சினிமா தமிழ் சினிமா

மதயானைக்கூட்டம் – குரோதத்திற்கு எதிரான மனசாட்சியின் போராட்டம் !

மதயானைக்கூட்டம் – தலைப்புக்குத் தகுந்தார்ப்போலத்தான் படமும். மதம் பிடித்த யானைபோல, உயிர்ப்பலிக்கு அலையும் மனிதர்களின் கதை.

சாதிச் சமூகம் இன்றும் நிலைத்திருப்பதற்கான காரணம் என்ன? என்ற கேள்விக்கு இந்தப் படத்திலிருந்து விடை காணலாம். சடங்குகளின் ஊடாகவும், ஒரு ஆணை மையப்படுத்தியும் அமைந்திருக்கும் சமூகத்தில் சாமானியர்கள் எப்படி பிணைக்கப்பட்டிருக்கிறார்கள். பொருளற்ற ‘அகம்’ எவ்வாறு அவர்களை வழி நடத்துகிறது என்பதை மதயானைக் கூட்டம் பதிவு செய்கிறது.

போடிநாயக்கனூரில் வசிக்கும் தேவர் சாதியின் ஒரு பிரிவான கள்ளர் குடும்பங்கள்தான் கதைக் களம்.

ஜெயக்கொடி தேவருக்கு இரண்டு மனைவியர். முதல் மனைவி அவரது சாதியாகவே இருக்க, இரண்டாவது மனைவியை வேறு சாதியில் கட்டுகிறார் ஜெயக்கொடி. இந்த சாதிக் கலப்பை ஏற்க மறுக்கிறது அவரின் உறவினர் கூட்டம். இருந்தாலும் அவரை ஒதுக்காமல், இரண்டாவது மனைவியையும், அவர்களின் மக்களையும் ‘தீண்டாது’ தங்கள் சுத்தத்தைக் காப்பாற்றுகிறார்கள். ஜெயக்கொடித் தேவரை அவர்கள் ஒதுக்குவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவரின் முதல் மனைவி தன் அண்ணனோடே வசிக்கிறாள், ஜெயக்கொடி குடும்பத்தின் மீது உள்ளூர நேசம் இருந்தாலும் – சமூக அழுத்தமே அவளை ஒதுங்கி வாழ வைக்கிறது. இதே விதமான அழுத்தம் ஜெயக்கொடித் தேவரின் மீது வேறுவிதங்களில் விழுகிறது.

ஒருகட்டத்தில், ஜெயக்கொடித் தேவன் மகளுக்கு திருமணப் பேச்சு நடக்கிறது. அவள் விரும்பிய ஒரு உறவினர் மகனோடு சம்பந்தம் பேசுகிறார்கள், ஆனால் சாதி விலக்கம் அந்த திருமணத்தை கைகூட விடாமல் தடுக்கிறது. வீம்பாக, வேறு ஊரில் சம்பந்தம் பேசி திருமணம் முடிக்கிறார் ஜெயக்கொடி. ஆனாலும், சுய சாதி ஒதுக்குதலின் வலி அவரின் மனதைப் பிசைகிறது, அடுத்த நாள் அவர் மாரடைப்பால் செத்துப்போகிறார்.

செத்தவரின் பிணத்தின் மீது அரங்கேறுகிறது ஒரு நாடகம். இயல்பாகவே ஆணாதிக்கக் கூறுகள் அடங்கிய இந்த சமூகம் – பிறப்பையும், இறப்பையும், திருமணத்தையும் வைத்து தன்னை எப்படி இருத்திக்கொள்கிறது என்ற சூட்சுமத்தின் விடை அங்கே அவிழ்கிறது.

ஜெயக்கொடித் தேவனின் இளையதாரத்து மகனை, தம்பி என்று உறவு கொண்டாடுகிறான் மூத்ததாரத்து மகன். அவனின் அழைப்பு, பழமைவாதிகளுக்கு எரிச்சலூட்டுவதாக அமைய, திரையரங்கிலோ கைதட்டல் பறக்கிறது. “டேய், அவன் கூட சேர்ந்தா, நாங்க இருக்கமாட்டோம்” என உடனிருப்பவர்கள் மிரட்ட, ‘இப்படிச் சொல்லித்தானடா என்னையும், எங்க அப்பனையும் பிரிச்சு வெச்சீங்க? இப்ப என் தம்பியையும் பிரிக்கிறீங்க!” என எதிர்க்கேள்வி கேட்கிறான். இதற்கும் கைதட்டல். பழமை வேதங்களுக்கு எதிரான சமூக உணர்வுதான் – பார்வையாளனைக் கைதட்ட வைத்தது என்பதை நம்மால் உணர முடிகிறது.

