பிற

உபரி மதிப்பு என்பது மாயையா?

மார்க்ஸ் கண்ட உபரி மதிப்பு மாயை என்பதாக ஒரு பிரச்சாரம் நடக்கிறது. முதலில் அந்தப் பிரச்சாரத்தை வாசிப்போம்:

உபரி மதிப்பு (surplus value) என்பதே மார்க்சிசத்தின் மையக்கூறு.  : http://en.wikipedia.org/wiki/Surplus_value தொழிலாளர்களின் உழைப்பிற்கு அளிக்கப்படும் சம்பளம், அவர்களால் உருவாக்கப்படும் பெருட்களின் மதிப்பை விட (அல்லது உழைப்பின் ‘சரியான மதிப்பை’ விட) மிக மிக குறைவானது, அந்த ‘கொடுக்கப்படாத’ சம்பளமே, உபரி மதிப்பு என்று மார்க்சிசம் சொல்கிறது. அந்த உபரி மதிப்பு ‘சுரண்டப்பட்டு’, லாபமாக வெளிப்படுகிறது. அதுவே பின் முலதனமாக உருவெடுக்கிறது. இதுதான் மார்கிசியத்தின் மைய்யக் கரு. இது எப்படி மிக தவறான, பொய்பிக்கப்பட்ட ‘போலி’ விஞ்ஞானம் என்பதை பார்ப்போம். மதிப்பு என்பது வாங்குபவரின் கோணத்தில் தான் நிச்சியக்கப்படுகிறது. வாங்குபவருக்கு பயன் இல்லாவிட்டால், பெரும் உழைப்பில் உருவான எந்த பெருளுக்கும் மதிப்போ, தேவையோ இருக்காது உதாரணமாக, பாலைவனத்தில் சிக்கி, குடிநீருக்கு ஏங்குபவருக்கு, ஒரு மர மேசை தேவை படாது. பயன் படாது. அம்மேசையை ஒரு தொழிலாளி எத்தனை பாடுபட்டு, உழைத்து உருவாக்கியிருந்தாலும், அங்கு அதற்கு மதிப்பில்லை / தேவையில்லை. அதே போல் தான் அனைத்து பொருட்க்கள் / சேவைகளுக்குமான ‘மதிப்பு’. ஒரு பொருளின் மதிப்பு என்பது அதை உருவாக்க உழைத்த தொழிலாளியின் உழைப்பின் சாரம் மட்டுமே என்பது மார்கிசிய கருத்து.

உபரி மதிப்பு என்று ஒன்று உள்ளது என்று வைத்துக் கொள்வோம். அந்த ‘உபரியை’ ‘சுரண்டி’ லாபமாக மாற்றுகிறார் ஒரு முதலாளி (இந்த சொல் எமக்கு ஏற்புடையதாக இல்லை. வில்லத்தனமான அர்த்தம் இதற்கு, பொது புத்தியில் ஏற்றப்பட்டுள்ளதால், ‘தொழில் முனைவோன்’ என்ற சொல்லே சரியனது.) இந்த லாபம் என்பது தொழிலாளர்களின் உழைப்பின் உபரி மதிப்பு என்கிறது மார்க்சியம். சில கேள்விகள் :

1.தொழில்முனைவோரின் ‘உபரி மதிப்பு’ என்ன ?

2. ஒரு தொழிற்பேட்டையில், ஒரே வகையான இரு தொழிற்சாலைகள் (சம அளவிலான முதலீட்டில்), ஒரே நாளில் துவக்கப்படுகின்றன என்று வைத்துக்கொள்வோம். இரண்டும் ஒரே வகையான எந்திரங்களை கொண்டு, ஒரே வகையான பொருட்களை உற்பத்தி  செய்து, ஒரே சந்தையில் விற்க முயல்கின்றன. இரண்டிலும், ஏறக்குறைய சம அளவு திறமை, உற்பத்தி திறன் கொண்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். ஒராண்டிற்குப் பிறகு, ஒரு தொழிற்சாலை ஒரளவு லாபமும், மற்றொன்று நட்டத்தையும் அடைகின்றன. முதல் தொழிற்சாலையின் நிகர லாபம், அதன் தொழிலாளர்களின் உழைப்பின் உபரிதான் என்றால், பிறகு நட்டத்தில் இயங்கும் இரண்டாவது தொழிற்சாலையின் தொழிலாளர்களின் ‘உபரி மதிப்பு’ எங்கு சென்றது ?

இரு நிறுவனங்களிலும் சம திறன் கொண்ட தொழிலாளர்கள், சம எண்ணிக்கையில், சம திறன் கொண்ட எந்திரங்களை கொண்டு, ஒரே ரகபொருட்களை தான் உற்பத்தி செய்தனர். பிறகு லாப அளவில் வித்தியாசம் எப்படி ஏற்பட்டது ?

