அரசியல்

மே தின போராட்டங்களும் வரலாறும்…

இன்றைய மாணவர்கள் நாளைய தொழிலாளர்கள் ஆதலால் மாணவர்களுக்கு மே தினத்தின் போராட்ட வரலாறும், மனித சமூக வரலாறும் அவசியமாகிறது.

மேதினவரலாறு:

இயந்திரத்தனமான வாழ்க்கையில் சுழன்றுக் கொண்டிருந்த தொழிலாளர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியைக் காண வேண்டும் என்றால், அவர்களுக்கு போதுமான ஓய்வும், உறக்கமும் அத்தியாவசியமானது. தொழிலாளர்களின் சிந்தனை வளத்திற்கும், கலாச்சாரப்பூர்வமான செயல்பாட்டிற்கும்,ஆரோக்கியமான வாழ்விற்கும் நிபந்தனையாக அமைந்தது 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு.8 மணி நேர உறக்கம் இவையே தொழிலாளர்களின் முதல் தேவையாக இருந்தது.

முதலாளித்துவம் வளர்ந்த பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என உலகம் முழுவதும் முதலாளித்துவம் எட்டிப் பார்த்த நாடுகளிளெல்லாம் தொழிலாளிகள் 14, 18, 20 மணிநேரம் என்று ஓய்வு இல்லாமல் சுரண்டப்பட்டனர்.”அமெரிக்காவில்1880வாக்கில் தொழிலாளிகளின ஆயுட் காலம் வெறும் 30 வருடம் மட்டுமே” இதிலிருந்தே தொழிலாளிகளை எந்த அளவிற்கு அட்டையாய் உறிஞ்சினர் என்பதை உணரலாம்.தொழிற்புரட்சி கண்ட இங்கிலாந்தில் தொழிலாளர்களின் நிலை படு பாதாளத்தில் இருந்தது.வயது வித்தியாசம்,பால் வித்தியாசம் இல்லாமல் அனைவரும் 16,18, மணி நேரம் உழைக்க வேண்டியிருந்தது.

ஏன் மூன்று வயது குழந்தைகள் கூட 12 மணி நேரம் உழைக்க நிர்பந்திக்கப்பட்டனர். சோர்ந்து தூங்கி விடும் குழந்தைகளுக்கு சாட்டையடியே கூலியாக கிடைத்தது.தொழிலாளிகளின் இத்தகைய நிலையை எதிர்த்து 1836 இல் உருவான இயக்கமே “சாசன இயக்கம்”.இந்த இயக்கமே உலகின் பெருந்திரள் தொழிலாளிகளை கொண்ட முதன்மையான அரசியல் இயக்கமாக உருவெடுத்தது.

சாசன இயக்கம் ஆறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது.அவற்றில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை, அனைவருக்கும் ஓட்டுரிமை,பாராளுமன்றத்தில் ஏழை – பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் பங்கேற்பு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து 10 லட்சம் கையெழுத்துக்களை பெற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது. ஆனால் பிரிட்டீஸ் பாராளுமன்றம் எந்தவிதமான விவாதமும் இன்றி கோரிக்கைகளை தள்ளுபடி செய்து விட்டது.தொழிலாளிகளின் ஒன்றுபட்ட போராட்டம் வளர்ந்து வருவதை கண்ட பிரிட்டன் முதலாளித்துவ வர்க்கம் பெயரளவுக்கு 1847இல் 10 மணிநேர வேலை சட்டத்தை கொண்டு வந்தது.

இது தொழிலாளிகளின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றியாக அமைந்தது.இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து                     அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது.இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன் வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது.அத்தோடு  மே 1,1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது.இவ்வியக்கமேமே தினம்பிறப்பதற்கு அடிப்படையாக அமைந்தது.

மார்க்சும் – ஏங்கெல்சும் இங்கிலாந்தில் இருந்த போது சார்ட்டிஸ்டுகளுடனும், பிரான்ஸ்,ஜெர்மன் மற்றும் இதர நாட்டு தொழிலாளர் குழுக்களுடனும் தொடர்பு கொண்டிருந்தார்கள். இந்நிலையில் 1847 ஆம் ஆண்டு நீதியாளர் கழகம் என்ற பெயரில் செயல்பட்டு வந்த அமைப்பு மார்க்ஸ் – ஏங்கெல்சுடன் தொடர்பு கொண்டு அவர்களை தங்களது அமைப்பில் இணையும்படி கேட்டுக் கொண்டதின் அடிப்படையில் மார்க்சும் – ஏங்கெல்சும் இவ்வமைப்பில் இணைந்து கொண்டதோடு நீதியாளர் கழகமாக இருந்த இவ்வமைப்பின் பெயரை கம்யூனிஸ்ட் லீக் என்று மாற்றினர். அத்துடன் நீதியாளர் கழகத்தின் உறுப்பினர் அட்டைகளில் அனைத்து மனிதர்களும் சகோதரர்களே என்ற கோஷம் இடம் பெற்றிருந்ததை அகற்றி விட்டு

 உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்ற புரட்சிகரமான முழக்கத்தை முன் வைத்தனர்.கம்யூனிஸ்ட் லீக்கீன் அறைகூவலுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டதே மார்க்ஸ்-ஏங்கெல்சின்கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கைஎன்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பின்  வேண்டுகோளான 8 மணிநேர வேலை கோரிக்கையை நிறைவேற்றக்கூடிய முறையில் நாடு தழுவிய வேலை நிறுத்தங்கள் மே 1,1886 ஆம் ஆண்டு அமெரிக்க தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது.இந்த வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணிபுரிந்த தொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர்.

தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால்,அமெரிக்க பெரு நிறுவனங்களின் புகைபோக்கிகள் அன்றைய தினம் ஓய்வெடுத்தன. ஆலைகளின் பேரிரைச்சல் நின்று போனது;இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை.வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது.மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.

சிக்காகோவில் வேலை நிறுத்தப்போராட்டம் சூடுபிடித்தது.மே 3,1886 அன்று மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின் வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர்.

எட்டு மணிநேர வேலை செய்யும் உரிமை கோரி,போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்,சமாதானக் கொடியான வெள்ளைக் கொடி ஏந்திச் சென்றார்கள்.தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்க ஆளும் வர்கம் காவல் துறையை ஏவி திட்டமிட்டே கலவரத்தை உருவாக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியது.இதில் பல தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். குண்டடிபட்ட தொழிலாளர்களின் உடலில் இருந்து வடிந்தோடிய இரத்தம், வெள்ளைக் கொடியை சிவப்பாக்கியது.அன்றிலிருந்து, செங்கொடியானது உலகம் முழுவதும் வாழும் உழைக்கும் மக்களின் கொடியானது.இங்கு இடம்பெற்ற கலவரத்தில் 4 தொழிலாளர்கள் போலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர்.

இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை தொழிலாளர்கள் நடத்தினர் . ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது.இந்நேரத்தில் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர்.இவ்வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே
மேத்தீவ்ஸ் டிகேன் என்ற ஒரு போலீஸ்காரர் பலியானார்.பின்னர் போலீசார் படை கூட்டத்தினர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தித்தியது.இதில் எவ்வளவு பேர் கொல்லப்பட்டனர் என்பது இன்றைக்கும் வெளிவராத மர்மமாகவே இருக்கிறது.தொழிலாளர்களின் இரத்தத்தால் ஹேமார்க்கெட் சதுக்கமே செந்நிறமாகியது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து தொழிலாளர் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடுக்கப்பட்டது.இந்த வழக்கு விசாரணை ஜூன் 21, 1886 ஆரம்பமாகியது.இறுதியில்  நவம்பர் 11, 1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் ஆல்பர்ட் பார்சன்ஸ்,ஆகஸ்ட் ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங்கல், அடால்ப் பீஸ்சர் ஆகிய நால்வரும் தூக்கிலிடப்பட்டனர்.இவர்கள் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக 21 வயதேயான இளைஞர் லூயிஸ் லிங், டைனமைட் என்ற வெடி பொருளை வாயில் கடித்து தற்கொலை செய்துக் கொண்டார்.இந்நிகழ்ச்சி உலகையே குலுக்கியது. இத்தியாகிகளின் வீரம் இன்றைக்கும்,என்றைக்கும் அமெரிக்காவையும், முதலாளித்துவ உலகத்தையும் கலங்கடித்துக் கொண்டே இருக்கும்.

நவம்பர் 13,1887 அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது.நாடு முழுவதும் 5 லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது.

