காதல்

காதல் – பேரன்பின் ஆதி ஊற்று . . . . . . . . . . . !

யாருக்கு தான் பிடிக்காது காதல்.. அல்லது யாரைத் தான் பிடிக்காமல் விட்டு விடுகிறது காதல்.. வருடத்தின் சில மாதங்கள் மழையையும், கோடையையும், வசந்தத்தையும் தன்னுடவே அழைத்து கொண்டு வருகின்றது என்றால், பிப்ரவரி மாதம் மட்டும் காதலர் தினக் கொண்டாட்டங்களையும், அது ஏற்படுத்தும் மகிழ்ச்சியையும் ஒரு குழந்தையின் குதூகலத்தோடு கைபிடித்து அழைத்துக் கொண்டு வந்து விடுகிறது.

பிப்ரவரி 14ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படும் காதலர் தினம், வேலன்டைன் தினமாக கூறப்படுகிறது. கத்தோலிக்க கிறிஸ்துவ மத பாதிரியாரான வேலன்டைன் காதலர்களுக்கு ஆதரவளிப்பவராக திகழ்ந்ததாகவும், அதனாலேயே கொல்லப்பட்டவராகவும் சொல்லப்படும் விளக்கமே பெரும்பான்மையினரின் காதலர் தினத்துக்கான விளக்கமாக அமைந்துள்ளது. யாரால், எதற்காக, எப்படியாக இருந்தால் என்ன? நமக்கு காதலை கொண்டாட வேண்டும், அதற்கு ஒரு நாள் இருந்தால் இன்னும் வசதி எனக் கருதுவோர் அதனை விட பெரும்பான்மையாக இருப்பதால் கொண்டாட்டங்கள் தொடர்கிறது.

காதலர் தினத்தன்று உலகம் முழுவதும் செலவிடப்படும் தொகை சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் என்கிறது ஒரு ஆய்வு. காதலர் தினத்தன்று இந்தியாவில் சராசரியாக ஒருவர் காதலுக்காக செலவிடும் தொகை 445 ரூபாய். காதலர் தினத்தையொட்டி 10 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை விலையுள்ள ரோஜா பூக்கள் விற்கப்படுகின்றன. தாஜ்மகாலில் மட்டும் ஆண்டுதோறும் காதலர் தினத்தன்று மட்டும் சராசரியாக 3 லட்சம் ரோஜா பூக்கள் வாங்கிச் செல்லப்படுகின்றன. காதலர் தினத்துக்காக உலகம் முழுவதும் 120 கோடி ரூபாய் மதிப்புக்கு வாழ்த்து அட்டைகள் விற்பனை ஆகின்றன.

வார்த்தைகளற்று வனாந்திரத்தில் மனிதன் திரிந்த காலத்தில், மனிதனை உணவுக்கு பிறகு அதீதமாக வசீகரிக்கும் காரணியாக காதல் மட்டுமே இருந்திருக்கக் கூடும். பெற்றோர் அறியாத குழந்தைகள் இருக்கக் கூடும், காதல் அறியாத உயிர்கள் ஏது. மறைந்த கவிஞர் நா. முத்துக்குமார் சொல்லியது போல, இந்த பூமி மேல தன்னந்தனி உயிர்கள் எதுவும் இல்லை என உணரவைப்பது காதல். ஏனெனில் காதல் பேரன்பின் ஆதி ஊற்று.

தனித்தனியாக வேட்டையாடுதலை மட்டுமே அறிந்து திரிந்த மனிதன், கூட்டு வாழ்க்கைக்கு பழகி, அது குடும்ப உறவுகளாகி, கூட்டுகுடும்பங்களாகி பின்னர் தனிக்குடும்பங்களாகி மாறி போன வரலாற்றின் எந்த காலத்தையும் காதலின்றி பிரித்து எடுத்து விட முடியாது.

எல்லைகளற்றதாய் எங்கும் வியாபித்திருக்கிறது காதல். இதயம் வருடும் மெல்லிசையில், தென்றலில், சிலிர்க்க வைக்கும் தருணங்களில் மட்டுமல்ல. கொடூரத்தின் உச்சத்தில், உயிர்வாழ்வதற்கான நிச்சயமற்ற காலங்களில் கூட காதல் பூப்பூக்கிறது. உலகின் கொடூரமான பிரதேசங்களாக கருதப்படும், ஹிட்லரின் வதைமுகாமில் கூட காதல் புன்னகைத்தது என்றால் நம்ப முடியுமா உங்களால்.

