இளைஞர் முழக்கம்

மயானக்கரையின் வெளிச்சம் – சம்சுதீன் ஹீரா.

ஒரு பெரிய மக்கள் திரள் முகாமின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளேவர முயற்சித்துக் கொண்டு இருக்கிறது., கதவையே பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருக்கிறேன்.

அதிகாலை மணி 4.10. கும்மிருட்டு. அறுவடைக்குக் காத்திருக்கும் சோளக்கதிர்களின் நெடி நாசிக்குள் மணக்கிறது. தொலைதூரக் கீழ்வானில் லேசாய் வெளிச்சம் தெரிகிறது. இன்னும் சிறிது நேரத்தில் விடிந்துவிடும். நிலத்தின் ஈரப்பதத்தில் கால்கள் விறுத்துப்போய் விடுகிறது. சகதிக்குள் சிக்கி அறுந்துபோன செருப்பை வீசியெறிந்து ஒரு மணிநேரம் ஆகியிருக்கும். வெறும் கால்களில் நடந்தே பழக்கமில்லாதவன் நான். மணிக்கணக்காக ஓடி இங்கு வந்து சேர்ந்திருக்கிறேன். பாதங்கள் நெருப்பாய்க் காந்துகின்றன. எங்கெங்கெல்லாம் காயம் பட்டிருக்கிறதென்று காலையில் வெளிச்சத்தில் பார்த்தால்தான் தெரியும்.
வடக்கிலிருந்து வீசிய கூதக்காற்றில் பற்கள் தடதடக்கின்றன. மடியில் தூங்குகிற மகள் முபீனாவைக் கதகதப்பாய் அணைத்துக் கொள்கிறேன். அடைக்கோழியைப்போல அவளைப் போர்த்தியிருந்த பச்சைக்கம்பளியின் கதகதப்பில் ஆழ்ந்து உறங்குகிறாள். இரவிலிருந்தே ஓயாமல் அழுது கொண்டிருந்தவள் எப்போது தூங்கினாளோ தெரியவில்லை. தூங்கட்டும்.
வருகிற செப்டம்பரோடு மூபீனாவுக்கு எட்டு வயதாகிறது. மற்ற பெற்றோர்களைப்போல எங்களுக்கும் அவளைப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்க வேண்டுமென்றுதான் ஆசை. ஆனால் அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. பள்ளியில் சேர்ந்திருந்தால் இப்போது மூன்றாம் வகுப்புக்குச் சென்றிருப்பாள். எண்கள், எழுத்துகள் குறித்த அறிமுகம் கிடைத்திருக்கும். சின்னச்சின்ன மழலைப் பாடல்களைக் கற்றிருப்பாள். எங்களுக்கு அதைப் பாடிக்காட்டியிருப்பாள். ஆனால் எங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. கிடைக்கும் நேரத்தில் நானும் பிர்தவுசும் அவளுக்குக் கற்றுக் கொடுக்கிறோம். என்னதான் இருந்தாலும் பள்ளிக்கூடத்தில் படிப்பதுபோல வருமா..? என்ன செய்வது எங்கள் விதி.
நாங்கள் நம்பினோம். ஒருநாள் இதெல்லாம் மாறும். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப்போல நாங்கள் சக மனிதர்களாக மதிக்கப்படுவோம். சுதந்திர மனிதர்களாக, சுயமரியாதையுடன் சமத்துவமாய் வாழ்வோம் என்றெல்லாம் நம்பினோம். எல்லாம் முடிந்து விட்டது. வீடு வாசல், வேலை, அடையாளம் எல்லாமே போய்விட்டது. இப்போது ஒரு அனாதையைப்போல இங்கே அமர்ந்திருக்கிறேன். ஆளரவமற்ற இந்தச் சோளக்கொல்லையில் ஒரு திருடனைப்போல பதுங்கி ஒளிந்திருக்கிறேன்.
பூச்சிகளின் ரீங்காரம் தவிர எந்தச் சப்தமும் இல்லை. தூரத்தில் ஒரு மின்கம்பத்தில் ஒளிர்கிற மஞ்சள் நிற ஹாலஜன் விளக்கின் ஒளியில் அந்தச் சாலை மங்கலாய்த் தெரிகிறது. அவ்வப்போது சைரன் சப்தத்தோடு செல்கின்ற மீட்பு வாகனம் தவிர வேறெந்த வாகனத்தையும் பார்க்க முடியவில்லை. பெயர்தான் மீட்பு வாகனம். கிட்டத்தட்ட நாய் பிடிக்கிற வண்டியைப் போலத்தான் இதுவும். என்ன? இது மனிதர்களைப் பிடிக்கும் வண்டி. சைரன் சப்தம் கேட்கும்போதெல்லாம் வயிற்றைக் கலக்குகிறது. ஏதோ இனம்புரியாத பயம் ஒரு வெறிநாயைப்போல நெஞ்சைக் கவ்வுகிறது.
அங்கிருந்துப் பார்த்தால் ஆளுயர சோளச்செடிகள் வளர்ந்திருக்கிற இந்தக் கொல்லைக்குள் நான் அமர்ந்திருப்பது கண்டிப்பாகத் தெரியாதுதான். ஆனாலும் அந்தச்சத்தம் கேட்டதும் ஓட்டுக்குள் ஒடுங்கிக்கொள்ளும் நத்தையைப்போல அனிச்சைச் செயலாய் உடலைக் குறுக்கி ஒளிந்து கொள்கிறேன்.

