வெய்யிலின் உக்கிரம் தாளாமல் மின்விசிறியை ஐந்தில் ஓடவிட்டுப் படுத்த அகிலாண்டம் ’ஏசி மாட்ட ஆளை வரச்சொல்லணும் . வயசாக ஆக வெய்யில் கொஞ்சமும் தாங்கலை என்று நினைத்தபடி கண்ணயர்ந்த சமயம் ‘அம்மா ‘ என கதவைத் தட்டும் சத்தம் கேட்டது .
எழுந்து கதவைத் திறந்ததும் வடிவு நின்றிருந்தாள்.

தினமும் காலை நேரம் வந்து பாத்திரம் தேய்த்து காய் நறுக்கி தந்து விட்டு செல்வாள் . அந்த சுற்று வட்டாரத்து வீடுகளில் வேலை செய்பவள் . அழைப்புமணி இருந்தாலும் சட்டென அழுத்தாமல் எந்த வீட்டிற்கு எந்த சமயம் செல்கிறாள் என்பதைப் பொறுத்து நடந்து கொள்வாள் .


வடிவு வழக்கமாய் இந்த நேரத்தில் வர மாட்டாளே என யோசித்தபடி அவளை உள்ளே விட்ட அகிலாண்டம் , அவளின் முக வாட்டம் கண்டு ’சாப்ட்டியா ‘ என்றாள் .
‘இல்லம்மா , மீனாம்மா வூட்ல இன்னைக்கு சோறாக்கலை ‘என்றதும் , மறு பேச்சில்லாமல் உள்ளே சென்று தட்டில் பொதினா துவையலுடன் சோறு போட்டு ஓரத்தில் அப்பளமும் வைத்து கொண்டு வந்து அவளெதிரில் வைத்து ,பெரிய தம்ளரில் தண்ணீரும் கொண்டு வந்து அருகில் வைத்தாள்.அவள் அப்படிதான் .. ஆயாம்மா வனமாலியின் கண்ணுங்கருத்துமான கவனிப்பில் வளர்ந்தவள் … உறவினரோ வேலைக்காரியோ யாரானாலும் வேறுபாடின்றி நடுவீட்டில் , தான் புழங்கும் தட்டில் தான் சோறு போடுவாள் .


உள்ளூரில் கட்டிக் குடுத்த மகள் இப்போது மும்பையில் வாழ்கிறாள் . இங்கிருந்த ரெடிமேட் ஆடை பிஸினசை சம்மந்தி கவனிக்க , மருமகன் கேசவன் அதை இன்னும் விரிவுபடுத்தும் எண்ணத்தில் மும்பைக்கு பறந்தான் . கணவன் மனைவி இருவரும் சேர்ந்து பிஸினசை கவனித்ததில் பேர் சொல்லும் வளர்ச்சியை விரைவில் கண்டனர் .


மகள் கர்ப்பம் தரித்த நல்ல சேதியும் தேடி வந்தது . மகளைக் காணாமல் அவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை . வடிவை அழைத்து விசயம் சொன்னாள் . தான் திரும்பி வரும் வரை வாரம் ஒரு முறை வந்து வீட்டை சுத்தம் செய்து வைக்க சொல்லி விட்டு மும்பைக்கு கிளம்பினாள் .
பிரசவத்திற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன . அந்த ஊரின் கிளைமேட் ஒத்துக் கொள்ளாமல் அகிலாண்டம் அடிக்கடி நோய்வாய்ப்பட அவளுக்கும் சேர்த்து வைத்தியம் பார்க்கும் நிலை வந்ததால் அவளை ரயிலில் ஏற்றி திருப்பி அனுப்பினர்.வடிவிற்கு உடன் பிறந்த அண்ணனே சம்பந்தியானார் . மகளும் மருமகளும் ஒற்றுமையாய் வாழ வடிவு நிம்மதியாய் வேலை செய்யும் வீட்டில் தங்கிக் கொண்டாள் . வாரம் ஒரு முறை சென்று மகளைப் பார்த்து வருவாள் .