அப்படியொரு காதலின் கதை இது. ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது, யூதர்களை கொல்ல அமைக்கப்பட்ட வதைமுகாம்களில் மிகப்பிரமாண்டமானதாக, கொடூரமானதாகக் கருதப்பட்டது தான் அவுஷ்விட்ஸ் வதைமுகாம். முகாம்களுக்கு கொண்டு வரப்படும் சிலர், உள்ளே வந்தவுடனேயே நச்சுவாயு அறைகளில் அடைக்கப்பட்டு கொல்லப்படுவர். சிலர் தலைமுடி வழிக்கப்பட்டு, ஆடைகள் களையப்பட்ட நிலையில், கடுமையான வேலைகளில் ஈடுபடுத்தப்படுவர். உயிர்வாழ போதுமான அளவில் மட்டுமே உணவளிக்கப்படும். அங்கு யாருக்கும் பெயர்கள் கிடையாது. அடையாள எண்கள் மட்டுமே. அவை பச்சை குத்தப்படும். அப்படி 32407 என பச்சைகுத்தப்பட்ட ஒரு கைதியின் வாழ்வைத் தான் விவரிக்கிறது THE TATTOOIST OF AUSCHWITZ என்ற புத்தகம். Ludwing Lale Eisenberg என்ற இயற்பெயர் கொண்ட லேல் என்பவரின் எண் தான் 32407. 1942ஆம் ஆண்டு நாஜி படையால் கைது செய்யப்பட்டு, கட்டுமான தொழிலில் பயன்படுத்தப்பட்ட லேல், பன் எனப்படும் யூதக்கைதியிடம் இருந்து பச்சை குத்துவதைக் கற்றுக்கொண்டார். ஒருநாள் பன் உயிரிழந்த போது, பச்சை குத்தும் வேலை லேலிடம் வந்து சேர்ந்தது. நாள்தோறும் கொண்டு வரப்படும் கைதிகளுக்கு பச்சைகுத்தும் வேலையை செய்துவந்த லேல், ஒரு பெண்ணின் கையில் ஒருநாள் 34902 என்ற எண்ணை பச்சைகுத்தினார். பச்சை குத்தப்பட்ட பெண்ணின் கைகள் வலியால் நடுங்கின. ஆனால் பச்சைகுத்திய லேலின் கைகளில் ஒரு சிலிர்ப்பு மேலிட்டது. இரு ஜோடி கண்கள் சந்தித்தன. வதைமுகாமில் இரு இதயங்கள் இடம்மாறி துடித்தன. தனக்கு வழங்கப்பட்ட உணவை மிச்சம்பிடித்து 34902 என்ற எண் பச்சை குத்தப்பட்ட தனது காதலியான கீதாவுக்கு வழங்கினார் லேல். மெல்ல மெல்ல வளர்ந்த இந்த காதல், 1945ஆம் ஆண்டு நாஜிக்களை, சோவியத் யூனியனின் செஞ்சேனை வீழ்த்தி, வதைமுகாம்கள் மூடப்பட்ட போது பிரிந்தது. தனது காதலியின் பெயர் கீதா என்பதைத் தவிர எதுவும் தெரியாத லேல், கீதாவை தேடி அலைந்தார். பல மாதத் தேடலுக்குப் பிறகு கீதாவை கண்டறிந்து திருமணம் செய்தார் லேல். வதைமுகாமில் தொடங்கிய காதல், ஒரு தண்டவளாத்தின் தடதடக்கும் சத்தங்களில் தனது கீதத்தை மீட்டெடுத்து திருமணம் நோக்கி நகர்ந்தது. தனது வாழ்வின் இறுதி வரை அந்த காதலை பாதுகாத்தனர் அந்த தம்பதியினர். கீதா 2003ஆம் ஆண்டில் மறைந்த பிறகு, அவரது நினைவுகளிலேயே தனது வாழ்வை நீடித்த லேல், 2006ஆம் ஆண்டு மறைந்தார்.