அச்சத்தைப்போல மனிதனைப் பலவீனப்படுத்தும் உணர்வு வேறெதுவுமேயில்லை.
விடிவதற்கு முன்பாகவே எழிலன் வந்துவிடுவதாகச் சொன்னான். இன்னும் காணவில்லை. பத்து நிமிடத்துக்கொருமுறை எழுந்து சாலையைப் பார்ப்பதும் பின்பு அமர்வதுமாக இருக்கிறேன். எழிலனும் நானும் ஒரு கார் தயாரிப்புக் கம்பெனியில் வேலை பார்க்கிறோம். அவன் எஞ்சினியர். நான் மெக்கானிக். ஆனாலும் நாங்கள் நல்ல நண்பர்கள். ஏழெட்டு ஆண்டுகள் இருக்கும். ஊரே எதிர்த்த அவன் காதல் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்ததே நான் தான். அதிலிருந்தே குடும்ப நண்பனாகிவிட்டான். இப்போது அவன் உயிரைப் பணயம் வைத்துத்தான் என்னைக் காப்பாற்றிக்கொண்டு இருக்கிறான்.
ஒரு கோழையைப்போல உயிருக்கு பயந்து ஓடிக்கொண்டிருக்கிறேன் என்கிற உணர்வே என்னை இம்சித்தது. என்னை நானே வெறுத்தேன். சாக்கடையில் நெளியும் புழுக்களைப்போல என்னை உணர்ந்தேன். இப்படி பயந்து பயந்து வாழ்வதைவிடப் போராடிச் சாகலாம்தான். ஆனால் என்னை நம்பியிருக்கும் முபீனாவின் கதி..? நான் இல்லையென்றால் என் முபீனாவை என்ன செய்வார்கள்.? விலங்குகளை அடைப்பதுபோல முகாமில் அடைத்து விடுவார்களா..? ஐயோ என் செல்லமே..!! நினைக்கும்போதே பதறுகிறது.
புதிதாய்ப் பூத்த பூவைப்போல எந்தச் சலனமுமின்றி தூங்கிக்கொண்டிருந்த முபீனாவின் கன்னத்தை லேசாக வருடினேன். என் விரல்களின் நடுக்கம் அவளைத் தொந்தரவு செய்திருக்க வேண்டும். லேசாக நெளிந்தாள். என் தங்கமே.. எனக்கு ஏனடி மகளாய் வந்து பிறந்தாய்..? வேறெங்காவது, வேறு யாருக்காவது பிறந்திருந்தால் இன்று உனக்கு இந்த அவலம் இல்லையே. இந்துவாகப் பிறந்திருந்தால்கூட நீ இங்கு நிம்மதியாக வாழ்ந்திருக்கலாமே..? திக்குத் தெரியாமல், எதிர்காலம் குறித்த எவ்வித உத்திரவாதமும் இல்லாமல், வாழ்வுக்கும் சாவுக்கும் இடைப்பட்ட சக்ராத்துக் காலகட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் என் மடியில், உதிர்ந்த மலராய்க் கிடக்கிறாயேயடி என் செல்லமே..? கட்டுப்படுத்த முடியாமல் உடைந்து அழுகிறேன். என் சப்தம் யாருக்காவது கேட்டுவிடுமோ என்ற உள்ளுணர்வோடு வாயைப் பொத்திக்கொண்டு அழுகிறேன். அழுவதற்குக்கூட சுதந்திரமில்லாத இந்த இழி வாழ்க்கையை ஏன் எனக்குக் கொடுத்தாய் அல்லாவே..?

வீட்டை விட்டால் கம்பெனி, வேலை முடிந்தால் வீடு, அவ்வளவுதான் என் வாழ்க்கை. நான் மட்டுமல்ல எங்கள் பாத்திமா நகர் மக்கள் எல்லோருமே அப்படித்தான் இருந்தோம். மூன்றாண்டுகளுக்கு முன்பே இந்தச்சட்டம் கொண்டுவரப்பட்டபோது இதன் விளைவுகளை நாங்கள் உணரவில்லை. அப்போதே இச்சட்டத்தை எதிர்த்து மாதக்கணக்கில் பெரிய போராட்டமெல்லாம் நடந்தது. எல்லாம் சரியாகிவிடுமென்றுதான் நம்பினோம். முபீனாவை பள்ளியில் சேர்க்கச்சென்ற இடத்தில்தான் இதன் விபரீதம் புரிந்தது.
குடியுரிமைச் சான்றிதழ் இல்லாமல் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க முடியாது என்று சொல்லிவிட்டனர். அவளுக்கு பிறப்புச் சான்றிதழ் இருந்தது. எனக்கு இல்லை. ஆனால் எனக்கு பள்ளிச்சான்றிதழ் இருந்தது, ’வாக்காளர் அட்டை இருந்தது, ரேசன் அட்டை, பான் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம் எல்லாம் இருக்கிறது பிறகென்ன அடையாளம் வேண்டும்?’ என்றேன். அந்த ஆசிரியர் என்னை வினோதமாகப் பார்த்தபடிச் சொன்னார். “குடியுரிமை அட்டை இல்லைன்னா அதெல்லாம் இனிமேல் செல்லாது சார்..?” எனக்குப் பகீரென்றது. ஒரே வார்த்தையில் நான் அனாதையானதைப்போல உணர்ந்தேன்.

