சமூகம்

ஊரடங்கு கால அறிவிப்புகள் பெண்கள் நலன் காக்குமா ??

ஊரடங்கு காலம் முடிவிற்கு வருமா ? பொதுப் போக்குவரத்து துவங்குமா ? இயல்பு வாழ்க்கை திரும்புமா ? வாழ்வாதாரம் மீளுமா ? நிலைக்குமா ? என எண்ணற்ற கேள்விகளின் சுழலில் மக்கள் வாழ்க்கை சிக்கித் தவித்து வருகிறது . ஆனால் நோய்த் தொற்று குறைவதற்கு பதில் நாளும் அதிகரிப்பது அச்சத்தைக் கூட்டுகிறது . இவைகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அரசின் செயல்பாடுகள் விடை காண முடியாத கேள்விகளை எழுப்புகிறது .

மக்களின் வாழ்க்கைத் தரத்தில் பண மதிப்பிழப்பும் , GST வரிவிதிப்பும் தந்த அடிகளின் மீது திடீர் ஊரடங்கும் பலமான தாக்குதலைத் தொடுத்துள்ளது . எனவே வாழ்வாதாரம் ஒடுங்கி மக்களின் வாங்கும் சக்தி படுத்து விட்டது . இந்நிலையில் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் முதல் முன்னால் பிரதமர் மன்மோகன் சிங் , சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் மக்கள் கைகளில் பணம் தருவதன் மூலமே மக்கள் வாழ்வை மீட்டெடுக்க முடியும் என தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றனர் . ஆனால் மத்திய அரசு இவைகளுக்கு செவி சாய்க்கிறதா ?

வேலையின்மையும் வறுமையும் போட்டி போட்டு தாக்குவதால் பெண்களின் , குழந்தைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகிறது . சுகாதாரத்திற்கான அரசின் நிதி ஒதுக்கீடு அதிகம் தேவைப்படும் காலத்தில் மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதிப் பங்கீட்டை தர மறுக்கிறது . மருத்துவ துறையின் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க தேவைப்படும் நடவடிக்கைகளும் எடுக்கவில்லை . மாறாக அரசு மருத்துவமனைகளுக்கு இணையாக நீண்டகால லீஸில் நிலம் தந்து , கட்டமைப்பு வசதிகள் செய்து தனியார் மருத்துவமனைகள் மக்களிடம் கட்டணம் வாங்கி சிகிச்சை செய்யும் ஏற்பாடுகள் பற்றிய தகவல்களே காணக் கிடைக்கின்றன . ஆனால் இந்த நெருக்கடி கால தனியார் மருத்துவனை செயல்பாடுகள் மக்களை வெறுக்கச் செய்கின்றன . அரசின் சுகாதார கட்டமைப்பில் நம்பிக்கையை வலுவாக கூட்டி அரசின் கவனத்தைக் கோருகிறது .

நோய்நாடி நோய்முதல் நாடி என அறிவியல் பூர்வமான சிந்தனையை ஊக்குவிக்க வேண்டிய காலமிது . ஆனால் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை என்ன சொல்றது ? முன்னர் வந்த வரைவு அறிக்கையின் மீதான திருத்தங்களை ஏற்றதா ? அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு எனும் கேள்விக்கு உயிரில்லை என ஓரளவு நிலைமை மாறியுள்ளது . ஆனால் தேசிய கல்விக் கொள்கை 73 ம் ஆண்டு சுதந்திர தினத்தை மீண்டும் பின்னோக்கி இழுக்கிறது . அருகாமைப் பள்ளிகள் குறைப்பும் , தனியார்மயம் அதிகரிப்பும் , நுழைவுத் தேர்வுகளும் பெண் கல்வியை உருக்குலைக்கும் . ஏழை எளிய, தலித் , பழங்குடியினர் மற்றும் கிராமப்புற , மாணவிகளின் ஆரம்பக் கல்விக்கே வேட்டு வைக்கும் . உயர்கல்வி கனவை சிதைக்கும் . சுயகாலில் நிற்க உதவும் வேலை வாய்ப்பை தகர்த்து தன்னம்பிக்கையைக் குலைக்கும் . குடும்ப வன்முறைகளும் , பாலியல் வன்முறைகளும் மேலும் அதிகரிக்கும் .

