சமூகம்

வடமாநிலங்களைப்போல் தமிழகத்தில் பரவும் கும்பல் கொலை கலாச்சாரம்….!

விழுப்புரம் அருகே சக்திவேல் என்ற 24 வயதுடைய தலித் இளைஞர் அடித்தே கொல்லப்பட்டுள்ளார். தந்து கிராம்த்திலிருந்து சுமார் 27 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் பெட்ரோல் பங்கில் பணி புரிந்த அவரை கொலை செய்த்தாக மூன்று பெண்கள் உள்பட ஏழு பேர் கைது செய்ய்ப்பட்டுள்ளனர். கைதான அனைவரும் வன்னியர் சமூகத்தை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மாதம் 12ம் தியதி மதிய வேளையில் நடைபெற்ற இக்கொடூர கொலை இரண்டு நாட்களுக்கு பின்னரே வெளியுலகிற்க்கு தெரிய வந்தது. அவரை கடுமையாக தாக்கப்பட்டதன் காணொலி காட்சி வெளி வந்ததால் மட்டுமே இச்செய்தி வெளியானது இன்னும் கொடுமை. தமிழக்த்தின் இப்பகுதியில் வன்னிய சமூகத்தினர் தொடர்ந்து தலித் சமூகத்தினரை தாக்கும் சம்பவங்கள் தொடர்வது ஒரு அவல நிலையே.

இரவு பணி முடிந்து புதன் அதிகாலை வீடு திரும்பிய சக்திவேலை ஆதார் அட்டையுடன் உடனடியாக அலுவலகம் வர அலைபேசி மூலம் அழைத்துள்ளனர். எரிபொருள் குறைவான நிலையில் தனது இருசக்கர வாகனத்தில் கிளம்பிய சக்திவேலின் பயணம் விரைவிலேயே தடைபட்டது. அப்போது தனது சகோதரி தெய்வானைக்கு பயணம் தடைபட்டதால் நண்பர் ஒருவர் மூலம் எரிபொருள் பெற்று வர செய்ததையும், அது வரை வாகனத்தை தானே உருட்டிக் கொண்டு செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வுரையாடல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே வயிற்று வலியால் சிரமப்படுவதாக கூறிய சக்திவேல், இயலாத நிலையில் சாலையோரம் மலம் கழித்த பின்னர் தனது பயணத்தை தொடரயிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தனது சகோதரன் பணியிடத்திற்க்கு சென்றிருப்பார் என்ற நம்பிக்கையை அடியோடு தகர்த்தெறிந்தது அடுத்த அழைப்பு.

தான் அலுவலகம் சென்று விட்டதை தெரிவிக்க சக்திவேல் அழைப்பதாக எண்ணி தொலைபேசி அழைப்பை ஏற்ற தெய்வானையிடம், உடனடியாக பூதூர் மலைக்கு வர ஒரு குரல் உத்தரவிட்டுள்ளது. ஏதோ தவறு நடந்ததை உணர்ந்த தெய்வானை தனது ஆறு மாத கைக் குழந்தையுடன் உறவினர் ஒருவரின் வாகனத்தில் அவ்விடம் வந்தடைந்தார். அங்கு கண்ட காட்சி அவரை நிலைகுலைய செய்துவிட்டது. கைகள் கட்டப்பட்ட நிலையில் உடலெங்கும் ரத்தம் கசிந்த நிலையில் அரைமயக்கத்தில் சக்திவேல் இருந்தார். அங்கிருந்த சுமார் 20 பேர் இவரை கண்டதும் மீண்டும் தாக்குதலை துவங்கியுள்ளனர்.

தடுக்க முயன்ற தெய்வானையையும் கைக்குழந்தையையும் கொலையாளிகள் தாக்கியுள்ளனர். கடுமையாகத் தாக்கப்பட்டிருந்த நிலையிலும் அங்கிருந்து சென்று விடுமாறு சக்திவேல் தனது சகோதரியிடம் சைகை செய்துள்ளார். வழக்கமாக தாமதமாக அங்கு வந்த காவலத்துறையினர் தாக்கப்பட்டவர்களை வீட்டிற்க்கு செல்லுமாறு வலியுறுத்தியுள்ளனர். மிகுந்த சிரமத்திற்க்குப் பின்னர் ஒரு இருசக்கர வாகனத்தில் சக்திவேலை அமர வைத்து வீட்டிற்க்கு அழைத்துச் சென்றுள்ளனர் உறவினர்கள்.

