பிற

மானுட மேன்மையை மீட்டெடுக்கும் ”மண்டோ” திரைப்படம் . . . . . . . . !

‘என்னுடைய கதைகளை உங்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்றால் இந்த சமூகமும் சகித்துக்கொள்ள முடியாத அளவுக்கு இருக்கிறது என்றே பொருள். ஏற்கனவே நிர்வாணமாக திரிந்து கொண்டிருக்கும் சமூகத்தின் ஆடைகளை கழற்ற நான் யார்?’

நந்திதா தாஸ் எழுத்து இயக்கத்தில் மண்டோவின் வாழ்க்கை திரைக்கு வந்திருக்கிறது. மண்டோவின் வாழ்க்கையின் இறுதி ஆண்டுகளை மட்டும் எடுத்துக்கொண்டு கதையை நெய்திருக்கிறார்கள். வெறுமனே அவரின் வாழ்க்கை பக்கங்களை மட்டும் தொட்டுச் செல்லாமல், மண்டோவின் கதைகளும், கதாபாத்திரங்களும் திரையில் தோன்றி பிரமிக்க வைக்கிறார்கள். ‘ஏன் எல்லாவற்றையும் கதையாக மாற்றுகிறாய்?’ என மண்டோவை கேட்கிறார்கள், ‘இறுதியில் எல்லாமே கதையும், கதாபாத்திரங்களும் மட்டுமே தானே?’ என்று கேட்கிறார் மண்டோ.

மண்டோவாக நவாஸுதீன் சித்திக்கி வாழ்ந்திருக்கிறார். இரண்டு முத்தங்களைப் பெற்றுவிட்டு மகளின் ஒரு முத்தத்தைப் பெற இறைஞ்சியபடியே காத்திருக்கும் தந்தையாக, ‘இவரின் படைப்பில் ஆபாசமில்லை, ஆனால், அது உயர்ந்த இலக்கியமாகக் கருதப்படும் தகுதியும் கொண்டிருக்கவில்லை’ என்று ஃபயஸ் சொல்கிற போது, உறைந்து மரணிக்கிற படைப்பாளியாக, ‘குடித்துவிட்டு தான் கல்லூரிக்கு பேச வருவேன்’ என்கிற கணத்தில் அசட்டையான ஆளுமையாக நெகிழவைக்கிறார்.

நாம் வாழும் காலத்தின் கண்ணாடி போலப் பிரிவினைக்காலமும், மண்டோவின் அக, புறஉலகின் போராட்டங்களும் திகழ்கின்றன. விடுதலைக்கு முந்தைய இந்தியாவில் மூன்று முறையும், பாகிஸ்தானில் மூன்று முறையும் ஆபாசமாக எழுதுகிறார் என்று அவர் நீதிமன்றங்களில் அலைக்கழிக்கப்படுகிறார், அவமானப்படுத்தப்படுகிறார். ‘நீங்கள் எழுதினால் தான் நாங்கள் வறுமையில் வாட வேண்டியிருக்கும்’ என்று மனைவி மன்றாடுகிறார். வறுமையின் கொடுங்கரங்களும், மன அழுத்தமும், பிரிவினைக்காயங்களும் அந்தப் பம்பாய்வாலாவை அரிக்கின்றன. ஆனாலும், தனக்குள் கனன்று கொண்டிருக்கும் மானுட வாழ்வின் தரிசனங்களை, கண்ணீரை, கயமையை எழுத்தில் சொல்லிக்கொண்டே இருக்கிறார் மண்டோ.

‘எங்கே இந்து முஸ்லீம் சிக்கல் தொடங்கியது என்று கடந்த காலத்தில் ஆராய்கிறார்கள். முதல் சுதந்திரப்போரில் துவங்கியது என்று ஒரு தரப்பு. முகலாயர் காலத்தில் துவங்கியது என்று இன்னொரு தரப்பு. இந்தச் சச்சரவுகளுக்கு நடுவே ரத்தமும், கொலைகளும் பெருக்கெடுக்கக் கொலைகாரர்கள் இன்றைய வரலாற்றை எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.’ என்று சலனமில்லாமல் மண்டோ முகத்தில் அறைகிறார்.

பாலியல் தொழிலாளிகளின் உலகத்தை மீண்டும், மீண்டும் மண்டோ எழுதுவதைக் கண்டு, ‘ஆலைத்தொழிலாளிகள் குறித்தும், விடுதலைப் போராட்டம் குறித்து எழுத மாட்டாயா மண்டோ?’ என்று கேட்கிறார் கிஷன் சந்தர். ‘வேசைகளிடம் எதற்கு ஆண்கள் போகிறார்கள்? பிரார்த்தனை புரியவா? ஆண்கள் அவர்களிடம் போவதை நிறுத்தச்சொல்லுங்கள். நானும் நான் காண்கிற உலகத்தை, அதன் அவலங்களைப் பதிவதை நிறுத்திக்கொள்கிறேன்’ என்று மண்டோ எழுகிறார்.