என்னைப்போலவே ஏராளமானவர்கள் கையைப்பிசைந்தபடி நின்றிருந்தனர். வேறு வழியில்லை. இங்கே வாழவேண்டுமென்றால் இந்த அரசாங்கம் கேட்கிற ஆவணங்களைக் கொடுத்துத்தான் ஆகவேண்டும். ஆனால் எப்படி..?

ஆவணங்கள் இல்லாத மக்களுக்கு உதவுவதற்காக ‘வழிகாட்டுதல் மையங்கள்’ ஆங்காங்கே முளைத்து கல்லாக்கட்டிக்கொண்டு இருந்தன. கொஞ்சம் காசு செலவழித்தால் எந்தெந்த ஆவணங்களை எந்தெந்த வகையில் பெற முடியுமென்ற ஆலோசனைகளையும் உதவிகளையும் செய்வார்களாம். அவர்களுக்கு அழுவதற்குப் பெரும்பணம் வேண்டுமே..?
வங்கிக்கணக்கு முடக்கப்பட்டதால் சம்பளப்பணம் கணக்கில் வரவில்லை. வங்கிக்குச் சென்றேன். லைசன்ஸ் செல்லாமல் போனதால் வழிப்பறி கொள்ளையர்களைப்போல சாலையில் நிற்கும் காவலர்களுக்கு அடிக்கடி தண்டம் அழவேண்டியிருந்தது.

வங்கி வாசலில் அரைக்கிலோமீட்டருக்கு நீண்டிருந்தது வரிசை. குடியுரிமை எண்ணை வங்கிக்கணக்கோடு இணைப்பதற்குக் காத்திருந்தவர்கள் அவர்கள். சர்க்கஸ் கூடாரத்தில் சாட்டைகளோடு நிற்கும் ரிங் மாஸ்டர்களைப் போல வரிசையை ஒழுங்கு படுத்தத் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் நின்றிருந்தார்கள்.
மேனேஜரைச் சந்தித்தேன். நல்ல மனிதர்தான். ஆனாலும் கைவிரித்து விட்டார். “என் கைல ஒண்ணும் இல்ல சார், கவர்மெண்ட் ஆர்டர்.. நான் என்ன பண்ண முடியும்..?” அந்த வார்த்தையின் பொருள், குடியுரிமை எண் இல்லாமல் ஒரு ரூபாய் கூட கணக்குக்கும் வராது கணக்கிலிருந்தும் எடுக்க முடியாது என்பதுதான்.

இதெல்லாம் எப்போது சரியாகும்? கையில் ஆயிரத்து இருநூறு ரூபாய் இருக்கிறது. இதைவைத்து எத்தனை நாள் ஓட்ட முடியும்..? குடும்பச் செலவுகள், மளிகைக்கடை பாக்கி, வாங்கியிருந்த கடன்களுக்கு கட்ட வேண்டிய வட்டி.. ஈ.எம்.ஐ தவணைகள்… எல்லாம் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தன. பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது. கையறு நிலையில் வாசலில் நின்றுகொண்டிருந்தேன்.
வாட்டசாட்டமாய் ஒருவன் வந்து அருகில் நின்றான். அவன் வெகுநேரமாய் என்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறான் போலும்.

“சார் நம்பர் இல்லாம ஒண்ணும் பண்ண முடியாது, உங்களுக்காக ரிஸ்க் எடுக்கறேன். மேனேஜர் நம்ம ஆளுதான்.. ஒரு பதினஜ்சு பர்சண்ட் கமிசன் குடுங்க, உங்க அக்கவுண்ட்ல இருக்கிற பணத்தை எடுத்துத் தர்றேன்.”

அட அல்லாவே, இந்த மேனேஜரும் இப்படித்தானா..?

வேறு வழியேதும் எனக்கு இருக்கவில்லை. இதுபோன்ற இடைத்தரகர்கள் நாடு முழுவதும் உருவாகி மக்களின் உதிரத்தை அட்டைப்பூச்சியைப்போல உறிஞ்சிக்கொண்டிருந்தனர். கமிசனெல்லாம் போக எழுபதாயிரம் தேறியது.