வதைமுகாம்களில் மரணத்தின் நுழைவாயிலில் இருந்த பொழுது பிறந்த காதல் ஓர் சுவாரஷ்யம் எனில், வதைமுகாம்களை பிரசவித்த ஹிட்லருக்கே காதல் வந்தது மற்றொரு ஆச்சர்யம். தன் வாழ்வின் இறுதி காலங்களிலேயே ஹிட்லர் தனது காதலை கண்டடைகிறார். 1929ஆம் ஆண்டு தனது 19வது வயதில் இருந்த ஈவா, தான் வேலைபார்த்த கடைக்கு வந்த ஹிட்லரை முதல்முதலில் காண்கிறார். காலம் ஈவாவை ஹிட்லரிடம் கொண்டு வந்து சேர்க்கிறது. தனது வாழ்வின் நிமிடங்கள் எண்ணப்படுவதை உணர்ந்த ஹிட்லர், தப்பியோடி விடுமாறு ஈவாவை அறிவுறுத்துகிறார். இறுதிநொடி வரை உங்களோடு தான் இருப்பேன் என ஈவா விடாப்பிடியாகக் கூற, ஈவாவை அனைவர் முன்னிலையிலும் கட்டியணைத்து முத்தமிடுகிறார் ஹிட்லர். அந்தகணத்தில் ஈவாவை திருமணம் செய்ய முடிவெடுக்கிறார் ஹிட்லர். 1945ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி இரவு 11மணி 55 நிமிடங்களுக்கு இருவருக்குமான திருமணம் நடந்தேறுகிறது. திருமணச்சான்றிதழில் தனது தந்தையின் பெயரோடு இணைத்து தனது பெயரை ஈவா பிரான் என எழுதிய ஈவா, பின்னர் அதை அடித்துவிட்டு ஈவா ஹிட்லர் என எழுதுகிறார். 2 நாட்கள் கூட அந்த திருமணம் நீடிக்கவில்லை. 1945 ஏப்ரல் 30ஆம் தேதி பிற்பகல் மூன்றரை மணிக்கு சயணைட் உண்டு தற்கொலை செய்து கொண்டார் ஈவா. நெற்றிப்பொட்டில் சுட்டு கொண்டு செத்துப்போனார் ஹிட்லர். எதிரிகளிடம் தனது உடல் சிக்கிவிடக் கூடாது என ஹிட்லர் கூறியிருந்ததால், இருவரது உடல்களும் எரியூட்டப்பட்டன. சுமார் 3 மணி நேரம் நின்று எரிந்தது காதல்.

இப்படித்தான் மனிதனின் வரலாறுகள் முழுவதும் காதலால் நிரம்பிக்கிடக்கிறது. காதலை பிரித்து விட்டு உலகின் எந்த இலக்கியமும் எழுதப்பட்டதாகத் தகவல் இல்லை. காதலை உணரும் நொடியிலேயே ஒருவன் கவிஞனாகவும் மாறிவிடுகிறான். இலக்கிய புலமை என்றெல்லாம் தேவையில்லை. காதல் மட்டுமே போதுமானது ஒரு கவிஞர் பிறக்க.

மெல்லிய உணர்வுகளை தனக்கு தானே அடையாளம் கண்டு உணரச் செய்கிறது காதல். சங்க இலக்கியப் பாடல் ஒன்றில் காதலின் மென் உணர்வுகள் வெளிப்படுகின்றன. பெண் ஒருத்தி பெண்மான் ஒன்றை வளர்த்து வருகிறாள். ஒருநாள் தனது வீட்டு முற்றத்தில் திணையை காய வைக்கிறாள். காயவைத்து விட்டு வீட்டுக்குள் செல்லும் அவள், அடிக்கடி வெளியே வந்து திணையை பறவைகள் தின்று விடாதபடி கண்காணிக்கிறாள். ஒருமுறை அப்படி எட்டிப்பார்க்கும் போது, பறவைகள் திணையை தின்பதைக் காண்கிறாள். அவற்றை துரத்த முற்படும் போது, வேறொரு காட்சி கண்ணில் படுகிறது. அவள் வளர்க்கும் பெண் மான் உடன் ஆண் மான் ஒன்று காதல் இசைத்துக் கொண்டிருக்கிறது. பறவைகளை துரத்தினால், காதலை விட்டு விட்டு ஆண் மான் ஓடிவிடுமோ என அஞ்சும் அந்த பெண், அப்படியே வீட்டுக்குள் சென்றுவிடுகிறாள். கதவுகளை சாத்திவிட்டு அமர்ந்து, முகம்மூடி புன்னகைக்கிறாள் என்கிறது அந்த பாடல். காதலின் மெல்லிய உணர்வுகளை அந்த பெண் உணரும் அந்த நொடி தான் எவ்வளவு அழகானதாக இருக்கிறது.

