அரசியல்

லாலு பிரசாத் யாதவின் வீழ்ச்சி சொல்லும் செய்தி

லாலு பிரசாத் யாதவ் 37 கோடி மாட்டுத் தீவன வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்து அவரை சிறையில் அடைத்திருக்கிறது. ரூ.25 லட்சம் அபராதமும், 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
அவர் மேல் முறையீடு செய்வது கூட இன்னும் ஒரு மாதத்திற்கு சாத்தியமில்லை. மேல் முறையீடு செய்தால்தான் இந்த தீர்ப்பு நிறுத்தி வைக்க முடியும். அக்டோபர் 5 லிருந்து நவம்பர் 5 வரை நீதிமன்றத்திற்கு விடுமுறையாதலால் அவரால் மேல் முறையீடு உடனடியாக செய்ய முடியாது. மேல் முறையிடு செய்து இந்த தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டாலும் அவர் ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாது. மேல் முறையீடு விசாரிக்கப்பட்டு இவர் குற்றமற்றவர் என்று அடுத்த நீதி மன்றத்தில் நிரூபித்தால்தான் மீண்டும் தேர்தலில் பங்கெடுக்கலாம்.
கீழ் நீதிமன்றம் குற்றவாளி என்று அறிவித்தாலும். மேல் நீதி மன்றத்தில் ஒருவர் குற்றமற்றவர் என்று தீர்ப்பு செர்ல்ல சாத்தியமிருக்கிறது ஆகவே குற்றமற்றவராக இருக்கும் சாத்தியமுள்ள ஒருவருக்கு அவருடைய அரசியல் எதிர்காலத்தை இன்று இருட்டில் தள்ளக்கூடாது. இறுதித் தீர்ப்பு வந்தால்தான் அப்படிச் செய்யமுடியும் என்றிருக்கும் தற்போதைய நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. ஒரு வழியாக சட்டம் தன் கடமையைச் செய்துவிட்டது.
இவருடன் சேர்ந்து பீகார் மாநிலத்தின் இன்னொரு முதல்வர் ஜகன்னாத் மிஸ்ராவின் மீதும் ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார். அவர் மற்ற அரசியல்வாதிகள் போல் உடல்நிலை சரியில்லை என்று நாடகமாடி மருத்துவமனையில் படுத்துக் கொண்டுவிட்டார் என்பதை நாம் மறக்கக் கூடாது. ஜகன்னாத் மிஸ்ரா 1989க்கு முன் முதல்வராக இருந்தவர். அவர் ஊழல் செய்து கால் நூற்றாண்டு காலம் கழித்து தண்டனை வந்திருக்கிறது. இன்னும் கொஞ்சம் காலம் கடந்திருந்தால் அவருடைய கல்லரையில்தான் தீர்ப்பை வாசித்திருக்க முடியும். இதுவும் கூட தவறுதான். அவர் பிராமணர், கல்லரையெல்லாம் அவர்களுக்கு கிடையாது. எரித்து சாம்பலை கங்கையில் கரைத்து விடுவார்கள். எனவே தீர்ப்பை வாசிக்கவே முடியாது.
சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று நாம் கூறினாலும் மாட்டுத் தீவன வழக்கு ஏன் இப்படி தாமதமாகியது? இன்று எப்படி தீர்ப்பு வழங்கியது சாத்தியமாகியது. இதுவே ஒரு முக்கியமான கேள்வியாக நம்முன் இன்று உதித்திருக்கிறது, 1990ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜனதாதளம் வெற்றி பெற்று அதன் முதலமைச்சராக லாலு தெரிவு செய்யப்படுகிறார். அதன் பிறகு ஜனதாதளம் உடைந்தாலும் லாலு முதல்வராக நீடிகிறார், அதிலிருந்து மதசார்பற்ற ஜனதாதளம் உருவாகிறது சமதா கட்சி உருவாகிறது ஐக்கிய ஐனதாளம் உருவாகிறது. எல்லாவற்றையும் பார்த்துவிட்டு அவருக்கென்று ஒரு ஜனதா தளத்தை அமைத்துக் கொள்கிறார் அதுதான் ராஷ்ட்ரிய ஜனதாதளம், ராஷ்ட்ரிய ஜனதாதளத்தின் சார்பில் 1995 மற்றும் 2000ம் ஆண்டு தேர்களில் வெற்றிபெற்று லாலுவின் (அல்லது அவரது மனைவி ராப்ரிதேவியின் வடிவில்) ஆட்சி பிகாரில் 15 ஆண்டுகாலம் நடக்கிறது.
