அரசியல்

மதமாற்றப் பிரச்சனைக்கு ஒரு ‘மார்க்கெட்’ தீர்வு !

மீண்டும் மதமாற்றத் தடைச் சட்டம் பற்றிய சர்ச்சைகள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன. மேற்கு வங்காளத்திலிருந்து பிழைப்புத் தேடி ஆக்ரா வந்து முகாமிட்டுள்ள மனிதர்கள் முஸ்லீம் சமூகத்தினராம், அவர்களுக்கு ரேஷன் கார்டு வாங்கித் தருவதாகக் கூறி அவர்களை இந்து மதத்திற்கு மாற்றியுள்ளார்கள். இதைப் போய் பெரிய விஷயமாக கருதி எதிர்க்கட்சிகள் கூக்குரலிட்டு வருகின்றன. அவர்களுக்கு குறைந்தபட்சம் ரேஷன் கார்டாவது கிடைக்குமல்லவா? இது கூட அக்கரையில்லாத எதிர்க்கட்சிகள் கட்டாய மதமாற்றத்தைப் பற்றி பேசி வருகின்றன. நாங்கள் இதைத்தான் நீண்ட காலமாக பேசி வருகிறோம் எனவே மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரலாமா என்று பாஜக நக்கலுடன் கேட்கிறது.
நமது துணைக்கண்டத்தில் மதம் மாறியவர்கள் மூன்று வகைப்படுவர். முதலாமவர், மதத்தின் தீவிர தத்துவார்த்த சாரங்களை கரைத்துக் குடித்து நான் பசு, பதி, பத்தியினிலியிருந்து சுதன், பிதா, ஆவிக்கு மாறிச் செல்கிறேன் என்பவர்கள், எனக்கு துவைதம் ஒத்துவராது நான் அத்வைதத்தையே தழுவுகிறேன் என்பவர்கள், நாராயணனைத் தவர வேறு ஒருவரையும் கடவுளாக ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று நாராயணன் மேல் காதல் கொண்டு, சிவனை இரண்டாம் இடத்துக்கு தள்ளி வைணவத்தை ஏற்றுக் கொண்டவர்கள் இந்த ஒரு வகையினர்தான். இவர்களின் எண்ணிக்கை மிகமிகக்குறைவு. பொதுவாக மதத்தை பற்றிய ஞானம் 90 சதவீதம் மதப்பற்றாளர்களுக்கு கிடையாது. மீதி பத்து சதவீதம் தெரிந்த விஷயத்தை இறுகிப் பற்றிக் கொண்டு அதிலேயே இருப்பவர்கள். ஏதோ எஞ்சிய பகுதியினர் மற்ற மத தத்துவ விஷயங்களைப் படித்துவிட்டு அடடே! இதைவிட அது பரவாயில்லையே, நான் அதற்குச் செல்கிறேன் என்பவர்கள். எனவே மதமாற்றச் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் இவர்கள்.
இரண்டாமவர்கள் குறிப்பாக இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்கு மாறிச் செல்பவர்கள். இதற்கான காரணம் இந்துமதம் போற்றிப் பாதுகாக்கும் சாதியத்தை விட்டு விலகுவதுதான். இதற்கு உதாரணமாக டாக்டர் பாபா சாகிப் அம்பேத்கர். அவர் இந்துமதத்தை ஒரு சாதிய ஒடுக்குமுறை நிறுவனமாக உணர்ந்து புத்தமதத்திற்கு மாறிச் சென்றார். பெரியார்தாசனைக் கூட நான் இந்த வகையில்தான் சேர்ப்பேன். காரணம் திடீரென்று இஸ்லாமிய தத்தவார்த்த விஷயங்கள் அவரைக் கவ்விப்பிடித்து சென்றாகச் தெரியவில்லை. சிறந்த பேச்சாளராக இருந்ததால் இஸ்லாமியர்கள் மேடை அமைத்துக் கொடுத்தனர். அவரும் அங்கே அல்லாவின் புகழை பாடிக் கொண்டு மறைந்தார். உண்மையில் அவருக்கு இந்து மதத்தின் மீதுதான் கோபம் அதிகம். அவர் இஸ்லாமிற்கு சென்றது எதிர்வினையாற்றுவதற்குத்தான். சிறிது காலம் புத்தமதத்திற்கு சென்றும் அவருக்கு கோபம் அடங்கவில்லை. அதையும் இந்துமதம் கபளீகரம் செய்துவிட்டது என்ற கருத்துடையவர்.  இவர்களும் மதமாற்ற சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டவர்கள். இவர்களைப் போய் இந்த மத்த்தில்தான் இருங்கள் என்று கட்டாயப்படுத்தினால் அது மனித உரிமைப் பிரச்சனையாகிவிடும்.
மூன்றாவது வகையினர் வக்கற்றவர்கள். விளிம்புநிலை மனிதர்கள். இவர்களின் பிரதான போராட்டமே வாழ்விற்கான போராட்டம். இவர்களுக்கு மதத்தைப் பற்றி கவலையில்லை. மதத்தை வைத்து அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் கூட்டத்திடம் எங்கள் மதத்திற்கு வந்தால் இறந்தபின் சொர்க்கத்திற்கு செல்லாம் என்று பேசுகிறீர்களே, நான் உயிருடன் இருக்கும் பொழுதே சொர்க்கத்தை காட்டுங்கள் என்று அவரசரப்படுபவர்கள். ஆகவேதான் இவர்கள் ஏதோ ஒரு பயன் பெற்று இன்னொரு மதத்திற்கு மாறுபவர்கள். இவர்களைப் பற்றிய சர்ச்சையே தற்பொழுது நடைபெற்றுவரும் சர்ச்சைகள்.
இந்தச் சர்ச்சையை தீர்ப்பது எப்படி? சந்தையே சர்வத்தையும் தீர்மானிக்கும் என்ற தாரக மந்திரத்துடன் செயல்படும் நம் அரசாங்கம், நம் சமூகத்தையும் அப்படியே மாற்றிவைத்திருக்கிறது. இந்த நிலையில் சந்தையை மறந்துவிட்டு இப்பிரச்சனைக்கு தீர்வுகாண நினைப்பதே அடிப்படையான அணுகுமுறைத் தவறாகக் கருதுகிறேன். மதமாற்றத்தை தடை செய்துவிட்டால் சர்ச்சைக்குரிய இவர்களுக்கு தங்கள் மத அடையாளத்தை விற்று கிடைக்கும் சிறய பலனை இழந்தவராவார்கள். எனவே நான் மதமாற்றத்தைத் தடை செய்வதை எதிர்க்கிறேன். ஒருவன் தன்னுடைய வாழ்வின் எத்தனை முறை வேண்டுமானாலும் எவ்வளவு தொகை பெற்றுக் கொண்டு மாறினாலும் மதமாற்றத்தை அனுமதிக்க வேண்டும். சந்தையே ஒருவரின் மதத்தை தீர்மானிக்க வேண்டும். யார் அதிகம் கொடுக்கிறார்களோ அவர்கள் மதத்திற்கு செல்வதற்கு அனுமதிக்க வேண்டும். அதனால்தான் சொல்கிறேன் ரேஷன் கார்டு கொடுத்து மதமாற்றம் செய்தால் என்ன தவறு?
எனினும் சந்தை என்பது நாம் தூய சந்தையை மனதில் வைத்துக் கொண்டு பேசுகிறோம். நடப்புலகில் இருப்பதோ அழுக்குச் சந்தை எனவே மதமாற்றத் தடைச் சட்டத்தைவிட அழுக்குச் சந்தையை தூய சந்தையாக மாற்றும் சட்டமே நமக்குத் தேவை. ரேஷன் கார்டு கொடுக்கிறேன் என்று கூறி மதமாற்றம் செய்துவிட்டு ரேஷன் கார்டுக்கு பதிலாக அல்வா கொடுத்துவிட்டால் என்ன செய்வது? இதற்கு தக்க சட்டப் பாதுகாப்பு வேண்டும். ஆகவே பலன் பெற்றுக் கொண்டு மதமாறுவோருக்கு பாதுகாப்பு அளிக்கும் விதத்தில் மதமாற்றத்தை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வரவேண்டும். பேசிய பலனை கொடுக்காமல் மதமாற்றம் செய்து ஏமாற்றுபவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கும் விதமாக நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை திருத்த வேண்டும்.
சடங்குகளின் அடிப்படையில் திருமணம் நடந்தாலும், திருமணங்கள் பதிவு செய்யும் வழக்கம் தற்போது நடைமுறைக்கு வந்தது போல், மதமாற்றம் செய்வதும் முதலில் பதிவு செய்யப்பட வேண்டும். அதன்பிறகு வேண்டுமானால் அவர்வர்களின் மதச் சடங்குகளை வைத்துக் கொள்ளலாம். மதமாற்றத்தை தூண்டுபவர்களே பத்திரப் பதிவுச் செலவுகளை ஏற்கவேண்டும். சொத்து பதிவுக்கு 13 சதவீதம் ஸ்டாம்ப் டியூட்டி இருப்பது போல் மதமாற்றத்திற்கு கையாளும் பணத்தில் 100 சதவீதம் ஸ்டாம்ப் டியூட்டி செலுத்த வகைசெய்யும் வழியில் பதிவுச் சட்டத்தை திருத்த வேண்டும். அரசாங்கத்திற்கும் நல்ல வருமானம் கிடைக்கும். இப்படிப் பதிவு செய்துவிட்டால்தான் அவர்கள் ஏமாற்றப்பட்டால் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு செல்ல முடியும். ஆகவே சந்தையே மதமாற்றப் பிரச்சனைக்கு தீர்வு என்பதே எனது ஆழமான கருத்து.
 