இக்துடன் மொழித் திணிப்பு குடும்பத்தின் மன அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் . இந்தி மற்றும் சமஸ்கிருத மொழி இலக்கியங்கள் என இந்த அரசு முன்வைப்பவை பெண்ணடிமை சிந்தனைகள் கல்வியாய் மூளையை நிரப்பும் அபாயம் உள்ளது . இதை அதீத கற்பனை என ஒதுக்க முடியாது . ஏனெனில் இந்த நோய்த்தொற்று காலத்தில் இக்கல்விக் கொள்கையை வெளியிட்ட அரசின் பிரதமர் இராமர் கோவில் பூமி பூஜையில் கலந்து கொள்கிறார் . அவரின் கட்சியை சேர்ந்த பலரும் நோய் தீர அறிவியலுக்கு புறம்பான ஆலோசனைகளாக யாகம் , பஜனை என முன் வைத்து போகாத ஊருக்கு வழி சொல்கின்றனர் .

பாப்ரிமசூதி இடித்து தோண்டிய அஸ்திவாரத்தில் புத்தர் சிலை கிடைத்த பின்னும் கோவிலின் பூமி பூஜை நடத்தப்பட்டது . இதன் தலைவருக்கும் இன்று நோய்த்தொற்று வந்துள்ளது . இவர்களின் தாய் அமைப்பான RSS தலைவர் ” பெண் கல்வி தான் குடும்ப பிரச்சனைகளுக்கு காரணம் என சொல்லும் பின்னணியில் சிந்தித்தால் பெண்களை சீதையைப் போல் தீக்குளிக்க வைப்பரோ என அச்சம் வருகிறது . ஏற்கனவே ரூப்கன்வரை கணவரின் சிதையில் தள்ளி சதிமாதா கோவிலுக்கு திட்டமிட்டவர்கள் தானே இவர்கள் ! இந்தக் கல்விக் கொள்கை உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர்கள் RSS பின்புலம் கொண்டவர்கள் என்பது அம்பலப்பட்ட நிலையில் இதன் நோக்கம் தரும் அச்சம் இயல்பானதே !

இந்த பூமிபூஜை குறித்த ஒரு பெண்ணின் முகநூல் பதிவில் முகலாயர் ஆட்சி காலத்தின் பாதிப்புகள் இன்னமும் வட இந்தியர் மனதில் அழுத்தமாய் உள்ளன . இதை தமிழகத்தால் உணர முடியாது என்றிருந்தது . ஒரு வகையில் இது உண்மையாக இருக்கலாம் . ஏனெனில் மசூதி இடிக்கப்பட்ட உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் பின்னோக்கிய சிந்தனையை தக்க வைப்பதன் அரசியல் நடக்கிறது . அது அம்மக்களின் முன்னேற்றத்தை தடுக்கிறது . தமிழகத்தில் பின்னோக்கிய பார்வை விமர்சனத்துடன் கூடியது . எனவேதான் ஒப்பீட்டளவில் தமிழகம் கல்வியிலும் , அரசு மருத்துவ கட்டமைப்பு மற்றும் சிகிச்சையிலும் முன்னேறிய மாநிலமாய் உள்ளது .

வறுமையும் கல்வியில் பின் தங்குதலும் கை கோர்க்கும் போது மூட நம்பிக்கைகள் மேலும் வளரும் . முறையான மருத்துவம் பெற்று பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல் மன ஆரோக்கியத்திற்கு வழி வகுக்காது . மீண்டும் பல தலைமுறைகளின் வாழ்வை காவு கேட்கும் . கல்வி மற்றும் மருத்துவ கட்டமைப்பு தகர்க்கப் பட்டால் மென்மேலும் லாபம் கொழிக்கும் தொழலாய் மாறும் . ஏழைகளுக்கு எட்டாக் கனியாகும் . தாய்மொழியின் அழிவு தமிழரின் கூடி வாழும் பண்பாட்டை அழிக்கும் .

குடும்ப ஜனநாயம் உள்ளிட்ட ஜனநாயக நெறிகள் , பாலியல் புரிதலுடன் கூடிய பாலின சமத்துவம் , தனிநபர் மத சுதந்திரத்தை பாதுகாக்கும் மதசார்பின்மை , தொழிலாளர் நல சட்டங்கள் உட்பட இந்திய அரசியலமைப்பு சட்ட மாண்புகளை விரிவாக்கும் வகையில் , மக்களின் விழிப்புணர்வை உருவாக்கும் கல்வி முறையே இன்றைய தேவை !

பெரியாரும் , திராவிட அரசியலின் ஆட்சியும் , இடதுசாரிகளின் போராட்டங்களும் இணைந்து உருவாக்கியுள்ள தமிழகத்தின் தனித்தன்மையை பாதுகாக்கும் விதத்தில் ஒன்று சேர்வோம் ! கரங்கள் இணைப்போம் ! போராடுவோம் !

  • செம்மலர்.

Related Posts