அரசியல்

அன்புள்ள ‘பத்மஶ்ரீ’ டாக்டர் கமல்ஹாசன் அவர்களுக்கு…

அன்புள்ள ‘பத்மஶ்ரீ’ டாக்டர் கமல்ஹாசன் அவர்களுக்கு,

வணக்கம்!

விருதுகளை திரும்பத் தருவது பற்றிய உங்களின் பேட்டியைப் படித்தேன். சகிப்புத்தன்மை, விமர்சன பாங்கு ஆகியவை இந்தியர்களின் ஜனநாயக சூழலுக்கு அவசியமானவை. இன்றைய சூழலில், மற்ற பல கலைஞர்களின் மெளனத்திற்கு மத்தியில், உங்கள் பேச்சு முக்கியமானது. இதுதான் உங்கள் கருத்து என்பதை தெரிவித்தற்காக பாராட்டுக்கள்.

சுதந்திர இந்தியாவில் பல்வேறு கட்டங்களில் மதம், இனம், மொழி சார்ந்த வன்முறைகளும் படுகொலைகளும் நடந்திருக்கின்றன. இவை நமக்கு புதியவை அல்ல. ஆனால், இப்போது நடைபெற்றுள்ள கொலைகளுக்கு பின்னணியாக அமைந்திருக்கும் கருத்துக்களும், அரசாட்சி நடத்துவோருடைய மெளனமும் நம்மை தொந்தரவு செய்கிறது.

பகுத்தறிவாளர்களின் கொலைகள், வதந்தியின் பெயரால் அப்பாவி ஒருவரின் கொலை, மேலும்  மத வன்முறையைத் தூண்டும் சில மக்கள் பிரதிநிதிகளின் பேச்சுக்கள், அமைச்சர்களின் பிழையான கருத்துக்கள் – இவற்றையெல்லாம் கண்டிப்பதில்  பிரதமரின் மெளனம் உள்ளிட்டவை பலருக்கும் வருத்தமளித்தன… பிரதமர் பேச வேண்டும் என்பதையே பல நாட்கள் கோரிக்கையாக வைக்கவேண்டியிருந்தது. எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது பீகார் தேர்தல் மேடையில் நின்றபடி “இரு தரப்பாரும் மோதிக் கொள்ளாதீர்கள்” என்ற அறிவுரையை பிரதமர் வெளிப்படுத்தினார்.

மதத்தின் பெயரால் பரப்பப்படும் வெறுப்புக் கருத்துக்களின் காரணமாக அப்பாவிகள் செத்து மடிகிறார்கள். உலகில் எந்த மத அடிப்படைவாதமும் இதைத்தான் செய்துவருகிறது. ஆனால், பிரதமர் தாக்குவோரையும், பாதிக்கப்பட்டோரையும் இரண்டு தரப்பாக்கினார். நடப்பவைகளை “மோதல்” என்று அழைத்தார். பின் பிரதமரின் அணுகுமுறைக்கு எதிராகவும் போராட்டக் குரல்கள் எழுந்தன. சில நாட்கள் பின் பாஜக தலைவர் அமித் ஷா தன் சகாக்களை அழைத்து அறிவுரை செய்தார்.

மத வன்முறைகளைத் தூண்டினால் எதிர்ப்பு கடுமையாக இருக்கும் என்ற அழுத்தம் எழுத்தாளர்களும் பிற கலைஞர்களும் நடத்திய போராட்டங்களால் உருவானது.  மீண்டும் ஒரு பெரும் வன்முறையை நாடு தாங்காது என்ற ஆற்றாமையிலிருந்துதான் இந்தப் போராட்டங்கள் உருவெடுத்தன.

அன்புள்ள கமல் …

சமீபத்தில் நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலிலேயே தவறுகளை சகித்துக் கொள்ள முடியாது ஒரு நிலை எடுத்தவர் நீங்கள். ஒரு செய்தியாளரின் கேள்விக்கு “நான் என்ன சாப்பிட வேண்டும் என்பதை வேறு ஒருவர் நிர்ணயிக்க முடியாது. நான் முன்பு மாட்டுக்கறி சாப்பிடுவேன். இப்போது இல்லை” என்று சில நாட்கள் முன்புதான் பதில் சொல்லியிருந்தீர்கள்.