சிகாகோ தியாகிகளின் தியாகம் அமெரிக்க தொழிலாளிகளை மீண்டும் எழுச்சி கொள்ளச் செய்தது.எஞ்சியிருந்த தொழிலாளர் தலைவர்களை காப்பாற்றிட அமெரிக்க தொழிலாளர் வர்க்கம் வீதியில் இறங்கியது; தொடர்ந்து கண்டன கூட்டங்களையும், ஊர்வலங்களையும் நடத்தி அரசை நிர்ப்பந்தித்து வந்தது.இவ்வாறு உலகெங்கும் நடந்த தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தால் நிலைகுலைந்த அரசு அவர்களின் கோரிக்கையை1890ஆம் ஆண்டு ஏற்றது.தொழிலாளர்களின் இந்த வெற்றியை குறிக்கும் விதத்தில் மே முதல் நாள் தொழிலாளர் தினமாக மே தினம் என்று உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஜார் மன்னரின் ஆட்சியின் கீழ் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள்.இங்கும் 1895 – 1899க்கு இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. 1896 ஏப்ரல் மாதத்தில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளிகளின் நிலைமை குறித்து விரிவாக எடுத்துரைத்திருந்ததுடன் ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் – அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். தொழிலாளிகளின்  8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே 1917- ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.தந்தை பெரியாரும், சிங்காரவேலரும் தமிழகத்தில் மே தினத்தைக் கொண்டாடிய பெருமைக்குரியவர்கள்.இந்தியாவில் சென்னையில்தான் முதன் முதலில் மே தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதி ம.சிங்காரவேலர் 1923ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினர்.சென்னையில் மே தினத்தை நினைவுபடுத்தும் விதமாக அதற்கு நினைவுச் சின்னம் அமைத்தவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர்.இந்த நினைவுச் சின்னம் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப் பூங்காவில் உள்ளது.ஒவ்வொரு மே நாளன்றும் தொழிலாளர்கள் இங்கு வந்து மலர் அஞ்சலி செலுத்துகின்றனர்.

முதலாளித்துவ ஆட்சியில் பறிக்கப்படும் தொழிலாளர்களின் உரிமைகள்:

                மத்திய அமைச்சரவை சத்தமேயில்லாமல் அனைத்து துறைகளிலும் கால-வரம்பு வேலை ஒப்பந்தத்தை  அமல்படுத்துவதற்கு இசைவு தெரிவித்திருக்கிறது.பன்னாட்டு கம்பெனிகள் குறைந்த கூலி கொடுத்து கொள்ளை இலாபம் அடிப்பதற்கு ஏதுவான வகையில் தான் இந்தியா போன்ற “முதலாளித்துவநாடுகளில் தொழிலாளர் உரிமைகளை நீர்த்துப்போகச் செய்யும்படி ஒப்பந்தத் தொழிலாளர் முறை, தொழிற்சங்க உரிமை இரத்து, தொழிலாளர் சட்ட விதிகள் பொருந்தாத சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்று பல அடுக்குச் சுரண்டல் முறை இந்தியத் தொழிலாளிகள் மீது தொடுக்கப்பட்டு வந்தது.இதை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக ஒப்பந்தத் தொழிலாளிக்கும் கீழாக நிரந்தர தொழிலாளிகளை ஒழிக்கும் விதத்தில் வேலை வரம்பு ஒப்பந்தம் கொண்டுவரப்படுகிறது.இந்திய தொழிலாளி வர்க்கத்தின் மீதான ஆகக் கேடான சுரண்டல் முறை இது.

மத கலவரங்கள் திட்டமிட்டே நடக்கும் போது மதசார்பற்ற நாடு என்று கூறுவதில் என்ன பயன்?நான் விரும்பும் உணவை கூட உண்ண முடியாது எனும்போது உணவு உரிமையால் என்ன பயன்?மக்கள் தொகையில் பாதிப்பேருக்கு எழுத்தறிவே இல்லாத போது எழுத்துரிமையால் என்ன பயன்?எழுத்தாளர்கள் படுகொலை தொடர்ந்து நடக்கும் போது கருத்துரிமையால் என்ன பயன்?வேலை வாய்ப்பே இல்லாத போது இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சென்று வேலை செய்யும் உரிமையால் என்ன பயன்?உள்ள தொழில்களே நசிந்து கொண்டிருக்கும் போது எங்கு வேண்டுமானாலும் தொழில் நடத்தும் உரிமையால் என்ன பயன்?விவசாயமே இல்லாத போது விவசாய நாடு என்று கூறுவதில்,என்ன பயன்?பட்டினியால் சுருண்டு கிடப்பவனுக்கு வாழ்வுரிமையால் என்ன பயன்?