இரண்டாம் தலைமுறை பொருளாதார சீர்திருத்தங்களை அமலாக்கும் இந்திய நிதியமைச்சர் அருண் ஜெய்ட்லி, முதலில் ஆதார் அட்டையை கைவிட்டுவிட்டு ஒவ்வொருவருக்கும் மத அடையாள அட்டையைக் கொடுக்க வேண்டும். மத அடையாள அட்டையானது டிரேடபிள் இன்ஸ்ருமென்ட் என்று நெகோஷியபிள் இன்ஸ்ருமென்ட் சட்டத்தை திருத்த வேண்டும். இப்படிச் செய்தால்தான் மதஅட்டை டெரிவேட்டிவ் சந்தையை நாம் உருவாக்க முடியும்.
நான் தவறு செய்கிறேன் என்று நினைக்கிறேன். பிரதமரின் பொருளாதார ஆலோசகர் சுப்பிரமணியன் செர்ல்ல வேண்டிய ஆலோசனைகளை நான் சொல்வதால் ஹார்வர்டு பல்கலைக் கழகப் பட்டத்துடைய மதிப்பு குறைந்து விடுவதால் மீதி விஷயங்களை சுப்பிரமணியனே சொல்லட்டும் என்று நிறுத்திக் கொள்கிறேன்.

Related Posts