இப்போது சற்று விரிவாகப் பேசியுள்ளீர்கள். ஆனால், இந்த முறை விருதுகள் திரும்ப வழங்கிய எழுத்தாளர்கள் மீதான விமர்சனம் உங்களிடமிருந்து வந்திருக்கிறது. நீங்கள் நம்புகிற நியாயங்களையும், அவற்றை முன்வைப்பதற்கான உரிமையும் உங்களிடம் உள்ளது.

நீங்கள் இதுவரை பெற்றிருக்கும் விருதுகளையும், திரைத்துறையில் சம்பாதித்த சொத்துக்களையும் நீங்களே வைத்துக் கொள்வதும் உங்கள் உரிமை. இதனாலெல்லாம் வலிய உங்களை குற்றவாளியாக்குவது இந்தக் கடிதத்தின் நோக்கம் அல்ல.

அதே சமயம் உங்கள் பேட்டியின் மூலம் யாரை குற்றவாளியாக்குகிறீர்கள்? என்பதையே கவலையுடன் நோக்குகிறேன். “ஒரே ஒரு கட்டுரை எழுதுவதால் எழுத்தாளர்களால் இன்னும் கூடுதல் கவனத்தைப் பெற முடியும்” என்ற உங்களின் அறிவுரை, உங்கள் காதுகளில் முதலில் கேட்டதா? – விருதுகளை திரும்ப வழங்க மாட்டேன் என்று சொன்ன நீங்கள் – வன்முறைகளை எதிர்த்து ஒரு தெளிவான கருத்தை, கவனத்தை ஈர்க்கும் ஏதாவதொரு வாக்கியத்தை வெளிப்படுத்தினீர்களா?

“எந்த அரசாக இருந்தாலும்” அவர்கள் எதிர்த்துப் போராட வேண்டும் என்பது சரிதான். இன்று நடப்பது பாஜகவின் அரசு – தேர்தலில் போட்டியிடாத கலாச்சார அமைப்பாக காட்டிக் கொண்ட ஆர்எஸ்எஸ், தற்போது அதிகாரத்தில் தலையிடுவது மிகவும் வெளிப்படையாகவே தெரிகிறது. மகாத்மா காந்தியின் கொலை பற்றிய “ஹே ராம்” திரைப்படத்திற்காக பல ஆய்வுகளைச் செய்துதான் எழுதினீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆர்எஸ்எஸ் அதிகாரத்தில் இருக்கிறது. கருத்துக் களத்தில் அதற்கு எதிராக படைப்பாளிகள் நிற்கிறார்கள். “இந்த அரசு” பற்றி ஒரு படைப்பாளியாக உங்களுக்கு ஏதாவது கருத்து இருக்கிறதா?

படைப்பாளிகள் மீதுதான் உங்கள் விமர்சனம் மேலும் கூர்மையாகிறது. “எழுத்தாளர்களும் இன்னும் சற்று சகிப்புத் தன்மையோடு இருக்க வேண்டும். கொடுத்துப் பெறுவதுதான் சகிப்புத் தன்மை.” நடந்துவரும் வன்முறைகளை “சகித்துக் கொள்வதுதான்” சகிப்புத்தன்மை என்று சொல்ல வருகிறீர்களா ? என்ற அச்சம்தான் ஏற்படுகிறது. அதுவும் அடுத்த வாக்கியத்திலேயே “நான் எந்தக் கட்சியையும் விமர்சிக்கவில்லை” என்றும் குறிப்பிடும்போது உங்கள் கருத்துக்கு வேறு என்ன அடிப்படையாக இருக்க முடியும்?

மதத்தை அரசியலுக்கு பயன்படுத்தி வன்முறைகள் தூண்டப்படுவது ஒரு புதிய கட்டத்தை அடைந்திருப்பதை உங்களுக்குத் தெரியவில்லையா? … அரசு ஆதரவோடு, அரசில் அங்கம்பெற்றோர் ஆசியோடு நடக்கும் வன்முறைகள் அசூசையாக இல்லையா?