அண்ணனும் மருமகனும் கேபிள் பதிக்க , குழாய் பதிக்க என பல வேலைகளுக்கு நிலம் தோண்டும் தினக்கூலி தொழிலாளிகள் . ஆனால் அது இல்லாத போது எந்த வேலை கிடைத்தாலும் சென்றனர் . நான்கு பேர் கொண்ட அந்தச் சின்ன குடும்பம் ஓரளவு வயிராற சாப்பிட முடிந்தது.
சர்வசாதாரணமாக வேலை செய்து வந்த அண்ணன் சமீப காலமாய் அவ்வப்போது சுருண்டு படுத்துக் கொண்டார் . வயிற்று வலியில் துடித்த அவருக்கு என்ன வியாதி எனத் தெரியாமல் கைவைத்தியம் பலதும் செய்தனர் . அக்கம்பக்கத்தினர் குறி காட்டும் எல்லா வைத்தியரையும் தேடிச் சென்றனர் . கூறும் மருந்துகளை தவறாமல் வாங்கித் தந்தனர் .

அப்போதைக்கு சில நாட்கள் வலியின்றி இருப்பார் . மீண்டும் வலி தாங்க முடியாமல் வேதனையில் வீழ்வார் . எதோ சாமி குத்தம் இருக்கும் என பயந்து பலவிதமான நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர் .
வெய்யிலுக்கு முன் சென்றால் தான் சுறுசுறுப்பாய் வேலை செய்ய முடியும் என்று ஏழு மணிக்குள் வேலை தளத்துக்கு சென்று விடுவார் . டீயுடன் துவங்கும் வேலை பத்து மணிக்கு இன்னொரு டீயுடன் தொடரும் . காலை உணவு தூக்கம் தந்து வேலையைக் கெடுக்கும் என்பதால் சாப்பிட மாட்டார்.


மதிய உணவு உண்டதும் மூன்று மணி வரை அங்கேயே ஓரமாய் படுப்பார் எழுந்ததும் மீண்டும் ஒரு மணி நேரம் வேலை செய்து விட்டு குவாட்டர் பாட்டில் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வருவார் . அலுப்பு தீர குளித்து விட்டு சரக்கடித்த பின் சாப்பிடுவார் .உடனே சத்தம் இன்றிப் படுத்து விடுவார் .


இந்த அன்றாட நடைமுறை தான் அவரிடம் வினை சேர்த்தது . குடல் புண்ணாகி அது கேன்சராக மாறிய விசயம் பெரியாஸ்பத்திரி போன பின் தான் தெரிந்தது . அதற்குள் நோய் முற்றியதால் அங்கில்லாத பல மருந்துகளை வெளியில் வாங்கித் தந்து சிகிச்சை செய்தும் பலனின்றி உயிரற்ற பொருளாய்த் திரும்பினார் .


அங்கங்கு வாங்கிய கடன் அதற்கான வட்டி குட்டி போட்டதில் அவர்களால் சமாளிக்க முடியாத பெரும் தொகையானது . வந்த வருமானம் வாய்க்கும் கைக்குமே பற்றவில்லை . கடன் திருப்ப வகையற்று தவித்த நேரம் ’குவாரியில் வேலை , கணவன் மனைவி இருவரும் சென்றால் வேலை செய்து கடனையும் அடைக்கலாம் ‘ என தனியார் ஆபிஸில் பியூன் வேலை செய்யும் வடிவின் சித்தப்பா மகன் கதிரான் தகவல் சொல்லி அவனே முன்னின்று ஏஜண்ட் கந்தனிடம் பேசி முன்பணம் வாங்கித் தந்தான் .


இங்கிருந்த கடன்களை அடைத்து விட்டு அம்மாவை வடிவின் பொறுப்பில் விட்டு முருகன் வள்ளியுடன் கிளம்பினான் . அவர்களும் அங்கு சென்று நாள் முழுதும் பாடுபட்டும் வாங்கிய முன்பணம் தீரவில்லை . அதற்கும் கூட வட்டி குட்டி போடுவதை ஓராண்டு காலம் முடிந்த பிறகு தான் அறிந்தான் .