3. கூட்டுறவு அல்லது அரசு துறையில், மேற்கொண்ட உதாரணத்தில் உள்ளதை போன்ற அதே வகை / அளவிலான நிறுவனத்தை (தொழிலாளர்களுக்கு அதே சம்பளம் என்று வைத்துக்கொள்வோம்) உருவாக்கினால், அதன் லாபம் மற்றும் உற்பத்தி திறன், தனியார் நிறுவனங்களை விட குறைவாக இருப்பது இய்லபு. ஏன் ?

அரசு துறையின் managers மற்றும் workers : இவர்களின் உற்பத்தி திறன் (productivity) தனியார் துறையை விட குறைவாகவே இருக்கிறது. இவர்களின் ‘உபரி மதிப்பு’ எப்படி குறைந்தது ? அது எங்கு சென்றது ?

 

மார்க்ஸ் அனுமானித்த அடுத்த முக்கிய விசியம் : ஒரு சமூகத்தின் நிகர உபரிமதிப்பு படிப்படியாக சுரண்டப்பட்டு, ஒரு கட்டத்தில் மிக மிக மிக குறைந்து, அந்த சமூக கட்டமைப்பே அழியும் என்பது. Business cycles என்று சொல்லப்படும் பொருளாதார சுழற்சிகள் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கின்றன. மார்க்ஸின் ‘விஞ்ஞானப்படி’ ஒவ்வொறு சுழற்ச்சியின் மந்த நிலையின் முடிவில், சிறு தொழில் நிறுவனங்கள் அழிந்து, குறைந்த எண்ணிக்கையிலான பெரு நிறுவனங்கள் மட்டும் பிழைக்கும். மனித ம்உழைப்பை குறைக்கும் திறன் கொண்ட புதிய எந்திரங்களை பெரு முதலாளிகள் மேலும் மேலும் உருவாக்கி, தொழிலாளர்களின் உழைப்பின் உபரி மதிப்பை மேலும் மேலும் ‘சுரண்டி, ஒரு கட்டத்தில் இனி சுரண்டவே முடியத நிலை உருவாகி, முதலாளித்துவ பெருளாதார கட்டமைப்பே இயல்பாக அழியும்.

ஆனால் கடந்த 150 வருட பொருளாதார வரலாறு இதை பொய்பிக்கிறது. ஒவ்வொறு பொருளாதார மந்தமும், அதன் முன்பு உருவான மந்தத்தை விட மோசமானதாக இருக்கும் என்ற கணிப்பும் பொய்யானது. தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் மார்க்ஸ் சொன்னது போல படுமோசமாக ஆகாமல், மாற்றாக மிக மிக உயர்ந்துள்ளது. இன்றைய உலகப் பொருளாதார மந்தம், 1930களின் பெரு மந்தத்தை விட மிக மோசமானதாக மாறி, முதலாளித்துவமே அழியும் நிலை (மார்க்ஸ் சொன்ன இறுதி பேரழிவு) வந்துவிட்டது என்று ஆர்பாரித்த மார்க்ஸியவாதிகள் இன்று world economic recovery அய் கண்டு வாயடைத்துப் நிற்கின்றனர்.

மார்க்சியம் ஒரு போலி விஞ்ஞானம். அதன் தாக்கத்தால் சென்ற நூற்றாண்டில் ஏற்பட்ட பேரழிவு மிக மிக கொடுமையானது. ஏற்றத்தாழ்வுகளை அகற்றும் லட்சியவாதம், எதிர் மறையான விளைவுகளையே ஏற்படுத்தியது. The road to hell is paved with good intentions என்கிறது ஒரு ஆங்கில முதுமொழி.


மேற்சொன்ன பிரச்சாரத்தை அதன் போக்கிலேயே விளங்கிக் கொள்வதற்கான பதில்தான் கீழே தரப்பட்டுள்ளது:

பதில்: விஜயன்

Reducio Ad absurdum என்றொரு தர்க்க முறை உண்டு. அது பண்டைய இந்தியாவில் மிகவும் புழக்கத்தில் இருந்தது. வாதம் செய்யும் ஒருவர் மற்றொருவரின் வாதத்தை திரித்து அபத்தமாக்கி எதிராளியின் கருத்தை தோல்வியடையச் செய்யும் உத்திதான் இது. பண்டைய இந்தியாவில் நடைபெற்ற தத்துவப் போராட்டங்களில் இதை அதிகமாகக் காணலாம். இந்தக் கட்டுரையாளரும் மார்க்சியத்தை எதிர்ப்பதற்கு இதே உத்தியைக் கையாள்கிறார்.