காதலை பாடுகையில் இலக்கியங்கள் மற்றெந்த எழுத்துக்களையும் விட மனிதர்களுக்கு நெருக்கமாகி விடுகிறது. குறுந்தொகையின் 40வது பாடலில், தலைவன் மீது தலைவிக்கு ஒரு ஐயம் எழுகிறது. இவன் நம்மை விட்டு பிரிந்து விடுவானோ என நினைக்கிறாள். தலைவியின் உள்ளக்குறிப்பை அவள் சொல்லாமலே அறிந்து கொள்கிறான் தலைவன். தலைவியின் அச்சத்தை போக்க முயல்கிறான் தலைவன். யாயும் ஞாயும் யார் ஆகியரோ என்ற அந்த பாடலில் சொல்கிறான் செம்புல பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே என்கிறான். அதாவது செம்மண் நிலத்தில் விழுந்த அப்பழுக்கற்ற மழை நீர் எவ்விதம் அந்த மண்ணோடு ஒன்றாகி கலந்து விடுகிறதோ, அதுபோல அன்புடைய நெஞ்சம் கலந்தது என்கிறான். காதலன் காதலி இடையிலான நெருக்கத்தை இதைவிட அழகாகவும், ஆழமாகவும் வேறெப்படித்தான் சொல்லிட முடியும்? பெயர் தெரியாமலே போன அந்த சங்கக் கவிஞனின் பெயர் இறுதியில் செம்புல பெயல் நீரார் என்றே ஆகிப் போனது.

தமிழ் இலக்கியங்களில் மட்டுமா? உலகில் எழுத்து வடிவம் கொண்ட அத்தனை மொழிகளிலும் இலக்கியங்களில் காதல் தனது வேர்களை ஆழப்பரப்பி விட்டிருக்கிறது. ரஷ்ய எழுத்தாளர் தஸ்தாவெஸ்கி, தனது வெண்ணிற இரவுகள் நாவலை காதலை கொண்டு அத்தனை அற்புதமாக நெய்திருப்பார். இரு ஆண்கள் ஒரு பெண் என மூன்றே கதாபாத்திரங்களைக் கொண்டு, வார்த்தைக்கு வார்த்தை காதல் சடுகுடு ஆடும் பக்கங்கள் அவை. வருவதாய் உறுதியளித்துச் சென்ற காதலனை எதிர்நோக்கி காத்திருக்கும் ஒருத்தியின் வலியும், நம்பிக்கையும் இவ்வளவு அசாத்தியமானதா என வாசிக்கும் எவரையும் நிச்சயம் சிலிர்க்க வைக்கும். உலகின் பல்வேறு மொழிகளிலும் வெண்ணிற இரவுகள் திரைப்படங்களாக உருமாறி உணர்வுகளை பேசியது. தமிழில் இயக்குநர் எஸ்.பி.ஜெகநாதனின் இயக்கத்தில் அது இயற்கை யாக வந்தது.

உலகம் முழுவதும் காதலுக்காகவே வெற்றிகரமாக ஓடி வசூலை வாரிக்குவித்த சினிமா டைட்டானிக். அலைகள் தாலாட்டும் கடலின் மீது, உப்புக்காற்றை உள்வாங்கியபடி, கைகளை அகல விரித்தபடி தனக்கான காதலை வரைந்த அந்த ஓவியனோடு ரோஸ் நிற்கிற அந்தக் காட்சிக்கு மொழிகள் எதற்கு?

