சமூகம்

சேர்ந்து சிந்திக்க ஓர் நொடி – ஆர்.செம்மலர்

குமரி மாவட்டத்தின் ஒரு பள்ளியில் மாணவர்களையும் மாற்றாக பணிபுரிந்த தற்காலிக ஆசிரியர்களையும் வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்த ஆசிரியர்கள் மிரட்டி துரத்தியதாக ஒரு செய்தியும், நீட்டுக்கு எதிராகப் போராடிய பள்ளி மாணவியை, பல பேரின் முன்பாக தலைமை ஆசிரியர் கன்னத்தில் அறைந்ததாக ஒரு செய்தியும் தொலைக்காட்சியில் பார்த்தேன்.

நீட்டுக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுத்த மாணவ மாணவியர் மிகத்

தெளிவாக பிரச்னைகளை புரிந்து தைரியமாக தங்கள் கோரிக்கைகள் மற்றும் போராட்டங்களைப் பற்றி பத்திரிக்கை பேட்டியிலும், நீதிமன்றத்திலும் விளக்கிய செய்திகளையும் படித்தேன்.

வெண்மணி, செங்கொடி, குமார் போன்ற மாணவர்கள் மக்கள் மத்தியில் முன்னுதாரணமாக திகழும் நேரம் அந்த ஆசிரியர்கள் தங்கள் மாணவிகள் முன்பு கூட குற்றவாளிகளாக தலைகுனிந்து நிற்பார்களே எனும் சிந்தனையை மேற்கண்ட காட்சிகளும் செய்திகளும் உருவாக்கின.

இவ்வளவு தெளிவாக விசயங்களை உணர்ந்து கொள்ளும் மாணவர்களிடம் ஆசிரியர்கள் நிச்சயமாய் தங்கள் பிரச்னைகளைப் பற்றியும் பேசி புரிய வைக்க முடியாதா? கொஞ்சம் தங்கள் ஈகோவை விட்டு முழு மனதுடன் மாணவர்களை நம்பினால் அது சாத்தியமே.

அதோடு மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை உள்வாங்கி திறந்த மனதுடன் விவாதிக்கவும் ஆதரவளிக்கவும் கூட ஆசிரியர்கள் முன் வர வேண்டும்.

ஒன்றிலிருந்து ஐந்து வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு கற்றுத்தரும் ஆசிரியர்கள் தங்களை நம்பி பிள்ளைகளை படிக்க அனுப்பும் பெற்றோர்களிடம் நேரடியாக உரையாடவும் தயாராவது உதவும்.

பாலியல் கல்வி உட்பட மாணவர்களுக்கு கற்றுத்தரப்பட வேண்டும் என விவாதிக்கப் படும் நிலையில் மேற்கண்ட உரையாடல்களும் சாத்தியமே!

அரசு ஊழியர்களின் பணிக்கலாச்சாரம் மற்றும் அதில் உள்ள சிக்கல்களைப் பற்றியும் திறந்த மனதுடன் பொதுவெளியில் விவாதிக்க தயாராவதன் மூலமே மக்களுக்கான நிர்வாகத்தை உருவாக்க முயற்சி மேற்கொள்ள முடியும்.

அடக்குமுறை மூலம் , நிர்வாக சீர்கேடுகளை ஆதரிப்பதன் மூலம் என்றுமே நிலையான ஒற்றுமையை வலுவான போராட்டத்தை வருங்காலங்களில் முன்னெடுக்க இயலாது.

அனைத்து நிர்வாக மற்றும் அதிகார அமைப்புகளின் செயல்பாடுகள் பாஸிஸத்தை நோக்கி நகர்த்தப்படும் சூழலில் ஜனநாயகம் காக்க வேண்டும் என உண்மையிலேயே விரும்பும் அனைவரும் ஜனநாயக வழிமுறையை விஸ்தரிப்பது பற்றி சிந்திக்க வேண்டும். அதன் மூலம் வலுவான போராட்டங்களை வழிநடத்தி கோரிக்கைகளை வென்றெடுப்பதும் மாற்றத்திற்கான பயணத்திற்கு வலு சேர்ப்பதும் சாத்தியமாகும்.

Related Posts