உலக சினிமா

லைஃப் இஸ் பியூட்டிஃபுல் & சில்ட்ரன் ஆஃப் ஹெவன் . . . . . . . . . . . . !

1999 ஆம் ஆண்டில் சிறந்த அயல்நாட்டு மொழித்திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதுப்பட்டியலில் கடைசி ஐந்து படங்களாகத் தேர்வுசெய்யப்பட்டிருந்தன இரண்டு படங்கள். அதில் ஒரு படம், ஆஸ்கர் விருதையே வென்ற படம். அவை இத்தாலியப் படமான லைஃப் இஸ் பியூட்டிஃபுல் மற்றும் ஈரானியப்படமான சில்ட்ரன் ஆஃப் ஹெவனும் ஆகும்.

அப்படங்களைப் பற்றிய விமர்சனம் எல்லாம் எழுதவேண்டுமென்றால் பல பாகங்களாகவோ பல நூல்களாகவோ எழுதலாம். அதனால் அதைச்செய்யப்போவதில்லை இப்போது. அவற்றில் எனக்கு பிடித்த இருகாட்சிகளை மட்டும் குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்று தோன்றியது.

முதல் படம் – லைஃப் இஸ் பியூட்டிஃபுல்:

லைஃப் இஸ் பியூட்டிஃபுல் படத்தில் பொதுவாக எல்லோரும் படத்தின் இரண்டாம் பாதியில் யூதரான நாயகனையும் அவரது சிறுவயது மகனையும் ஹிட்லரின் நாஜிப்படை கைதுசெய்து கொடுமைப்படுத்தும் காட்சிகளைத்தான் அதிகமாக சிலாகிப்பார்கள். நானும்தான். ஆனால் அப்படத்தின் முதல்பாதியில் ஒருகாட்சி வரும். ஒரு உணவகத்தில் உணவுப்பரிமாறும் பணியாளராக யூதரான நாயகன் பணிபுரிவார். அங்கே சாப்பிடுவதற்கான் ஜெர்மானிய கல்வி உயரதிகாரி ஒருவர் வந்திருப்பார். அவர் பேச்சுவாக்கில், சாப்பிட்டு முடித்ததும் அருகில் இருக்கும் பள்ளிக்கூடம் ஒன்றிற்கு சிறப்பு அழைப்பாளராக பேசப்போவதாகச் சொல்வார். அதே பள்ளியில்தான் ஆசிரியையாக நாயகரின் காதலி பண்புரிவார் என்பதால், அந்தக் கல்வியதிகாரியிடமிருந்து ஏமாற்றி அவர் வைத்திருக்கும் அரசாங்கத்தின் அடையாளக்கொடியைத் திருடிக்கொண்டு, அப்பள்ளிக்கு கல்வியதிகாரியாகச் சென்றுவிடுவார்.

காதலியைப் பார்த்தவுடன் மகிழ்ச்சிப்பெருக்கில் திளைப்பார். காதலியும் அவரைப் பார்த்ததும் மகிழ்வார். பின்னர், பள்ளியின் தலைமையாசிரியையோ, வந்திருப்பவர் ஒரு கல்வி அதிகாரிதான் என்று நினைத்துக்கொண்டு, “நம்முடைய ஆரிய இனத்தின் பெருமைகளை விவரிக்கும் அறிக்கையொன்றை நமது அரசு உருவாக்கியிருக்கிறது. அதனை பெருமைக்குரிய நமது இத்தாலிய விஞ்ஞானிகள் அங்கீகரித்திருக்கிறார்கள். அதைப்பற்றி இப்போது நமது கல்வியதிகாரி உங்கள் முன்னே பெருமையாக விவரிப்பார். ஆரிய இனமான நம்இனம்தான் உலகின் உயரிய இனம்…” என்று பள்ளிக்குழந்தைகளிடம் கூறியபடியே யூதர் என்று தெரியாமலேயே யூதர்களைக் கேவலப்படுத்திப் பேசுவதற்கு நாயகனை அழைப்பார் பள்ளியின் தலைமையாசிரியை.