இதுவரை குழந்தைப் பேறில்லாத வள்ளியின் வயிறு திறக்கவும் நேரம் காலம் பார்த்தது போல் சிசு உருவானது . சம்மட்டி ஓங்கி அடித்த போதும் கலையாமல் திம்மென அமர்ந்து கொண்டது . இன்னும் ஒரு வருடம் இதே போல் சுறுசுறுப்பாய் வேலை செய்தால் ஊருக்கு அழைத்து செல்வதாக ஏஜண்ட் கூற அந்தக் கனவில் ஓய்வின்றி உழைத்தனர் .


அகிலாண்டம் மாலை நேர சாமி விளக்கேற்றி கும்பிட்டு விட்டு வந்து டிவியை ஆன் செய்தாள் . உலகெல்லாம் நோய்த்தொற்று நாடெங்கும் ஊரடங்கு என்று செய்தியில் கூறினர் . காஷ்மீரில் ஊரடங்கு என பலமுறை செய்தியில் கேட்டிருப்பதால் ஊரடங்கு எனும் சொல் அவளுக்கு புதியதாக இல்லை . ஆனால் அவளுக்கு அதன் அர்த்தமோ கனமோ தெரியாது .


சில சமயம் வாசலில் உட்கார்ந்து காற்று வாங்குவாள் . அப்போது அருகில் உள்ள பூவரச மரத்தடியில் சேர்களைப் போட்டு அமரும் ஆண்களின் அரட்டையில் அரசியல் இருக்கும் . எதிர்வீட்டு சர்மாவின் உரத்த குரல் அவள் காதுவரை எட்டும் . ஒரு முறை அவர் ..
”ஆமா அந்த துளுக்கனுக தனி ராஜ்ஜியம் நடத்தறா மாதிரி, மத்தவா யாரும் , அங்க நிலம் வாங்கக் கூடாதுங்கறான் . பக்கத்து நாட்ல போய் துப்பாக்கி வாங்கி வந்து டப்டப்னு சுடறா . அவாளுக்கு நல்லா வேணும் ”.
என்றார் . உடனே அடுத்த வீட்டு ரவி
“ இன்னும் பத்து மாநிலத்துக்கு மேல எங்கூர்ல வேற யாரும் நிலம் வாங்க முடியாதுனு தடை வெச்சிருக்கு. அங்கல்லாம் இருக்கற தனி சூழல் காரணமா அப்பிடி இருக்கு . அதையெல்லாம் பேசாம காஷ்மீரை மட்டும் பேசினா சிக்கல் தான வரும் . பாரபட்சமா ஒருத்தரை குட்டிட்டே இருந்தா ஒரு நாள் அவங்க நிமிர நினைக்கறது நியாயம் தான ? .. யார் மேலயும் மக்களுக்கு நல்ல நம்பிக்கை வரலைனா எதைத் தின்னா பித்தம் தெளியும்னு யோசிக்கறது தவிர அவங்களுக்கு வேறென்ன வழி இருக்கு , சரியான நம்பிக்கை தர மாதிரி அரசாங்கம் நடக்கணும் ‘ என்றதும்
அவர் எதுவும் பேசாமல் எழுந்து சென்றார் .


ஆனால் அரசாங்கம் மீண்டும் மீண்டும் ஊரடங்கை நீடித்து அறிவிக்க இந்த உரையாடல் நினைவிற்கு வந்து அவளை தொந்தரவு செய்தது . காவலர்களின் செயல்களை டிவியில் காணும் போது ஊரடங்கின் அர்த்தம் கொஞ்சம் புரியத் துவங்கியது . இந்த நாட்டின் ஒரு மூலையில் உள்ள சினிமாவில் அழகாய் காட்டப்படும் அந்த மக்கள் வாழ்க்கையைப் பத்தி இதுவரை நாம யோசிச்சதே கிடையாது . அதுக்கான தண்டனை தான் இந்த ஊரடங்கு போலனு கூட நினைக்கத் துவங்கினாள் .


மக்களின் சிரமங்கள் புரியத் துவங்கியதும் கொஞ்சம் அச்சமாயும் இருந்தது . மகளின் பிரசவத்திற்கு நாள் நெருங்கிக் கொண்டே வருகிறது . பஸ்ஸோ ரயிலோ விமானமோ மறு அறிவிப்பு வரும் வரை ஓடாது எனும் செய்தி கலக்கம் தந்தது . அவளை நேரில் சென்று பார்க்கவும் அவளுடன் இருக்கவும் முடியாத ஏக்கம் சூழ்ந்தது .


