அரசியல்

மனிதகுலம் இருக்கும் வரை மார்க்ஸின் பெயர் நீடித்து நிற்கும்……….

“அவரது பெயர் காலங்கள் தோறும் நிலைத்து நிற்கும்”

லண்டன் ஹைகேட்டில் 1883 மார்ச் 17 காரல் மார்க்ஸின் பூத உடலின் முன் நின்று ஏங்கெல்ஸ் உதிர்த்த வார்த்தைகள் இவை. அன்று அதை கேட்க 12 பேர் மட்டுமே அங்கு கூடியிருந்தனர்.

ஆனால், 200 ஆண்டுகள் கழித்து டிசம்பர் 6 2019 அன்று பேரிஸ் நகர வீதிகளில் “மார்க்ஸ் அல்லது மரணம்” என்ற வாசகத்தை தாங்கிக்கொண்டு பல்லாயிரக்கணக்கான மாணவர்களும், இளைஞர்களும் புதிய தாராளவாத சீர்த்திருத்தங்களுக்கு எதிராக வீர சமர் புரிந்தனர். ஏங்கல்சின் வார்த்தைகள் அரங்கேறிய அந்த தருணம் கண்டிப்பாக முதலாளித்துவத்தின் அடிவயிற்றில் கலக்கத்தை உண்டாக்கியிருக்கும்.

யார் இந்த மார்க்ஸ்? எதற்காக இத்தனை ஆண்டுகாலம் கொண்டாடப்பட வேண்டும்?


“கம்யூனிஸ்ட் புரட்சியைக் கண்டு ஆளும் வர்க்கங்கள் அஞ்சி நடுங்கட்டும்! பாட்டாளிகளிடம் இழப்பதற்கு எதுவுமில்லை, அவர்தம் அடிமைச் சங்கிலிகளை தவிர! அவர்கள் பெறுவதற்கோ ஓர் உலகமே இருக்கிறது!
உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!!” என்று உலக பாட்டாளிகளுக்கு அறைகூவல் விடுத்தவர். பாட்டாளி வர்க்க அடிமைசங்கிலியை உடைத்தெறியும் சூட்சமத்தை உறக்க கூறி உலக பாட்டாளிகளை அலை அலையாய் போராட தூண்டியதால் என்னவோ இன்றளவும் முதலாளித்துவ வர்க்கம் மார்க்ஸ் என்னும் அந்த ஒற்றைப் பெயரைக் கண்டு அஞ்சி நடுங்குகிறது.

தன்வாழ்நாள் முழுவதும் பாட்டாளி வர்க்க விடுதலைக்காக போராடியவரின் வாழ்க்கை என்னவோ அவ்வளவு எளிதாக இருந்திடவில்லை.
“ஊர் பசி போக்க உழைத்தவனுக்கு, தன் பசி சுடவா செய்யும்” வறுமையாலும், இழப்பாலும், சோதனைகளாலும், நாடுக்கடுத்தப்பட்டும் அவர் வாழ்க்கை இவ்வுலகின் அத்தனை துன்பங்களையும் உள்ளடக்கியது. துன்பத்திலும் இன்பமாய் மார்க்ஸின் காதல் மனைவி ஜென்னியின் அரவணைப்பும் உதவியும் மட்டுமே மாரக்ஸ் முழுமனிதனாகவும், பாட்டாளி வர்க்க விடுதலை சாசனத்தை படைக்கவும் உதவியது. மாரக்ஸின் வரலாற்று புத்தகம் ஜென்னியின்றி முழுமையடையாது. ஆம், மார்க்ஸ் ஜென்னியின் ஏழு குழந்தைகளில் நால்வர் நோயாலும், பசியாலும் இறந்த போதும், அடக்கம் செய்ய சவப்பெட்டி வாங்க கூட பணமில்லாத போதும், குழந்தைக்கு பால் கொடுக்க மார்பில் பால் சுரக்காமல் இரத்தம் வடிந்த போதும் கூட மார்க்ஸை அந்த அழுத்தக்காரி கைவிடவே இல்லை. மாறாக மார்க்ஸின் எழுத்துக்களை பிரதி எடுக்கும் மதத்தான பணியை செய்துக்கொண்டிருந்தாள். உழைத்து உழைத்து ஓடாய் போன முதுகெழும்பு ஒடிந்த உழைப்பாளர்கள் கையில் விடுதலை ஆயுதமான “மார்க்சியத்தை” அளிக்க மார்க்ஸை விட அதிக தியாகம் செய்தவள் அவள்.. உலகில் தியாகத்திற்கு உருவம் இருந்தால் அது ஜென்னி என்று கூறுவது மிகையாகாது.