ஜனநாயக இந்தியாவில் வன்முறைகள் புதியவை அல்ல. ஆனால் ஒரு வன்முறையோடு மற்றொன்றை ஒப்பிட்டு – அதற்கான எதிவினை குறைவு, இதற்கு அதிகம் என்று எதிர்வினைகளை விமர்சித்துப் பேசுவது ஒரு அரசியல். நீங்களும் கூட அதில் சிக்கிக் கொண்டிருக்கிறீர்கள். இங்கே எதிர்வினைகள்தான் உங்களை உருத்துகின்றன.

 விஸ்வரூபம் போன்று திரைப்படங்களுக்கு வந்த எதிர்ப்பும் – இப்போது இந்திய சமூகத்தின் அடித்தளத்தின் மீது நடத்தப்பட்டுவரும் தாக்குதல்களும் ஒன்றோடொன்று ஒப்பிடத் தகுந்தவையா? என்பது ஒருபக்கம் இருக்க – நீங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டபோது நாட்டை விட்டே வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என உணர்ச்சிவசப்பட்டதை நாங்கள் மதிக்கிறோம். அதே சமயம் தாங்கள் நேரடியாக பாதிக்கப்படாத நிலையிலும் – இந்த சமூகத்தின் மாண்புகளுக்காக களத்தில் நிற்கிற கலைஞர்களிடம் உங்கள் நியாயமே மறிக்கிறது அல்லவா?
நீங்கள் சொல்வது போல ‘1947 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு தேர்தலிலும்’ நாம் பல பிரச்சனைகளின் அடிப்படையில் விவாதங்களை நடத்தியிருக்கிறோம். தேர்தல் மூலம் அதிகாரத்திற்கு வந்துவிட்ட சக்திகளை, தேர்தல் மூலம் வீழ்த்த வேண்டும் என்பது உண்மைதான்.
அதிகார மாற்றம் அப்போதுதான் நடக்கும். ஆனால், ஜனநாயகம் இன்னும் விரிவானது கமல். ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு இடையிலும் நடக்கும் நாடாளுமன்ற விவாதங்கள், அரசு, அரசியல் கட்சிகளோடும் அவற்றோடு முரண்பட்டும் சமூக விவாதங்கள், அரசியல் போராட்டங்கள்,  கலைஞர்களின் படைப்பாக்கங்கள் என ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துக்களின் இயல்பான மோதலில்தான் ஜனநாயகம் மேம்படுகிறது. எப்போதும் தலைமேல் ஒரு கத்தி தொங்கியபடி இருந்தால் படைப்பாளிகளின் கால்கள் முன்நோக்கி நகருமா? ஆரோக்கியமான சமூக சூழல் சிதைக்கப்பட்டால் ஜனநாயகம் அதே மாண்போடு இருக்குமா?.
நீங்கள் நேரடியாக உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவில்லை என்பதுதான் இத்தகைய நீண்ட உரையாடலுக்கு காரணமாய் இருக்கிறது. உங்களால் வெளிப்படையாக கருத்துச் சொல்ல இயலாதபடி எது தடுக்கிறதோ – அதனை சகித்துக் கொண்டு அமைதிகாக்க வேண்டுமா? அல்லது சொந்தக் குரலைப் பாதுகாத்துக் கொள்ள வாய் திறக்க வேண்டுமா? என்பது உங்கள் கைகளில்தான் உள்ளது.
அரசியலில் நீங்கள் வாக்காளனாக மட்டும் இருக்கலாம், ஜனநாயகத்தின் களம் அத்தோடு முடிந்துவிடவில்லை. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இந்தப் போர்க்களத்தில் நீங்கள் உங்கள் ரசிகர், வாசகர், ஆதரவாளர் என்ற கருத்துப் படையினை வழிநடத்துகிறீர்கள். இங்கே வாளும் கேடையமும் அவசியம். வாள் கொல்வதற்கானதல்ல, கேடையம் ஒழிந்துகொள்வதற்கானதல்ல.
அன்புடன்,
சகிப்பாளன்

Related Posts