சமூகம்

இந்திய சட்டத்தில் ஆணாதிக்கக் கூறுகள் !

1981-ம் ஆண்டில் 1000 ஆண்களுக்கு 962 பெண்கள் இருந்தனர். இது படிப்படியாக குறைந்து 2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தற்போது 919 பெண்கள் மட்டுமே உள்ளனர்.

தனது மனைவி 30 வயது வரை ஒரு ஆண் குழந்தையை பெற்றுத் தரவில்லை என்றால், அவரது கணவன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு கோவாவில் சட்ட அனுமதி உண்டு.

ஒரு குழந்தை ஆணாக பிறப்பதும் பெண்ணாக பிறப்பதும் உயிரியல் ரீதியாக ஆணை சார்ந்ததே என்ற அறிவியல் அறிவு கூட இல்லாமல் இச்சட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது.

ஐநாவின் அறிக்கை

இந்து

உயில் ஏதும் எழுதி வைக்கப்படாத பட்சத்தில், கணவனும், குழந்தைகளும் இல்லாத ஒரு பெண்ணின் சொத்துகள் அந்த பெண்ணின் கணவன் வீட்டாரையே சாரும். ஒரு பெண் திருமணம் ஆனவுடனே அவள் கணவனும் கணவன் வீட்டாருக்கும் பயன்படக் கூடிய சொத்தாக மாறி விடுகிறாள் என்ற கருத்திலிருந்து இச்சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. அவளது கணவன் வீட்டார் அவர் வாழும் காலத்தில் அவரை எப்படி துன்புறுத்தியிருந்தாலும், அவரது இறப்புக்கு பின் அவரது சொத்து கணவன் வீட்டாருக்கே சொந்தம்.

பார்ஸி

பார்ஸி சமூகத்தை சேர்ந்த ஒருவரை பார்ஸி சமூகம் அல்லாத பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்டால், அந்தப் பெண்ணுக்கு அவரது கணவனின் சொத்துகள் கிடைக்காது. ஆனால், அவரது குழந்தைகள் பெற முடியும். ஆனால், ஒரு பார்ஸி பெண், வேறொரு சமுகத்தை சேர்ந்த ஆணை திருமணம் செய்துக் கொண்டால், அவரது குழந்தைகள் பார்ஸி சமூகத்தைச் சேர்ந்தவராக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டார்கள்.

அதாவது தந்தை வழி சமூகமான நமது சமூகத்தில், ஒரு ஆண் எந்த சமூகத்தை சேர்ந்தவராக இருக்கிறாரோ அது தான், அவரது குழந்தைகளுக்கும் பொருந்தும்.

குழந்தை திருமணச் சட்டம்

18 வயதுக்கு கீழ் உள்ள பெண்ணுக்கு திருமணம் நடந்தால், அது தற்போதுள்ள இந்திய சட்டத்தின் படி செல்லும். ஆம். ஆச்சர்யமாக தான் இருக்கிறது. குழந்தை திருமண சட்டம், குழந்தை திருமணங்களை தடுக்க மட்டுமே செய்கிறது. சட்டத்தை மீறி நடந்த குழந்தை திருமணங்களை உடனே ரத்து செய்யவில்லை. இந்த காரணத்தால் தான் கிராமப்புறங்களில் குழந்தை திருமணங்கள் இன்னும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன என்று ஐ.நா.வின் அறிக்கை கூறுகிறது. எனினும், திருமணம் நடந்த குழந்தைகளுக்கு, திருமணத்தை ரத்து செய்யக்கூடிய உரிமை இருக்கிறது. அதுவும் ஆண்கள் 23 வயது வரை திருமணத்தை ரத்து செய்யலாம். ஆனால் பெண்கள் 20 வயது  வரை தான் ரத்து செய்ய முடியும்.