மார்க்ஸின் வாழ்வில் தவிர்க்கமுடியாத மற்றுமொரு நபர் எங்கல்ஸ். இவர் இல்லையெனில் பாட்டாளி வர்க்க விடுதலை ஆயுதமான மூலதனம் பிறந்திருக்காது. மாரக்ஸ் குடும்பம் வறுமையில் உழன்ற போது தான் வேலைக்கு சென்று மார்க்சின் வறுமையை போக்க உதவியவர் எங்கல்ஸ். இப்படியாக உலகின் தலைசிறந்த காதலுக்கும், நட்புக்கும், தியாகத்திற்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் மார்க்ஸ்.

மாரக்ஸ் எங்கல்ஸ் படைப்புகள் ஏதோ வெறும் வெற்று வார்த்தைகள் அல்ல. கற்பனையில் உதித்தவையல்ல. அவை அறிவியல் பூர்வமாக, வரலாற்று ரீதியாக ஆராய்ந்து எழுதப்பட்டவை. அதனால்தான் அவர்களே பின்வருமாறு கூறுகிறார்கள்.
நாங்கள் எழுதுவதெல்லாம் எங்கள் கற்பனைகளில் அல்லது வெறும் எங்கள் மூளைகளில் உதித்தவையல்ல! இதுவரை எழுதப்பட்ட, கூறப்பட்ட அனைத்து அறிவு வளங்களையும் உள்வாங்கி வரலாற்று ரீதியாக அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து எங்கள் சொந்த ஆய்வு முடிவுகளையும் முன்வைத்து உருவாக்கப்பட்டவை என்கின்றனர். எல்லாத் தத்துவங்களும் உலகம் எப்படி தோன்றுகின்றன இயங்குகின்றன என்று சிந்திக்கின்றன. ஆனால் நம்முடைய வேலை உலகம் எப்படி தோன்றுகிறுது என்று சிந்திப்பது மட்டுமில்லை மாறாக உலகத்தை மாற்றியமைப்பதே என்றார் மாரக்ஸ். “ஏடறிந்த வரலாறனைத்தும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறே” என்ற மார்க்ஸ் மனிதகுலம் தோன்றியது முதல் அவர் காலம்வரை இருந்த வரலாற்றை விரிவாக ஆய்வுக்கு உட்படுத்தினார்.

வெவ்வேறு காலக்கட்டங்களில் ஏற்ப்பட்ட மனித இனத்தின் மாற்றங்களை ஆய்வு செய்தார். மனித உழைப்பின் பாத்திரத்தை விளக்கினார். உழைப்பினால் ஏற்படும் “உபரிமதிப்பு” எப்படி ஒரு சிலரின் கைகளில் மூலதனமாக குவிகிறது என்ற மூலத்தை கண்டறிந்து முதலாளித்துவத்தின் உண்டியல் ரகசியத்தை போட்டுடைத்தார். டார்வின் கருத்துக்கள் மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி பற்றி விவாதித்ததைப் போல மார்க்சியக் கருத்துக்கள் மனித சமூகத்தின் வளர்ச்சிப் போக்கு பற்றிய விதிகளை நம்மிடம் முன்மொழிந்தது. முதலாளித்துவ உற்பத்தி முறையை இயக்கும் விதிகளை மார்க்ஸ் அம்பலப்படுத்தினார். அறிவியல், வரலாறு சார்ந்த பொதுவுடமை கருத்துக்களை பலர் பேசியிருந்தாலும் அழுத்தமாக, ஆராய்ச்சிகளுடன் முதன் முதலில் இந்த உலகிற்கு சொன்னவர் மார்க்ஸ். எல்லோரும் அவர்கள் காலத்திய சமூகத்தை எடுத்துரைத்ததோடு நின்ற போது மார்க்ஸ் மட்டுமே தொழிலாளி வர்க்கத்தின் அடிமைத்தழையை ஆய்வுக்குட்படுத்தி அவர்களின் விடுதலைக்கான ஆயுதத்தை உருவாக்கினார். மார்க்ஸை ஒரு தீர்க்கதரிசி என்று சொல்வது மிகையாகாது.