வழிகாட்டுதல் மையத்துக்கு விரைந்தேன். அங்கேயும் ஒரு நீண்ட வரிசை. வாசலில் அதே போல துப்பாக்கியேந்திய ரிங் மாஸ்டர்கள்.

இவர்களைப்பார்த்தால் போலீஸ் மாதிரியே இல்லையே?

தனியார் நிறுவனங்கள் படைகளை வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு விட்டதா..?

நீண்ட காத்திருப்புக்குப் பின்பு உள்ளே நுழைந்தேன். ‘நல்ல நாள் வரப்போகிறது’ என்ற வார்த்தைகளோடு பிரதமரின் பிரம்மாண்டமான கலர் படம் சுவற்றில் மாட்டப்பட்டிருந்தது.

என்னிடமிருந்த எல்லா ஆவணங்களையும் வாங்கி வைத்துக்கொண்டு ஒரு அடையாள அட்டையைக் கொடுத்தார்கள். அது ஒரு தற்காலிகச் சான்றிதழ். லைசென்ஸ் எடுக்கும் முன்பு கொடுக்கப்படும் எல்.எல்.ஆர் காப்பியைப்போல. இது ஆறுமாதத்துக்குச் செல்லுபடியாகும். அதற்குள் நான் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த அட்டைக்கு நான் ஐம்பதாயிரம் கட்டணம் கொடுக்கவேண்டி இருந்தது.

நிலைமை நாளுக்குநாள் மோசமாகிக்கொண்டே இருந்தது. குடியுரிமை எண் இல்லாதவர்களைப் பணியில் அமர்த்துவது சட்டவிரோதம் என்று அரசாணை வெளியிடப்பட்டது. ஒரே நாளில் கோடிக்கணக்கானோர் வேலையிழந்தனர். வழிகாட்டுதல் மையங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. சாப்பாட்டுக்குக்கூட வழியின்றி மக்கள் தெருக்களில் அலைமோதினர்.

திருட்டும் கொள்ளையும் கட்டுக்கடங்காமல் இருந்தது. ரேசன் கடைகள் கொள்ளையடிக்கப்பட்டன. ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தினந்தோறும் துப்பாக்கிச் சத்தங்கள் வெடித்துக்கொண்டே இருந்தன. ஆனாலும் போராட்டம் ஓய்ந்தபாடில்லை.

நிலைமையைக் கட்டுப்படுத்த அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டது. “முஸ்லிம்களைத் தவிர வேறு எவரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை.” ஒரு தேசத்தின் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் மானசீகமாக அநாதைகளாக்கும் அறிவிப்பு அது. வெகுண்டெழுந்து போராடிய இஸ்லாமியர்களைக் கூட்டம் கூட்டமாகச் சுட்டுக்கொன்றது இராணுவம். தெருவெங்கும் இஸ்லாமியர்களின் இரத்தம். சாலையெங்கும் இஸ்லாமியர்களின் பிணங்கள். சடலங்களை அப்புறப்படுத்தும் பணியில் பிணவண்டிகள் ஓய்வின்றி இயங்கின. சாலையில் நடக்கவே அஞ்சி இஸ்லாமியர்கள் வீடுகளுக்குள் ஒடுங்கிக் கிடந்தனர்.

தினமும் புதுப்புது அறிவிப்புகள் வந்துகொண்டே இருந்தன. இரண்டு மாதங்களுக்குள் குடியுரிமையை நிரூபிக்காவிட்டால் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்ற நோட்டீஸ் எல்லோருக்கும் வந்ததுபோல எனக்கும் வந்தது.

எனக்கென்று இருப்பது ஒரேயொரு வீடு. அதையும் பிடுங்கி வாயில் போட்டுக்கொள்ள இந்த அரசு விரும்புகிறதா..?

குடியுரிமை எண் இல்லாதவர்களுக்கு வீடுகளை வாடகைக்கு விடுவது, வீடுகளில் தஞ்சம் கொடுப்பது, போன்றவை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டதால் வாடகை வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட இஸ்லாமிய மக்கள் ஆடுமாடுகளைப்போல தெருவில் திரிந்தனர். தெருவில் ஆங்காங்கே குவிந்து கிடந்த அவர்களின் உடைமைகளை சமூக விரோதிகள் கொள்ளையடித்தனர். இருக்கும் ஆவணங்களைக் கையில் வைத்துக்கொண்டு அரசு அலுவலகங்களில் நாட்கணக்கில் வாரக்கணக்கில் இஸ்லாமியர்கள் சாப்பாடு தண்ணீர் இன்றிக் காத்துக் கிடந்தனர். ஒட்டுமொத்த சமூகமும் வரிசையில் நிற்கிறது.

பிர்தவுஸ் மொத்தமாக நம்பிக்கை இழந்து விட்டாள். இறந்து பதினைந்து வருடம் ஆகிவிட்ட அவளது பெற்றோர்கள் படிக்காதவர்கள். எந்த ஆவணங்களைக் காட்ட முடியும்..?