இந்த நேரத்தில் பாண்டவர் பூமி திரைப்படம் குறித்து சேரன் பேசியது நினைவுக்கு வருகிறது. “என் படத்தில், காதலித்து திருமணம் செய்துகொண்ட தங்கையை, அண்ணனே வெட்டும்போது திரையரங்கில் கைதட்டல் எழுந்தது. நான் அதிர்ந்துபோனேன்.” என்றார் அவர். இந்த வகையில், நமக்கு நம்பிக்கையூட்டும் கைதட்டல்கள் இப்போது உருவாகியிருக்கின்றன. உண்மைதானே, சாதிப்பித்துப்பிடித்த உறவுகளுடனான சமரசம்தானே பல நேரங்களில் நம்முள்ளே இருக்கும் மனிதத்தைக் காவுகொடுத்துவிடுகிறது??

சாதியமைப்பையும் அதன் மீதான சாமானிய எதிர்ப்பை, கட்டமைக்கப்படாத, திட்டமிடாத வெறுப்பையும் கதை பதிவுசெய்கிறது. ஆனால் அந்த எதிர்ப்பு இரத்த வெள்ளத்திலும், துரோகத்திலும், குரோதத்திலும் வீழ்த்தப்படுகிறது.

கதையின் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் புதியவர்தான். ஆனால் சினிமா மொழி அத்தனை அழகாக கைவருகிறது அவருக்கு. ஒரு திரைப்படமாகவும், நாவல் அனுபவத்தையும் தருகிறார். பாலுமகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றியவர்.. ஆடுகளம் படத்தின் வசனகர்த்தா.. தமிழ்ச் சமூகத்தின் ஒரு குறிப்பிடத்தக்க சாதியின் வாழ்வியலையும், உள்முரண்களையும் மிக அழகாகவே படம்பிடித்திருக்கிறார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிப்பாளராகி, ரகுநந்தன் என்ற புதிய இசையமைப்பாளரை அறிமுகம் செய்திருக்கிறார். உண்மையிலேயே, பாராட்டும்படியான அறிமுகங்கள்தான். காமிரா ராஹுல் தருமன், படத்தொகுப்பு கிஷோர் டெ.

தென் மாவட்டங்களை மையப்படுத்திய கதைகளில் வன்முறை தூக்கலாக அமைக்கப்படுவது மிகத் தவறான சித்தரிப்பாகும். ஆனால் ‘மத யானைக் கூட்டமும்’ அத்தகைய சித்தரிப்புகளுக்கு விதிவிலக்காக அமையவில்லை என்பது ஏமாற்றம். படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது தேவர் சாதியில் எல்லோரும் இப்படித்தான் போல என்ற அச்சமும் பிரம்மையும் ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை. கதை எனப்படுவது இருப்பதைச் சொல்வதுமட்டுமல்ல. கதை ஒரு ஊடகம், படைப்பாளின் எதிர்பார்ப்புகளையும், பொது நோக்கையும் விதைப்பதற்கான வெளி. வன்முறையில் ஊரிப்போன மனிதர்கள், தங்களுக்குள் இருக்கும் மனிதத்தை, நேசத்தை மீட்டெடுப்பது போன்ற முடிவை ஏன் கொடுத்திருக்கக் கூடாது?? அந்த இளைஞர்கள் சாதியமைப்புக்கு சவால்விட்டு ஜெயிப்பதுபோல ஏன் காட்டக்கூடாது?? என்பதெல்லாம் ஒரு பார்வையாளனாக எமக்கெழுந்த ஆசைகள்.

கதை சொல்லும் விதமும் ஆளுமையும் மிக நேர்த்தியாக இருப்பதால், இந்த எதிர்மறையான கதை பார்வையாளர்களின் ஆள்மனத்தைக் கிளருகிறது. அதுவும் நகரங்களின் பார்வையாளர்களுக்கு சாதிய கட்டுப்பெட்டித் தனத்தின் பதிவுகள் வெறுப்பைத்தான் ஊட்டுகின்றன. மேலும், ‘பொண்டுகளா’, ‘பொண்டுகப் பயலுகளா’ என்ற வார்த்தைப் பிரகயோகங்கள் இயல்பாகவே வெளிப்பட்டிருந்தாலும் – பச்சையான ஆணாதிக்க மதிப்பீடுகளை பதியவைக்கின்றன. இதனால் சினிமா முடிந்து வெளியேறுகையில் பெண்கள் ‘இது ஒரு படம்ணு’ கூட்டிட்டு வந்தீங்க! என வெளிப்படையாகவே சொல்லுவதை உணர முடிகிறது.

(கதையின் நாயகி குறித்து எதுவும் சொல்லத் தோன்றவில்லை)

கதை                –  உயிரோட்டம்
திரைக்கதை  –  சுவாரசியம் குறையவில்லை, எனினும் சில இடங்களில் மிரட்டுகிறது
இசை               –   நேர்த்தி
காமிரா           –    நன்று, படத் தொகுப்பு – சிறப்பு
இயக்கம்        –    ஹேட்ஸ் ஆப்
நடிப்பு         –      இறுதிக்காட்சியில், மொட்டையடிக்கப்பட்ட நாயகன், ஒரு சிறுவனாகத் தெரியுமிடம் தவிர, மற்ற வகையில் சிறப்பு.  துணைப் பாத்திரங்கள் மிரட்டுகிறார்கள்.

Related Posts