கம்யூனிஸ்ட் அறிக்கையில் கூறப்பட்டுள்ள ” சமுதாயம் இனிமேலும் இந்த முதலாளித்துவ வர்க்கத்தின்கீழ் வாழ முடியாது. வேறு சொற்களில் கூறுவதெனில் முதலாளித்துவ வர்க்கம் நிலவுவது இனிமேலும் சமுதாயத்துக்கு ஒவ்வாததாகிவிட்டது என்ற வாக்கியங்கள் தொடர்ந்து பல காலக்கட்டங்களில் நிரூபணம் ஆகிவந்துள்ளது.

குறிப்பாக உலகமே கொரோனா தொற்றால் அஞ்சி நடுங்கி ஒடுங்கி போயிருக்கும் சூழலில் குறைந்தபட்சம் மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை கூட முதலாளித்துவ அரசால் உறுதிசெய்ய முடியவில்லை.

உலகின் வல்லாதிக்க முதலாளித்துவ நாடான அமெரிக்காவும் அதன் சகாக்களான இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளிலும் மக்கள் கொத்து கொத்தாக செத்து மடிகின்றனர். இந்த நிலையிலும் சொந்த நாட்டு மக்களை காப்பாற்றாமல் ஈரான் மீது குண்டு போடவும், கியூபா மீது பொருளாதார தடை விதிக்க கோரி மற்ற நாடுகளை தூண்டியும் முதலாளித்துவத்தின் கோர முகத்தை காட்டிக் கொண்டிருக்கிறது அமெரிக்கா.

ஆனால், மார்க்ஸை, மார்க்சியத்தை பின்பற்றும் சோசலிச நாடுகளான சீனா, கியூபா ஆகியவை நோய் தொற்றையும் கட்டுப்படுத்தி பிற நாடுகளுக்கு மருத்துவர்களையும், மருந்துகளையும் அனுப்பி உதவிக்கரம் நீட்டிக்கொண்டிருக்கின்றன.
“Captilasim is a virus whereas communism is the vaccine” என்பதை மக்கள் தொடர்ந்து உணர்ந்துக் கொண்டே இருக்கின்றனர்.அதன் விளைவே உயிரிழப்பை கட்டுப்படுத்தாத அமெரிக்க அரசை எதிர்த்து மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கமான செர்பியா , நாங்கள் ஒற்றுமையானவர்கள் என்று சொல்வதையெல்லாம் இந்த கொரோனா பொய்யாக்கிவிட்டது, இந்த கடினமான சூழலில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு நாடு கூட உதவவில்லை. தற்போது சீனா மட்டுமே எங்களது நம்பிக்கை என சீனாவிற்கு கடிதம் எழுதியுள்ளது.தொடர்ந்து இடது மாற்றத்தை பின்பற்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்துக் கொண்டே இருக்கின்றனர்.

மார்க்சின் கம்யூனிச உலகம் என்ற இலட்சியம் நிறைவேறும் நாள் வெகுதொலைவில் இல்லை. மனிதனை மனிதன் சுரண்டாத பிரிவினைகளற்ற சமத்துவ உலகம் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் அமையத்தான் போகிறது.

ஏங்கல்ஸ் சொன்னது போல் மனிதகுலம் இருக்கும் வரை மார்க்ஸின் பெயர் நீடித்து நிற்கும்.


மார்க்சியம் வாழ்க!!

  • சுபாஷ்.

Related Posts