பார்வையற்ற காதலி. காதலன் சிறை செல்ல நேர்கிறது. சிறையிலிருந்து காதலன் திரும்பும் முன்பு காதலிக்கு பார்வை திரும்பி விடுகிறது. காதலனை காதலிக்கு அடையாளம் தெரியவில்லை. ஏமாற்றத்துடன் திரும்ப முயல்கிறான் காதலன். பரிதாபம் மேலிட காதலன் கைகளில் சில்லறைகளை திணிக்க முயல்கிறாள் காதலி. அவன் கைகளைப் தொடுகையில் ஏற்படும் உணர்வில் உயிர்தெழுகிறது அவளது காதல். பரவசத்தில் அவள் தவிப்பதை அவ்வளவு நுட்பமாக பதிவு செய்திருப்பார் சார்லி சாப்ளின். சிட்டி லைட்ஸ் என்ற அந்த காதல் காவியம் உலகின் பல்வேறு மொழிகளில் பல்வேறு இயக்குநர்களால் மீண்டும் திரைப்படங்களாக்கப்பட்டிருக்கின்றன. தமிழில் கூட சிட்டி லைட்ஸை தழுவி பல படங்கள் வெளியாகி வெற்றி பெற்றுள்ளன.

எத்தனை காதலைத்தான் சொல்லிக்கொண்டே செல்வது. அத்தனை மனிதர்களின் இதயத்திலும் ஒளிர்ந்து கொண்டே இருக்கிறது காதல். தன் வாழ்வின் பெரும்பகுதியை மனிதகுலத்தின் விடுதலையை குறித்து சிந்திப்பதற்கு மட்டுமே செலவழித்த கார்ல் மார்க்ஸ், ஜென்னியிடம் மட்டும் குழந்தையாக மாறிப்போனதற்கு காரணம் காதல். ஜென்னிக்கு எழுதிய கடிதம் ஒன்றில் கார்ல் மார்க்ஸ் குறிப்பிடுகிறார், இனிவரும் நூற்றாண்டுகள் அனைத்துக்கும் காதல் என்றால் ஜென்னி, ஜென்னி என்றால் காதல் என்கிறார்.

உலக மூலதனத்தின் ஆணிவேரை அறுத்து எறிகிற தத்துவத்தை கொடுக்கிற வல்லமையை மார்க்ஸ் தனது காதலிலிருந்து கூட பெற்றிருக்கக் கூடும். ஒருமுறை தன் தாயாரின் மரணம் காரணமாக ஜெர்மனிக்கு சென்று விடுகிறார் ஜென்னி. ஜென்னியின் பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியாத மார்க்ஸ், உன் பிரிவு எனக்குள் மிகுந்த மனக்கிளர்ச்சியை உருவாக்குகிறது. எனது சக்தி முழுமையாக கரைந்து போவதை காண்கிறேன். ஒருமுறை மீண்டும் உன்னை என் இதயத்தோடு அணைத்துக் கொண்டால் போதும். என் இதயம் அமைதியாகி விடும். அதன் பின்னர் இந்த உலகில் எதுவுமே எனக்கு எதுவும் வேண்டியதாய் இருக்காது என கடிதம் எழுதுகிறார். இதைவிட அற்புதமாய் ஒருவன் தன் காதலின் மகத்துவத்தை எப்படி வெளிப்படுத்திவிட முடியும்?

எங்கும் வாழ்கிறது காதல். எங்கோ ஒரு பெட்டிக்கடையில் மீதி சில்லறைக்காக கொடுக்கப்படும் நைந்து போன ஏதோ ஒரு ரூபாய் நோட்டின் வெள்ளை பகுதியில், யாரோ ஒருவன் அல்லது ஒருத்தி தனக்கான காதலின் தூதை அனுப்பிக் கொண்டிருக்கக் கூடும். பேருந்தில் நீங்கள் அமரும் இருக்கைக்கு முன்புறம் உள்ள இருக்கையின் பின்புறம், யாரேனும் தன் பெயரையும் காதலிப்பவரின் பெயரையும் இணைத்தெழுதி, ஒரு பயணத்தை காதலுக்கு காணிக்கையாக்கி இருக்கக் கூடும். மாமல்லபுர மலைக்குகைகளில், குற்றால அருவிகள் குளிப்பாட்டும் மலைப்பாறைகளில், மின்தொடர்வண்டிகளின் மர இருக்கைகளில் யாரோ யாருக்காகவோ காதலை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். நூறு நூறு ஆண்டுகளாய் மனிதர்கள் காதலை, அதன் கதகதப்பு குறையாமல் கடத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