மக்கள் தமக்குத் தெரிந்த முறையில் இந்தக் கேள்வியை எழுப்பிக் கொண்டு தானிருக்கிறார்கள்.உணவு, தண்ணீர்,சாலை,கல்வி,மின்சாரம், மருத்துவம் வேலை. என எதையுமே வழங்க முடியாத வாக்குரிமையால் என்ன பயன்?என்று தேர்தலைப் புறக்கணிக்கிறார்கள்.பொருளாதாரச் சுரண்டல் காரணமாக நீ வழங்கும் எந்தச் சுதந்திரத்தையும் பணமில்லாத மக்களால் பயன்படுத்த இயலவில்லை” என்று சொன்னால்”பொருளாதார ஏற்றத்தாழ்வும் சுதந்திரத்தின் ஒரு அங்கமே”என்று பதில் சொல்கிறது முதலாளித்துவம்.

இந்திய இளைஞர்களின் நிலை:

இந்தியா அதிக இளைஞர்களை கொண்ட நாடு;ஒரு காலத்தில் இந்தியாவின் இளம் தலைமுறை மிக அரிய சொத்தாகக் கருதப்பட்டது. ஆனால் தற்போது இளம் தலைமுறையினரின் எதிர்காலம் குறித்தும், அவர்களின் பொருளாதார பங்களிப்பு எப்படி இருக்கும் என்பது குறித்தும் சந்தேகங்களும் கேள்விகளும் எழத்தொடங்கிவிட்டன.இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களில் 50%                       25 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கின்றனர்.மக்கள் தொகையில் 44%                        35 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர்.இவர்கள் வேலை தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.உலக வங்கியின் அறிக்கையின் படி,ஒவ்வொரு மாதமும் வேலை தேடுவோரின் எண்ணிக்கை        13 லட்சம் அதிகரிக்கிறது.இந்தியா தனது வேலைவாய்ப்பு விகிதத்தை தக்கவைத்துக் கொள்ள ஒவ்வொரு ஆண்டும் 81 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று உலக வங்கி அறிவுறுத்தியுள்ளது. நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தின் அளவு கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்து விட்டது.இந்த வேலையின்மை அளவு என்பது கடந்த 1972-73-ம் ஆண்டு நாட்டில் நிலவியதற்கு ஒப்பாகும்.பேராசிரியர் கே.ஜோதி சிவஞானம் கூறும்போது மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (சுருக்கமாக பொருளாதார வளர்ச்சி) 1 சதவீதம் குறைந்தால் அதனால் 60 லட்சம் வேலைவாய்ப்புகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் குறையும் என்பது    அவரது கருத்து.

இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 2019 அக்டோபர் மாதத்தில் 8.5% அதிகரித்துள்ளது.இது 2016ம் ஆண்டு ஆகஸ்டுடன் ஒப்பிடுகையில் அதிகமாகும் என்று இந்தியப் பொருளாதாரத்திற்கான கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ) தெரிவித்துள்ள தகவல் மூலம் தெரியவந்துள்ளது.சிஎம்ஐஇ தரவுகளின் படி நகர்ப்புற வேலையின்மை விகிதம் 8.9% ,ஊரக வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.3%.மாநிலங்களில் திரிபுரா மற்றும் ஹரியாணா மாநிலங்களில் மிக அதிகபட்சமாக 20%-க்கும் கூடுதலாக வேலையில்லாத் திண்ட்டாட்டம் உள்ளது. 

வேலையில்லாமல் இருப்பவர்கள் சட்டவிரோத காரியங்களில் ஈடுபடுவர் என்பது தவிர்க்க முடியாதது.ஆனால் அந்த நிலையை உருவாக்குவது மாநிலத்திலும், நாட்டிலும் உள்ள அரசியல் போக்கு ஆகும்.வளர்ந்த மாநிலங்களில் வேலை தேடாமல் இருப்பவர்கள் மிகக்குறைவாக இருந்தாலும் கூட, அவர்களும் அரசியல் ஆட்களுடன் கூட்டு சேர்ந்து சட்டவிரோத காரியங்களில் ஈடுபடக்கூடும்.அவர்களிடமிருந்து அரசியல் சார்ந்தவர்கள் பயனடையக் கூடும்.இந்தியாவில் எதிர்கால இளம் தலைமுறையினருக்கு இருக்கும் சவால்களும், சூழலும் சமூகத்தின் ஒற்றுமையையும், அமைதியையும் சீர்குலைப்பதாக அமையலாம்.