என்னுடைய தந்தைவழி ஆவணங்கள் எதாவது கிடைத்தால் குடும்ப வரைபடத்தின் மூலம் இருவருக்கும் குடியுரிமை கிடைக்கும் என்று யாரோ சொன்னது கொஞ்சம் ஆசுவாசத்தைத் தந்தது.
அப்பாவின் பூர்வீகம் கேரள எல்லையில் இருக்கிற அனுப்பூர் என்ற கிராமம். ஐந்தாம் வகுப்பு வரை படித்த அவர் அறுபதாண்டுகளுக்கு முன்பே சிறுவனாக இருக்கும்போதே தமிழகத்தில் குடியேறிவிட்டார். அவர் மறைந்தும் இரண்டாண்டுகள் ஆகிவிட்டது. இப்போது சென்று தேடினால் அவரது பள்ளிச்சான்றிதழ் கிடைக்குமா கிடைக்காதா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் சென்று தேடுவதைத் தவிர வேறு எந்த வாய்ப்பும் எனக்கில்லை.

அரசு அலுவலகங்கள் தொட்டதுக்கெல்லாம் காசு கேட்குமே..?

பிர்தவுசின் கழுத்தில் காதில் இருந்த நகைகளை விற்று கொஞ்சம் பணம் தேறியது. எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம் என்பதுபோல அடிமாட்டு விலைக்குத்தான் கேட்டார்கள். பேரம் பேசுவதற்கான நேரமோ வாய்ப்போ இல்லை. கேட்ட விலைக்கு விற்றுவிட்டுக் கிளம்பினேன்.

ஊருக்குள் நுழையும்போதே என் நம்பிக்கை சுத்தமாக வடிந்துவிட்டது. அப்பகுதி, வளர்ச்சியின் வாசனை கூட எட்டிப்பார்க்காத குக்கிராமமாக இருந்தது. இன்றைய காலகட்டத்திலேயே இந்த ஊர் இப்படிப் பின்தங்கிக் கிடக்கிறதே.

அறுபதாண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்திருக்கும்?

அப்பா படித்த பள்ளிக்கூடம் இருக்குமா? இருந்தாலும் கூட ஆவணங்கள் இருக்குமா? ஆயிரம் கேள்விகள் என் மண்டைக்குள் கரையான்களைப்போல அரித்தன.
கண்ணில் தென்பட்ட எல்லோரிடமும் பேசினேன், வீடு வீடாக விசாரித்தேன். யாருக்குமே அப்பாவைப்பற்றியோ தாத்தாவைப்பற்றியோ எதுவுமே தெரியவில்லை. தாத்தா வெளியேறிய காலத்திலேயே இந்தக் கிராமத்தின் பெரும்பாலான மக்கள் வெளியேறிவிட்டிருந்தனர். எஞ்சிய ஏழெட்டுக் குடும்பங்களின் இரண்டாவது மூன்றாவது தலைமுறை வாரிசுகள்தான் இப்போது அங்கே வாழ்கின்றனர்.

அறுபதாண்டுகளுக்கு முன்பு அங்கு வாழ்ந்த ஒரு சிறுவனைப்பற்றி யாருக்குதான் தெரியும்?

மூன்று நாள் அலைந்து திரிந்ததில் ஒருவழியாக அந்தப் பள்ளிக்கூடத்தைக் கண்டுபிடித்து விட்டேன். இப்போதும் செயல்பட்டுக்கொண்டுதான் இருந்தது. ஆனால் பழைய ஆவணங்கள் எல்லாம் அங்கிருந்து ஐம்பது கிலோமீட்டர் தொலைவிலுள்ள நகராட்சி அரசு ஆவணக்காப்பகத்தில்தான் கிடைக்கும் என்று சொல்லிவிட்டார்கள். ஓடினேன்.

அறுபதாண்டுகளுக்கு முந்தைய ஆவணங்களெல்லாம் எடுக்க முடியாது என்றார் அதிகாரி. கொஞ்சம் பணம் கொடுத்தேன். தேடிப்பார்க்கிறேனென்று இரண்டு வாரம் கழித்து வரச்சொன்னார். நான்குநாட்கள் கால்போன போக்கில் சுற்றிக்கொண்டு ஆவணக்காப்பக அலுவலக வாசலிலேயே படுத்துக் கிடந்தேன். என் நிலையைப் பார்த்து பரிதாபப்பட்ட அதிகாரி, இன்னும் கொஞ்சம் பணம் வாங்கிக்கொண்டு சான்றிதழைக் கொடுத்தார்.

அதுவும் அசலான மாற்றுச் சான்றிதழ் அல்ல. அப்பா அந்தத் தேதியில் அங்குதான் படித்தார் என்று நிரூபிக்கும் பதிவேட்டின் நகலோடு ஒரு கடிதத்தையும் ஆவணக்காப்பகத்தின் முத்திரை வைத்துக் கொடுத்திருந்தார். அதைக் கையில் வாங்கியதும் என்னையறியாமல் உடைந்து அழுதேன். ஏதோ பெரிய பாரம் குறைந்தது போல இருந்தது. ஊருக்குக் கிளம்பினேன்.

