தமிழ் சினிமா

மாஸ்டர் – விமர்சனம்……..

தனித்த இளம்பிராய பவானியிடமிருந்து துவங்கும் திரையில் டைட்டில் கார்டுக்கு முந்தைய சட்டகத்திலேயே விஜய் சேதுபதி யார் என்பதை அடித்தளமிட்டு விடுகிறார்கள் சீர்திருத்த பள்ளியில் நேரும் வதைகளிலிருந்து எதிர்மறை எண்ணங்களை கிரகித்து வெளியுலகிற்கு வெளியேறும் பவானி சீர்திருத்த பள்ளி சிறுவர்களுடனான தொடர்புகளுடன் சில பழிவாங்கல் கொலைகளுடன் குற்றசம்பவங்களை செய்து பொருளீட்டி நிழலுலக தாதாவாக வளர்கிறார்.,

மது போதைக்கு அடிமையான பேராசிரியர் ‘ஜேடி’ கல்லூரி மாணவர் தேர்தல் வன்முறைக்காக நீக்கப்படுவதுடன் போதை, வன்முறை கும்பல் தொடர்பு மற்றும் அதிகாரிகளின் பொறுப்பற்ற தனத்தால் சிறைக்குள்ளே வாழ்வு நேரப்பட்ட சிறுவர்கள் உள்ள சிறைக்கு வாத்தியாக மாறுதல் பெறுகிறார்.,

ஜேடி யை சுற்றி கல்லூரி மாணவர்கள்,
பாவானியை சுற்றி குற்ற கும்பல்

இருவருக்கும் இடையில் ஏற்படும் வில்லங்கம் என்ன?
இரு வேறு நோக்கம் கொண்ட இவர்களின் முடிவு என்ன? என்பதை திரையில் கொண்டுவந்திருக்கிறார்கள் ‘மாஸ்டர் டீம்’

பவானியாக விஜய் சேதுபதி : சிறு வயது பாத்திரத்தில் நடித்த மாஸ்டர்.மகேந்திரன் உடல் மொழியிலும் பாவனையிலும் ‘விசே’ வை உயிர்ப்படுத்தியிருக்கிறார்.,

முதல் கொலைக்காட்சியில் அறிமுகமாகும் ‘விசே’ தன் இயல்பான நடிப்புடன் சற்று குரூரமேறி பவானியாக மாறுபவர் படத்தின் இறுதிக்காட்சி வரை ரசிக்கும் வகையில் பிரமாதமாக நடித்திருக்கிறார்.,

படத்தில் அவர் பேசும் ஒன்லைனர் கள் வாட்சப் ஸ்டேட்டஸ் ஆக்கிரமிக்கும் ரகம். அப்ளாஸ் அள்ளுகிறது அரங்கில்., அதிலும் அவர் குளித்துக்கொண்டு விஜய்யை மிரட்டும் காட்சியிலும் நேருக்கு நேர் சந்திக்கும் காட்சியிலும் தனித்து மிளிர்கிறார்.

‘ஜே டி’ யாக விஜய் :

போதையில் திரியும் காட்சிகளில் அறிமுகமாகும் விஜய் தன் வழக்கமான படங்களிலிருந்து சற்று தள்ளி நடித்திருக்கிறார். வசனங்கள் மற்றும் அவர் சொல்லும் காதல் கதைகள் ‘எண்டெர்டெய்ன்மெண்ட் கியாரன்டி’ சண்டைக்காட்சிகள் வழக்கம் போல., இப்படிப்பட்ட ‘multi starer’ படத்தில் அனைவருக்கும் இடம் கொடுத்து நடித்திருப்பது சற்று ஆறுதலாக இருந்தாலும் படத்தில் அவர் பத்து நிமிடத்திற்கொருமுறை செய்யும் கோமாளித்தனங்களை கண்டு ரசிக்கும் முக்தி பரவச கதுப்பு நம் மூளையிலிருந்து மூணு கிலோ மீட்டர் தொலைவில் சென்று விட்டதால் நம்மால் முடியவில்லை.,

ஒரு காட்சியில் ரசிக்க முடிகிறதென்றால் அடுத்த காட்சியில் கோமாளித்தன செய்கையில் stand போடுகிறார்., அவசரப்பட்டு பாராட்டிட்டோமோ எனும் உன்னத நிலையை அடைய வாய்த்த விஜய் இதனை கடைசி காட்சி வரை தொடர்கிறார்., இதற்கு ரசிகர்கள் கைதட்டி ஆரவாரித்து ‘ஸ்டைல்’ என்று பெயர் வைத்துக்கொள்வர்.

நல்ல வேளை,

‘வேணாம்’ போன்ற ஒற்றை சொல்லை ஒரு நிமிட நேரமேடுத்து உயர் ஒலிக்குறிப்பில் உதற வைப்பாரே அந்த ரக இழுவைகள் இல்லை என்பது ஆறுதலளிக்கிறது.,

சில காட்சிகளில் அவரை அவரே கலாய்த்துக்கொள்ளும் காட்சிகள் மூலம் நல்ல பெயரும் வாங்குகிறார்.,

போதையை விட்டு விலகி சிறுவர்கள் நலன் மீது அக்கறை கொள்ளும் காட்சிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார்

அடுத்து லோகேஷ் :

மாநகரத்தில் நான் பார்த்து மிரண்ட மனிதர் கைதியில் கிளைமாக்ஸில் மட்டும் சற்று சருக்கியிருந்தார் என்றாலும் அந்த மதிப்பை தக்க வைத்திருந்தார்.,