1996ம் ஆண்டு அமைந்த தொங்கு பாராளுமன்றத்தில் காங்கிரஸ் மற்றும் இதரக் கட்சிகளின் தயவில் அமைந்த ஐக்கிய முன்னணி அரசானது தேவகவுடா மற்றும் குஜ்ரால் தலைமையில் நடைபெற்று வந்தபொழுது, இவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது, அன்றைக்கு ஐக்கிய முன்னணிக்கு (வழக்கம் போல்) வெளியிலிருந்து ஆதரவளித்து வந்த இடதுசாரிகள். லாலு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். ஊழல் ஒரு பெரிய பிரச்சனையா இன்று நாட்டின் முன் எழுந்துள்ள வகுப்புவாதம் எல்லாவற்றையும் முழுங்கப் பார்க்கிறது இப்படி மதசார்பற்றவர்கள் ஒவ்வொருவரையும் குற்றம் செர்ல்லி வெளியே அனுப்பினால் வகுப்புவாத்த்திற்கு எதிராக ஒரு பரந்துபட்ட ஐக்கிய முன்னணியைக் கட்டமுடியாது என்று பலர் இடதுசாரிகள் மேல் கோபித்துக் கொண்டார்கள். குறிப்பாக அன்றைக்கு தமிழக முதல்வராக இருந்த திரு மு.கருணாநிதி அவர்கள் மதசார்பற்ற அணியை பலவீனப்படுத்தும் வேலையை இடதுசாரிகளை செய்கிறார்கள் என்று வசைபாடினார். வசைபாடி ஒருவருடத்தில் அவர் பாஜகவோடு கூட்டணி அமைத்துக் கொண்டது வேறு கதை. எனினும் ஊழல் குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு நபர் பொது அலுவலகத்தில் இருக்க்க் கூடாது என்பதே இடதுசாரிகளின் வேண்டுகோள் ஆகும். நாளை அவர் மீது பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டு இல்லையென்று கூட ஆகலாம். வழக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டால் ஏதோ ஒரு முகாந்திரம் இருக்கிறது என்று அர்த்தம். ஆகவே முன்னுதாரணமாக அவரே வெளிவந்து பதவி விலக வேண்டும் என்றும் கோரி வந்தனர்.
மிகுந்த நிர்ப்பந்தத்திற்குப் பின் லாலு பதவி விலகி அவரது மனைவியை அந்த இடத்தில் அமர்த்தினார். எனினும் அரசின் மீதிருந்த அவரது செல்வாக்கு என்பது குறையவில்லை. வழக்கு நடந்து கொண்டிருக்கும் பொழுது வழக்கில் சிக்கியவர்கள் மந்திரிகளாக இருப்பது என்பது நடைமுறைக்கு வந்துவிட்டது, இன்றைக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியுள்ள செல்வி ஜெயலலிதா உட்பட வழக்கிற்காக யாரும் பதவி விலகுவதில்லை. கைது செய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்டாலே விலகுகிறார்கள். நாளை இந்த மரபும் கூட மாறி சிறையிலிருந்து அமைச்சரகத்தை நடத்தக் கூடிய நிலை ஏற்படலாம்.எது எப்படியிருந்தாலும் லாலு மத்திய அமைச்சரையில் 2009ம் ஆண்டுவரை நீடித்தார். அதுவரை அவரது அரசியல் செல்வாக்கும் அதிகாரமும் மங்கவில்லை, 2009ம் பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியுற்ற பிறகே அவரது அரசியல் அதிகாரம் முற்றிலுமாக மங்கியது. அதன்பிறகே அவரக்கெதிரான வழக்கு துரிதப்படுத்தப்பட்டது.
இன்றைய அரசியல் சூழ்நிலையில் அரசியல் அதிகாரம் இருக்கும் ஒருவர்மேல் வழக்கு தொடுக்கப்பட்டால் அவர் நீதித்துறையை நிர்ப்பந்தப்படுத்துவது என்பது ஒரு அம்சமென்றால், நீதித்துறையே தானாக முன்வந்து அரசியல் அதிகாரத்தின் முன் மண்டியிடுவது மற்றொரு அம்சம் என்பதை நாம் காணத்தவறக்கூடாது. அரசு என்பது வர்க்க ஆட்சிக்கு முட்டுக்கொடுக்கும் கருவி என்பது உண்மையானால். அரசின் அங்கமான நீதித்துறையும் வர்க்க ஆட்சிக்கு உதவி செய்யும் அமைப்பாக இருப்பது தவிர்க்க முடியாதது. இது ஒரு சமயம் அரசின் அதிகாரத்தின் எல்லைக்குள் வந்து செயல்படவும், மற்றொரு சமயம் தன்னுடைய எல்லையையே குறுக்கிக் கொள்ளவும் செய்யும் செயல்கள் எல்லாம் வர்க்க ஆட்சியை முட்டுக்கொடுக்கவே என்பதும் உண்மையாகும்.