அன்றைய நாளை என்னால் மறக்கவே முடியாது. இரவு பத்து மணி இருக்கும். முபீனா தூங்கியிருந்தாள். பிர்தவுஸ் ஓயாமல் அழுதுகொண்டே இருந்தாள். நான் சொல்லும் எந்த ஆறுதலும் அவளைச் சமாதானப்படுத்தப் போவதில்லை. நாட்டில் நடக்கின்ற நிகழ்வுகள் குறித்து அவளுக்கும் தெரியும்தானே..?

இஸ்லாமியர்களைக் கூட்டம் கூட்டமாகக் கொண்டுபோய் முகாம்களில் அடைக்கின்ற செய்திகள் தினந்தோறும் வந்துகொண்டுதான் இருந்தது.
எங்களது கடைசி நம்பிக்கையும் அன்று காலையில் உடைந்து போயிருந்தது. வழக்கம்போல நீண்ட வரிசையின் காத்திருப்புக்குப் பின்புதான் அந்த அதிகாரியைச் சந்தித்தோம். அங்குதான் எங்கள் நம்பிக்கையின்மீது இடி விழுந்தது. மாதக்கணக்கில் அலைந்து திரிந்து வாங்கிவந்த சான்றிதழையும் உள்ளூர் வி.ஏ.ஓ விடம் வாங்கியிருந்த முத்திரையுடன் கூடிய குடும்ப மரம் வரைபடமும், (அதற்கும் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்திருந்தேன்.) குடியுரிமைச் சான்றுக்கு ஆவணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்ற பதிலால் சுக்குநூறாக உடைந்து போனோம்.

முகாமுக்குள் எங்களை இழுத்துச் செல்வதுபோன்ற காட்சி மனக்கண்ணுக்குள் தோன்றி மறைந்தது.

“அட அல்லாவே, இந்தச் சைத்தானுக எங்கள நரகத்துல தள்ளுறானுகளே.. நீதான் கேக்கனும் ரஹ்மானே..!!”

மார்பின்மீது தொம் தொம்மென்று அடித்துக்கொண்டு கதறினாள் பிர்தவுஸ்.

பயந்துபோன முபீனா ஒரு பக்கம் கத்திக்கொண்டிருந்தாள். எதுவுமே செய்யமுடியாத கையறு நிலையின் வலி எனக்குள்ளும் வெடித்துக் கிளம்ப தலையிலடித்துக்கொண்டு அழுதேன். அங்கேயே தற்கொலை செய்துகொண்டு சாகப்போவதாகச் சொல்லி அரற்றினேன். இந்தக்காட்சிகளைப் பார்த்து கூட்டம் சேர்ந்த மக்கள் ஆவேசமடைந்து ஆளாளுக்குப் பேச ஆரம்பித்தார்கள். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த அதிகாரி இறங்கிவந்தார்.

“இங்க பாருங்க.. இந்த டாக்குமென்ட்ச அப்ரூவ் பண்ண எனக்கு அதிகாரம் இல்ல, அடுத்த வாரம் பெரிய அதிகாரி வருவாரு.. அப்ப வந்து அவர்ட்ட பேசிப்பாருங்க..” என்றார். இவர்களை நொந்து என்ன பயன்? இந்த அதிகாரிகளெல்லாம் வெறும் பொம்மலாட்டப் பொம்மைகள். இவர்களை ஆட்டிவைக்கும் நூல் வேறெங்கோ அமர்ந்திருக்கிறது.


காலையில் நடந்த சம்பவத்திலிருந்து இன்னும் யாருமே வெளியே வரவில்லை. வீடே இழவு வீடாய்க் கிடக்கிறது. அழுதழுது ஓய்ந்துபோய் பிர்தவுசும் தூங்கிப்போனாள். நானும் அப்போதுதான் கண்ணயர்ந்தேன். திடீரென ஏதோ சப்தம் கேட்டுத் திடுக்கிட்டு எழுந்தேன். தடதடவென கதவு தட்டப்பட்டது. பதறியடித்து எழுந்து கதவைத் திறந்தேன். சில அதிகாரிகளுடன் போலீஸ் வந்திருந்தது. வீட்டின் பத்திரம் ரத்தாகியிருந்ததால் ஜப்தி செய்வதாகச்சொல்லி எங்களை இழுத்து வெளியே தள்ளினார்கள். அழுது புரண்டு கெஞ்சிய எங்கள் கதறல் அவர்களைக் கொஞ்சம்கூட அசைக்கவில்லை. வீட்டைப்பூட்டி சீல்வைத்துவிட்டுச் செல்லும்போது ஒருவன் சொன்னான், “இப்ப குடும்பத்தோட தற்கொலை பன்னிட்டுச் சாவு..”
வாழ்ந்த வீட்டை ஒரே வினாடியில் பிடுங்கிக்கொண்டு எங்களை நடுத்தெருவில் நிறுத்தியவர்களைச் சபித்தேன். வேறென்ன செய்யமுடியும். அழுது அழுது தொண்டையெல்லாம் வறண்டு போய் விட்டது.