ஒவ்வொரு பிரசவத்தின் போதும் தாய்மை கல்லறை சென்று திரும்புகிறது என சொல்வார்கள். 14 குழந்தைகளை பெற்ற பிறகும் மும்தாஜ், ஷாஜகான் மீதான காதலை நீடித்தது ஏன்? தன் எத்தனையோ மனைவிகளுக்கு இடையே, மும்தாஜூக்காக தாஜ்மகாலை அர்ப்பணிக்க வேண்டும் என ஷாஜகானை உந்தியது எது? ஒற்றை விடையாய் வரலாற்று பக்கங்களில் மிஞ்சி நிற்கிறது காதல்.

தனிதமிழ் ஈழத்தை கட்டமைக்க தன் வாழ்வையே வெடிகுண்டுகளின் யுத்தமுழக்கங்களுக்கு இடையே நிறுத்திக் கொண்ட, தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், தனது ஒப்பற்றக் காதலை, யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்காக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மதிவதினியிடம் கண்டடைந்தார்.

காவியங்களில், கதைகளில், வரலாறுகளில் என உலகில் முதல்முதலில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு, காலத்துக்கேற்ப காதல் தன்னை புதுப்பித்து கொண்டே இருக்கிறது. தோல்வியடைந்த, சாவை தழுவிய காதல்கள் புனிதத்துவத்தை அடைந்ததாக கருதப்பட்ட நிலைமை, மெல்ல மெல்ல சமகால தத்துவங்களுக்கு ஏற்ப தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது.

கடந்த ஆண்டு பிரான்ஸ் நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட இமான்வெல் மக்ரோங், தனது மனைவியுடன் தேர்தல் வெற்றிக்கு பிறகு மேடையேறிய போது ஒட்டுமொத்த மக்களும் பிரிகெட்டி பிரிகெட்டி என முழங்கினர். வழக்கத்தில் இருந்து மாறுபட்ட வித்தியாசமான தம்பதி மக்ரோங் – பிரிகெட்டி தம்பதி. வயது மூத்த பெண்ணை காதலிப்பதும், திருமண வாழ்வில் இணைவதும் பல்வேறு தரப்பில் உண்டெனினும், மக்ரோங் – பிரிகெடி இடையிலான வயது வித்தியாசம் சற்றே அதிகம் என்பது தான் அவர்களின் தனிச்சிறப்பு. பிரிகெட்டி ஆசிரியையாக இருந்த பள்ளியில் மாணவர் மக்ரோங். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது மனைவி மெலினாவை விட 24 வயது மூத்தவர் என்பதும், மக்ரோங் தனது மனைவி பிரிகெட்டியை விட 24 வயது இளையவர் என்பது சுவாரஷ்யம்.

காதலுக்கு சாதியில்லை, மதமில்லை, இனமில்லை, மொழியில்லை, தேசமில்லை என நீடித்த வரலாற்றில், காதலுக்கு பாலின பேதமில்லை என ஒலிக்கத் தொடங்கியிருக்கும் குரல்களும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே கருதப்படுகிறது. பல்வேறு பரிமானங்களை கடந்து காதல் நீடித்தாலும், காதலுக்கு எதிர்ப்புகளும் இல்லாமல் இல்லை. காதல் சாதியற்றதாய் இருக்கிறது. மதமற்றதாய் இருக்கிறது. தனது துணையை தானே தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை ஒரு பெண்ணுக்கு வழங்குவதாய் இருக்கிறது.