இன்றைக்கு பல்வேறு குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி சட்டம் தனது பிடியை இறுக்கும் நிலையிலிருக்கும் நரேந்திர மோடிக்கு இந்த விஷயம் நன்றாகத் தெரிந்திருக்கிறது. எதுவரைக்கும் அவர் பதவியில் இருக்கிறாரோ அதுவரை சட்டம் தன் கடமையை செய்யும் வேகத்தை மெதுவாக்கிவிடும். இரண்டாம் முறை சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்காவிட்டால் வழக்குகள் அவர் மீது பதிவாகியிருக்கும். மூன்றாம் முறை வெற்றிபெற்றபின் அவர் புரிந்து கொண்டது. இந்த வெற்றி நிரந்தரமல்ல என்பதே. பதவி பறிபோகும் நிலைமை ஏற்பட்டால் வழக்குகளை சந்திப்பது தவிர்க்க முடியாதது என்பதால் அவர் பிரதமர் பதவிக்காக என்று அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

ஆறுமாதத்தில் தேர்தல் நடைபெற்று வெற்றி பெற்று செங்கோட்டையில் பிரதமராக அமரப் போகிறேன் என்பவர் இன்று முதலமைச்சரை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வேண்டியதுதானே? இதை செய்யாத்தற்கு காரணம் அவர் பதவியில் இல்லாத நாட்களில் அவர் மீது வழக்கு பதவு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். வழக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டால் வெற்றி வாய்ப்பு குறைந்துவிடும் என்பது அவருக்குத் தெரியும்.

ஒரு வேளை அவருடைய திட்டம் தோல்வியடைந்து பாஜகவிற்கு ஆட்சியமைக்கும் அளவிற்கு பலம் கிட்டவில்லையென்றால் இருந்த முதலமைச்சர் பதவியை இழந்து வழக்கை சந்திக்கும் வாய்ப்பை ஏன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் அவரது கணக்கு. ஆக தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்வரை அவர் முதலமைச்சர் பதவியில் நீடிப்பார். அரசியல் அதிகாரத்தின் முலம் நீதியை கட்டுப்படுத்த முடியும் என்பதையே அவர் லாலுவின் வீழ்ச்சியின் மூலம் புரிந்து கொண்டிருக்கிறார்.

லாலு விஷயத்தில் சட்டம் தன் கடமையைச் செய்துவிட்டது. இடதுசாரிகளுக்கும் லாலுவுக்குமான உறவு என்பது படித்தவர்கள் மத்தியில் முகஞ்சுழிக்கும் விஷயமாக இருந்து வந்தது. இடதுசாரிகள் அவரை ஊழல்வாதி என்று தீர்ப்பும் சொல்லும் நீதிமன்ற பணியை கையிலெடுத்துக் கொள்ளவில்லை அதேநேரத்தில் அவர் சுத்தமானவர் என்று நற்சான்றிதழும் வழங்கவில்லை. ஊழல் நடைபெற்றிருக்கிறது என்பதற்கான முகாந்திரம் இருக்கிறது என்ற அடிப்படையிலேயே அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றும் அவரை எச்சரிக்கையுடன் அணுகி வந்தனர். பிரதேச முதலாளித்துவக் கட்சியின் மீதான அவர்களுடைய அணுகுமுறையும் இதுவே.
இன்னொருபுறம் லாலு என்றொரு அரசியல்வாதி எழுச்சி பெற்றுவரும் பிற்படுத்தப்பட்டவர்களின் முரட்டுக்குரலாக ஒலித்தார் என்பதை நாம் மறுத்துவிட முடியாது. அல்லது இந்தியாவில் குறிப்பாக வட மாநிலங்களில். ஒடுக்கப்பட்டவர்கள் எழுச்சியுற்று அவர்கள் உரிமைகளுக்காக போராட்டம் நடத்த துணிந்ததின் அரசியல் வெளிப்பாடாக லாலு என்பவர் உதயமானதைக் குறிப்பிடலாம். ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்குரலில் மதசார்பின்மைக்கான கோரிக்கை ஓங்கி ஒலிக்கும் என்பதையும் லாலு என்ற அரசியல்வாதி உருவான போக்கிலிருந்து புரிந்து கொள்ளலாம். முதலாளித்துவமும் ஊழலும் பிரிக்க முடியாத கோட்பாடாக விளங்கும் பொழுது ஊழல் செய்யாத முதலாளித்துவ அரசியல்வாதியை பார்ப்பது என்பது மூக்கு வெளுக்காத கழுதையைப் பார்ப்பது போலாகும். முதலாளித்துவ அரசியலில் ஆங்காங்கே சில மூக்கு வெளுக்காத கழுதைகள் (குதிரைகள்) இருந்தாலும் நீக்கமற நிறைந்திருப்பது என்னவோ மூக்கு வெளுத்தவையே.

மாற்றத்திற்காக பணியாற்றும் இடதுசாரிகள். அந்தப் பணியை அவர்கள் மட்டுமே செய்திட முடியாது முதலாளித்துவ அரசியலில் கொள்கையளவில் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் விளிம்புநிலை மனிதர்களுக்காகவும் நிற்பவர்களோடு ஐக்கிய முன்னணி அமைத்துக் கொள்வது என்பது தவிர்க்க முடியாதது. எனினும் அதில் ஊழல் கசடாக இருந்து வருவர்களுடன் அமைக்கும் ஐக்கிய முன்னணி தோல்வியில் முடியும் என்பதே லாலுவின் வீழ்ச்சி சொல்லும் செய்தி. ஏனென்றால் ஊழலையே ஒரு காரணமாக வைத்து இடதுசாரிக் கொள்கைகளை வீழ்த்துவதற்கு வசமான பிடிப்பாக முதலாளித்துவத்திற்கு அது அமைந்துவிடும்.

– கட்டுரையாளர்: விஜயன்

Related Posts