி மாநில கட்சிகளின் தலைவர்கள் வரை ஒருசேர கண்டித்திருக்கின்றனர். அனேகமாக மகாராஷ்ட்ரா அரசின் நடவடிக்கையை ஆதரித்திருக்கிற ஒரே இயக்கம் ஆர்எஸ்எஸ் மட்டுமே. ஆர்எஸ்எஸ் ஆதரிக்கிறது என்பதில் இருந்தே, 5 பேர் கைது செய்யப்பட்டதன் உள்நோக்கத்தை புரிந்து கொள்ள முடியும்.

ஒரே ஆறுதலாக 5 பேரையும் சிறைச்சாலைக்கு அனுப்ப உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 5 பேரையும் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை வீட்டுக்காவலில் வைக்க அனுமதித்துள்ளது உச்சநீதிமன்றம். அதே நேரத்தில் ஜனநாயகத்தில் மாற்றுக்கருத்துக்கள் முக்கியமானவை எனத் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், மாற்றுக்கருத்து தெரிவிப்போரால் தான் ஜனநாயகம் வலுப்பெறுவதாகவும் கூறியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து 5 பேரும் வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக நள்ளிரவுக்கு பிறகு செய்திகள் வரத் தொடங்கியுள்ளன. இந்த தருணத்தில் பாஜக அரசின் நடவடிக்கைக்கு எதிராக ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் உரத்து முழங்க வேண்டிய அவசியம் வலுவாய் எழுந்துள்ளது. இப்போது முழங்க நாம் தயங்கினால், இதன் பின்னர் முழங்குவதற்கு அல்ல பேசுவதற்கு கூட உங்களுக்கு தடை விதிக்கப்படலாம். இது வெறும் வெள்ளோட்டம் பார்க்கும் செயலாகவே படுகிறது. இந்த கைதுக்கு எழும் எதிர்வினைகளை பொறுத்து அவர்கள் அடுத்த கட்டத்துக்கு செல்ல முயல்வர்.

எதிர்ப்புகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு வலுவாய் பதிவு செய்வோம். உங்கள் மவுனம் கைதுக்கான ஆதரவாகக் கணக்கில் கொள்ளப்படும். டெல்லியின் ஜந்தர்மந்தரில் இன்று (30.8.2018) போராட்டத்திற்கு இடதுசாரி கட்சிகளின் போராட்டம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சுரி அறிவித்துள்ளார்.

வாய்ப்பிருக்கும் இடங்களில் எல்லாம் கண்டனம் முழங்குவோம். எவ்வளவு முடியுமோ அவ்வளவு சத்தமாக.. ஜனநாயம் அனுமதித்துள்ள உரிமைகளை பாதுகாப்பதற்காக வறளட்டும் நம் தொண்டையின் கடைசி சொட்டு நீரும்…

– அகிலன்.

Related Posts