மார்க்ஸ் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் உழைத்து வெளியிட்ட 3000 பக்கங்கள் கொண்ட மூலதனம் என்ற ஆய்வு நூலை அரைப்பக்கத்தில் அற்மாக்க முயன்று அவரே அற்பராகி நிற்கிறார் இந்த மார்க்சிய மறுப்பு வாதி (மாமவா). முதலாளித்துவ உற்பத்தி முறை என்பது மனித சமூக வளர்ச்சிப் போக்கில் உருவான ஒரு உற்பத்தி முறை. அது இதற்கு முந்தைய உற்பத்திமுறையை மறுதலித்து பிறந்தது. தன்னை மறுதலிக்கும் சக்திகளை தனக்குள்ளே கருக்கொண்ட உற்பத்திமுறையே முதலாளித்துவ உற்பத்திமுறை. இது திட்டமிட்டு வந்தது கிடையாது. திட்டமிட்டும் இதை ஒழிக்க முடியாது. அதன் சுயமுரண்பாட்டாலேயே அது நொறுங்கிவிழும் தன்மையுடையது.

முதலாளித்துவ உற்பத்திமுறைக்கு முன்பு இருந்த உற்பத்தி முறைகளிலெல்லாம் பெருவீத உற்பத்தி கிடையாது. அது தனிநபர்களின் தேவைகளை நிறைவு செய்ய தனிநபர்களே அல்லது ஒரு சிறு தனிநபர்களின் குழுக்களே உழைப்பில் ஈடுபட்டு உற்பத்தி செய்யும் அமைப்பே. இருந்தாலும் இந்த அமைப்பிலும் பண்டங்கள் பரிமாறப்பட்டன. இரு பண்டங்கள் பரிமாறிக்கொள்ளப்பட வேண்டுமானால் அப்பண்டங்களின் குணாம்சங்களில் ஏதோ ஒன்று இரண்டுக்கும் பொதுவாக இருக்க வேண்டும் அந்த ஏதோ ஒன்று சமமாக இருந்தால் தான் பரிவர்த்தனை நிறைவு பெறும் அந்த ஏதோ ஒன்றைத்தான் மார்க்ஸ் மதிப்பு என்கிறார்.

மதிப்புகள் இருவகைப்படுகின்றன. ஒன்று பயன்-மதிப்பு இன்னொன்று பரிவர்த்தனை-மதிப்பு. பயன்-மதிப்பு அதன் பயன்பாட்டால் தீர்மானிக்கப்படுகிறது. பரிவர்த்தனை-மதிப்பு அதை பரிவர்த்தனை செய்ய வரும் பொழுது முன்னுக்கு வருகிறது. இரண்டுமே பண்டங்களுக்குள் அடங்கியிருக்கிறது. ஒன்று இல்லாமல் மற்றொன்று இல்லை. பயன் மதிப்பில்லாமல் பரிவர்த்தனை மதிப்பு இல்லை. பயன் மதிப்பே இல்லாத எந்த பண்டத்தையும் பரிவர்த்தனை செய்ய முடியாது. நமது மாமவா கூறுவது போல் பாலைவனத்தில் நாற்காலிக்கு பயன்-மதிப்பு இல்லாததால் அங்கு அதற்கு பரிவர்த்தனை-மதிப்பு கிடையாது. ஆனால் பரிவர்த்தனை-மதிப்பு இல்லாமல் பயன்-மதிப்பு இருக்க முடியும். உதாரணத்திற்கு ஆர்எஸ்எஸ்காரர்கள் வசிக்கும் தெருவில் மாட்டுக்கறிக்கு பரிவர்த்தனை-மதிப்பு இல்லை ஆனால் அவர்கள் வீட்டில் வசிப்பவர்கள்  ரகசியமாக அதை பிரியாணி செய்து சாப்பிடலாம். எனவே அதற்கு பயன்-மதிப்பு இருக்கிறது. ஒருவருக்கு பயன்-மதிப்பில்லாத ஒரு பண்டம் மற்றொருவருக்கு பயன்-மதிப்புள்ளதாகும் பொழுதுதான் பரிவர்த்தனை நடக்கமுடியும்.

முதலாளித்துவ உற்பத்திமுறையில் உற்பத்தியாகும் பண்டங்கள் பரிவர்த்தனைக்கென்றே உற்பத்தி செய்யப்படுகின்றன எனவே அவற்றிற்கு பயன்-மதிப்பு கட்டாயம் இருந்தாக வேண்டும். எனவே மதிப்பு என்று பொதுவாக பேசுமிடத்து அங்கே பரிவர்த்தனை-மதிப்பையே குறிக்கிறது. ஆக மதிப்பில் என்ன அடங்கியிருக்கிறது? எப்படி அளவிடுவது?

