அரசியல் சமூகம்

மாம்பழக் கலர் சட்டையும் மதச் சார்பும்!

சரவணம்பட்டியில சுப்பரமணியத் தெரியாத ஆளே இருக்க முடியாதுங்க.

“அன்னாடும் மாம்பழக்கலர் சட்ட போட்டிருப்பானே, அந்த சுப்பரமணி வூடெது”ன்னு கேட்டீங்கன்னா, ஊளைமூக்கொழுக்கீட்டிருக்கற கொழந்த கூட ரெண்டாவது தெரு மூணாவது வூடுன்னு செரியாச் சொல்லிப்போடும்ங்க.

எனக்கு வெவரந்தெரிஞ்ச நாள்லருந்து அவன் மாம்பழக் கலர் சட்டை தான் போடுவானுங்க.

இத்தனை நாள் அடக்கி வச்சுருந்ததை, அவனென்ன நெனச்சாலும் பரவால, அன்னக்கி கண்டிசனா கேட்டே போடறதுன்று முடிவுபண்ணிப்போட்டனுங்க.

கடைல பீடி குடிச்சுட்டிருக்கும் போது மாம்பழச் சட்டையை போட்டுட்டு வெக்கு வெக்குன்னு வந்தானுங்க.

நான் பீடியை கீழ போட்டு மிதிச்சுட்டு, “இங்க வாடா சுப்பரமணி”ன்னனுங்க.

“ஏன்டா பொழுதின்னிக்கும் மாம்பழக் கலர் சட்டையே போட்டுட்டு இருக்கே”ன்னு கேட்டனுங்க.

“இது தான் இருக்கறதிலயே நல்ல சட்டை”ன்னு சொன்னானுங்க.

“இதுவரைக்கும் துணிக்கடைல நீ சட்டைஎடுத்து நான் பாத்ததேயில்லையே?. அப்பறம் எப்பிட்றா இது தான் இருக்கறதிலயே நல்ல சட்டைன்னு சொல்ற”ன்னு கேட்டனுங்க.

“எந்த கடைக்கும் போகலை. எந்த சட்டையையும் பாக்கலை ஆனா இது தான் இருக்கறதிலேயே நல்ல சட்டை”னானுங்க.

“அட கூறுகெட்ட குப்பா, எந்த சட்டையையும் பாக்காம இது தான் இருக்கறதிலேயே நல்ல சட்டைன்னு எப்படிடா சொல்லற”ன்னு மறுக்காவும் கேட்டனுங்க.

“இது எங்கப்பா கொடுத்த சட்டை. அதனால இது தான் இருக்கறதிலேயே நல்ல சட்டை”ன்னு சொன்னானுங்க.

“உங்கப்பா கொடுத்த சட்டையாவே இருந்துட்டு போகட்டும், ஆனா இதை அவரு எப்ப எடுத்தாரு, யாரு தெச்சாங்க, எந்தத் துணில தெச்சுருக்குன்னாவது தெரியுமா”ன்னனுங்க.

“அதெல்லாம் தெரியாது, ஆனா இது தான் இருக்கறதிலேயே நல்ல சட்டை. இதை பத்தி ஏதாவது சொன்னியானா அடிச்சே போடுவே”ன்னு சொன்னானுங்க.

“அந்த சட்டையோட தரத்தை பத்தியும் தெரியாது, மத்த சட்டைகளையும் பார்த்ததில்லை ஆனா இது தான் இருக்கறதுலயே நல்ல சட்டைன்னு சொல்லற. உனக்கு உம்மையிலயே மறை தாண்டா கழண்டு போச்சு”ன்னு சொல்லி அன்னைக்கு அவனை அனுப்பிட்டனுங்க.

ஆனா அன்னிலருந்து அவன எங்க பாத்தாலும் ஓட்டோ ஓட்டுன்னு ஓட்டிப்போடுவனுங்க.

அப்படி ஒருநா ஓட்டிட்டு இருக்கும் போது, நம்ம மரக்கடை பொன்னுசாமி இருக்கானுங்கல்ல, அவம்மந்தானுங்க.

அவன்கிட்ட நான் என்னைக்கும் கொஞ்சம் அளவாத் தான் வச்சுக்குவனுங்க. திடுதிப்புன்னு ஏடாகூடமா ஏதாவது கேட்டு நம்ம டவுசர் அவுத்துப்போடுவானுங்க.

ஆனா பாருங்க, என்ற நேரம், நேரா இங்கன வந்து “என்னடா பிரச்சினை, எதுக்குடா அவனை ஓட்டறீங்க”ன்னானுங்க.

வேற வழி இல்லாம நான் விஷயத்தை சொன்னனுங்க.

“ரெண்டு மாசத்துக்கு முன்னாடி எலக்‌ஷன் வந்தப்ப, நம்ம மதம், நம்ம மதம்ன்னு குதி போட்டுட்டு நம்ம மதத்துகாரனுக்கு தான் ஓட்டுப் போடோனும்ன்னு ஊரெல்லாம் கூவிட்டு இருந்தியே, அந்த மதத்தை நீ எப்படிடா தேர்ந்தெடுத்த? நாலு மதத்தை ஆராய்ச்சி பண்ணி பார்த்துட்டு எது கரிக்கிட்டுன்னு தெரிஞ்சு தான் தேர்ந்தெடுத்தியா. அதை உங்கப்பா கிட்ட இருந்து வந்ததுன்னு தான வச்சுருக்க. அட, அதுங் கூடப் போயிட்டுப் போகுது, உன்ற மதம் உன்ற மதம்ன்னு சொல்லுறியே, அதையாவது உருப்படியா படிச்சுருக்கியா, அப்புறம் உனக்கும் சுப்பரமணிக்கும் என்னடா வித்தியாசம்”ன்னு கேட்டானுங்க.

‘வேதம் புதிது’ படத்துல அந்த சின்னப்பையன் சத்தியராஜை பார்த்து ‘தேவர்ங்கறது நீங்க படிச்சு வாங்குன பட்டமா’ன்னு கேக்கும்போது ‘பொளேர்’ ‘பொளேர்’ன்னு விழுகுங்கல்ல, அறை, அந்த மாதிரி இருந்துதுங்க எனக்கு.

Related Posts