 இந்திய தொழிற்சங்கங்களின் நிலை:

தொழிற்சாலை சட்டம் – 1948 சட்டத்தின்படி, தொழிலாளர் சட்டப் பாதுகாப்பு வழங்குவதற்கு குறைந்தபட்சமாக மின்னூக்கி (Electricity Driven) ஆலையாக இருந்தால் 10 தொழிலாளர்களும், இல்லாவிட்டால் 20 தொழிலாளர்களும் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற வரைமுறை இருந்தது. இவ்வாறு பதிவு செய்யப்பட்ட ஆலைகள் 1948 சட்டத்தின் கீழ் அனைத்து தொழிலாளர் உரிமைகளையும் வழங்க வேண்டும்.ஆனால் இந்த தொழிலாளர் வரைமுறை தற்போது இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி மின்னூக்கி ஆலையாக இருந்தால் 20 தொழிலாளர்களும்,இல்லாவிட்டால் 40 தொழிலாளர்களும் கட்டாயம் இருக்க வேண்டும் என திருத்தப் பட்டுள்ளது. பழைய சரத்து நடைமுறையில் இருக்கும் போதே ஐம்பது தொழிலாளர்கள் வேலை பார்க்கிற பணியிடங்களில் வெறும் பத்து தொழிலாளர்கள் என வருகைப் பதிவேட்டு ஆவணத்தில் பதியப்பட்டு நலன் பறிக்கப்பட்டது.

குறிப்பாக,44 மத்திய தொழிலாளர் சட்டங்களை நான்கு வகையினமாக சுருக்குவது.பொது வேலை நிறுத்த முன்அறிவிப்பு காலக்கெடுவை 14 நாட்களில் இருந்து 44 நாட்களாக உயர்த்துவது இதுபோல தொழிலாலாளர் வேலை நேரத்தையும் தற்போது 12 மணி நேரமாக உயர்த்தியுள்ளது.தொழிற்சங்க பதிவு, ஆவணங்கள் பராமரிப்பில் சிறு தவறு இருப்பினும் சங்கப் பதிவை ரத்து செய்வது முன்பு நூறு தொழிலாளர்களுக்கு குறைவான ஆலைகளில், தொழிலாளர் பணி நீக்கத்திற்கு அரசு அனுமதி தேவையில்லை என்ற விதி இருந்தது,தற்போது இந்த எண்ணிக்கையை முன்னூறுக்கும் குறைவான தொழிற்சாலை என திருத்த உள்ளார்கள்.ஒப்பந்த தொழிலாளர் எண்ணிக்கையை உயர்த்துவது என பட்டியில் நீள்கிறது.

மேற்குறிப்பிட்ட அனைத்து சட்டத்திருத்தங்களும்  பாராளுமன்றத்தில் ஒப்புதல் ஆவதற்கு முன்பாகவே பாஜக ஆட்சி செய்கிற ஹரியானா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் அம்மாநில சட்டமன்ற ஒப்புதலின் மூலமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களிலும் இம்மாதிரியான தொழிலாளர் விரோத சட்டத்திருத்த நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொழிற்சங்கம் அமைத்துக் கொள்வதற்கான உரிமையை அரசியலமைப்புச் சட்டமும், தொழிற் தகராறுகள் சட்டமும் தொழிலாளர்களுக்கு வழங்கினாலும் அதன் அங்கீகாரத்திற்கான வழிமுறைகள் இச்சட்டங்களில் வரையறுக்கப்படாததால், தொழிற்சங்க ங்களின் அங்கீகாரத்தில் இன்று வரை சட்டச் சிக்கல் நீடிக்கிறது.”வெளியாட்கள்” எனப்படும் தொழிற் சாலையில் வேலையில் இல்லாத தொழிற் சங்கவாதிகள்,தொழிற் சங்கத்தின் உறுப்பினர்களாக ஆக  தடை விதிக்கப்பட்டுள்ளது.இது முதலாளிகளுடைய வெகு நாளைய கோரிக்கையாகும்.