இயற்கையில் கிடைப்பவையில் மனிதனின் செயல்பாட்டால் மாற்றியமைக்கப்பட்டவையே பண்டங்கள். பண்டங்களுக்கு வெவ்வேறு குணாம்சங்கள் இருந்தாலும் அவைகள் இயற்கை வடிவத்திலிருந்து மாறுவதற்கு காரணம் அதன் மீது செலுத்தப்பட்ட உழைப்பே. எனவே பண்டங்கள் எல்லாவற்றிற்கும் பொதுவானது அதற்குள் மனித உழைப்பு அடங்கியிருக்கிறது என்ற அம்சமே. இது மட்டுமே அதன் மதிப்பை தீர்மானிக்கும் காரணியாக இருக்க முடியும். இது சமூக வழியில் அவசியமான சராசரி உழைப்பு நேரமாக அளவிடப்படுகிறது ஆகவே சமூக வழியில் அவசியமான சராசரி உழைப்பு நேரத்தின் மதிப்பே பண்டங்களின் மதிப்பாகும்.

 

முதலாளித்துவ உற்பத்திமுறை என்பது விற்பனைக்காக பண்டங்களை உற்பத்தி செய்கிற உற்பத்திமுறையேயாகும். விற்பனைக்கான பண்டங்களை சுருக்கமாக சரக்கு என்று அழைக்கலாம். முழுவதுமாக முதலாளித்துவ உற்பத்திமுறைக்குள் வந்துவிட்ட ஒரு சமூகத்தில் உள்ள அனைத்து பண்டங்களும் சரக்குகளே. உழைப்பு சக்தியும் விற்பனைக்கு வருவதால் அதுவும் ஒரு சரக்காகவே சந்தைக்கு வருகிறது. முதலாளியானவர் சந்தைக்கு வந்து பல்வேறு சரக்குகளை விலைக்கு வாங்குகிறார் அதில் கட்டாயம் உழைப்பு சக்தி என்ற சரக்கு இருக்கும். உழைப்புச் சக்தியை இயக்கி மற்ற சரக்குகளை நுகர்ந்து புதியதொரு சரக்கைப் படைக்கிறார். அவர் உற்பத்தி நிகழ்முறைக்கு கொண்டுவந்த அனைத்து சரக்குகளின் மதிப்பின் கூட்டுத்தொகையே அவர் படைத்த சரக்கின் மதிப்பாக இருக்க வேண்டும். ஆனால் உற்பத்தி நிகழ்முறையில் உள்ளே வந்த சரக்குகளின் மதிப்பைவிட படைக்கப்பட்ட சரக்கின் மதிப்பு அதிகமாக இருக்கிறது.. உள்ளே வந்த சரக்குகள் எதற்கும் உற்பத்தி நிகழ்முறையால் மதிப்பு கூடுவதில்லை. எனவே எதோ ஒருசரக்கிற்கு மட்டும் அதன் முழுமதிப்பு கொடுக்கப்படவில்லை என்பது நிச்சயம். அந்த ஒரு சரக்கே உழைப்பு சக்தி. உழைப்பு சக்தியை உழைப்பாளியை பணிக்கு அமர்த்துவதன் வாயிலாகவே வாங்கி வருகிறார். உள்ளே வந்தவர் உழைப்பு சக்தியை வாங்கி வந்ததை, உழைப்பை வாங்கி வந்த்தாக கூறி அதிக உழைப்பு சக்தியை பயன்படுத்துகிறார். இந்த அதிக உழைப்பு சக்தியே படைக்கப்பட்ட பண்டத்தின் மதிப்பை உயர்த்துகிறது. இப்படி உயர்த்தப்பட்ட மதிப்பே உபரி மதிப்பு எனப்படுகிறது. உபரி மதிப்பென்பது தொழிலாளியிடம் கறந்த கூடுதல் உழைப்பே அல்லது தொழிலாளிக்கு கொடுக்காத கூலியின் மதிப்பே.

இப்பொழுது நமது மாமவா முன்வைக்கும் கேள்விகளுக்குள் செல்வோம்.

 

  1. உழைப்பு நிகழ்முறையில் ஈடுபடுத்தப்பட்ட சரக்குகளின் மதிப்பும் படைக்கப்பட்ட சரக்கின் மதிப்பும் சமமாக இருக்க வேண்டும். ஏனென்றால் சரக்கின் மதிப்பு ஒரு ஆலைக்குள் வந்துவிட்டதாலேயே கூடிவிடாது. சரக்கை இன்னார் வாங்கிக் கொண்டு வந்தார் என்பதாலேயே அதன் மதிப்பு கூடிவிடாது. ஒருவர் சரக்குகளைப் பற்றி பேசியதாலோ அதைப்பற்றி கவலைப் பட்டாதாலோ அதற்காக அழுததாலோ அதற்காக சிரித்தாலோ அதை இடம் பெயர்த்தாலோ அதன் மதிப்பு கூடாது ஏனென்றால் சரக்கின் மதிப்பானது அது படைக்கப்பட்டவுடன் தீர்மானிக்கப்பட்டுவிட்டது. படைக்கப்படும்பொழுது செலுத்தப்பட்ட உழைப்பு இறுகி அதன் மதிப்பாகி விடுகிறது. அதை இன்னொரு இடத்திற்கு இடம் பெயர்ப்பததால் சரக்கு மீண்டும் படைக்கப்படுவதில்லை. எனவே இட நகர்வு அதற்கு மதிப்பை அளிக்காது மதிப்பைக் கூட்டாது. இதே போல் தொழிலாளிக்கு அவர் செலுத்து உழைப்பின் முழு மதிப்பை கொடுக்காததால் அதன் கொடுக்காத மதிப்பு அழிந்துவிடாது