எங்களைப் போன்றே நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தெருவில்தான் இருக்கிறது. கிடைத்த இடத்தில் சுருண்டு படுத்திருக்கிறார்கள்.
கால் வலிக்கும் வரை நீண்டதூரம் நடந்தோம். இதுவரை நடந்த நிகழ்வுகளெல்லாம் மூளைக்குள் திரும்பத்திரும்ப வந்து இம்சித்தது. ஒரு மேம்பாலத்தின் மீது ஏறி நடந்தோம். ‘கால்வலிக்குதுங்க..’ என்றாள் பிர்தவுஸ். பாலத்தின் ஓரத்திலிருந்த பாதசாரிகள் நடைபாதையின் முடிவில் இருந்த ஒரு மூலையில் சென்று அமர்ந்தோம். மடியில் முபீனா படுத்துக்கொண்டாள். பிர்தவுசும் அழுவதை நிறுத்தியிருந்தாள்.

யாரும் யாரிடமும் ஒருவார்த்தைக் கூட பேசவில்லை. பேசினால் உடைந்துவிடும் வாய்ப்புகளே அதிகம். இந்த அமைதி நீடிக்கவேண்டும் என்றுதான் நானும் விரும்பினேன். என் மடியில் தூங்கிக்கொண்டிருந்த முபீனாவின் கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்தாள் பிர்தவுஸ். சட்டென எழுந்து கைப்பிடிச்சுவறைத்தாண்டிக் குதித்தாள். ”ஏ.. பிர்தவுசு..!!” கத்திக்கொண்டு எழுந்து எட்டிப் பார்த்தேன். கீழே இரயில் தண்டவாளத்தில் இரத்த வெள்ளத்தில் சிதைந்து கிடந்தாள்.
தூரத்தில் ஒரு டார்ச் லைட் வெளிச்சம் விட்டுவிட்டுப் பாய்கிறது. இது எழிலன் தான். இது சங்கேதக் குறியீடு. என் பேண்ட் பாக்கெட்டிலிருந்து டார்ச்சை எடுத்து நானும் அதேபோல இரண்டு முறை அழுத்தி நான் இங்கு இருப்பதை உணர்த்தினேன். பார்த்துவிட்டான் போலும். இங்குதான் வருகிறான்.

பிர்தவுஸ் இறந்ததிலிருந்து இன்றுவரை எழிலன்தான் எனக்கு அடைக்கலம் கொடுத்துக்கொண்டு இருக்கிறான். இப்போதுகூட இங்கிருந்து ஒரு லாரியில் சரக்கோடு சரக்காக மறைந்துகொண்டு நான் சென்னை துறைமுகம் செல்லவேண்டும். அங்கிருந்து கப்பலில் மலேசியா சென்றுவிட வேண்டும். அதுதான் திட்டம்.
லாரி புக்கிங் அலுவலகத்திலேயே எனக்கென்று ஒரு காலிப்பெட்டி ஏற்றப்பட்டிருக்கும். அதற்குள் நான் சென்று ஒளிந்துகொண்டால் போதும். லாரி டிரைவரிடமும், துறைமுக நண்பர்களிடமும் பேசி எல்லா ஏற்பாடுகளையும் செய்தது எழிலன் தான். மலேசியாவில் நான் இறங்கியதும் யாரைப் பார்க்கவேண்டும், என்னென்ன செய்யவேண்டும் என்று அவன் சொல்லிக்கொடுத்தவை எல்லாம் எனக்குள் திரும்பத்திரும்ப ஓடிக்கொண்டிருந்தது.
“தங்கம்.. எந்திரிடா போக

லாம்..” முபீனாவை எழுப்பினேன். எழிலன் அருகில் வந்து விட்டான். கட்டிப்பிடித்து அழுதேன். “ஸ்ஸ்ஸ்.. சத்தம் போடாதே.. சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கில்ல” அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே சரசரவென தூரத்தில் சப்தம் கேட்டது. எல்லாத் திசைகளிலும் இருந்து டார்ச் வெளிச்சம் நாங்கள் இருக்கும் திசைநோக்கி நகர்ந்து வருகிறது.


“போலீஸ்”


“சுத்தி வளச்சிட்டாங்கடா.. இப்ப என்னடா பன்றது..?”


எழிலன் குரலில் பதட்டம் தெரிந்தது. எனக்கும் தான். ’அகப்பட்டுக்கொண்டால் முகாமில் அடைத்து விடுவார்கள். நான் வேறு முகாம், முபீனா வேறு முகாம். இனிமேல் அவளைப் பார்க்கவே முடியாது. அரக்கர்களிடம் சிக்கிக்கொண்டால் என் மகளை என்ன செய்வார்கள்..?’ பதட்டத்தில் எனக்குள் ஆயிரக்கணக்கான சிந்தனைகள் தோன்றி மறைந்தன. ஒரே வழிதான் இருக்கிறது.