நமது நாட்டில் குறிப்பாக தனியார் துறையில், ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்கும் பணியானது எவ்வளவு கடினமானது என்பது, தொழிலாளர்களுடைய உரிமைகளைப் பாதுகாப்பதற்காக தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்குத் தெரியும். தொழிலாளர்கள் ஒரு தொழிற் சங்கத்தை அமைப்பதற்காக முயன்று வருகிறார்களென கம்பெனி நிர்வாகத்திற்கு தெரிய வந்தவுடன், அந்தத் தொழிலாளர்கள் ஒழுங்கை மீறிவிட்டதாகவோ அல்லது வேறு ஏதாவதொரு காரணம் காட்டி வேலையிலிருந்து தூக்கியெறியப்படுவார்கள்.அரசாங்கத்தின் தொழிலாளர் துறை அதிகாரிகளும் தொழிலாளர்கள் தொழிற் சங்கம் அமைப்பதற்கு உதவுவதற்கு பதிலாக அவர்களைத் தடை செய்ய முயற்சிக்கிறார்கள்.இந்த முயற்சி நடக்கிறது என்பதை கம்பெனி நிர்வாகத்திற்குக் காட்டிக் கொடுப்பதன் மூலம், மேலும் பல அதிகாரிகள் தொழிற் சங்கம் அமைக்கும் முயற்சியை அழிக்கிறார்கள்.

இது கடுமையாக சுரண்டப்படும் சிறு நிறுவனங்களில் மட்டும் நடப்பதில்லை,பன்னாட்டு நிறுவனங்களிலும் இதுவே உண்மையாகும். மானேசரில் உள்ள மாருதி சுசூகி தொழிலாளர்கள்,தொழிற் சங்கம் அமைப்பதில் சந்தித்துவரும் கடுமையான பிரச்சனைகளை நமது நாட்டினுடைய தொழிலாளி வர்க்க இயக்கம் அறியும். இதே நிலை தான் சிரிபெரும்புதூரில் உள்ள உண்டாய், மறைமலை நகரில் உள்ள போர்டு தொழிலாளர்களும், பிற பன்னாட்டு நிறுவனங்களிலும் உள்ள தொழிலாளர்களும் சந்தித்து வருகிறார்கள்.இப்படி,தங்களுக்குப் பிடித்த தொழிற் சங்கத்தை அமைக்கும் உரிமை, அண்மை ஆண்டுகளில் இந்தியத் தொழிலாளர்களின் ஒரு பெரிய போராட்டக் களமாக ஆகியிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், முதலாளி வர்க்கத்தின் பிரதிநிதியாக வேலை செய்யும் மத்திய அரசாங்கம், தொழிலாளர்கள் தங்களை ஒரு தொழிற் சங்கத்தில் அணிதிரட்டிக் கொள்ளும் உரிமையை நடைமுறையில் மறுக்க வேண்டுமென்ற ஏகபோகங்கள் மற்றும் முதலாளி வர்க்கத்தின் கோரிக்கையை சட்டமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.இது தான் தொழிற் சங்கங்கள் பதிவுச் சட்டத்தில் கொண்டுவரப்பட இருக்கும் மாற்றத்தின் சாராம்சமாகும்.


தொழிற்சாலை உடமையாளர்கள் வேலை நீக்கம் செய்யவோ, மூடிவிடவோ தீர்மானித்துவிட்டால், அதைத் தடுப்பதற்கு தொழிலாளர்கள் மிகவும் கடுமையாகப் போராட வேண்டியிருக்கிறது என்பது நன்கு தெரிந்ததே. இருந்தபோதிலும், தொழிற் தகராறுகள் சட்டத்தின் இந்தப் பிரிவைப் பயன்படுத்தி சில தொழிற்சாலைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அணிதிரண்டு, தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடி வந்திருக்கிறார்கள்.

இந்தியாவில் முதலீடு செய்யும் போது, தொழிலாளர்கள் கடுமையாகச் சுரண்டப்படுவதன் மூலமும், அவர்களுடைய எல்லா உரிமைகளும் மறுக்கப்படுவதன் மூலமும், அதிகபட்ச இலாபத்திற்கு உத்திரவாதம் கொடுக்க வேண்டுமென இந்திய மற்றும் அயல்நாட்டு மிகப் பெரிய முதலாளிகளுடைய கோரிக்கைதான் இது. இந்தியாவில் முதலீடு செய்யவும், தொழிற் சாலைகளை இங்கு நிறுவ வேண்டும் என்பதற்காகவும், இந்திய மற்றும் அன்னிய பெரும் ஏகபோக முதலாளிகளைக் ஈர்க்க வேண்டுமென ஆளும் வர்க்கம் எல்லாவற்றையும் செய்து வருகிறது. இதற்கு வழி வகுப்பதற்காக, நில கையகப்படுத்தும் சட்டத்திற்கும், நம்முடைய இயற்கை வளங்களையும், சுற்றுப்புறத்தையும் பற்றிய பிற சட்டங்களுக்கும் திருத்தங்களைக் கொண்டுவர மத்திய அரசாங்கம் முயற்சிக்கிறது.தொழிலாளர்களுடைய உரிமைகள் மீதும் நடத்தப்படும் இந்தத் தாக்குதல்களுக்கு எல்லா தொழிற் சங்கங்களும், தொழிலாளி வர்க்கத்தின் அமைப்புக்களும் ஒன்றுபட வேண்டும்