’பிரபல மருத்துவமனையிலிருந்து மருத்துவர் வீட்டுக்கே வந்து கவனிக்கிறார் . நீங்க கவலைப்படாம இருங்க ’ என நம்பிக்கையாய் மகளும் மருமகனும் போனில் பேசியதால் சற்று ஆறுதல் அடைந்தார்.


வழக்கம் போல் வீட்டிற்கு சென்ற வடிவு வேலைக்கு மீண்டும் திரும்பி வர முடியவில்லை . மகள் கர்ப்பம் தரித்த சேதி அறிந்தது முதல் உடனே அவளைப் பார்க்க வேண்டும் எனும் ஆசை அதிகரித்தது . ஆனால் கையில் காசும் இல்லை .போகும் வழியும் தெரியாது . அவர்களின் நிலைமை பற்றி எதுவும் தெரியாமல் கவலையும் அதிகரித்தது .


வள்ளியின் நிலைமை அதை விட மோசம் . முருகன் இருக்கும் தைரியத்தில் இத்தனை தூரம் வந்தவள் வேலை செய்யும் இடம் நகருக்கு பத்திருபது கிலோமீட்டர் தள்ளி இருந்த பாறைகளால் நிறைந்த இடமாய் இருந்தது . குவாரிக்கு மேலே சற்று தள்ளி பத்து ஓலைக் குடிசைகள் இருந்தன . அதில் பல ஊர்களில் இருந்தும் வந்திருந்த கூலித் தொழிலாளிகள் வசித்தனர் .


கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது . அந்த குடிசையில் ஒன்றில் தான் இவளும் முருகனும் குடி வைக்கப்பட்டனர் . அங்கு செல்லும் வரை இருந்த கந்தனின் முகம் மாறி விட்டது . அதுவும் அவளை அச்சப்படுத்தியது . அடிக்கடி ஊர் நினைவு வரும் . கர்ப்பம் உறுதியான பின் அம்மா கையால் சாப்பிட வேண்டுமெனும் ஏக்கம் அதிகமானது . ஆனால் யாருடனும் யாரும் எதையும் பகிர்ந்து கொள்ள முடியாத நிலையும் ,மொழியும் புரியாததும் அழுகையாய் வந்தது .


அடுத்த குடிசையில் இருந்த தலையில் பெண் இவளை விட மூத்தவள் .தலையில் முக்காடு போட்டிருப்பாள் .வள்ளியின் சோர்ந்த முகத்தைப் பார்த்தே அவளின் நிலையைப் புரிந்து கொண்டாள் .வேலை செய்யும் போது வயிற்றில் அடிபடாமல் பாதுகாக்க துணியை சுருட்டி பாந்தமாய் வலிக்காமல் கட்டி விடுவாள் . அவ்வப்போது அருகில் உள்ள ஊற்றில் தண்ணீர் கோரி வந்து தருவாள் . குவாரிக்கு மேல்புறம் சற்றுத் தள்ளி இருந்த பெயர் தெரியாத சில மரங்களில் கவை கொடுத்து அவள் சாப்பிடத் தகுந்த காய்களை பழங்களை கொண்டு வந்து தருவாள். அந்த அன்பையும் அடிக்கடி காட்ட முடியாதபடி கண்காணிப்பு இருந்தது .


