அரசியல்

பணிநிரந்தர கோரிக்கையும் மலக்குழி மரணங்களும் ……..தூத்துக்குடிக்கு அருகில் செக்காரன்பட்டியில் செப்டிக் டாங்க் சுத்தம் செய்ய இறங்கிய நான்கு தொழிலாளிகள் மரணமடைந்துள்ளனர் . ஊரடங்கினால் வேலையும் வருமானமும் இன்றி பட்டினியைத் தவிர்க்க கிடைக்கும் வேலையை விடக் கூடாது எனும் நிலைமையில் இதில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களின் மரணத்திற்கு காரணமானவர்களைக் கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் , பலியானோர் குடும்பங்களைப் பாதுகாக்கவும் மாநில அரசை வலியுறுத்தியும் , உடனடி போராட்டமும் நடந்துள்ளது .

இது ஒருபுறம் இருக்க தூய்மைப் பணியாளர்களை நிரந்தர ஊழியர்கள் ஆக்குக ! சம்பள உயர்வு , பாதுகாப்பு உபகரணங்கள் கொடு ! ஊரடங்கு கால ஊக்கத்தொகை கொடு ! என்பன போன்ற கோரிக்கைகளின் பேரில் சமீப காலத்தில் பல போராட்டங்கள் நடந்து வருகின்றன. சில இடங்களில் அவை வெற்றி பெற்ற செய்திகளையும் காண்கிறோம்!

இந்த வகைப் பணியாளர்கள் பொது இடங்களில் உள்ள குப்பைகளை வாரிக்கூட்டியும் ,சாக்கடைக் கழிவுகள் குப்பைகளை அள்ளியும் பொதுக் கழிப்பிடங்களை சுத்தம் செய்தும் ,தொழிற் கூடங்களில் வீடுகளில் நிறையும் குப்பைகளுடன் மருத்துவக் கழிவுகள் உட்பட அனைத்தையும் வண்டியில் மொத்தமாய் அள்ளிச் சென்று கிடங்கில் கொட்டியும் , அவைகளைப் பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்பியும் பணியாற்றும் தொழிலாளர்களைக் கண்டு வருகிறோம் . அத்துடன் கேபிள்கள், குழாய்கள், போன்றவைகளைப் பதிக்க சாலையில் குழி தோண்டும் பணியாளர்களையும் காண்கிறோம் .

குப்பைகளும் கழிவுகளும் மனித இயக்கத்தின் ஒரு பகுதியாகும். இவைகளை அகற்றும் பணி உலகம் முழுதும் நடைபெறுகிறது. ஆனால் இதன் நடைமுறை நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது . மதம் ,மொழி , நிறம் , இனம் என பல்வகை வேறுபாடுகள் இதில் கலப்பதும் உண்டு. மனிதனை மனிதனாக பாவிக்கும் நடைமுறையும் உண்டு. ஆனால் எப்படியானாலும் உலகளாவிய அளவில் இந்த தொழிலாளர்களுக்கு ஓரளவு பாதுகாப்பும் , உபகரணங்களும் வளர்ந்துள்ளன .

ஆனால் இந்தியாவில் இவை பாதுகாப்பு ஏற்பாடு ஏதுமின்றி, மனிதர்கள் நேரடியாக ஈடுபடும் வேலைகளாக உள்ளன. பிறப்பின் அடிப்படையில் உள்ள சாதிய ஏற்றதாழ்வு மிகக் கூர்மையான முறையில் இதில் பங்களிக்கிறது. அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடிமூட்டையான ஒடுக்கப்பட்ட சாதிகள் சார்ந்த ஆண்களும் பெண்களும் தான் இந்த வேலைகளை செய்ய பணிக்கப் படுகின்றனர். இது எள்ளளவும் மறுக்காமல் அங்கீகரிக்க வேண்டிய பெரும் உண்மை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் தனிமனிதர்களின் எண்ணம் மட்டுமா இதில் பங்கு வகிக்கிறது ? அரசுக்கு பங்கில்லையா ? சட்டம் , நீதி , நிர்வாகம் , மற்றும் ஆளுவோரின் எண்ணப்போக்குகளுக்கு பங்கில்லையா ?

இயந்திரமயத்தில் உருவான முதலாளித்துவ அமைப்பு ஏன் இங்கு மட்டும் இவைகளை நீடித்து நிலவ அனுமதிக்கிறது எனும் கேள்வி எழுப்பி தான் தீர்வை நோக்கி பயணிக்க முடியும். இதற்கு இந்திய ஆளும் வர்க்க சுரண்டலின் தன்மையை கவனிக்க வேண்டும் .

நிலவுடமை சமூகத்துடன் சமரசமும், அன்னிய மூலதனத்துடன் கைகோர்ப்பும் கொண்டு இந்திய பெருமுதலாளித்துவம் தன் சுரண்டலைத் தொடர்கிறது . விவசாயத்தின் அழிவில் கார்ப்பொரேட் நலனும் விவசாயி களின் இழப்பும் இணைகிறது. நிலம் சார்ந்த மாற்றுத் தொழில்களில் கூலி விவசாயத் தொழிலாளிகள் கடுமையாக சுரண்டப் படுகின்றனர் அல்லது வேலைகளை இழக்கின்றனர். அநேகமாக இவர்களும் ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் தான் .
பொதுத்துறைகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவுகளும், உள்ளாட்சிப் பணிகள் உட்பட மாநில அரசின் பல பணிகள் ஒப்பந்ததாரர்கள் மூலம் நடப்பதும் வேலை இழப்பை உருவாக்கி, நிரந்தர தொழிலாளி களின் எண்ணிக்கை பரவலாகக் குறையக் காரணமாகிறது .