இந்திய இடதுசாரி கட்சிகள் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தியதுடன் சட்டப்படியான பல்வேறு உரிமைகளையும் சலுகை களையும் தொழிலாளர்களுக்கு பெற்றுத்தருவதுடன் தொழிலாளர்களுக்கு அனுகூலமான பல சட்டங்களை இயற்றும் வகையில் அரசை நிர்ப்பந்தப்படுத்தியும் பல வேறு வகையான போராட்டங்களை தொடர்ந்து நடத்தினார்கள்.இதன் விளைவாய் இந்தியா முழுவதும் தொழிற்சங்கங்கள் உருவாகியதுடன், தொழிற் சங்க நடவடிக்கைகளும் இந்தியா முழுவதும் பரவியது.

கூலி உழைப்பாளிகளாக மாறும் பெண் தொழிலாளர்கள்:

பழைய சட்டத்தின்படி பெண் தொழிலாளர்கள் மாலை 7 மணி முதலாக காலை  6 மணி வரையிலும் ஆலைகளில் பணி செய்வதற்கும் ஆபத்தான பணிகளில் வேலை செய்வதும் தடை செய்திருந்தது.தற்போது எத்தனை நேரம் வரையிலும் வேலை பார்க்கலாம் எனவும் எந்த ஆபத்து சூழலிலும் பணி புரியலாம் என சட்டத்தை திருத்தியுள்ளது.

சமூக விடுதலையை உள்ளடக்கி பெண்ணுரிமை இன்று முன்வைக்கப்படுவதில்லை, இந்திய முதலாளித்துவ சமூக அமைப்பிற்குட்பட்ட வழிகளில் பெண்ணுரிமை முன் வைக்கப்படுவதால், இது பெண்களையும்,கூலி உழைப்பாளிகளாக மாற்றுகிற நிலையோடு முடிவடைந்து விடுகிறது. நிலப்பிரபுத்துவ பிற்போக்குத்தனங்களுக்கு எதிராக பெண்களுக்கு கல்வி, வேலையில் சம வாய்ப்பு,என்பனவற்றை முன்வைக்க வேண்டியது அவசியம். தவிர சகலவிதமான சுரண்டல்களிவிருந்தும் விடுதலை பெறுவது என்பதே பெண்களின் விடுதலையாகும்.பெண் கூலித் தொழிலாளிகள் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் பெருமளவில் பணிபுரிகிற இன்றைய நிலையில் இவர்களை தொழிற்சங்கங்களில் ஒன்றிணைப்பது அவசியமாகும்.இந்திய உள்நாட்டு உற்பத்தியில் பெண் தொழிலாளர்களின் பங்கு 17 சதவீதம். இன்றைக்கு ஆண்கள் செய்யும் அனைத்து வேலைகளிலும் பெண்கள் ஈடுபட்டாலும்,அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை.

சோசலிசமே மூலதனத்தை வீழ்த்தும்:

மூலதன லாப வளர்ச்சி முதலாளித்துவத்தை எங்ஙனம் கட்டுக் கடங்காத வகையில் இழுத்துச் செல்கிறது என்பதை மாமேதை மார்க்ஸ் பின்வருமாறு விளக்குகிறார். இயற்கை ஒரு வெற்றிடத்தை வெறுப்பதாக முன்னர் கூறப்பட்டது போல மூலதனம் லாபமெதுவும் இல்லாமல் போகுமோ அல்லது மிகச்சிறு லாபம் மட்டுமே கிடைக்குமோ என்று அஞ்சுகிறது.போதுமான லாபமிருந்தால் மூலதனம் மிகவும் தைரியம் பெறுகிறது. நிச்சயம் 10% லாபம் கிடைத்தால் எங்கானாலும் அது ஈடுபடுத்தப்படுவது உறுதி. நிச்சயம் 20% கிடைத்தால் ஆவல் தூண்டப்படும். 50% கிடைத்தால் திட்டமான போக்கிரித்தனம் தோன்றும்.100% லாபம் கிடைத்தால் சகல மனித விதிகளையும் துவம்சம் செய்யத் தயாராகிவிடும்.300% என்றால் அதன் மனசாட்சி உறுத்தக் கூடிய குற்றச்செயலே மிச்சமிருக்காது. அதன் சொந்தக்காரர் தூக்கிலிடப்படும் அபாயம் இருந்தாலும் கூட அது இறங்கிப்பார்க்காத விஷப்பரிட்சையேதும் பாக்கி நிற்காது. கொந்தளிப்பும் குமுறலும் லாபமளிக்கும் என்றால் அது இரண்டையுமே இஷ்டம்போல் ஊக்கப்படுத்தும் என்றார் மாமேதை காரல் மார்க்ஸ்.