ஏஜண்ட் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தலை காட்டுவான் . இந்த முறை ஒரு வாரத்திற்கான பணம் தந்தவன் அதன் பிறகு வரவேயில்லை . காவலுக்கு நின்றிருந்த இரு தடியர்களையும் பத்து நாட்களாகக் காணவில்லை . காரணம் அறியாத அவர்கள் வள்ளியை ஓய்வெடுக்க சொல்லி விட்டு வேலை செய்தனர் . அரை மணி நேரம் ஓய்வெடுத்ததும் அந்த தடியர்கள் வந்து விட்டால் மாட்டிக் கொள்வோம் எனும் அச்சம் தோன்றும் . உடனே எழுந்து அவளும் சம்மட்டி பிடிப்பாள் .
ஊரடங்கு அறிவிப்பு தெரிந்தும் கந்தன் அவர்களிடம் எதுவும் சொல்லாமல் அந்த இடத்தைக் காலி செய்தான் . ஊரடங்கு பற்றி ஒரு முறை வடிவு போனில் கூறிய விசயம் புரியவேயில்லை . நகரத்துடன் எந்தத் தொடர்பும் அற்ற அவர்களுக்கு வேறெந்த வழியிலும் விசயம் தெரியவில்லை .நொய்யரிசிக் கஞ்சி இரு வேளை குடித்து வயிற்றின் ஈரம் காயாமல் பார்த்துக் கொண்டனர் . இன்னும் ஒரு வாரம் சமாளிக்கலாம் . அதன் பிறகு கந்தன் வந்தால் தான் நொய்யரிசியும் கிடைக்கும் .


என்ன செய்வதென்ற யோசனையில் நாட்கள் கழிந்தன .வள்ளிக்கு எட்டு மாதம் முடிந்து ஒன்பதாம் மாதம் துவங்கிய நிலையில் மீண்டும் அந்த தடியர்கள் வந்தனர். ஏதும் பேசாமல் தட்டுமுட்டு சாமான்களை எடுத்து வெளியில் வீசி அந்த இடத்தை காலி செய்யச் சொல்லி அவர்களை மிரட்டித் துரத்தினர் .


செய்வதறியாது திகைத்த முருகன் மனைவியின் வயிற்றைக் காட்டிக் கெஞ்சினான் . அதைப் புரிந்து கொள்ளாதது போல் பாவனை செய்தவர்கள்
” இவங்க இங்கிருந்து மண்டையைப் போட்டா நான் தான் தண்டம் அழணும் . போலீஸுக்கு வாய்க்கரிசி போடணும் , அந்த மண்டைக் குடைச்சல்லாம் நமக்காகாது . அங்க யாரும் இருக்கக் கூடாது . அவங்களை துரத்தியடிச்சிட்டு தான் திரும்பணும்.“
என முதலாளி கட்டாயமாய் உத்தரவிட்டிருந்ததை மனதில் கொண்டு செயல் பட்டனர் .


அவரின் மிரட்டலில் பயந்து போன முருகனும் வள்ளியும் அருகில் உள்ள குடிசை வாசிகளுடன் சேர்ந்து கையில் கிடைத்த தட்டுமுட்டு சாமான்களை மூட்டை கட்டி எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தனர் .
கல்லினுள் தேரையாய் ஈரம் எதிர்பார்த்த உயிரின் பயணம் வழி அறியா குழந்தை போல் தள்ளாடி நடந்து , காய்ந்த மனங்களின் வறட்சி தாங்காமல் சலிப்புற்று வள்ளியைக் காவு வாங்கி நின்றது .
நடுசாலையில் விழுந்த மனைவியை தூக்கத் தெம்பின்றி அவனும் உடன் படுத்தான் .


எத்தனை நேரம் படுத்திருந்தானோ தெரியவில்லை . அவன் முகத்தில் யாரோ தண்ணீர் தெளிக்க லேசாய் கண் விழித்தவன் ’வள்ளி வள்ளி ‘ என அரற்றி மீண்டும் மயங்கினான் . தொலைக்காட்சி அவர்கள் இருவரையும் காட்டிய அந்த கணத்தில் அவனுடைய மூச்சும் நின்றிருந்தது .

வடிவுக்கும் கையில் காசில்லை. வேலை செய்யும் வீடுகளுக்கு சென்றால் காசு வாங்கி வரலாம் . யார் உதவினாலும் உதவாட்டியும் அகிலாண்டம்மா நிச்சயம் பணம் தந்து உதவும் . பஸ்ஸு ஆட்டோ எதும் இல்லை . ஓடினாலும் அதுக்கு தரக்கூட கைல காசில்லை.ரோசிச்சா வேலைக்காவாது . எப்பிடியாச்சும் போயிரணும் என்று நினைத்து நடக்கத் துவங்கினாள்.