மீறல்களை ஒருபோதும் மரபுகள் விரும்புவதில்லை. அனுமதிப்பதுமில்லை. காதலுக்கு எதிரான குரல்கள் இதன் ஊடாகவே எழுகின்றன. சமகாலத்தில் காதலை பேசுகின்ற யாரால் தான் தர்மபுரி இளவரசனை பேசாமல் சென்று விட முடியும்? நீதிமன்ற படிக்கட்டுகளில் தன்னை பெற்ற தாய் தந்தைக்கு எதிராகவே நடையாய் நடந்து, நீதியைப் பெற்ற உடுமலை கவுசல்யாவின் கால்களுக்கு அந்த வலுவைத் தந்தது அல்லவா காதல்? தண்டவாளத்தில் தலை தனியாகவும், உடல் தனியாகவும் கிடந்த போதும் சேலம் கோகுல்ராஜின் இதயம் காதலை தவிர வேறெதை இசைத்து கொண்டிருந்திருக்கும்?

கேரளாவில் காதலனை மணமுடித்து, காதலன் நேசிக்கும் மதத்தை விரும்பி ஏற்றி ஹதீயா, சொந்த பெற்றோராலேயே வீட்டுச்சிறையில் வைக்கப்பட்ட போதும், பல மாத போராட்டத்துக்கு பிறகு உச்சநீதிமன்றம் சென்று மீட்டெடுத்து வந்தாளே தனது காதலை. அந்த மனதிடத்தை ஹதீயாவுக்கு வழங்கியது காதலை தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?

சமூகத்தின் பார்வைக்கு வந்த இவை மட்டுமின்றி, உலகின் ஒவ்வொரு மூலையிலும், யாரோ ஒருவரின் காதல், விடுதலைக்கான பாடலை பாடிக்கொண்டே தானே இருக்கிறது.

இன்றைய சந்தை உலகில் விற்பனைப் பொருளாய் கருதப்படும் பெண், அதிலிருந்து விடுதலை அடைய முயலும் போது, காதல் அதற்கான விடுதலைகீதத்தை இசைக்கிறது. இதிலுள்ள முரண்பாடுகளை களையவோ, இணக்கத்தை ஏற்படுத்தவோ விரும்பாத சமூகம், காதலை தள்ளி வைக்கவும், கொச்சைப்படுத்தவும் முயல்கிறது. காமம், அன்பு, நம்பிக்கை, சுதந்திரம் என அனைத்தும் கலந்த ஒன்றாகவே காதல் நிரம்பி வழிகிறது. இதை விட்டுவிட்டு காதல் என்பதை வெறும் காமமாகவோ, காமத்தை ஒதுக்கி விட்டு 100 விழுக்காடு புனிதத்தை கொண்டதாகவோ காதலை பார்த்திட முடியாது. இலக்கியத்திலும், காவியங்களிலும் காதலைத் தேடுவதை விட்டுவிட்டு, ஒரு ஆணும், பெண்ணும் அவரவர்க்கான சுதந்திரத்தை கொடுப்பதிலும், பகிர்ந்து கொள்வதிலும் காதல் வெற்றியடைகிறது.

காதலில் மற்றவர்க்கான சுதந்திரத்தை பேணுவது குறித்து கலீல் கிப்ரான் தனது கவிதையொன்றில் குறிப்பிடுகிறார். ஒருவரையொருவர் காதலியுங்கள், ஆனால் அது அடிமைத்தனமாகி விட வேண்டாம். உங்கள் ஆன்மாவின் கடலோரங்களுக்கிடையில் அசைந்து கொண்டிருக்கும் கடலாயிருக்கட்டும் அது. அடுத்தவர் கோப்பைகளை நிரப்புங்கள். அடுத்தவர் கோப்பையிலிருந்து பருக வேண்டாம். சேர்ந்தே நில்லுங்கள். மிக நெருக்கமாக வேண்டாம். ஓக் மரமும், சைப்ரஸ் மரமும் ஒன்றின் நிழலில் மற்றொன்று வளராது என நீள்கிறது அந்த கவிதை. இந்த கவிதையின் ஆழம் ஒரு காதலில் பெண்ணுக்கான இடத்தை வழங்குவதில் உள்ள அர்த்தத்தை அழகாக விவரிக்கிறது.

