பிற

L&T Infotech நிறுவனத்திடம் நியாயம் கேட்கும் 1000-த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் . . . . . !

தகவல் தொழில்நுட்ப துறை , இது இன்றைய இளைஞர்களின் கனவு உலகம் . ஏன் இந்த துறைக்கு இவ்வளவு வரவேற்பு ? கை நிறைய சம்பளம் , வியர்வை இல்லாத கழுத்து பட்டை , அதிகமான வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் , சமூகத்தில் உயர்ந்த நிலை ; இவை தாம் இந்த துறைக்கு மாணவர்களையும், இளைஞர்களையும் கவர்து இழுக்கும் வாசகங்கள் .

இவைகள் அனைத்தும் உண்மை என்றாலும் , இவை மட்டுமே இந்த துறையை செலுத்துபவை அல்ல . சற்றே கூர்ந்து கவனித்தால் தொழிலாளர் நலனை பொறுத்த வரை , இந்த துறையின் இயக்கவியல் மற்ற துறைகளை விட மோசமான நிலையிலே உள்ளதை காணமுடிகிறது. 8 மணி நேர வேலை , பணி பாதுகாப்பு இன்மை, சமூக பாதுகாப்பு (ESI,PF,Insurance) இன்மை, அதிக நேர கொடுப்பணவு (overtime allowance) மறுப்பு , இரவு நேர பணி கொடுப்பணவு (Night Shift allowance) மறுப்பு , நினைத்த மாத்திரத்தில் வேலையே விட்டு அனுப்பும் கொடுமையான நிலை(Fire at will policy) ; இவைகளை இத்துறையில் அன்றாடம் நிகழ்பவை. அனால் , இவைகளை மிகப்பெரிய ஊடக இல்லங்கள் கண்டுகொள்வதே இல்லை , வெளி உலகிற்கு தெரியப்படுத்துவதும் இல்லை.
இந்த பிரச்சனைகளில் கடந்த 5 வருடங்களில் இணைந்திருக்கும் புதிய பிரச்சனை , பணி ஆணை மறுப்பு. தங்கள் வணிகத்தில் உள்ள போட்டியை வெல்வதற்காக மிகப்பெரிய IT நிறுவனங்கள் கல்லூரிகளில் நேர்முக தேர்வு நடத்தி அதில் தெரிவு பெற்ற மாணவர்களுக்கு, பின் தேதியிட்ட பணி நியமன ஆணை (offer of Intent) வழங்குவது வழக்கம். அந்த மாணவர்கள் தங்கள் படிப்பு முடிந்த உடன் பணி நியமன ஆணையில் குறிபிட்டுள்ள தேதியில் அந்த நிறுவங்களில் பணியாளராக அமர்த்தப்படுவர். இந்த நடிவடிக்கையை மூன்று விதமாக பார்க்கலாம் . ஒன்று, புது வணிகத்தை வெல்ல தனது நிறுவனங்களில் இத்தனை பணியாளர்கள் உள்ளனர் என்று காண்பிப்பர், இதனால் மிகபெரிய நிறுவங்களின் வணிகம் கூடுவதோடு இலாபமும் அதிகரிக்கிறது. இரண்டு , கல்லூரி நிர்வாகங்கள் 100 சதவிகித வேலை வாய்ப்பு உத்தரவாதம் என்று விளம்பரப்படுத்தி கல்லூரிகளில் தலைக்கட்டு கட்டணத்தை (Capitation Fee) உயர்த்தி கொள்ளை இலாபம் சம்பாதிப்பதோடு அனைத்து காலி இடங்களையும் நிரப்பி நான்கு வருட வருமானத்தை உறுதி செய்துகொள்கின்றன. மூன்று , மாணவர்களுக்கு படிப்பை முடிக்கும் முன்பே கையில் வேலை.
இப்படி கொடுக்கப்பட்ட பணி நியமன ஆணை மறுப்பால் பாதிக்கப்படுவது வேலை உறுதி செய்த நிறுவனங்களோ , இந்த நிறுவனங்களுக்கு கல்லூரிகளில் அனுமதி அளித்த கல்லூரி நிர்வாகங்களோ அல்ல. தங்களுக்கு நிச்சயம் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வங்கிகளில் கடன் பெற்று , வீடு ,நிலம் ,தோட்டங்களை அடகு வைத்து மற்றும் விற்று கல்லூரிகளில் பணம் கட்டி படித்த மாணவர்களே.
சமீபத்தில் L & T Infotech நிறுவனம் இப்படி ஒரு செயலை தான் நிகழ்த்தி இருக்கிறது. கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய அளவில் கிட்டத்தட்ட ஐந்து ஆயிரத்துக்கும் (5000) மேற்பட்ட பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களை L&T Infotech நிறுவனம் வளாக நேர்முக தேர்வில் தெரிவு செய்து அவர்களுக்கு பின் தேதியிட்ட பணி நியமன ஆணை வழங்கியது . இதில் குறைந்தது ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட (1500+) மாணவர்களுக்கு சேர தேதியினை (Date of Joining) சில முறை திருத்தி அமைத்து மாணவர்களை 2015 பெப்ரவரி (February) மாதம் வரை காத்திருக்கும்படி சொன்னது. பிறகு 2015 மார்ச் (March) மாதம் 17ஆம் தேதி எந்த முன்னறிவுப்பும் இன்றி மாணவர்களுக்கு மதிப்பீடு சோதனை தேர்வு நடத்தியது . இதன் பின் அதிர்சிகரமாக ஏப்ரல் 3 ஆம் தேதி 2016 அன்று முதல் 06.04.2106 ஆம் தேதி வரை மதிப்பீடு தேர்வு ஏழுதி காத்திருந்த மாணவர்களில் 150+ மாணவர்களை மட்டும் அழைத்து விட்டு மற்ற 1000+ மாணவர்களின் பணீ அழைப்பு கடிதத்தை நிராகரித்து விட்டது, இதில் 400+ மாணவர்கள் தமிழகத்தை சேர்ந்த பல முன்னணி கல்லூரிகளில் படித்து , முதல் தரத்தில் (first class) தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றவர்கள்.

