பிற

லெனின்!

ரஷ்யப் புரட்சியாளரும், போல்ஷ்விக் கட்சியின் தலைவரும், சோவியத் ஒன்றியத்தின் முதல் அதிபரும், பின்னாளில் ஜோசப் ஸ்டாலினால் மார்க்சியம்-லெனினியம் என்று விரிவுபடுத்தப்பட்ட லெனினியம் என்ற கோட்பாட்டின் நிறுவுனருமான, உலகில் முதல் சோசலிச சமூகத்தைப் படைப்பதில் பெரும் பங்காற்றிய விளாதிமிர் இலீச் லெனின் (Vladimir Ilyich Lenin, ரஷ்ய மொழி: Влади́мир Ильи́ч Ле́нин, ஏப்ரல் 22 [பிறப்பு ஏப்ரல் 10 1870 – இறப்பு ஜனவரி 21, 1924) நினைவு நாள் இன்று. அவர் மறைந்து 90 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.

லெனின் உடல் வைக்கப்பட்டுள்ள செஞ்சதுக்கம், மாஸ்கோ

1924 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் நாள், உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள் கண்ணீர் சிந்திய நாள். சரியாக மாலை 4.00 மணி வானொலியில் ஒரு அறிவிப்பு வந்தது. “எழுந்து நில்லுங்கள் தோழர்களே! தோழர் லெனின் அடக்கம் செய்யப்படுகிறார்.” சோவியத் ரசிய மக்கள் அனைவரும் எழுந்து நின்றனர். அமெரிக்க ஐரோப்பிய தொழிலாளர்கள் எழுந்து நின்றனர். ஆசிய ஆப்பிரிக்க நாடுகளின் தொழிலாளர்கள் எழுந்து நின்றனர். ஐந்து நிமிட மெளன  அஞ்சலி செலுத்தப்பட்டது.

உலக மக்களால் நேசிக்கப்பட்ட மாபெரும் தலைவர் லெனினுடைய அடக்கம் இப்படித்தான் நடைபெற்றது. உலகமே எழுந்து நின்று அவருக்கு இறுதி விடைகொடுத்து அனுப்பியது.

உழைக்கும் மக்களுக்கும் அவர்களின் விடுதலைக்கு போராடும் பொதுவுடமை போராளிகளுக்கும் லெனின் வாழ்வும் பணியும் என்றும் கலங்கரை விளக்கம்.

ஏற்றத்தாழ்வுகள், ஒடுக்கப்படுதல், ஏகாதிபத்தியத்தின் தாக்குதல்கள், முற்றுகைகள், ஏகபோக முதலாளிகளுக்குத் தரப்படும் தங்குதடையற்ற சுதந்திரம் போன்றவை உலகில் இருக்கும் வரை, லெனின் நினைக்கப்படுவார். மார்க்சியமும் லெனினியமும் செயல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

இப்படிப்பட்ட மகத்தான மாமனிதனின் நினைவு தினத்தில் அவருக்கு‍ நினைவு செலுத்துவதோடு‍ அவரது‍ கருத்துக்களை எல்லோரிடத்திலும் கொண்டு‍செல்ல முன்முயற்சி எடுப்போம்.

Related Posts