 

ஒரு குடுவையில் 36 கிராம் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தையும் 40 கிராம் சோடியம் ஹைட்ராக்ஸைடையும் போட்டால் அக்குடுவையில் மொத்தம் 76 கிராம் வேதிப்பொருட்கள் இருக்கும் அவை வினைபுரிந்து 56 கிராம் சோடியம் குளோரைடாகவும் 18 கிராம் தண்ணீராகவும் மாறுகின்றன. இரண்டிலும் மொத்த எடை 76 கிராமே. குடுவைக்கு உள்ளே போகும் பொழுது ஹைட்ரோகுளோரிக் அமிலமாகவும் சோடியம் ஹைட்ராக்ஸைடாகம் சென்றவை குடுவையை கவிழ்த்தால் வெளியே வருவது சோடியம் குளோரைடும், தண்ணீரும். இந்த வேதிப் பொருட்களைச் சேர்த்தவர் நானாக இருந்தாலும் யாராக இருந்தாலும் அதன் எடை மாறாது. ஆனால் உள்ளே சென்ற வேதிப் பொருட்கள் மாறிவிட்டன. இதேபோல்தான் உற்பத்தி நிகழ்முறைக்குள் செல்பவைகளின் மதிப்பு மாறாது. ஆய்வுக் கூடத்தில் வேதிப் பரிசோதைனை செய்பவருக்கு வேதிவினையில் எந்த பங்கும் இல்லையோ அதேபோல் மதிப்பு படைப்பில் முதலாளிக்கு எந்த பங்கும் கிடையாது. எனவே முதலாளியின் செயலானது உற்பத்தி நிகழ்முறையில் ஒன்றும் இல்லை. எனவே அவர் மதிப்புக் கூட்டல் எதுவும் செய்கிறவர் கிடையாது. அவர் உள்ளே வந்த பண்டங்களின் உரிமையாளர். இதில் ஒரு பண்டமான உழைப்புச் சக்திக்கும் உரிமையாளர் ஆனால் அந்த உழைப்புச் சக்தியை தாங்கி நிற்கும் மனிதனின் உழைப்பனைத்தினதும் உரிமையாளர் அல்ல. அவர் உழைப்பாளியின் உழைப்பனைத்தின் உரிமையாளர் என்று கோருவதாலேயே உரிமையாளர் ஆகிவிட முடியாது எனினும் அப்படிக் கோரி தொழிலாளி படைத்த உபரி மதிப்பை தனதாக்கி விடுகிறார்.

 

  1. சம செயல்பாடுகளை கொண்ட இரு தொழிற்சாலைகளில் ஒன்று லாபத்தில் இயங்குகின்றது மற்றது நஷ்டத்தில் இயங்குகின்றது என்ற கேள்விக்கு எராளமான பதில்கள் உள்ளன. நஷ்டத்தில் இயங்கும் தொழிற்சாலையில் உற்பத்தி முடக்கப் பட்டிருக்கலாம். விற்பனை முடக்கப்பட்டிருக்கலாம் உற்பத்தி முடங்குவதற்கு முதலாளி உள்ளீட்டுப் பொருட்களை கொண்டு வராமல் இருந்திருக்கலாம். முதலாளிக்கு கிறுக்குப் பிடித்து அடிக்கடி இயந்திரங்களை நிறுத்திக் கொண்டே இருக்கலாம். விற்பனையாவதன் மூலம் கிடைக்கும் பணத்தை எல்லாம் கேளிக்கைக்கு முதலாளி செலவழித்திருக்கலாம். எந்த காரணமானாலும் அதற்கு முதலாளியே முதன்மையானவர். இதனாலெல்லாம் பண்டத்தின் மதிப்பை முதலாளித்தான் படைத்தார் என்று கூறிவிட முடியாது. விசாரனைக்கு காவல் நிலையத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரோடு திரும்பியதாலேயே அவருக்கு உயிரைக் கொடுத்தவர்கள் காவலர்கள் என்று ஆகிவிடாது. முதலாளியால் மதிப்பு படைப்பை நிறுத்தத்தான் முடியும் அவரால் மதிப்பை படைக்க முடியாது.