நாயகனுக்கு தலையும் புரியாது, காலும் புரியாது. யூதனாக இருந்துகொண்டு, யூதர்களை மட்டம்தட்டியும், ஆரிய இனம்தான் உலகின் மிக உயரிய இனம் என்று ஆரியர்களைப் புகழ்ந்தும் பேசவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருப்பார் நாயகன்.

“ஆம் இயற்கையாகவே, நம் ஆரிய இனம் தான் உலகின் மிக உயரிய இனம். ரோம் நகரத்திலிருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு சொல்வதற்காகவே இங்கே உங்கள் முன் வந்து நின்றுகொண்டிருக்கிறேன். ஆம் நம் ஆரிய இனம் தான் உலகின் மிக உயரிய இனம்.

இத்தாலியின் பிரபலமான இனவாத விஞ்ஞானிகள் என்னைத் தேர்ந்தெடுத்து, நம் ஆரிய இனம் தான் உலகின் மிக உயரிய இனம் என்று உங்களிடம் எடுத்துக்காட்டி விளக்குவதற்காக என்னை இங்கே அனுப்பியிருக்கிறார்கள்.

குழந்தைகளே, அவர்கள் என்னை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்? அதை உங்களிடம் நான் சொல்லத்தான் வேண்டுமா? என்னைவிட அழகானவனை வேறு எங்கே பார்க்கமுடியும் உங்களால்? அதனால் தான் சொல்கிறேன், நான்தான் சுத்தமான ஒரிஜினலான அக்மார்க் ஆரிய இனத்தைச் சேர்ந்தவன்.

குழந்தைகளே, ஆரிய இனம் தான் உலகின் உயரிய இனம் என்பதை எப்படிச் சொல்கிறீர்கள் என்று யாராவது கேட்கலாம். ஆனால் என் காதுகளைப் பாருங்கள், அதிலும் என் இடது காதின் மடலைப் பாருங்கள், காதில் இருக்கும் ஓட்டையைப் பாருங்கள், இப்படியும் அப்படியும் அசைத்தால் என் காதுமடல் அசைவதைப் பாருங்கள், காதுகளை மடக்கினால்கூட மடங்குவதைப் பாருங்கள். நம்முடைய காதுகளைவிடவும் அழகான இரண்டு காதுகளை எங்காவது காட்டிவிடுங்களேன் பார்க்கலாம், அப்போது இந்த இடத்தைவிட்டே நான் வெளியேறவும் தயாராகவும் இருக்கிறேன்.

ஆகவே குழந்தைகளே, உலகில் இனம் என்பது இருக்கிறது. ஆமாம் இருக்கிறது குழந்தைகளே!

சரி அதிருக்கட்டும், உங்களுக்கு இன்னொன்றையும் காட்ட விரும்புகிறேன். எல்லோரும் கவனமாகப் பாருங்கள். இதோ என் தொப்புளின் ஓட்டையைப் பாருங்கள். இதனை பெல்லி பட்டன் என்று அழைக்கின்றனர். இந்த பட்டனை யாராலும் பிய்த்து எடுக்கவேமுடியாது. நீங்கள் பல்லால் கடித்து எடுக்க நினைத்தாலும் உங்களால் இந்த பட்டனை பிச்சி எடுக்கவேமுடியாது. இத்தாலிய விஞ்ஞானிகள் கூட முயற்சி செய்து பார்த்துவிட்டனர். ஏனெனில் இது நம்முடைய இனத்தின் தனித்தன்மை, நம்முடைய இனத்தின் பெருமை.