காதல் போற்றுதற்குரியதாக, சபித்தலுக்கு உட்பட்டதாக மட்டுமின்றி வழிபாட்டுக்குரியதாகவும் நமது சமூகத்தில் நிலவுவதுண்டு. மதுரை வீரன் என்றதும் நமக்கு எம்ஜிஆர் படம் தான் நினைவு வரும். உண்மையில் மதுரைவீரன் ஒரு காதல் சாமி. காதலித்ததால் கொல்லப்பட்டு சாமியானவர். 1634ஆம் ஆண்டையொட்டி தென்மாவட்டங்களில் வசித்த மதுரை வீரன், திருமலை நாயக்கரின் ஆட்சிப்பகுதியில் இருந்த பொம்மண நாயக்கரின் மகளான பொம்மியை காதலித்து, அவளை சிறையெடுத்து மணம் புரிந்தவர். காதலுக்கு எதிராக சாதியும், அந்தஸ்தும் செய்த சதி, மதுரை வீரனை மாறுகால் மாறுகை வாங்கி பலியாக்கியது. இன்றளவும் தமிழகத்தின் தென்பகுதிகளில் மதுரைவீரன் மற்றும் பொம்மி ஆகியோரின் பெயர்களை தங்கள் பிள்ளைகளுக்கு சூட்டுவது மட்டுமின்றி தெய்வங்களாக வழிபடுவதையும் காணமுடியும்.

கிட்டத்தட்ட இதேகாலத்தில் வாழ்ந்து சாதிமறுத்த காதலுக்காக கொல்லப்பட்ட முத்துப்பட்டனும், இன்றும் நெல்லை பகுதி மக்களால் தெய்வமாக வழிபட்டு வரப்படுகிறார்.

இப்படியாக வரலாறு நெடுகிலும் காதல் தன்னை அடக்குமுறைகளுக்கும், கொலைக்களங்களுக்கு இடையிலேயேயும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது. காதலை வெறுப்போர் கூட தனது வாழ்வின் ஏதேனும் ஒரு பகுதியில் யாரேனும் ஒருவரின் மீது காதல்வயப்பட்டவராகவே இருக்கக் கூடும். காதலை எழுதாத கவிஞர் இல்லை அல்லது காதலை எழுதாதவர் கவிஞரே இல்லை எனக் கூறும் அளவுக்கு நாள்தோறும் புதுப்புது கவிஞர்களை உற்பத்தி செய்து கொண்டே இருக்கிறது காதல். உணர்வுகளின் புரிதலில் இருந்தே தான் காதல் தொடங்குகிறது எனினும், அதன் வாழ்நாளை நீட்டிக்கச் செய்திடுவதில் சமூக பொருளாதாரக் காரணங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக ஒருவர் ஒருவர் மீதான பற்று, உணர்வுகளை மதிப்பது, பகிர்வது என்பதான காரணிகளே காதலுக்கு ஆக்சிஜனை வழங்குகின்றன. உணர்வுகளை பகிராத, மதிக்காத காதல்கள் சொற்ப காலத்தில் தனது அந்திமத்தை எட்டி விடுகின்றன.

சினிமா உள்ளிட்ட மாய கதாபாத்திரங்களை முன்மாதிரியாக கொண்டு உருவாகும் காதல்கள் பெரும்பாலும், தனது ஆயுளை குறைத்துக் கொள்கின்றன. இதுவொரு உள்காரணி என்றால் சாதி, மதம் உள்ளிட்ட பாகுபாடுகள் புறக்காரணிகளாக இருந்த போதும் சக்திவாய்ந்த காரணிகளாக இருந்து காதலை துரத்திக் கொண்டே இருக்கின்றன. இவை காதலுக்கும் கல்லறைத் தோட்டங்களுக்கும் இடையிலான தூரத்தைக் குறைக்கின்றன. யாவற்றையும் மீறிய அன்பின் கோப்பை நிரம்பி வழியும் காதல்கள் தங்களின் வெம்மையை முதுமை வரை பாதுகாத்து அதில் திளைக்கிறது.

நம்முடைய தலைமுறையின் காதல்களின் சின்னங்களாக கல்லறைகளாக இன்றி மகிழ்ச்சியும், பேரன்பும் பொங்கும் இல்லங்களாகவே அமைய வேண்டும். அதற்கான அத்தனை சூழல்களையும் உருவாக்குவோம். அன்பால் நிரப்புவோம் உலகை. அன்பை விட வலிமையானதல்ல அடைக்குந்தாழ்கள்.

– எஸ்.ஜான்பால்

நன்றி – நியூஸ் 18 தமிழ்நாடு

 

Related Posts