 

  1. அரசுத்துறை அல்லது கூட்டுறவுத்துறையில் பணிபுரிபவர்கள் தனிப்பட்ட முதலாளி ஒருவரின் கீழ் பணிபுரியாததால் தொழிலாளர்கள் பொறுப்புடன் செயல்படமாட்டர்கள் என்றும் அது நட்டத்தில் இயங்கும் என்று கூறுவது பொய்யான பிரசாரமாகும். தனியார் நிறுவனங்களும் நட்டத்தில் இயங்குகின்றன. நட்டத்திற்கு காரணம் யார்? தொழிலாளியால் நட்டம் வருவதில்லை காரணம் முதலாளித்துவ உற்பத்திமுறையில் தொழிலாளியும் ஒரு சரக்குதான். சரக்கு எப்படி நட்டத்தை ஏற்படுத்த முடியும்? கந்தக அமிலம் தயாரிக்கும் தொழிற்சாலையில் உள்ளே வரும் கந்தகம் எப்படி நட்டத்தை உண்டாக்க முடியாதோ அதைப் போலவே கந்தகம் என்ற சரக்கை கந்தக அமிலமாக்கும் உழைப்புச் சக்தி என்ற மற்றொரு சரக்கும் நட்டத்தை ஏற்படுத்த முடியாது. ஆனாலும் உழைப்புச் சக்தி என்ற அச்சரக்கே உபரி-மதிப்பை படைக்கிறது. தொழிலாளி இயங்கவில்லை என்றால் மதிப்பு படைக்கப்படாது. உபரி மதிப்பு படைக்கப்பட்டாலும் அது சந்தையில் ஈடேற்றம் செய்தால்தான் உபரிமதிப்பு லாபமாக வெளிப்படும்.  எப்படி தொழில் நடக்கிறது என்பதே நட்டத்திற்கு காரணம். எங்கு நட்டம் வந்தாலும் அது தொழிலாளியாலும், எங்கு லாபம் வந்தாலும் அது முதலாளியால்தான் என்பது சந்தர்ப்பவாத தர்க்கமாகும். Sense of ownership gives rise to sense of responsibity என்பது சரியான கருத்தே. முதலாளித்துவ உற்பத்திமுறையில் இது இல்லாத தால்தான் முதலாளித்துவ உற்பத்திமுறையில் பிரச்சனைகள் வருகின்றன.

 

  1. மார்க்சின் அனுமானப்படி என்று மாமவா மார்க்ஸ் அனுமானித்தாக சிலவற்றை அனுமானிக்கிறார். நெருக்கடிகளை விளக்குவதற்கு மார்க்ஸ் எந்த அனுமானமும் செய்யவில்லை. முதலாளித்துவ உற்பத்திமுறையில் மூலதனத்தின் சுற்றோட்டத்தை தீர்மானிப்பதில் சந்தைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. வேண்டலும் வழங்கலும்  சமமாக இருக்கும் ஒரு சந்தையில் மூலதனச் சுற்றோட்டம் சீராக இருக்கும். வழங்கல் வேண்டலை மிஞ்சிவிட்டால் சுற்றோட்டம் மந்தப்படும்.

முதலாளித்துவ உற்பத்திமுறையில் படைக்கப்பட்ட மதிப்புகள் சந்தைக்கு வருகின்றன. இதுவே சந்தையின் வழங்கல். ஆனால் இந்த மதிப்பில் ஒரு பகுதியை அதாவது உபரியை முதலாளி தனதாக்கிவிட்டதால் வேண்டல் வழங்கலைவிட குறையும். எப்படி என்று பார்க்கலாம். தனதாக்கிய உபரியை நுகர்வதற்கு முதலாளியும் சந்தைக்கு வந்தாலும் அனைத்து உபரியையும் முதலாளியால் நுகர முடியாது. முதலாளி தொழிற்சாலைக்காக கச்சாப் பொருட்கள் வாங்குவது என்ற திறனுடைய நுகர்வும் அவன் வாழ்வதற்காக செய்யும் சொந்த நுகர்வும் சேர்த்து உபரி மதிப்புக்குச் சமமாக இருக்கும். இதன் விளைவாக ஏற்கனவே இருக்கும் மூலதனத்துடன் அபகரிக்கப்பட்ட உபரியும் சேர்த்து மொத்த மூலதனம் கூடியிருக்கும். கூடிய மூலதனமானது கச்சாப் பொருட்களாகவும உழைப்புசக்தியாகவும் கூடினால்தான் அது உற்பத்தி நிகழ்முறையை நிகழ்த்த முடியும் வெறும் கச்சாப் பொருட்களை மட்டும் வாங்கி வைத்தால் அது புதிய பண்டமாகாது ஆக முதலாளி ஒரு பகுதி உபரியை உழைப்பு சக்தியை வாங்குவதற்கு செலவிட வேண்டும். இது அவர்கள் படைத்த மொத்த சரக்கை மாற்றீடு செய்வதற்கு போதுமான வேண்டலைக் குறைக்கும்.எனவே வேண்டல் குறைவாகவும் வழங்கல் அதிகமாகவும் இருப்பதுவே முதலாளித்துவ உற்பத்திமுறை.