பம்பாய் நகரத்தில் கலவரத்தின் சுவடுகள் அவர் அணிய மறுக்கிற மத அடையாளத்தைத் திணிக்கிற போது, இரு தொப்பிகளை வாங்கி வைத்துக் கொள்கிறார், ‘இதயத்தில் இருக்கும் மதம் தலைக்கு ஏறுகிற போது அது தொப்பியாக உருவெடுக்கிறது. ஒன்று இந்து தொப்பி, இன்னொன்று இஸ்லாமிய தொப்பி. ம்ம்ம்…’ என்று மரணப் பயம் ஊற்றெடுக்கும் தருணத்திலும் நண்பனின் கரம்பற்றி இறைகிறார் மண்டோ.

‘என் நண்பனே, என் எதிரியே’ என்று இஸ்மத் சுக்தாய் எழுதியிருக்கும் கடிதத்தை மண்டோவின் மனைவி சஃபியாவாக நடிக்கும் ரசிகா துக்கல் வாசிக்கையில் அவரின் குரலில் எழுந்து, தாவி, தழுவி மறையும் நட்பும், முகத்தில் படரும் சோகமும், பரவசமும் என்னமோ இஸ்மத் சுக்தாயே மண்டோவுடன் பேசுவது போன்ற மாயையை ஏற்படுத்துகிறது. அத்தனை அபாரமான நடிப்பு.

எழுத்தாளர்கள் குடும்பக் கடமை துறந்தவர்கள் என்பதைத் தந்தை மண்டோ கதையின் பெரும்பகுதியில் பொய்யாக்குகிறார். மனைவியை எல்லா இடங்களுக்கும் அழைத்துச் செல்கிறார். வீட்டு வேலைகளை, குழந்தை கவனிப்பை பகிர்ந்து கொள்கிறார். மனைவியை அத்தனை காதலும், அக்கறையும் வழிய கவனித்துக் கொள்கிறார். பின்னர்ப் பம்பாயின் நினைவுகளிலும், கொதித்து எழும் எழுத்தை கொட்ட முடியாமலும் குமைகிற போது இருவருக்குள்ளும் நிகழும் ஊடலும், பிரியமும், அணைப்பும், வழியும் கண்ணீரும் கரங்களை நனைக்கின்றன.

நடிகர் ஷ்யாம் -மண்டோ நட்பு இந்தத் திரைப்படத்தின் உன்னத வார்ப்பு. வார்த்தைகளில் கடத்திவிட முடியாத இந்து-முஸ்லீம் பதற்றம் அவர்களின் நட்பையும் பதம் பார்க்க முனைகிறது. பிரிக்கப்படாத கடிதங்களும், ஹிப்துல்லா என்கிற விளிப்பும், திரும்பிப்பார்க்க மறுக்கிற கோபங்களும், சேர்ந்து புகைக்கிற சிகரெட்களும் என்று அவர்களின் நட்பின் கணங்கள் திரையில் ஒளிர்ந்து, உதிர்ந்து சிரிக்கிறது.

இந்தத் திரைக்காவியத்தில் மண்டோவின் சிறுகதைகளும், அவற்றில் வரும் மனிதர்களும் நீக்கமற கலந்திருக்கிறார்கள். ‘உன்னுடைய கதைகள் பெண்கள் குறித்துத் தனித்த அக்கறை கொண்டதாக இருக்கிறதே?’ என்று கேட்கிற போது, ‘நான் எல்லாப் பெண்கள் குறித்தும் அக்கறை கொள்வதில்லை. சில பெண்களைக் குறித்தே எழுதுகிறேன். தன்னை விற்க தயாராக இல்லாத, ஆனால், வாங்கப்படுகிற சில பெண்கள் குறித்து … இரவு முழுக்க உழைத்து ஓய்கிற , பகல் முழுக்கத் தூங்குகிற, தன்னுடைய கதவை சீக்கிரம் முதுமை தட்டாதா என ஏங்கிக் கொண்டிருக்கிற சில பெண்கள் குறித்தே எழுதுகிறேன்’ என்கிற போது மண்டோவின் கதையின் பெண்கள் வந்து போகிறார்கள். பிரிவினையின், ஆண் காமத்தின் வன்முறைகளால் சிதைந்து போகும் பெண்களும், தூக்கம் தன்னைத் தழுவாதா என்று மருகி தீர்க்கும் பாலியல் தொழிலாளிகளும் கலங்க வைக்கிறார்கள்.

‘பாகிஸ்தானுக்குப் போ, இந்தியாவுக்குப் போ’ என்று மனநலம் பாதிக்கப்பட்டவர்களை இரு தேசங்களும் பரிமாறிக்கொள்கிறார்கள். அப்போது, டோபா டேக் சிங்கை தேடிச்செல்லும் ஒரு முதியவன், ‘பாகிஸ்தானுக்குப் போ… இந்தியாவுக்குப் போ…நீங்கள் எல்லாம் நரகத்துக்குப் போங்கள்’ என்று பெருங்குரலெடுத்துச் சபிக்கிறான். அவன் இரண்டு நிலங்களுக்கு இடையில் மனிதனாக மரிக்கிறான். அந்த மண்டோவின் முதியவன் மண்டோ தானோ என்னவோ? மனிதராக உயிர்த்திருக்க, மண்டோவுடன் லாகூர், பம்பாய் தெருக்களில் கதைகளும், வாழ்க்கையும் கலந்து, தொலைந்து மானுட மேன்மையை மீட்க திரையரங்கிற்குச் செல்லுங்கள்.

– பூ.கொ.சரவணன்.

Related Posts