இன்றும் தேவை மே தின போராட்டம்:

மூலதனக் குவியலுக்கும்,கூலியுழைப்பிற்குமான முரண்பாடு முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு கூர்மையடைந்திருக்கிறது.         தொழில் நுட்பம் உலக அளவில் மிகப் பெரிய மாற்றத்தைச் சந்தித்துள்ளது,                  தொழில்நுட்பத்தின் வருகை உற்பத்தியை அதிகரிக்கவும்,தொழிலாளரின் எண்ணிக்கையைக் குறைக்கவும் தான் பயன்பட்டுள்ளதே தவிர,எந்த வகையிலும் தொழிலாளரின் வேலைப்பளுவைக் குறைக்கவில்லை. வேலைக்கேற்ற ஊதியமில்லை; வேலை உத்திரவாதமில்லை; எட்டுமணிநேர வேலை என்பது  எங்குமில்லை கொத்தடிமைகளைப்போல தொழிலாளர்கள் சுரண்டப்படுவதும், தொழிலாளி வர்க்கம் போராடிப்பெற்ற உரிமைகள் ஒவ்வொன்றாய் பறிக்கப்பட்டு  வருவதுமான மறுகாலனியாக்கச் சூழலில்         மே தினத்தின் வரலாற்றை அறிந்துகொள்வதும், உரிமைக்கானப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துகிறது,

உலகமய பொருளாதாரம் தொழிலாளி வர்க்கத்தில் பிரத்யேக நிலைமைகளை ஏற்படுத்தியுள்ளது.தொழிலாளிகள் சமூகத்தில் சாதியாக,மதமாக,இனமாக பிரிக்கப்பட்டுள்ளது போல் தொழிற்சாலைக்குள், ஒப்பந்த தொழிலாளி,நிரந்திர தொழிலாளி, தற்காலிக தொழிலாளி,முறைசாரா தொழிலாளி, புலம் பெயர்ந்த தொழிலாளி என பல கூறுகளாக இன்று பிரிக்கப்பட்டுள்ளது.தொழிலாளர்களுக்கு, விஞ்ஞானம், தத்துவம், அரசியல், பொருளாதாரம், வரலாறு, மற்றும் கலை இலக்கியங்களை பயிற்றுவிப்பது அவசியம். தொழிலாளர்களுக்கு முதலாளித்துவத்தின் இன்றைய எல்லா நிலைபாடுகளையும் அதன் செயல்பாடுகளையும் தத்துவரீதியாக விமர்சனத்திற்குட்படுத்துகின்ற பயிற்சியை அளிக்க வேண்டும்.

மாபெரும் சமூக மாற்றத்திற்கான,நீண்ட கால போராட்டமே சோசலிசப் போராட்டம் என்றாலும், அதுவே சந்தைமயமாகிவிட்ட மருத்துவத்தையும் சுகாதாரத்தையும், மக்களது சேவைத் துறைகளாக மாற்றியமைக்கும். இந்தியாவில் முதலாளிகளின் சுரண்டலை எதிர்த்து,தங்கள் உரிமையை அடைவதற்கான போராட்டம் இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. தொழிலாளர்கள் சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றை     கடந்து தொழிலாளர்கள் என்னும் உணர்வுடன் ஒன்றுபட்டு போராடினால் வெற்றி கிடைத்தே தீரும் என்பதை மே தின வரலாறு நமக்கு உணர்த்துகின்றது.

உலகத் தொழிலாளர்களே! ஒன்று சேருங்கள்!
சமூக மாற்றத்திற்காகப் போராடுவோம்!
சோசலிசத்திற்காகப் போராடுவோம்!

.மீனாட்சி சுந்தரம்
சென்னை.

Related Posts