இதன் விளைவாக பொருட்களின் தேக்கம் சந்தையில் அதிகரித்துக் கொண்டே போகும் அதாவது மூலதனச் சுற்றோட்டம் மட்டுப்பட்டுக் கொண்டே போய் அது மந்த நிலையை அடையும் மந்த நிலை நீடித்தால் சுற்றோட்டம் தடைபட்டு அது நெருக்கடியாகும். ஆக  உபரிமதிப்பை முதலாளி அபகரிப்பதால்தான் நெருக்கடி ஏற்படுகிறது

 

  1. நெருக்கடியிலிருந்து மீளவேண்டுமானால் மூலதனச் சுற்றோட்டத்தை மீண்டும் ஏற்படுத்த வேண்டும். சற்றோட்டம் நடைபெறவேண்டுமானால் வேண்டலும் வழங்கலும் சமமாக வேண்டும். அப்படியென்றால் வழங்கலில் ஒரு பகுதியை சுற்றோட்டத்திலிருந்து விலக்க வேண்டும் அல்லது அழிக்க வேண்டும். முதலாளித்துவ உற்பத்தி முறையில் உள்ள மூலதனச் சுற்றோட்டத்தில் மூலதனம் மூன்று வடிவங்களில் பயணிக்கிறது. தொழிற்சாலைக்குள் கச்சாப் பொருட்களாகவும் உழைப்புசக்தியாகவும் நுழையும் பொழுது அதன் வடிவம் திறனுடைய மூலனம். அது படைக்கப்பட்ட பண்டமாக சரக்கு வடிவில் வெளியேறும் போது அது சரக்கு வடிவம். சந்தையில் ஈடேற்றம் பெற்றவுடன் அதன் வடிவம் பணவடிவம். எனவே மூலதனத்தின் சுற்றோட்டத்தில் அது திறனுடைய முலதனம் – சரக்கு மூலதனம் – பண மூலதனம் என்று மாறி மாறி வேடம் பூண்டு பயணிக்கிறது. நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக வேண்டலையும் வழங்கலையும் சமப்படுத்தும் நடவடிக்கையில் ஒரு பகுதி மூலதனம் ஏதேனும் ஒரு வடிவத்தில் விலக்கிக் கொள்ளப்படுகிறது. அது குட்டி முதலாளிகளின் மூலதனமாக இருப்பது இயல்பானதுதான். ஆகவே நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் முதலாளித்துவத்தில் குட்டி முதலாளிகள் காணாமல் போயிருப்பார்கள். மீண்டும் சுற்றோட்டம் துவங்கியதும் உபரியை அபகரிப்பதால் மூலதனம் பெருகிக் கொண்டே போகும். அதே நேரத்தில் அது குவிந்து கொண்டே போகும். இந்தப் போக்கில் திட்டுத் திட்டாக பெரிதும் சிறிதுமாக மூலதனத் திரள்கள் சமுதாயத்தில் இயங்கிக் கொண்டிருக்கும். வேண்டலுக்கும் வழங்கலுக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே போய் மந்தநிலை ஏற்பட்டு மீண்டும் நெருக்கடி உண்டாகும் பொழுது மூலதனத் திரள்களில் உள்ள திட்டுக்களில் சிறிய திட்டுகள் காணாமல் போயிருக்கும். இப்படியாக அது பெருவீத மூலதனத்திரள்கள் பரிணமிக்கின்றன.
  2. சுபிட்சநிலை – மந்தநிலை – நெருக்கடிநிலை – மீள்வுநிலை – இயல்புநிலை – சுபிட்சநிலை என்றே முதலாளித்து உற்பத்தி முறையில் சுழற்சி செல்கிறது. முதலாளித்துவ வளர்ச்சி பெருகப் பெருக இதில் நெருக்கடி நிலை ஏற்படும் வேகம் அதிகரிக்கும். 150 ஆண்டுகால முதலாளித்துவ வரலாறு இதைத்தான் நிரூபிக்கிறது. இதே போல் நெருக்கடி நிலையிலிருந்து மீள்வுநிலை வந்து இயல்பு நிலைக்கு வருவதற்கு ஆகும் காலமும் அதிகரித்துக் கொண்டே செல்லும். எனவேதான் 2008ம் ஆண்டு ஏற்பட்ட முதலாளித்துவ நெருக்கடி இன்னும் மீள்வு நிலையை எட்டவில்லை. அதேபோல் நெருக்கடிகடிகளின் பருமனும் அடுத்தடுத்த நெருக்கடிகளில் அதிகரித்துக் கொண்டேதானிருக்கும். இதுவும் நிரூபணமாகியிருக்கிறது.