அதேபோன்று, என்னுடைய கை தசைகளைப் பாருங்களேன், என்னுடைய இடுப்பைப் பாருங்களேன். என்னால் இடுப்பை எப்படி இடதுபக்கமும் வலதுபக்கமும் அசைக்கமுடிகிறது பார்த்தீர்களா! அது நம் ஆரிய இனம் தான் உலகின் மிக உயரிய இனம் என்பதற்கு சாட்சியாக இருக்கிறதல்லவா? பெருமைப்பட்டுக்கொள்வோமே நாம்…

(அதற்குள் உண்மையான கல்வியதிகாரி அங்கே வந்துவிட, அவசர அவசரமாக யூத நாயகன் சன்னல் வழியாகத் தப்பித்துச் செல்லவேண்டியிருந்தது)

வேறு எந்த இனத்திற்கும் இல்லாத வகையில், நம்முடைய இனத்திற்கு அவசரமாக வேலையும் வந்துவிடுவதால், ஆரிய இனத்தைச் சேர்ந்த நான் அவசரமாகப் போகவேண்டியும் இருக்கிறது. இதோ இந்த சன்னல் தான், ஆர்ய இனம் வெளியேறுவதற்கான பிரத்தியேக வழியென்று நினைக்கிறேன். நான் கெளம்புகிறேன்… அந்த பெல்லி பட்டனை மட்டும் மறந்துவிடாதீர்கள்…”

யூதர்களை கேவலமான பிறவிகள் என்று சொல்லும் ஆரிய பெருமை பேசித்திரியும் ஹிட்லர் ஆதரவாளர்களிடம், ஒரு ஆரியனாக வேடமிட்ட யூதன் பேசுவதாக அக்காட்சி எடுக்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கே பொதுவாக இருக்கக்கூடிய பண்புகளை ஏதோ ஆரிய இனத்துக்கு மட்டுமே உரியதாகப் பேசி நக்கல் செய்திருப்பார். அக்காட்சியில் நாயகனைத் தவிர அதிலிருக்கும் அனைத்துக் கதாப்பாத்திரங்களுக்கும் தெரியாத நாயகன் குறித்த உண்மை, படத்தைப் பார்க்கும் நமக்கு மட்டும் தெரிந்திருக்கும். இனம் குதித்தும் ஆரியப் பெருமை குறித்தும் அந்த நாயகன் செய்யும் நக்கல் நையாண்டி எல்லாமும் நமக்கு நேரடியாக வந்துசேரும் உருவாக்கப்பட்டிருக்கும் அக்காட்சி.

ஒரு திரைப்படத்தின் அழகியல் என்பது இதுதான். கேமராவை அழகான செடி, கொடி, பூ, பனிமலை, சுவிட்சர்லாந்து போன்றவற்றை காண்பிப்பதல்ல அழகியல். பல குறியீடுகளை உள்ளே ஒளித்துவைத்து, அதனைக் கண்டுபிடிப்பவர்கள் மட்டுமே அறிவுஜீவிகள் என்பதுபோலப் பேசுவதல்ல அழகியல். தான் சொல்ல முற்படும் அரசியலை அழகான காட்சியமைப்பின் மூலமாக பார்வையாளர்களுக்கு எளிதாகப் புரியவைக்க முடிவதுதான் அழகியல்.

இரண்டாவது படம் –  சில்ட்ரன் ஆஃப் ஹெவன்:

கதையின் நாயகனான சிறுவன், தன்னுடைய தங்கையின் ஷூவை தைப்பதற்காகக் கொண்டுசென்று வரும்வழியில் தொலைத்துவிடுவான். அதனை வீட்டில் அம்மா, அப்பாவிடம் சொல்லாமல் இருக்க முயற்சிப்பான். அதற்கு தங்கையும் உதவுவாள். தொலைந்துபோன ஷூ கிடைக்கும்வரை தனது ஷூவையே பள்ளிக்கு போட்டுக்கொண்டு போகுமாறு தங்கையிடம் அண்ணன் சொல்வான். அவ்வூரில் காலையில் பெண்குழந்தைகளுக்கும் மதியம் ஆண் குழந்தைகளுக்கும் ஒரே பள்ளிக்கூடத்தில் தனித்தனியாக வகுப்புகள் நடக்கும். அதனால் அண்ணனின் யோசனை ஓரளவுக்கு தங்கைக்கு சரியெனப்படும். ஆனால் ஒவ்வொரு நாளும் பள்ளி முடிந்ததும் வேக வேகமாக ஓடிவந்து அண்ணனிடம் ஷூவை ஒப்படைப்பதற்குள் அவளுக்கு பெரும்பாடாகிவிடும். ஒருநாள் தேர்வினால் நேரமாகிவிடும், மற்றொரு நாள் தன்னுடைய தொலைந்துபோன ஷூவை வேறு ஒரு சிறுமி அணிந்திருப்பதைப் பார்த்து அவளைப் பின்தொடர்ந்ததால் நேரமாகிவிடும், இன்னுமொரு நாளில் ஓடிவருகையில் காலிலிருந்து ஷூ கழன்று ஒரு ஓடைக்குள் விழுந்து அதை எடுத்து வருவதற்குள் நேரமாகிவிடும்.

அப்போது ஒருகாட்சியில் அவள் வெறுத்துப்போய், கடும்கோபத்துடன் ஷு தொலைந்த செய்தியை அம்மாவிடம் சொல்லப்போவதாக அண்ணனிடம் சொல்வாள் தங்கை. அதற்கு அண்ணன் சொல்வான், “ஷூவை தொலைச்சதால அப்பா அடிப்பார்னு அடிக்காகவெல்லாம் நான் பயப்படல. ஆனால் அப்பாவிடம் இப்போதைக்கு புது ஷூ வாங்க காசில்லை. அதனால் தான் சொல்ல வேணாம்னு சொல்றேன்” என்பான் அண்ணன்.

எப்படியும் ஷூ தொலைந்துவிட்டது. அதற்கு பதிலாக இன்னொரு ஷூ வாங்குவதற்கான வசதி தன்னுடைய பெற்றோரிடம் தற்போது இல்லை என்கிற நிலை. ஆக அந்நிலையில் மாற்றம் வருவரையில், நாமே நம்மால் முடிந்த அளவிற்கு இந்த பிரச்சனையை சமாளிக்க முயல்வோம் என்று வாழ்க்கையின் எதார்த்தத்தைப் புரிந்தவனாக அந்த அண்ணன் கதாப்பாத்திரம் பேசும் அவ்வசனம் அழகியலின் உச்சமாக எனக்குத் தோன்றியது. அப்படியொரு காட்சி அங்கே வைக்கப்படவில்லை என்றால், அந்தச் சிறுவன் மீது நமக்கு கொஞ்சம் கோபம்கூட வந்திருக்கலாம். “ஷூவை தொலைச்சது அவன்தானே. இதனால் தானே அவன் தங்கைக்கு தான் எவ்வளவு அவஸ்தை” என்றுகூட நாம் நினைத்திருப்போம். அக்கேள்வி நம் மனதில் எழுவதற்கு முன்பே, இக்காட்சி அதனை வரவிடாமல் தடுத்துவிடுகிறது. அதன்மூலம் அச்சிறுவர்களின் பிரச்சனையை நம் பிரச்சனையாக நினைக்கவைத்து பார்வையாளர்களான நம்மையும் அச்சிறுவர்களின் பின்னால் ஓடவைக்கிறார் இயக்குநர்.

அழகியல் என்பது இதுதான். திரைமொழி என்பதுவும் இதுதான். குறியீடுகள் என்கிற பெயரில் பலவற்றையும் ஒரு காட்சியில் ஒளித்தும் மறைத்தும் வைத்துவிட்டு, கண்டுபிடி பார்க்கலாம் என்று சொல்வதல்ல திரைமொழியும் அழகியலும். தான் சொல்ல விரும்பும் கருத்தையும் அரசியலையும் எளிமையாக பார்வையாளர்களுக்கு கடத்தும்விதமாகக் காட்சியமைப்பதே அழகியல். அதுவே திரைமொழி..

– இ.பா.சிந்தன்.

Related Posts