வீட்டிலிருந்து சிகிட்சைக்கு தேவையான பணத்துடன் புறப்பட தயாரான போது சக்திவேல் மயங்கி விழுந்துள்ளார். மருத்துவமனைக்கு வந்தடைந்த போது வரும் வழியிலேயே அவர் மரணமடைந்த செய்தியை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 10ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு குடும்ப சுமையை ஏற்ற சக்திவேலின் மரணம் குடும்பத்தினரை நிலைகுலைய செய்து விட்டது.

விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் சக்திவேலின் மீது அவர் அப்பகுதியில் பணிபுரிந்த பெண்களை நோக்கி உடைகளை களைந்து ஆபாசமாக நடந்து கொண்டதாக கூறியுள்ளனர். இவ்வழக்கு விசாரணையில் ஈடுபட்ட ஒரு காவல் துறை அதிகாரி, மலம் கழிக்க சக்திவேல் தனது இறுக்கமான ஜீன்ஸ் பேண்டை கழற்றியதை இவர்கள் தவறாக புரிந்து கொண்டதை உறுதி படுத்தியுள்ளார்.

ஆனால் தெய்வானை, தனது இவ்வாறான இழிச்செயலில் ஈடுபட்டிருக்க மாட்டார் என உறுதியாக தெரிவித்ததோடு, சாதி வெறியால் தான் சக்திவேல் அடித்தே கொல்லப்பட்டதாக கூறுகிறார். ஆதார் அட்டையின் மூலம் சக்திவேலின் ஆதி திராவிட சாதியை அறிந்த கொலைகாரர்கள், சாதிப் பெயரை சொல்லியே தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்தார்.சாது வெறி அக்குடும்பத்தின் தூணாக இருந்த சக்திவேலின் உயிரை பறித்துக் கொண்டது. சமீப காலம் வரை சிமெண்ட் மூடைகள் சுமக்கு பணி செய்து இரு சகோதரிகளின் திருமணத்தை நடத்திய சக்திவேல் ஆபாசமாக நடந்து கொண்டிருப்பார் என உறவினர்களும் நம்பத் தயாராக இல்லை.

ஒருவர் பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொண்டதாக சந்தேகம் கொண்டால், அவரை காவல்த்துறையிடம் ஒப்படைப்பது தான் முறையான செயலாகும். அதை விடுத்து சந்தேகத்தின் பெயரில் மட்டுமல்லாமல், சாதிப் பெயரை சொல்லி மூர்க்கமாக தாக்குவது தமிழகத்தில் அரங்கேறுவது மிகவும் ஆபத்தானதும், உடனே தடுக்க வேண்டியதுமாகும். குறிப்பாக தலித் சமூகத்தினரின் மீது அபாண்டமாக பொதுப் புத்தியில் புகுத்தப்பட்டுள்ள கொடும் சிந்தனையின் வெளிப்பாடு இச்சம்பவம். மீசை வைத்தாலும், கறுப்பு கண்ணாடிகள் அணிவதாலும் ஒருவர் தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் சீர்திருத்த பெருமை கொண்ட தமிழகத்திற்க்கு இழுக்கையே உருவாக்கும்.

வடமாநிலங்களில் மதத்தின், சாதியின் பெயரால் கும்பல் கொலைகள் அரங்கேறும் செய்திகளை காணும் அதே வேளையில், தமிழகத்தில் அரங்கேறும் ஆணவக் கொலை உள்ளிட்ட கொடூரங்களை தமிழகத்தின் வளர்ச்சியை தனது சாதனை என உரிமை கொண்டாடும் திராவிட கட்சிகள் வாய்மூடி மௌனம் காப்பது ஆபத்தை மேலும் அதிகரிக்கவே செய்யும். வாக்கு வங்கி கணக்குகளை கைவிட்டு சாதிய வன்மங்களை கடுமையாக கண்டிக்க முன்வர வேண்டும்.

நீலாம்பரன்.

Related Posts