 

  1. அடிக்கடி நெருக்கடி ஏற்பட்டு மீண்டு வரும் பொழுது மூலதன இயக்கப் போக்கில் உள்ள திரட்டல் – குவிப்பு – மையப்பாடு  (Accumulation – Concentration – Centralisation) என்ற பாதையில் மையப்படுத்தப் படும் போக்கு அதிகரித்துக் கொண்டே போகிறது. மூலதன இயக்கத்தில் இயல்புநிலையில் திரட்டலும, சுபிட்ச நிலையில் குவிப்பும். நெருக்கடிநிலையில் மையப்பாடும் நடைபெறுகிறது. உலகில் இன்றைக்கு செயல்படும் பெரும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலதனத்தின் மையப்படும் போக்கில் உருவானவையே. இதன்விளைவாக குட்டி மூலதனங்கள் உருவாவது தடைபடுவதும். மீள்வுகாலம் அதிகரிப்பதற்கு காரணம்  பெருமூலதனங்கள் தோன்றியதன் விளைவாக, எந்த மூலதனம் சுற்றோட்டத்திலிருந்து விலக்கிக் கொள்வது என்ற மோதல் நீண்டகாலம் நீடிப்பதுவே மீள்வுகாலம் அதிகரித்து வருவதற்கு தற்போதைய காரணமாகும். மூலதனம் உலகளாவிய பயணத்தில் இருப்பதால் இன்னும் முதலாளித்துவ வளர்ச்சியில் மேலை நாடுகள் அளவிற்கு வளராத நாடுகள் இருப்பதால் நெருக்கடி மீட்சி என்பது தாமதமானலும் நடைபெறுகிறது. எனினும் இது உச்சகட்டத்தை அடையும் பொழுது அது நெருக்கடியிலிருந்து மீளவே முடியாத நிலை ஏற்படும்.

 

  1. மார்க்சின் இந்த ஆய்வை நடுநிலையான அரசியல் பொருளாதார நிபுணர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். முதலாளித்துவத்திற்கு தன்னை அர்ப்பணித்த பொருளாதாரவாதிகள் இதை ஏற்கவில்லை. எனினும் அவர்களால் இது நடைபெறுவதை தடுக்க முடியவில்லை. 2008ம் ஆண்டு துவங்கிய நெருக்கடிக்கு தீர்வு காண ஐக்கிய நாடுகள் சபையால் அமைக்கப்பட்ட நான்குபேர் கொண்ட நிபுணர் குழுவில் உள்ள நால்வரும் மார்க்சியர்கள். இவர்கள் பரிந்துரையை முதலாளித்துவ உலகம் ஏற்காததால் இன்றும் நெருக்கடி தொடருகிறது. எனினும் மூலதனமே முதன்மை முதலாளி அதன் வேலையாள் என்பதை மார்க்ஸ் கூறுகையில் முதலாளி என்பவர் மூலதனத்தின் ஆளுருவம் (Capital Personified) என்கிறார். ஆகவே அறிவுரைகளுக்கும் மனிதர்களின் இச்சைக்கும் ஆணைக்கும் மூலதனம் கட்டுப்படாது.

 

  1. மூலதனத்தின் உள்முரண்பாடுகள் மூலமாக அது தகர்ந்து விழுவது தவிர்க்க முடியாதது. இது மனிதத் தலையீடு இல்லாமல் நடப்பது. ஆனாலும் தகர்ந்து விழும் நிகழ்வுப் போக்கில் மூலதனத்தின் உள்முரண்பாடுகள் நீக்கப்பட்ட புதிய உற்பத்திமுறை உருவாவதற்கு மனிதத் தலையீடு அவசியம். இந்த வேலையைத்தான் கம்யூனிஸ்ட்கள் செய்கிறார்கள். அவர்கள் ஒரு மாற்று உற்பத்திமுறைக்காக உழைக்கிறார்கள். பழுத்த பழத்தை அது முழுமையாக பழுப்பதற்கு சில நாட்களுக்கு முன்பே விவசாயி பறித்து பயன்படுத்வதைப் போல்தான் இதுவும். அதை பழுக்கவிட்டால் அது அழுகி குளுகுளுத்து யாருக்கும் பயன்படாமல் போய்விடும். முதலாளித்துவத்தை தானே நொருங்கிவிழ அனுமதித்தால் மனிதசமூகமே இல்லாத நிலையை அது ஏற்படுத்திவிடும். காய் கனிவதற்காக காத்துக்கிடக்கும் விவசாயியைப் போல் முதலாளித்துவம் முற்றுவதற்காக கம்யூனிஸ்ட்கள் காத்துக்கிடக்கிறார்கள். விவசாயி அயர்ந்தால் காய் கனிந்து அழுகி பயன்படாமல் போய்விடும் கம்யுனிஸ்ட்கள் இல்லாவிட்டால் முதலாளித்துவம் மனித குலத்தை அழித்துவிடும்.

Related Posts