வயது

18வயதுக்கு கீழ் உள்ள பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொள்வது பாலியல் வன்முறை என்று சட்டம் அங்கீகரிக்கிறது. ஆனால், குழந்தை திருமணங்கள் சட்டபடி செல்லும் என்பதால், ஒரு ஆண், தனது மனைவி 15வயதுக்கு மேல் இருந்தாலே அவருடன் உடலுறவு வைத்துக் கொள்ள முடியும். இதற்கு சட்டம் எதுவும் சொல்லாது. மேலும், திருமணத்துக்கு பிந்தைய கட்டாய உடலுறவை இந்திய சட்டம், தண்டிக்காததால், பெண்களுக்கு தங்களது உரிமைகளை பேச இடமளிக்கப்படுவதில்லை.

பாலியல் வன்முறை

பெண்கள் தனக்கு பிடிக்காத கணவனை விட்டு விலகியிருக்க வேண்டும் என்ற முடிவை எளிதில் தைரியமாக எடுத்துவிட முடிவதில்லை. ஆனால், அப்படி எடுப்பவர்களுக்கு சட்டம் ஏதுவாக இல்லை. தன்னைவிட்டு விலகிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தால், அது மற்ற பெண்களை பலாத்காரம் செய்வதை விட குறைந்த தண்டனையே. விலகிய பெண்ணை பலாத்காரம் செய்தால் 2 முதல் 7 ஆண்டுகள் தண்டனை. மற்ற பெண்களை பலாத்காரம் செய்தால், 7 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை உள்ளது.

நமது சட்டங்கள் எந்த அளவுக்கு பாரபட்சமாக இருக்கின்றன என்பது ஒருபக்கம் இருக்க, நடைமுறையில் அந்த சட்டங்களும் பெண்ணை பாதுகாக்கும் விதத்தில் பயன்படுத்தப்படுவதில்லை என்பதும் உண்மை. ஒரு பெண் தன் கணவனை விட்டு பிறந்த பிறகும், அந்த கணவனின் உரிமைப் பொருளாகவே அவள் பார்க்கப்படுகிறாள். இந்த சட்டங்களில் எதிலும், உடலுறவுக்கு மனைவியின் ஒப்புதல் ஒரு பொருட்டாக கருதப்படுவதில்லை.

ஆணுக்கான திருமண வயது 21 என்றும் பெண்ணுக்கான திருமண வயது 18 என்றும் நிர்ணயிக்கப்பட்டிருப்பது கணவைனை விட மனைவி இளையவளாக வேண்டும் என்ற ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடாக உள்ளது. கணவன் பெரியவனாக இருந்தால்தான், அவன் சொல்வதை மனைவி எதிர் கருத்து கூறாமல் ஏற்றுக் கொள்ள ஏதுவாக இருக்கும் என அது மிக எளிதாக நியாயப்படுத்தப்படுகிறது.

இந்து சிறுபான்மையினர் மற்றும் காப்பாளர் சட்டம்:

தாய்மார்கள் குழந்தைகளின் சம்மான காப்பாளர்களாக சட்டததின் முன்னால் கருதப்படவில்லை. குழந்தையின் ஐந்தாம் வயது வரை, குழந்தை தாயிடம் இருக்க வேண்டும் என்று கூறினாலும், தந்தையே குழந்தையின் இயற்கை காப்பாளராக இருக்கிறார்.

சொத்துரிமைச் சட்டம்:

விவாகரத்தான பிறகு, ஒரு பெண் தனது முன்னாள் கணவனிடமிருந்து ஜீவனாம்சம் மட்டுமே பெற முடியும். திருமண வாழ்க்கையின் போது, கணவன் பெயரில் வாங்கப்பட்ட எந்த சொத்துக்கும் அந்தப் பெண்ணுக்கு உரிமை கிடையாது. ஒரு பெண் குடும்பத்துக்காக செலுத்தும் உழைப்புக்கு பொருளாதா மதிப்பு கொடுக்காததால், அது அங்கீகரிக்கப்படுவதில்லை.

மேலும் படிக்க சில சுட்டிகள்:-

1. LAWS AND SON PREFERENCE IN INDIA

2. Indian women will never be equal as long as these 9 laws remain on the books

Related Posts