எனவே வேலையில்லாத மக்களில் ஒரு பகுதியினர் முறைசாரா தொழிலாளர்களாக மாறுகின்றனர் , இன்னொரு பகுதியினர் இருப்பில் வைக்கப்படுகின்றனர் . இவர்கள் வேலையில் உள்ள தொழிலாளிகளின் பேரம் பேசும் உரிமையை பறிக்க பயன்படுத்தப் படுகின்றனர் .

இதனால் தொழிலாளிகள் முறைப்படி சட்ட உரிமைகள், சலுகைகள் என எதுவும் பெற முடியாமல் சுரண்டப்படுகின்றனர் . குறைந்த கூலி நிறைய உழைப்பு ( கருத்தால், கரத்தால் ) அல்லது குறைந்த தொழில்நுட்ப செலவில் அதிக லாபம் என்பது தான் முதலாளித்துவத்தின் அடிப்படையாக உள்ளது .

இதன் ஒரு பகுதியாகத் தான் தூய்மைப் பணியாளர்கள் , அரசு மற்றும் உள்ளாட்சித் துறையின் பல்வேறு பிரிவு கடைமட்ட ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் என அனைவரும் பார்க்கப்பட வேண்டும். இவர்களை சுரண்டுவது மக்களிடம் வெளிப்பட்டு கோபாவேசம் கிளறாமல் இருக்க சாதி ஏணிப்படி பயன்படுகிறது .மேல் நோக்கிச் செல்லும் அடுத்தடுத்த சாதிக் கண்ணாடிகள் சுரண்டலில் கூட்டு சேர்க்கப் படுகின்றன .

வட இந்தியாவில் இம்மக்கள் மீதான வன்முறைகள் அன்றாடம் ஊடகக் காட்சியாவது போல் தமிழகத்திலும் வன்முறைகள் அதிகரித்து வருவதையும் காண்கிறோம் . மக்களின் வாக்குரிமை தேர்வு செய்த ஆளும் கட்சியினர் அல்லது ஆட்சியாளர்கள் முதல் உள்ளாட்சி அதிகாரிகள் வரை இம்மக்களிடம் நடந்து கொள்ளும் நடைமுறைகளையும் காண்கிறோம் . எனவே மத்திய மாநில அரசாங்கத்தை தனியாகவும், சட்டம், நீதி, நிர்வாகம்,தேர்வு செய்யப்படும் சுயநிர்ணய அமைப்புகள் ஆகியவற்றைத் தனியாகவும் காண இயலாது. ஆளும் வர்க்க நலன் சார்ந்து கொள்கை முடிவுகளை அரசாங்கம் எடுக்கிறது . நிர்வாகம் அவற்றை அமுல்படுத்து கிறது . அரசையும் நிர்வாகத்தையும் மற்ற துறைகள் பாதுகாக்கின்றன .

எனவே கடைநிலைத் தொழிலாளிகள் , தூய்மைப் பணியாளர்கள் , ஒப்பந்த தொழிலாளிகள் ஆகியோரின் உழைப்பின் (சம்பள உயர்வு, பணி நிரந்தரம், வாழ்க்கைத் தர உயர்வு ) மதிப்பை அதிகரித்தால் தான் ஆளும் வர்க்க அமைப்பு இதற்காகும் அதிகபட்ச செலவினங்களைப் பற்றி சிந்திக்க துவங்கும் . மனித உழைப்பு இதில் அவசியமா எனும் கேள்வியை ஆளும் வர்க்க அமைப்பு முறை எழுப்பும். அப்போது தான் இத்தொழிலாளிகள் இதிலிருந்து விடுவிக்கப்பட்டு மாற்று வேலை வாய்ப்புகள் வழங்க வழி பிறக்கும் .

பட்டமேற்படிப்பு கற்றவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இது போன்ற வேலைகளுக்கு மனுசெய்வதை இன்றைய தமிழகத்தில் நாம் காண்கிறோம் .இதையும் இணைத்து சிந்தித்தால் தான் இதன் தீவிரத் தன்மையை உணர முடியும் .

இந்த வகையில் தூய்மைப் பணியாளர்களின் பணிநிரந்தரம் ,சம்பள உயர்வு உள்ளிட்ட நிர்வாக கோரிக்கைகள் நியாயமானவை. இவை சாதியம்
நீடிக்க வேண்டும் எனும் அடிப்படையிலான கோரிக்கைகள் அல்ல . மலக்குழி மரணம் தடுக்க தொழில்நுட்பக் கருவிகளை பயன்படுத்த வேண்டும் எனும் கோரிக்கையின் உண்மைத் தன்மையும் , தூய்மைப் பணியாளர்களின் நலன் சார்ந்த கோரிக்கைகளும் ஒன்றையொன்று சார்ந்தவையே ! எனவே தான் இத்தகைய போராட்டங்களை பலசாதிகளை சார்ந்த உழைக்கும் வர்க்க இடதுசாரிகளும் முன்னெடுக்கிறார்கள் .வழி நடத்துகிறார்கள் .கலந்து கொள்கிறார்கள் .

ஆளும் வர்க்க சுரண்டலை முறியடிக்க தொழிலாளி வர்க்க ஒற்றுமை எனும் அடிப்படையில் அணி திரட்டலும் , சரியான வர்க்க மற்றும் சமூகப் புரிதலுடன் மாற்றம் நோக்கி பயணிப்பதும் காலத்தின் தேவை !

  • ஆர்.செம்மலர்.

Related Posts