இன்று இவர்களின் நிலை என்ன ? கல்லூரிகளில் ஒரு நிறுவத்தில் தெரிவு பெற்று விட்டால் அடுத்த நிறுவன நேர்முக தே ர்வுக்கு அனுமதிக்க பட மாட்டார்கள், இது கல்லூரியில் அதிக மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற்றனர் என்று விளம்பரபடுத்த கல்லூரிகள் பயன்படுத்தும் உத்திகளில் ஒன்று . இந்த மாணவர்கள் கல்லூரிகளில் வேறு நிறுவங்களை சந்திக்கும் வாய்ப்பை இழந்தனர், L&T Infotech நிறுவனம் தங்களை பணியில் அமர்த்த அழைக்கும் என்ற நம்பிக்கையில் 10 மாதங்களை இழந்தனர், படிப்பு முடித்து ஒரு வருடம் கடந்து விட்டதால் புது வரவு (freshers) என்ற அடையாளத்தை இழந்தனர். இந்த நிலையில் அந்த மாணவர்கள் கையில் வேலையும் இல்லாமல், வேறு வேலை கிடைக்க எந்த வாய்ப்பும் இல்லாமல், கழுத்தை நெறிக்கும் வங்கி கடனுடனும் நிர்கதியாக நிற்கும் மாணவர்கள் KPF (Knowlege Professionals Forum) என்று அறியப்படும் தொழிற்நுட்ப ஊழியர்கள் நல சங்கத்தை அணுகினர் .
மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த பிரச்சனையை தீர்க்கமாக ஆய்வு செய்த பின் KPF மாணவர்களின் இந்த போராட்டத்தில் பங்கெடுப்பது மட்டும் அல்லாமல் முன் நின்று போராடுவதாக மாணவர்களுக்கு உறுதி அளித்தது.

அதில் முதல் கட்டமாக KPF மற்றும் மாணவர்கள் பின்வரும் கோரிக்கைகளை (demand) வகுத்துள்ளனர்.

