’மாற்று’ பின்பற்றும் இதழியல் நெறி மற்றும் மாற்றுவில் எழுது‍ம் படைப்பாளிகள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள்‍:

  1. மாற்று தனது வாசகர்களை ஒரு குடும்பமாகக் கருதுகிறது. உண்மையான செய்திகளை சமூகப் பொருப்புணர்வுடன் தருவதும், பாதிப்புக்கு உள்ளாகும் பிரிவினருக்கு ஆதரவாகச் செயல்படுவதையும் தன் ’இதழியல் கொள்கையாக’ கொண்டுள்ளது‍.
  2. எழுத்தாளர், வாசகர்களின் முழுமையான சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையில் செயல்படுவோம்.
  3. கட்டுரைகளின் உள்ளடக்கம் மக்களிடையே  சமத்துவத்தையும் சமூக நீதியையும் மதச்சார்பின்மையையும் வலுப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டிருக்கு‍ம்.
  4. படைப்புகள் அனைத்தும் விவாதத்திற்கு உட்படுத்துவதும், மேம்படுத்துவதுமான முழுமையான சுதந்திரம் படைப்பாளிகள் மற்றும் வாசகர்களுக்கு உண்டு‍. இதற்கு அவசியமான வெளிப்படைத் தன்மையையும், ஜனநாயகத்தையும் மாற்றுவின் நிர்வாகத்திலும், சமூகத்திலும் தொடர்ந்து வலியுறுத்துவோம்.
  5. கருத்து முரண்பாடுகள் தவிர்க்க முடியாத மனித இயல்பாகும். அவ்வாறான முரண்பாடுகளை ஆதாரப்பூர்வமான மற்றும் ஆரோக்கியமான முறையில் வெளிப்படுத்தலாம். நேர்மையான விவாதங்கள் நடத்துவதன் மூலம் சிந்தனையைச் செழுமைப்படுத்தும் களமாக ‘மாற்று’ செயல்படும்.
  6. ஒரு நல்ல இதழியலுக்கு மூலதன முதலீடு அவசியமே. ஆனாலும், விளம்பரங்கள் என அழைக்கப்படும், கருத்து இடைச் செருகல்களை ’மாற்று’ ஏற்பதில்லை. பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்ற தனக்கு உடன்பாடான கருத்துக்களில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாத முறைகளையே பின்பற்றுவோம்.
  7. ஒட்டுமொத்த சமூகத்தின் அனுபவத் திரட்சியே அறிவுசார் சொத்து. எனவே, மாற்றுவில் வெளியாகும் கருத்துக்களை அதன் பொருள் மாறாமல் எவரும் எடுத்தாள முழு உரிமையும் வழங்கப்படுகிறது.
  8. மாற்றுவில் வெளியாகும் புகைப்படங்கள் மற்றும் கருத்துப்படங்கள் அனைத்து‍ம் படைப்பாக்கப் பொதுமங்களின் உரிமங்களின் (Creative Commons License) அடிப்படையில்  அமைந்தால் மட்டுமே மாற்றுவில் வெளியிடப்படும்.

மேலும் படைப்பாக்க பொதுமங்களின் உரிமங்களைப்  (Creative Commons License)  பற்றி்த் தெரிந்து‍ கொள்ள (http://ta.wikipedia.org/wiki/படைப்பாக்கப் பொதுமங்களின் உரிமங்கள்)

புகைப்படம் மற்றும் கருத்துப்படம் உருவாக்கியவரின் பெயர் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும். (கட்டுரையின் கீழே மூலத்தை குறிப்பிட வேண்டும். (உதாரணம், மூலம்: (http://en.wikipedia.org/wiki/Creative_Commons_license))