“எழிலா.. முபீனாவ உன்னோட பொண்ணுன்னு சொல்லி உன்னோடயே கூட்டிட்டு போயிடுடா.. வேற வழி இல்லடா..”

அவனுக்கும் அதுதான் சரியெனப் பட்டது.


”சரிடா..நீ..?”


“அது அல்லா விட்ட வழி..”
சட்டெனக் கட்டிக்கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதான்.


“அதுக்கெல்லாம் நேரமில்ல.. பக்கத்துல வந்துட்டாங்க..

முபீன் குட்டி நான் சொல்றத கேளு.. அவங்கல்லாம் வந்து கேட்டா எழில் மாமாதான் உன்னோட அப்பான்னு சொல்லனும்.. சரியா..” படபடப்பில் குரல் தழுதழுத்தது.


“நான் சீக்கிரம் திரும்பி வந்திடுவேன்.. அதுவரைக்கும் எழில் மாமாகூடதான் நீ இருக்கணும்.. சரியா..?” சொல்லும்போதே உடைந்து அழுதேன். அவளும் அழுதாள்.


“நான் போமாட்டேன்..

உங்கூடவே வர்ரேன்த்தா..”


“சொன்னா கேளும்மா.. அத்தா சீக்கிரம் வந்திடுவேன்..” என் குரலைக் காதில் வாங்காமல் அழுதுகொண்டே இருந்தாள்.


“நா போமாட்டேன்.. நா போமாட்டேன்..”


திரும்பத்திரும்ப அதையே சொல்லிக்கொண்டிருந்தாள். அவர்கள் நெருங்கி விட்டார்கள். எனக்கு படபடப்பு அதிகரித்துக்கொண்டே சென்றது. வாயை மூடாமல் அதையே சொல்லி அழுது அரற்றினாள். அவர்கள் மிக அருகில் வந்து விட்டார்கள். எனக்கு வேறு வழி தெரியவில்லை. மனதைக் கல்லாக்கிக்கொண்டேன். அந்தப் பச்சிளங் குழந்தையின் முகத்தில் இரண்டுமுறை ஓங்கி அறைந்தேன்.


“அத்தா..”


என்றபடி அறுபட்ட வாழைக்குலையைப்போல சரிந்தவளைத் தாங்கிப்பிடித்தேன்.

கன்னங்களில் மாற்றி மாற்றி முத்தம் கொடுத்தேன். ஈ எறும்பு கடிக்காமல் பொத்தி வளர்த்த மகளை அடித்து வீழ்த்திவிட்டேனே. என்னை மன்னித்துவிடு என் செல்லமே. எழிலன் கையில் முபீனாவைக் கொடுத்துவிட்டு கிப்லாவை நோக்கி மண்டியிட்டு அமர்ந்தேன்.


“யா அல்லா என்னோட நெலம யாருக்குமே வரக்கூடாது ரப்பே..” காடே அதிர்வதுபோலக் கதறி அழுதேன். கனமான பூட்ஸ் கால்களில் ஒன்று என் முதுகில் ஓங்கி மிதித்தது. துப்பாக்கியின் பின்கட்டை என் தலையில் மோதியதில் நிலைகுலைந்து விழுந்தேன். பின்பக்கமாக என் கைகள் கட்டப்படுகின்றன. முபீனாவைத் தூக்கிக்கொண்டு எழிலன் சென்றுகொண்டிருப்பது டார்ச்லைட் வெளிச்சத்தில் தெரிந்தது. அப்படியே மயங்கிப்போனேன்.
வண்டியிலிருந்து இறங்கியபோது சூரியன் உச்சியிலிருந்தது. ஒரு நீண்ட வரிசையில் கடைசி ஆளாய் நிற்கவைக்கப்பட்டேன். மனம் முபீனாவைச் சுற்றியே ஓடிக்கொண்டிருந்தது. சிமெண்ட் சீட் வேயப்பட்ட நீளமான ஒரு கொட்டகைக்கு முன்பு நின்றுகொண்டிருக்கிறேன். ஒவ்வொருவராகப் பதிவு செய்யப்பட்டு, தகடாலான அடையாள அட்டையை வளையத்தோடு கழுத்தில் மாட்டி உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அடுத்தது நான் தான். அவ்வளவுதான். எல்லாமே முடியப்போகிறது. இனி மரணிக்கும் வரை விலங்குகளைப்போல இங்கேதான் கிடக்க வேண்டும். இந்தக் கொட்டகையில் எனக்குப் பெயரில்லை. எண் பொறிக்கப்பட்ட அடிமை விலங்கு நான். என் தலையில் அடையாள அட்டை வளையத்தைப் பொருத்த வந்தவன், ஏதோ சப்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். அவன் கண்களில் ஒருவித மிரட்சி தெரிந்தது. அவன் பார்த்த திசையில் நானும் பார்த்தேன். ’’ஒரு பெரிய மக்கள் திரள் முகாமின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளேவர முயற்சித்துக் கொண்டு இருக்கிறது., கதவையே பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருக்கிறேன்.


ஓவியம்: க.பிரபாகரன்

Related Posts