ஆனால்,

இதில் அவரின் திரைக்கதை பாணியை விஜய்க்காக விட்டுக்கொடுத்து தியாகியாக உயர்ந்து பரிதாபமாக நிற்கிறார்., எனக்கென்னவோ ரத்னகுமார் மேல தான் சந்தேகம்., அடுத்த முறை மன்சூர் அலிகானை வைத்தே படமெடுங்கள் லோகேஷ்.,

உங்களின் சினிமாவை விரும்பும் நபராக எனக்கு இம்முறை ஏமாற்றம். அந்த சருகுக்காட்டில் கந்தகம் கொட்டி பற்ற வைத்தது போல ‘திகு திகு’ வென பரவி எரியும் திரைக்கதை பாணியும் இன்சோம்னியாக்கார இருட்டு ஒளிப்படைப்பும் தான் உங்கள் ஸ்பெஷல்.,
‘மிஸ்ஸிங்’ சொல்ல வேண்டியத சொல்லிட்டேன்.,

திரைக்கதை :

படத்தின் முதல் பாதியில் vjs வந்ததற்கு அடுத்த காட்சிகள் அதிலும் கல்லூரி காட்சிகள் மனசாட்சியே இல்லாமல் மரணம் செய்கிறது.அடி வேர் ஆடிக்கொண்டிருந்த பல்லை அப்படியே பிடுங்கி வாய் வீங்கிவன் போல அது ஒரு அடைபட்ட மனநிலை..,

ஒரு காட்சி ரசிக்க முடிந்தால் அடுத்த காட்சி கடுப்பேற்றுகிறது ஆனால் அதை தொடர்ந்து வரும் காட்சி சூடு பிடிக்கிறது. படம் முழுக்க இதுதான் நிலைமை. போதாக்குறைக்கு சில பாடல்கள் வேறு தடங்கல் செய்கிறது.

ஒளிப்பதிவு :

மிக்க தரம் வாய்ந்தது லோகேஷ் பாணியில் எடுக்கப்பட்டிருக்கிறது. தேடி தேடி படம் பிடித்திருக்கிறார்., அத்தனை அருமையான காட்சிக் கோணங்கள் சூப்பர்.,

இசை :

அனிருத் இசையில் பாடல்கள் ஏற்கெனவே பிரபலமாகியிருந்தாலும் சர்ப்ரைஸ் சம்பவமாக ‘ஆன்ச் பூன்ச்’ பாடல் இனி கபடி போட்டிகளில் களை கட்டும் என்பது உத்தரவாதம்.,

பின்னணி இசையிலும் பின்னியெடுத்திருக்கிறார்., குறிப்பாக திகில் காட்சிகள் மற்றும் ‘விசே’ காட்சிகளிலும் விசேஷம் செய்திருக்கிறார்.,

எடிட்டிங் :

தரமான படமாக ரெண்டரை மணி நேரத்திற்குள் வந்திருக்க வேண்டிய படத்தை மூன்று மணி நேரம் வரையில் இழுத்து வைத்து நெஞ்சு சாட்சியே இல்லாமல் நம்மை பிளந்து போடுகிறார்.,

மற்ற நடிகர்கள் :

எல்லாருமே பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள் ஆனால் அவர்களால் விஜய் மற்றும் விஜய் சேதுபதியை தாண்டி முத்திரை பதிக்க முடியவில்லை அதிலும் வாய்ப்பு கிடைத்தும் கூட..,

மெசேஜ் :

போதைக்கெதிரான படமாக கொண்டு வந்திருக்கிறார்கள். போதை அடிமைகளின் பக்கமிருந்து சில வசனங்களை விஜய்யே பேசியிருக்கிறார். இது வரவேற்கத்தக்கது சில காட்சிகளில் ஈகோ ஏதுமில்லாமல் இளம்பிராயத்தினருடன் நடித்திருப்பதும் விஜய் படங்களில் புதிது.,

படம் பேசும் அரசியல் :

‘விஜய்ணா’ கருப்பு சட்டை போட்டிருக்கிறார்
‘விஜய்ணா’ செவப்பு சட்டை போட்டிருக்கிறார் இதில் ஏதும் குறியீடு இருக்குமோ என மூலக்கூறு வாய்ப்பாடு தேடும் நபர்களுக்கு நான் சொல்வதெல்லாம் அவர் கிளைமாக்ஸ் காட்சியில் மஞ்சள் சட்டையும் போட்டிருக்கிறார் என்பதுதான்.,

துல்லியமாக சொல்ல வேண்டுமானால் ‘அரசியலுக்கு வரியா?’ எனக்கேட்கும் ‘விசே’ விடம் விஜய் ஒரு பதில் சொல்வார்., அது அவரது புரட்சி தகப்பனாருக்கு சொல்லும் செய்தியா? அல்லது குறியீடு தேடும் உங்களுக்கு சொல்லும் செய்தியா என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்க..,

மேலும் நான் மக்கள் நலன் சார்ந்த அரசியல் படம் தான் பார்ப்பேன் என்பவர்கள் தயை கூர்ந்து படத்திற்கு செல்ல வேண்டாம் மீறி சென்றால் நான் பொறுப்பல்ல..!!

உய்வு :

நாயக பிம்பத்தின் மீது காட்டப்பட்ட சிரத்தையை சற்று திரைக்கதையிலும் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்

‘மாஸ்டர் – ஹாஃப் பிளாஸ்டர்’

  • ப.பிரபாகரன்.

Related Posts