  1. பணி நியமனம் ரத்து செய்ய பட்ட 1500+ மாணவர்களையும் L&T Infotech நிறுவனம் உடனடியாக பணியில் அமர்த்த வேண்டும்.
  2. மாணவர்கள் இழந்த 10 மாதங்களுக்கு L&T Infotech பணி ஆணையில் குறிபிட்டுள்ள இழப்பீடு(compensation) தரப்பட வேண்டும்.
  3. அண்ணா பல்கலைகழகம் ஒரு குழு(committee) அமைத்து கல்லூரிகளில் நடக்கும் வளாக நேர்முக தேர்வுகளை கவனிக்க வேண்டும் .
  4. அனைத்து IT நிறுவனங்களிலும் தொழிலாளி சபை (Worker’s council) அமைக்க வேண்டும் .

அடுத்த கட்டமாக KPF மாணவர்களோடு இனைந்து பின் வரும் செயல்களை இது வரை செய்துள்ளனர் .

  1. L&T Infotech நிறுவன CEO மற்றும் மனித வள மேலாளர் அவர்களுக்கு இந்த பிரச்சனைக்கு பதில் அளிக்குமாறு கடிதம் அனுப்பி உள்ளனர்.
  2. தேசிய தொழிலாளர் கமிஷனர் அவர்களுக்கு தபால் மூலம் கடிதம் அனுப்பி உள்ளனர்
  3. கடந்த மே மாதம் 25 ஆம் தேதி பாதிக்கப்பட்டவர்கள் கே பி எப் (K .P.F ) என்ற அமைப்புடன் இணைந்து, பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினர். இதில் தங்கள் பிரச்சனை மற்றும் கோரிக்கைகளை தெளிவாகவும் , விளக்கமாகவும் எடுத்துரைத்தனர் .
  4. இதன் தொடர்ச்சியாக 30.05.2016 அன்று சோழிங்க நல்லூரில் ஒருநாள் உண்ணாவிரதம் நடந்தது. இதில் , கேபிஎப் அமைப்பு உட்பட, 70க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் பெற்றோருடன் கலந்துகொண்டனர். இதில் கலந்து கொண்ட பல்வேறு மாணவ இயக்கங்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கங்கள் மாணவர்களுக்கு தங்கள் ஆதரவை அளித்ததோடு இறுதி வரை துணை நிற்போம் என்ற வாக்குறுதியையும் அளித்தனர் . இதில் கலந்து கொண்ட மத்திய மாநிலங்கள் அவை உறுப்பினர் திரு டி.கே.ரங்கராஜன் அவர்கள் IT துறையில் தொழிலாளர் நல சட்டங்கள் ஸ்திரம்பட செயலாற்ற தான் தன்னால் இயன்ற முயற்சிகளை செய்வதாக உறுதி அளித்தார் .
  5. இதன் தொடர்ச்சியாக 31.05.2016 திரு டி.கே.ரங்கராஜன், மாணவர்கள் மற்றும் KPF குழுவினருடன் தமிழ்நாடு IT அமைச்சர் மற்றும் தமிழ்நாடு IT செயலாளர் இருவரையும் சந்தித்து இந்த பிரச்சனை தொடர்பான குறிப்பாணையை (memorandum) வழங்கினார்.
  6. 02.06.2016 அன்று பாதிக்கபட்ட மாணவர்கள் மற்றும் மாணவ சங்கங்கள் அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் குழுவினை சந்தித்து பொறியியல் கல்லூரிகளில் வளாக நேர்முக தேர்வில் நடக்கும் தவறான நடைமுறைகளையும் தவறான தொழில்முறைகளையும் கவனிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டோம் .

இதன் தொடர்ச்சியாக இன்னும் பல செயல் திட்டங்களை KPF அமைப்பினர் மாணவர்களோடு சேர்ந்து வகுத்துள்ளனர்.

இவ்வளவு போராட்டங்களுக்கு பிறகும் L&T Infotech நிறுவனம் இன்னும் மௌனியாகவே இருக்கிறது. மாணவர்களின் போரட்டத்துக்கு இது வரை அவர்கள் தரப்பில் இருந்து ஒரு ஒப்புகை(acknowledgment) கூட இன்னும் தரப்படவில்லை. இப்படி கேட்காத காதுகளை கேட்க வைக்கும் அளவுக்கு இனி மிகவும் சத்தமான போராட்டங்களை தொடர்ந்து நடத்துவோம் என்று KPF மற்றும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் உறுதி பூண்டுள்ளனர்.

— Dhana & Bharathi, Knowledge Professionals Forum

Related Posts