டிவி ஓடிக் கொண்டிருந்தது . கதவும் தட்டப்பட்டது . கைபேசியில் சௌமியாவுக்கு ஆண் குழந்தை பிறந்த சேதி சொல்லி மருமகன் போனை கட் செய்தான் . மகிழ்வுடன் நடந்த அகிலாண்டம் கதவைத் திறந்து விட்டு வடிவை உள்ளே நுழைய விட்டு மகிழ்வைப் பகிர்ந்து கொள்ளும் ஆவலில் சமையல் அறைக்குள் சென்றாள் .


அறுபது வயதில் இருபது கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்து சேர்ந்த வடிவு மிகுந்த களைப்புடன் அமர்ந்தாள் . அந்த சமயம் டிவியில் காட்டிய முகங்கள் தன் மக்களைப் போல் தோன்ற மெல்ல நகர்ந்து டிவிக்கு மிக அருகில் சென்று உற்றுப் பார்த்தாள் .“பேரன் பிறந்திருக்கான் . டாக்டர் வீட்டுக்கே வந்து மகளுக்கு நல்லபடியா பிரசவம் பார்த்தாங்களாம் .செலவு டபுள் மடங்கு தான். ஆனாலும் பரவாயில்லை ரெண்டு உசுரயும் நல்லபடியா காப்பாத்திட்டாங்க . இப்பதான் போன் வந்துச்சி ” என்று முகமெல்லாம் சிரிப்பாய் சொல்லியபடி வடிவு அமர்ந்த இடத்தில் சிறு ஸ்டூல் இழுத்துப் போட்டு, தண்ணீர் செம்புடன் லட்டு தட்டையும் அதன் மீது வைத்தாள் .


அப்போது டிவியில் மீண்டும் இருவரின் உடல்களையும் அருகில் காட்டிக் கூறிய செய்தி கேட்டு வடிவின் கண்கள் நீரைச் சொரிந்தன . அவசரமாய்க் கண்களைத் துடைத்துக் கொண்ட வடிவு மௌனமாய் அகிலாண்டம் தந்ததை பெற்றுக் கொண்டு பணம் கேட்கவும் மறந்தவளாய் அங்கிருந்து நகர்ந்தாள்.


வீட்டின் பின்புறம் இருந்த வேப்பமர நிழலில் சென்று அமர்ந்தவள்
‘உசுர்ல கூட ஏழை உசிரு பணக்கார உசுருனு இருக்கு . அது தெரியாம நாம பொழைக்க ஆசைப்பட்டு அனாதைப் பொணமாகறோம் . பணமில்லாதவன் பச்சை மண்ணைக் கூட இந்த பூமிக்கு உசுரோட கொண்டு வர முடியாது. எத்தனையோ நல்லது கெட்டதைப் பாத்து அனுபவப்பட்டும் இது புத்தில உறைக்காம குடும்பம் பண்றோம் . ஒன்னுக்கு மூணு உசுரு அனாதைப் பொணமாயி நாமளும் அனாதையாய்ட்டம்‘கையறு நிலையில் எண்ணங்கள் அலைக்கழிக்க தாங்க முடியாமல் பெருங் குரலெடுத்துக் கதறினாள் .


அவள் விழிநீரை கவனித்த அகிலாண்டம் அவளைப் பின் தொடர்ந்து வந்தாள். அவளின் கதறலில் ஏதோ அசம்பாவிதம் எனப் புரிந்து கொண்டு அவளை கைத்தாங்கலாய் வீட்டினுள் அழைத்துச் சென்றாள் .
அழுகையினூடே அவள் சொல்லிய விசயம் அறிந்தவள் ‘ உசுரைத் தாங்கும் வயிற்றுக்கு எந்த பேதமும் இல்லை ‘ என்று சொல்வது போல் அவளின் துக்கத்தில் தானும் கரைந்தாள் .


துன்பத்தில் சாதல் கண்டு இரக்கம் தாண்டிய பரிவு கலந்த நேசத்திற்கு விலைமதிப்பு ஏதுமில்லை என்பது போல் அந்த வீட்டின் பூனையும் அவளருகில் வந்து காலை லேசாய் உரசி மடியில் எறி அமர்ந்து ’மியாவ் ‘ என்றது . அவள் செய்த உதவியில் அடுத்து நடக்க வேண்டிய காரியங்கள் நடந்தன .

செம்மலர்.

Related Posts